லண்டன் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தின் நாடக நிகழ்வு ஒன்று யூலை 22 2010 சென்னையில் இடம்பெற்றது. பெசன்நகர் எலியற்கடற்கரை சாலையில் உள்ள ஸ்பேஸ் அரங்கில் ‘மழை’ ‘பிரத்தியேகக் காட்சி’ ஆகிய இரு நாடகங்கள் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தினால் மேடையேற்றப்பட்டது. சென்னையில் லண்டன் அவைக்காற்றுக்கழகத்தின் நாடகங்கள் மேடையேறியது இந்நாடகம் தொடர்பாக கூத்தலிங்கம் அவர்கள் ‘நட்பு’ இணையத்தில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பிரசுரமாகிறது.
இந்நாடகம் பற்றிய மற்றுமொரு பார்வை Psychological drama என்ற தலைப்பில் ஹிந்து பத்திரிகையில் வெளியாகி இருந்தது. அதனைப் பார்க்க: http://www.hindu.com/fr/2010/08/20/stories/2010082051230600.htm
._._._._._.
மிகவும் நாகரீகமடைந்து விட்டதாகச் சொல்லப்படும் ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் அவனது உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லவியலாத நிலையில் அவனது எண்ணங்கள் ஆழ்மனதில் வீழ்படிவாகி பிறகது அவனது சொற்கள், செயல்கள் மற்றும் வாழ்க்கை நகர்வுகள் யாவற்றிலும் வெவ்வேறு விதமாகப் பிரதிபலித்துக் கொண்டேயிருக்கின்றன. ‘மழை’ நாடகத்தில் புரபொசர் தன் மகளை திருமணம் செய்து கொள்ளாதபடி அவளை தன் கடைசி மூச்சு நின்று போகும் வரையில் தன்னருகேயே வைத்திருந்ததற்கான காரணம் மகள் மேல் கொண்ட பாசத்தினாலா? தன்னை கடைசி தருணம் வரையில் கவனித்துக் கொள்ள வேண்டியதற்கு ஆள் இல்லாமல் போய்விடுமே என்ற பயத்தினாலா? அல்லது மகள் மேல் அவர் கொண்ட நுட்பமான காதலினால், அவளை இன்னொருவர் தொடுவதை பொறுத்துக்கொள்ள இயலாத பொறாமையினாலா? – மழை நாடகத்தின் நான்கு முக்கிய கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களும், அவர்கள் சந்தித்து விவாதிக்கும் தருணங்களும் பார்வையாளர்கள், தங்களைத் தாங்களே மனவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்திக் கொள்ளும் சூழலுக்கு அதன் காட்சிகள் உதவி புரிவதாய் உள்ளன. உரையாடல்கள் அனைத்தும் உளவியல் கோட்பாடுகளுடன் ஏதோவொரு வகையில் தொடர்புகொண்டபடியே நகர்கின்றன. நிர்மலா டாக்டர் ஜேம்ஸிடம் ‘I NEED A MAN’ என்று சொல்ல, அவர் திகைத்து பதட்டமடைந்து, மறுத்து, தனக்கு சமூக சேவையில் மட்டும்தான் தீவிர ஈடுபாடு என்று சொல்ல, அவள் அவனைப் பார்த்து ‘நீ ஒரு Impotent’ என்றும் அதை மறைப்பதற்காகவே திருமண வாழ்க்கையிலிருந்து விலகி சமூக சேவகன் என்று சொல்லி மற்றவர்கள் கவனத்தை திசைதிருப்பி விடுகிறாய், இது ஒன்றிற்குப் பதிலாய் இன்னொன்றை பதிலீடு செய்து மறைத்துவிடும் உபாயம்’ என்ற வகையில் அவளது பேச்சு அமைவதோடு ‘ALL Saints are impotent’ என்னும் இன்னொரு உளவியல் கோட்பாட்டை அவ்வப்போது சொல்கிறாள். அப்பா (புரபொசர்) இறந்த மறுநாளிலிருந்தே விடாத மழை தொணதொணத்து பேய்ந்து கொண்டிருப்பதை நிர்மலாவும் அவளது சகோதரன் ரகுவும் அவ்வப்போது சன்னலருகே போய் பார்க்கிறார்கள்.
