08

08

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி தயார் – அமைச்சர் நிமல்

nimal1.jpgவட பகுதியில் மீள் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அரசியல் தீர்வு ஒன்றையும் அரசாங்கம் வழங்குமென்று பாராளுமன்ற சபை முதல்வரும், நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்கப்படவேண்டுமென்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் சில்வா, அதனை வழங்க ஜனாதிபதி தயாராக இருக்கிறாரென்றும் குறிப்பிட்டார்.

“இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஜனாதிபதி இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். தனி ஈழத்தைத் தருவதற்கு எவரும் இணங்கமாட்டார்கள். ஆனால், தமிழ் மக்களுக்குத் தீர்வொன்றை வழங்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஜனாதிபதியும் அதற்குத் தயாராக இருக்கிறார்” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

புலிகள் இயக்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோது அரசாங்கக் குழுவிற்குத் தலைமை தாங்கியவர். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா என்பது குறிப்பிடத்தக்கது.

எயிட்ஸ் நோயாளர் எண்ணிக்கை 1249 ஆக அதிகரிப்பு

aids-virus.jpgஇலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 1249 ஆக அதிகரித்துள்ளதென்று எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் ஸ்ரீயகாந்தி பெனரகம தெரிவித்துள்ளார்.

கடந்த (2009) வருடம் ஜூன் மாதத்தில் 153 நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டிருந் ததோடு மொத்தமாக மூவாயிரம் பேர் பதிவாகியிருந்தனர். ஆனால் இவ்வருடம் 743 ஆண்களும் 506 பெண்களும் பதிவாகியுள்ளனர்.

கிராமசேவையாளர் கைது

புத்தளம் மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் ஒருவர் 15 வயதுச் சிறுமி ஒருவரைக் கற்பழித்தமைக்காக நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கற்பழிப்புச் சம்பவம் அவருடைய அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

தொண்டமானாறு பாலம் ஊடான செல்வச்சந்நிதி வீதி திறப்பு

tonamanaaru.jpgவட மராட்சி செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு தொண்டமானாறு பாலத்தினூடான வீதி பொது மக்களின் பாவனைக்காக நேற்றுக் காலை திறக்கப்பட்டது. செல்வச் சந்நிதி ஆலயத்தின் கொடியேற்றம் எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 9.15 மணிக்கு நடைபெறுகிறது. இம் மகோற்சவம் 24 ஆம் திகதி வரை நடைபெறும்.

கடந்த மூன்றாம் திகதி செல்வச் சந்நிதி ஆலயத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்த போது கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டு கிடந்த தொண்டமானாறு பாலம் ஊடான வீதியை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு இப் பகுதி மக்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதற்கமைய அமைச்சர் யாழ் கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவுடன் பேச்சு நடத்தியதன் பயனாக நேற்று இப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பருத்தித்துறை – யாழ்ப்பாண பிரதான நெடுஞ்சாலை வீதி அகலப்படுத்தும் பணிகள் மிகவும் விரைவாக நடைபெற்று வருகின்ற இவ் வேளையில் வல்லைப் பாலமும் அகலப்படுத்தும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

இதனால் வல்லைப் பாலத்தினூடான போக்குவரத்து மிகவும் சிரமமானதாகக் காணப்படுகிறது. எனவே வலிகாமம் யாழ்ப்பாணம் மற்றும் தீவகம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் அச்சுவேலியிலிருந்து-வறணம், -கதிரிப்பாய்ச் சந்தி, தம்பாலைச்சந்தி, காத்தாடிச்சந்தி ஊடாக தொண்டை மானாறு பாலம் வழியாக செல்வச்சந்நிதி முருகன் கோவிலை வந்தடையலாம்.

அத்துடன் தென்னிலங்கையிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இவ்வீதி திறந்து வைக்கப்படுவதால் பக்தர்களின் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கப்பட்டு இலகுவாகிவிடும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பாதையை ஈ. பி. டி. பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரனும் தொண்டமானாறு பிரதேச இராணுவக் கப்டனும் இணைந்து பொது மக்களின் பாவனைக்கு திறந்து வைத்தனர்.

