2010

2010

ஜனாதிபதித் தேர்தல் முடிவு பற்றி எவ்வித பிரச்சினைகளும் இல்லை.- அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர்

voteசமாதான முறையில் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமது அரசுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என அமெரிக்கா பிரதி இராஜாங்கச் செயலாளர் பிலிப்கிரவ்லி தெரிவித்துள்ளார். இலங்கையில் 70வீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தமை இலங்கை மக்களின் ஜனநாயக உரிமையை வெளிப்படுத்துகின்றது எனவும் இதனையிட்டு தான் மகிழச்சியடைவதாகவும் தெரிவித்தார்;.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பிலிப்கிரவ்லி மேற்குறிப்பிட்டவாறு குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சிறுசிறு சம்பவங்கள் தவிர பொதுப்படையாக நோக்குமிடத்து இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் அமைதியாகவும்,  நேர்மையாகவும் நடைபெற்றதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதித் தெரிவு குறித்து எவ்வித பிரச்சினைகளும் தமக்குள் எழவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கம்பளை பிரதேசத்தில் இரு குழுக்களிடையே மோதல்

கம்பளை பொலிஸ் பிரிவிலுள்ள தெம்பிலிகல விஹாரைக்கருகில் நேற்று (27) இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் அறுவர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம்  தெரிவித்தது.

இச்சம்பவம் நேற்றுக் (27) காலை இடம்பெற்றுள்ளதுடன்,  இதனையடுத்து கம்பளை பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இச்சம்பவத்தில் பௌத்த மதகுரு உட்பட இருவர் பலியாகியுள்ளதுடன்,  காயங்களுக்குள்ளான அனைவரும் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும்,  இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், கம்பளை தெம்பிலிகல பகுதியில் இரு குழுக்கள் மோதிக் கொண்டதையடுத்து அருகிலுள்ள விஹாரை மீதும் கைக்குண்டொன்று வீசப்பட்டுள்ளது. இதனால் விஹாரைக்கு வெளியே நின்ற தேரரும் மற்றும் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன், அறுவர் காயமடைந்துள்ளனர்.

நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன்: சரத் பொன்சேகா

pr-can.jpgதனக்கு உயிரச்சம் இருப்பதாகவும், இதனால் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் கொழும்பு ஹோட்டலில் இருந்து வீடு திரும்பிய எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்

“இலங்கையில் சட்டம் ஒழுங்கு கிடையாது. நான் விமான நிலையத்துக்கு செல்வதும் தடுக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது என்று அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு கூறியுள்ளனர். இது பற்றி ஏதும் சொல்ல முடியாது.” என பிபிசியின் சந்தன கீர்த்தி பண்டாராவுக்கு பிரத்யேக செவ்வியளித்த சரத் பொன்சேகா கூறினார்.

நான் மக்களை மறக்க மாட்டேன். ஆனால் நான் உயிர் வாழ சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. எந்த நாட்டுக்குப் போகப் போகிறேன் என்பது பற்றி நான் கூற முடியாது. மக்களுடன் தொடர்பில் இருப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

யாழ்.மாவட்ட மக்கள் வாக்களிக்க மற்றொரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் தேர்தல் ஆணையாளரிடம் சம்பந்தன் கோரிக்கை

sampanthar.jpgயாழ். குடாநாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தனும் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் இச்சம்பவங்களால் யாழ்.மாவட்ட வாக்களிப்பு பாதிக்கப்பட்டால் அங்குள்ள வாக்காளர்கள் தமது வாக்குரிமையை சுதந்திரமான முறையில் பயன்படுத்துவதற்கு தேவையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இரா.சம்பந்தனும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் தேர்தல் ஆணையாளருக்கு பக்ஸ் மூலம் முறையிட்டுள்ளனர். மூன்று சம்பவங்கள் குறித்து அவர்கள் முறையிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பற்றிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதாவது; யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பல பகுதிகளில் செவ்வாய் காலை குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவங்களினால் சிலர் பாதிக்கப்பட்டனர் என்று சொல்லப்படுகின்றது. வாக்காளரிடையே பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி நியாயமானதும் சுதந்திமானதுமான தேர்தலை தடுக்கும் திட்டமிட்ட நோக்குடன் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைவரம் யாழ்ப்பாண வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதைத் தடுக்க முடியும். யாழ்.தேர்தல் மாவட்ட வாக்காளர்கள் தங்களுக்கு எதிராக வாக்குகளைப் பயன்படுத்துவார்கள் என்று எண்ணிய அக்கறையுள்ள குழுக்களே இக்குண்டு வெடிப்புச் சம்பவங்களை மேற்கொண்டன என்பது வெளிப்படை. இவை குறித்துத் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். இவ்வாறான சம்பவங்களால் யாழ்.மாவட்ட தேர்தல் வாக்களிப்பு பாதிக்கப்பட்டால், யாழ் வாக்காளர்கள் சுதந்திரமாகத் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்குத் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரண்டாவது முறைப்பாடு, வவுனியாவில் உள்ள ஆனந்த குமாரசாமி முகாம் மற்றும் வலயம் 2 முகாம் ஆகியவற்றின் வாக்காளர்கள், வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பதற்கு போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுக்காதது பற்றியதாகும்.