நிராசையுடன் இறந்த அப்பாதான் இப்பொழுது வெளியே விடாத மழையாக நசநசத்துப் பேய்ந்து கொண்டிருக்கிறாரோ என மகள் நிர்மலா அய்யம் கொண்டு அச்சப்படுகிறாள். மகன் ரகுவை புரொபொசருக்கு கடைசிவரை பிடிக்காமல் போய் அவனை தந்தை வெறுத்ததற்கான காரணத்தை அவனே தங்கை நிர்மலாவிடம் சுருக்கமான கதை போலச் சொல்கிறான் – புத்தகங்களையே மனைவியாக்கிக் கொண்டவர் அப்பா. அம்மாவை இன்னொருவருடன் படுக்கையில் வைத்து அவர் பார்த்துவிடும் நிலையில் அவர் அம்மாவை திட்டுகிறார். அம்மாவோ அவரைப்பார்த்து கேலியாக விழுந்து விழுந்து சிரிக்கிறாள். அப்பா உடனே கையறுநிலையில் அழத்தொடங்குகிறார். அங்கே சிறுவனான மகன் ரகு வந்து அழும் அப்பாவை பார்த்துவிடுகிறான். அவருடைய அகங்காரம் (Ego) முற்றிலும் சூன்யமடைந்திருந்த நிலையில் அவரை அவன் நேருக்கு நேர் பார்த்துவிடுகிறான். அன்றிலிருந்து அவர் தன் மகன் மேல் வெறுப்பு கொள்கிறார். ‘மழை’யின் சின்னச் சின்ன தருணங்கள் கூட மனதின் நுட்பமான தளங்களை புலனாய்வு செய்பவை.
தனது வாழ்க்கை தந்தையின் சுயநலத்தால் தடுத்து ஒரு புள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டதன் கோபம் நிர்மலாவின் எந்த ஒரு பேச்சிலும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது – புரபொசரின் இறப்புக்குப் பிறகும்.
புரபொசரின் இறப்பு நடக்கும் இரவில், டாக்டர் ஜேம்ஸ் வந்து அவரை பரிசோதித்துக் கொண்டிருக்கையில், மின்சாரம் நின்றுபோய், நிர்மலா இரண்டு மெழுகுவர்த்திகளை அதன் தீபங்களோடு ஏந்தி வருகிறாள். தந்தை இறந்து போய் விட்டதை மருத்துவர் ஜேம்ஸ் சொல்ல, அவள் மெழுகுவர்த்திகளை தந்தையின் இரு பக்கங்களிலும் மெதுவாக வைக்கிறாள். அதுபற்றி பின்னர் அவள் சகோதரனுடன் விவாதித்துப் பேசிக்கொண்டிருக்கையில், அன்று அவர் இறந்துபோக வேண்டி, அதற்காகவே தந்தையை காலையிலிருந்தே தான் தயார்படுத்தி வந்ததாகச் சொல்கிறாள் நிர்மலா. சகோதரன் ரகு அவள் அருகே போய் அவள் படித்துக் கொண்டிருக்கும் உளவியல் நூலைப் பார்க்கிறான். அந்தப் புத்தகத்தின் பெயர் – Ethinic and Socio aspect of Murder.
அன்பு வெறுப்பாகவும் பொறாமையாகவும் பிறழ்வதை ரகு ஓரிடத்தில் அதை Sublimation என்கிறான் – ஒன்று வேறொன்றாதல்.
டாக்டர் ஜேம்ஸ் நிர்மலாவின் ‘I Need a man’ என்னும் வார்த்தையைக் கண்டு பயந்தவனாக, மக்கள் சேவை என்றெல்லாம் பேசியவனாக மறுத்துவிடுகிறான்.
அவள் சன்னலுக்கு வெளியே நசநசத்துப் பெய்யும் மழையைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாள். அவளது சகோதரன் ஆறதலாக அவளது முதுகில் கை வைக்கிறான். அது நாடகத்தின் கடைசித் தருணமாய் உறைந்து நிற்கிறது.
வாழ்வின் சிறுசிறு அசைவுகளையும் நவீன உளவியல் கோட்பாடுகளுடன் பொருத்திப் பார்த்து, மனித மனவெளி குறித்த நுட்பமான ஆய்வு கொள்ளும் முயற்சியாக இந்திரா பார்த்தசாரதியின் எழுத்தில் உருவான ‘மழை’ நாடகம் அமைந்ததோடு அல்லாமல் பாசாங்கின் மேல்பூச்சுகளைக் கலைத்து, மனதின் நிர்வாணத்தை வெளிச்சத்தின் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.
வசனங்களால் காட்சிகளை முன்னெடுத்துச் செல்வதாய் அமைக்கப்பட்டிருக்கிறது – ‘மழை’.
Sellathurai
இடைவிடாத நாடகக்காரன திரு. பாலேந்திரா அவரகளின் நாடகங்களை ஆய்வு செய்தல் இன்றைய காலத்திற்குப் பொருத்தமானது. அவரது சேவையை கெளரவம் செய்வதாகவும் அமையும். முடிந்தால் யாராவத ஒரு நேர்காணல் செய்தாலும் நல்லது.