குறுங்கால நடனப்பயிற்சி பட்டறை

வட மாகாணத்தின் இளம் நடனக் கலைஞர்களுக்கு குறுங்கால நடனப்பயிற்சி பட்டறை ஒன்றினை பெற்றுக்கொள்ளுவதற்கு வட மாகாண கௌரவ. ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.

சக்வித்தி ரணசிங்கவை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு – 1876 முறைப்பாடுகள் தொடர்பாக CID விசாரணை

sakvithi.jpgகைது செய்யப்பட்டுள்ள சக்வித்தி ரணசிங்க என்றழைக்கப்படும் அபய ரணசிங்கலாகே சந்தன வீரகுமாரவை தடுத்து வைத்து இரகசிய பொலிஸாரினால் விசாரணைக்குட் படுத்துவதற்கான உத்தரவு நேற்று பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். நிதி மோசடி யில் ஈடுபட்ட தாகக் கூறப்படும் இவருக்கு எதிராக 1870 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

மிரிஹான பொலிஸாரினால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கைதான இவர் இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கோட்டும் சூட்டுமாக திரிந்த அவர் அடர்ந்த தாடி வளர்த்த நிலையில் முற்றாக தன்னை மாற்றிக் கொண்டிருந்தார்.

சக்தி ஹவுஸ் கண்ஸ்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடட், ஐ. ரி. மெனேஜ்மண்ட் சொலியூஷன் இன்ஸிடியூட், சக்ஸஸ் இன்டர்னேஷனல் ஸ்கூல் அன்ட் சக்வித்தி செகுரீடி மேன்பவர் சொலியூஷன் போன்ற நிறுவனங்கள் சக்வித்தி ரணசிங்கவுக்கு சொந்தமான நிறுவனங்கள் என கண்டறியப்பட்டுள்ளன.

சக்வித்தி ரணசிங்கவுக்கு எதிராகவுள்ள முறைப்பாடுகளுள் 18 பேர் 30 லட்சம் ரூபா வீதம் முதலீடு செய்துள்ளனர். சுமார் 24 பொலிஸாரும் முதலீடு செய்துள்ளனர். நாவல வீதி இலக்கம் 8 நுகேகொடையில் சக்வித்தி ரணசிங்கவின் பிரதான அலுவலகம் அமைந்திருந்தது. இங்கு ஏற்கனவே 18 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்பட்டிருந்தனர். இதில் சிலர் விடுதலையும் செய்யப்பட்டனர்.

பெருந்தொகையாக மோசடி செய்த பணம் தொடர்பாகவும் வெளிநாட்டில் தங்கியிருந்த காலத்தில் மேற்படி பணம் எங்கு வைக்கப்பட்டது என்பது தொடர்பாகவும் இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளனர். அத்துடன் அவருக்கு எதிராக பதியப்பட்ட 1870 முறைப்பாடுகளும் ஒவ்வொன்றாக விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இலகுவில் ஆங்கிலம் கற்கலாம் என்ற விளம்பரங்களுடன் அறிமுகமாகிய சக்வித்தி ரணசிங்க சக்வித்தி என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார். இந்த நிதி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பல இலட்சங்கள் முதலீடு செய்திருந்தனர். முதலீடு செய்யும் பணத்துக்கு அதிகளவு வட்டி பெற்றுத்தருவதாக கூறியதை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர்.

கடந்த ஒருவருடத்துக்கு முன்னர் தனது நிதி நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானார். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றனர். சிலர் மாரடைப்பினால் கூட உயிரிழக்கவும் நேரிட்டது. இந்த நிலையிலேயே இவர் 9000 மில்லியன் ரூபா வரை மோசடி செய்தமை அம்பலத்துக்கு வந்தது. பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த இவர் நாட்டைவிட்டு தப்பி வெளிநாடொன்றில் தலைமறைவாகி யிருந்தார்.

இந்த நிலையிலேயே நேற்று முன்தினம் இவர் கைதாகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட போது சக்வித்தியினதும் அவரது மனைவியினதும் உண்மையான பெயருடன் கூடிய கடவுச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டன. இலங்கைக்கு வந்ததாக கூறப்படும் போலிக் கடவுச் சீட்டுகள் வத்தளையில் இருப்பதாக கூறியதையடுத்து அவற்றை கைப்பற்ற பொலிஸார் நேற்று முன்தினம் அங்கு விரைந்தனர்.

sakvithi.jpg

யாழ்ப்பாண மக்கள் கனிந்த உள்ளம் படைத்தவர்கள்

யாழ்ப்பாண மக்கள் மிகவும் கனிந்த உள்ளம் படைத்தவர்கள் மஹிந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் ரி.ரி. குணசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரிற்கு அருகாமையில் தமது வாகனம் விபத்துக்கு உள்ளான போது அங்கிருந்த மக்கள் காட்டிய கரிசனை ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முதலாவது அமர்வு 11 இல் ஆரம்பம்

கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் முதலாவது அமர்வு எதிர்வரும் 11 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. கொழும்பு 07, ஹோட்டன் பிளேஸில் 24 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட் டுள்ளது.

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்ட சகல பிரஜைகளும் இதற்கு ஒத்துழைக்குமாறும், பொது இலக்கை அடைவதற்காக உதவிகளையும் தகவல்களையும் தந்துதவுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி குழு 2002 பெப்ரவரி 21 ஆம் திகதிக்கும் 2009 மே மாதம் 19 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி விசாரணை நடத்தும்

14ம், 15ம் திகதிகளில் வவுனியாவில் பொது அமர்வுகள் நடைபெறவுள்ளன.

பொது மக்களுள் எவரேனும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க விரும்பினால் அவ்வாறு செய்வதற்கான திகதியையும் நேரத்தையும் பெற்றுக் கொள்வதற்காக தொலைபேசி இலக்கம் 0112673408 ஊடாக ஆணைக்குழுவிடம் தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது மேற்குறிப்பிட்டுள்ள விலாசத்திலுள்ள ஆணைக்குழுவுக்கு எழுத வேண்டும். வரையறுக்கப்பட்ட ஆசன வசதிகளே உள்ளபடியால் பொது மக்கள் நேரகாலத்துடன் சமுகமளிக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

சங்ககார,மலிங்க,மெண்டிஸ் சாதனை

இலங்கை – இந்திய அணிகளிடையே கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற 3 ஆவது டெஸ்டின் 3 ஆம் நாள் ஆட்டத்தில் இலங்கையின் சங்கக்கார,மலிங்க மற்றும் மெண்டிஸ் சாதனை படைத்துள்ளனர்.

*டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 8 ஆயிரம்ஓட்டங்களை எட்டிய வீரர் என்ற சிறப்பை இலங்கை அணியின் கப்டன் சங்காகார பெற்றுள்ளார். அவர் நேற்று முன்தினம் 12 ஓட்டங்கள் எடுத்தபோது டெஸ்டில் அவரது ஓட்டங்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தொட்டது.அவர் தனது 152 ஆவது இனிங்ஸில் (91 ஆவது டெஸ்ட்) இந்த இலக்கை எட்டியுள்ளார்.

இதற்கு முன்பு இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 2002 ஆம் ஆண்டு தனது 154 ஆவது இனிங்ஸில் (96 டெஸ்ட்) 8 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்ததே இந்த இலக்கை வேகமாகக் கடந்த வீரரின் சாதனையாக இருந்தது. அதனை சங்கக்கார முறியடித்தார். இலங்கை வீரர்களில் மஹேல ஜெயவர்தனவுக்கு (9403 ஓட்டங்கள்) பிறகு 8 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த வீரர் சங்கக்கார ஆவார்.

* இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்க,சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டைக் கைப்பற்றியபோது அது அவரது 100 ஆவது விக்கெட்டாக (30 டெஸ்ட்) அமைந்தது. இலங்கை வீரர்களில் முரளிதரன் (800 விக்கெட்),சமிந்தவாஸ் (355 விக்கெட்) ஆகியோர் மட்டுமே டெஸ்டில் இதற்கு முன்பு 100 விக்கெட்டுகளை கடந்துள்ளனர்.

* 2 விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸின் விக்கெட் எண்ணிக்கை 50 ஐ தொட்டது. தனது 12 ஆவது டெஸ்டில் இந்த எண்ணிக்கையைத் தொட்ட மெண்டிஸ்,குறைந்த டெஸ்டில் 50 விக்கெட் வீழ்த்திய இலங்கை பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு முரளிதரன்,வாஸ் ஆகியோர் தங்களது 13 ஆவது டெஸ்டில் இந்த இலக்கை எட்டியதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.