அம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

முகாம்களுக்கு வெளியே காலை ஏழு மணியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதற்கு பஸ்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டு நிற்பதாக வவுனியா ஆனந்தகுமாரசாமி முகாம், வலயம் இரண்டு முகாம் ஆகிய வற்றைச் சேர்ந்த வாக்காளர்கள் முறையிட்டுள்ளனர். அவர்களுக்குப் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படும் என்று தேர்தல் செயலகமும் வவுனியா அரச அதிபரும் உறுதியளித்திருந்தனர். இரண்டு பஸ்கள் மூலம் 140 வாக்காளர்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர். 3000 வாக்காளர்களை ஏற்றிச் செல்வதற்கான பஸ்கள் நண்பகல் 12 மணி வரை சென்றடையவில்லை. இதனால் காத்து நின்ற வாக்காளர்கள் முகாம்களுக்குத் திரும்பியுள்ளனர். உங்களுடன் வவுனியா அரச அதிபருடன் இவ்விடயம் குறித்து தொலைபேசியில் உரையாடியுள்ளேன்.வாக்காளர்களை முகாம்களுக்குச் சென்று பஸ்களில் ஏற்றிச் செல்லப்படுமென எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இவ் பஸ்கள் உரிய நேரத்துக்கு சென்று பெருந்தொகையான வாக்காளர்களை ஏற்றிக்கொண்டு வாக்களிப்பு நிலையங்களுக்கு சரியான நேரத்தில் விடுவார்களா என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வாக்காளர்கள் வாக்களிக்க சட்ட பூர்வமான உரித்துடையவர்கள். இவர்கள் இன்று வாக்களிக்க முடியாது போனால் தேர்தலின் இறுதி முடிவை அறிவிக்கும் முன்பதாக இவ்வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி இன்னொரு சந்தர்ப்பம் வழங்கப்படுவதை தயவு செய்து உறுதிப்படுத்துங்கள்.

மூன்றாவது முறைப்பாடு வன்னி தேர்தல் மாவட்டத்தில் பண்டாரிக்குளம் வாக்களிப்பு நிலையத்தின் மீது நடத்தப்பட்ட கிரனேற் தாக்குதல் பற்றியதாகும்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் பண்டாரிக்குளம் வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பு நடந்து கொண்டிருந்த போது இரண்டு கிரனேற்றுக்கள் வீசப்பட்டுள்ளன. இதனால் வாக்களிப்பு பாதிக்கப்பட்டது. வாக்களிப்பு தங்களின் வேட்பாளருக்கு சாதகமாக இல்லை என்பதை தெரிந்து கொண்டவர்களே வாக்களிப்பை தடுக்கும் நோக்கில் இத்தாக்குதலை மேற்கொண்டனர் என்பது வெளிப்படை. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலே தேவை எனவே இது குறித்து ஒழுங்கான விசாரணை நடத்தி முறையான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று மூன்றாவது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால பரம்பரைக்கு வளமான எதிர்காலத்தை உரிமையாக்குவேன் – ஜனாதிபதி

mrpr.jpgஇரண் டாவது முறையாகவும் தம் மீது நம்பிக்கை வைத்து நாட்டு மக்கள் பெற்றுத்தந்த இந்த அமோக வெற்றியையிட்டு தமது மகிழ்ச்சியை தெரிவிக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

தீவிரவாதத்தை தோற்கடித்தபின் நடைபெறும் முதலாவது தேசிய தேர்தல் இதுவாகும். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அனைத்து மக்களும் பயமோ சந்தேகமோ இன்றி இந்த தேர்தலில் பங்கெடுத்துள்ளனர்.