கருணா
புலிகள் பலமாக இருக்கும் போதே புலிகளை கிண்டல் அடித்து நாடகம் போட்ட பாலேந்திரா செம்மறியா? மானங்கெட்டு ரோசம் கெட்டு தான் விமர்சித்த புலிகளிற்கே நாடகம் போட்ட செயோன் என்ற பெயருக்குள் மறைந்து கல்லெறியும் ……. செம்மறியா? இந்த செயோன் ஒரு பேப்பரில் இவர்களை செம்மறி எண்டு திட்டியுள்ளார். காரணம் இந்தியாவில் இவர்கள் ஈழப்பிரச்சனையை சொல்வில்லையாம். நான் லண்டனில் பார்த்தது இரண்டு நாடகங்கள் தான். செளியனின் வேருக்குள் பெய்யும் மழை என்ற ஒரு நாடகம் புலிகளை மறைமுகமாக கிண்டல் அடிப்பதுடன் புலிகளின் கொலை காலாச்சாரத்திற்கு சாட்டை அடி போட்ட நாடகம். மற்ற ஒரு நாடகம் பெயர் தெரியாது ஆனால் புலித்தலைவரை மறைமுகமாக அம்மணமாக ஓட விட்ட நாடகம். இந்த இரண்டு நாடகங்களின் முடிவே இன்று புலிக்கு நடந்த முடிவு! சிறந்த கலைஞன் எங்கு சென்றாலும் வரவேற்கப்படுவான்! அது இன்று நிரூபணமாகியுள்ளது.
Jeyabalan T
நான் பல வருடங்களாக பாலேந்திராவின் நாடகங்களை பார்த்து வருகின்றேன். கலைபற்றிய பெரிய ஆர்வம் என்னிடம் இல்லாவிடினும் மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருந்த போதும் இவை எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் அவைக்காற்றுக் கழகத்தின் குறிப்பாக பாலேந்திரா தம்பதிகளின் அர்ப்பணிப்பு அளப்பரியது.
காலத்திற்குக் காலம் பல்வேறு அமைப்புகள் தோன்றுகின்றன. மழைக்கு முளைக்கின்ற காளான்கள் போல் அவை காணாமலும் போய்விடுகின்றன. அவ்வாறான சூழலில் கால்நூற்றாண்டு காலம் தொடர்ந்தும் இவ்வமைப்பை முன்னெடுத்ததே பெரும் சாதனை என்றே கருதுகிறேன். க பாலேந்திரா குடும்பத்தினரின் வாழ்நாள் உழைப்பு கெளரவிக்கப்பட வேண்டும்.
தமிழ் அவைக்காற்றுக் கழகத்தின் இந்தக் கால்நூற்றாண்டுப் பயணத்தில் இரயில் பயணங்கள் போல் பலர் வந்து போயிருக்கலாம் ஓட்டிகளும் மாறியிருக்கலாம். இருந்தும் பயணம் தொடர்கிறது.
செல்லதுரை கூறியதுபோல் க பாலேந்திராவை ஒரு நேர்காணல் செய்ய நான் முயற்சிப்பேன்.
த ஜெயபாலன்.
palli
//செல்லதுரை கூறியதுபோல் க பாலேந்திராவை ஒரு நேர்காணல் செய்ய நான் முயற்சிப்பேன்.//
நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள். செல்லதுரை கூட ஒரு நாடக நடிகராய் இருக்கலாம் என்பது என் கணிப்பு தவறாயின் மன்னிக்கவும்; பாலேந்திராவை நேர்காணல் செய்யும்போது நாம் எம் மண்ணின் பல நாடக நடிகர்களை நினைவு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்;
நட்புடன் பல்லி;;
kadavul
பாலேந்திராவை எதிர்த்தோரால் இன்று ஒரு நாடகம் கூட போட முடியாமல் போய் விட்டது. ஒரு பேப்பருக்கு பிரபாகரன் வைரஸ் காய்ச்சல் வந்து விட்டது. இது மருந்துகளால் குணப்படுத்த முடியாது. பாவம் ஒரு பேப்பர்……இனி காலம் முழுவதும்….
அபிமன்யு
சினிமா மோகமும், தொலைக்காட்சி மெகா சீரியல்களுமே கதி என்றும் கலை என்றும் மூழ்கிக் கிடக்கும் தமிழர்களே அநேகர் என்ற துர்ப்பாக்கியமான நிலையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் மழைக்காலக் காளான்கள்போல் அமைப்புகள் அவ்வப்போது தோன்றியும் மறைந்தும் இருக்கும்போது, ஏறத்தாழ கடந்த முப்பது ஆண்டுகளாக, முதலில் இலங்கையிலும் பின்னர் லண்டனிலும் அயராதும், தளராதும் புதிய சோதனை முயற்சிகளுடன் காத்திரமானதும் தனித்துவமானதும் தரமானதுமான பல நாடகங்களை அர்பணிப்புடன் தொடர்ச்சியாக மேடையேற்றிக் கொண்டுவரும் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தினரும், அந் நாடகங்களை இயக்கியும் அவற்றில் நடித்தும் மேடையேற்றி வரும் பாலேந்திரா ஆனந்தராணி தம்பதியினரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்!
அவர்கள் சமீபத்தில் சென்னையில் தங்களின் இரு நாடகங்களை மேடையேற்றி தரமான விமர்சகளிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியான செய்தி.
இலங்கையிலும் அவர்கள் நாடகங்களை மறுபடியும் மேடையேற்றும் காலம் விரைவில் வரவேண்டும்!