யாழ், முல்லை, கிளிநொச்சியிலும் நல்லிணக்க குழுவின் அமர்வுகள்

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் விசாரணைகள் அடுத்த மாத நடுப்பகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. பொது மக்களிடம் சாட்சியங்களைப் பெறுவதற்காக திறந்த அமர்வாக இங்கு விசாரணைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக் குழுவின் இணைப்புச் செயலாளர் ஜீ.ஏ. குணவர்தன தெரிவித்தார்.

ஆணைக்குழு முன்னிலையில் பொதுமக்கள் சாட்சியம் அளிப்பதற்கான ஏற்பாடுகளை அந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் மேற்கொள்வார்கள். எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பொதுமக்களிடம் சாட்சியங்கள் பெறப்படும். அதேவேளை ஒக்டோபர் மாதம் ஒன்பதாந் திகதி முதல் 11 ஆந் திகதி வரை யாழ்ப்பாணத்தில் விசாரணைகள் நடைபெறும்.

ஆணைக் குழு முன் சாட்சியமளிக்க விரும்பும் பொதுமக்கள் குறித்த அரசாங்க அதிபர் அலுவலகத்துடனோ அல்லது ஆணைக்குழுவுடனோ தொடர்புகொள்ளலாமென அறிவிக்கப் பட்டுள்ளது. கொழும்பு- 7, ஹோட்டன் பிளேஸிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மூன்றாந்திகதி நடைபெறும் அமர்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எம். ஐ. எம். மொஹிதீன், பீ. எம்.டி. பெர்னாண்டோ ஆகியோர் சாட்சியமளிப்பர்.

செப்டெம்பர் ஆறாந்திகதி கலாநிதி அநுர ஏக்கநாயக்க, சுசந்த ரத்னாயக்க, கே.ரி. இராஜசிங்கம் (ஏஷியன் ரிபியூன்) ஆகியோர் சாட்சியமளிப்பார்கள். செப். 13ஆம் திகதி நடைபெறும் விசாரணையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், மனிக் டி சில்வா, காந்தி நிலையத்தின் ஒரு பிரதிநிதி ஆகியோர் சாட்சியம் வழங்குவார்கள். 15 ஆம் திகதிய விசாரணையில் முன்னாள் சமாதான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஜோன் குணரத்ன, அருட் தந்தை துலிப் டி. சிக்கேரா ஆகியோரும் 24 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப், மத நிறுவனமொன்றின் பிரதிநிதி ஆகியோர் சாட்சியம் அளிப்பர். 29 ஆம் திகதி பேராசிரியர் அர்ஜுன்அலுவிகார, கலாநிதி சமன், பீ. ஹெட்டிகே ஆகியோர் சாட்சியம் வழங்குவர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *