ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் 1,100 மில்லியன் ரூபா செலவில் பத்தரமுல்லையில் நிர்மாணிக்க ப்படவுள்ள பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி அமைச்சின் பொதுச் செயலகத்திற்கான அடிக்கல்லை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோக பூர்வமாக நாட்டிவைத்தார்.
நேற்றுக் காலை இந்நிகழ்வு இடம்பெற் றதுடன் பத்தரமுல்லை டென்ஸில் கொப்பேகடுவ மாவத்தையில் எட்டு மாடிகளைக் கொண்டதாக இக்கட்டடம் அமையவுள்ளது. இரண்டு கட்டங்களாக நிர்மாணிக்கப்படவுள்ள இச்செயலகத்தின் முதற்கட்ட நடவடிக்கைள் 600 மில்லியன் ரூபா செலவிலும் இரண்டாம் கட்டப் பணிகள் 500 மில்லியன் ரூபா செலவிலும் இடம்பெறவுள்ளன.
நேற்றுக் காலை பத்தரமுல்லைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி செயலகத்துக்கான அடிக்கல்லை நாட்டிவைத்ததுடன் அது தொடர்பான பெயர்ப் பலகையையும் திரைநீக்கம் செய்து வைத்தார். அதன்பின்னர் அச்செயலகம் நிர்மாணிக்கப்படவுள்ள பகுதியையும் கட்டிடத்தின் மாதிரி வடிவமைப்பையும் பார்வையிட்டார்.
நேற்றைய இந்நிகழ்வில் ஜனாதிபதியுடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித் தலைவர் ஸ்யாவோ ஷாவோ, அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, பிரதி அமைச்சர் நிர்மலகொத் தலாவல, அமைச்சின் செயலாளர் வசந்த கரன்னாகொட உட்பட முக்கியஸ் தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.