இப்போது நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம். இந்த நாட்டு மக்கள் நன்றியுடையவர்கள் என்பதை உலகத்துக்கே நிரூபித்த வெற்றி. நாட்டை நேசிக்கும் மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தக் கூடிய வெற்றி. உண்மையான வெற்றி பிறப்பது தோல்வி இல்லாத நிலையிலேயாகும். இந்த வெற்றி நாம் அனைவருக்கும் சொந்தமானது என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

நீதியின் முன்னே அனைவரும் சமமானவர்கள். நீதியை காப்பவர் நீதியின் பாதுகாப்பை பெறுவார் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

நீதியை மதிக்கும் நாடு அபிவிருத்தியடைந்த நாடு, நல்லாட்சி நிறைந்த நாடு. இவை அனைத்தும் நிறைந்த மற்றும் வளமான எதிர்காலத்தைதான் எதிர்கால பரம்பரைக்கு மற்றும் இந்த நாட்டுக்கு உரிமையாக்கித் தருவேன் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரமாக கொண்டாட்டம்

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகப்படியான வாக்குகளால் அமோக வெற்றிபெற்றதையடுத்து நாடெங்கிலும் மக்கள் பட்டாசு கொளுத்தி, தேசியக் கொடிகளை ஏந்திய வண்ணம் மகிழ்ச்சி ஆரவாரங்களில் நேற்று ஈடுபட்டனர்.

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார்.

இதனையிட்டு நாடெங்கிலும் மக்கள் பட்டாசு கொளுத்தி, இனிப்புக்கள் வழங்கி தேசிய கொடிகளை ஏந்தி அசைத்த வண்ணம் மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டனர். மக்கள் சந்திக்கு சந்தி கூடி இருந்து றபான் அடித்து பாற்சோறு பரிமாறி மகிழ்ந்தனர்.

பொன்சேகா, தேர்தல் ஆணையாளரை வீட்டு காவலில் வைத்துள்ளதாக கூறும் செய்தி பொய்யானது – அமைச்சர் சமரசிங்க

எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவையும், தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவையும் வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் அரசாங்கம் அவற்றை முழுமையாக மறுப்பதாகவும் மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

தனது தோல்வியை தாங்கிக் கொள்ள இயலாத பொன்சேகா சர்வதேச ஊடகங்கள் வாயிலாக பொய்ப் பிரசாரங்களைச் செய்து அனுதாபம் தேட முயல்கின்றார். இது போன்ற இழிவான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்த வேண்டாமெனவும் அமைச்சர் சமரசிங்க பொன்சேக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொன்சேகா வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை. அவர் நினைத்த நேரம் அந்த ஹோட்டலை விட்டு வெளியே செல்லலாம். ஒரு ஜனாதிபதி வேட்பாளரென்ற வகையில் பாதுகாப்பு வழங்குவதற்காக அவ்வீதியில் பாதுகாப்பு படையினர் சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர் அதனை தவறாக கருத்தில் கொண்டுள்ளதுடன் ஊடகங்களில் போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட் டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த், மைத்திரிபால சிறிசேன, ஜீ. எல். பீரிஸ், பாட்டளி சம்பிக்க ரணவக்க, அனுரபிரியதர்ஷன யாப்பா, ரிஷாட் பதியுதீன், விமல் வீரவன்ச எம்.பி, சட்டத்தரணி காலிங்க இத்ததிஸ்ஸ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியிருப்பதனை புரிந்து கொண்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த சதிகார கும்பல், மேற்கூறியது போன்ற கட்டுக்கதைகளை குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், இணையத் தளங்களினூடாக பரப்பி வருகின்றது.

அது மட்டுமன்றி எதிரணி வேட்பாளரும் கட்சித் தலைவர்களும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். பொன்சேகாவை யாரும் வீட்டுக் காவலில் வைக்கவில்லை. அவர் இருப்பது வீடு அல்ல அது பல உள்நாட்டு வெளிநாட்டவர்கள் வந்து போகும் பிரபலமான ஹோட்டலாகும் என்றும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

எமக்கு கிடைத்த தகவலடிப்படையில் 26ம் திகதி மாலை 4.30 மணியளவில் பொன்சேகாவும் அவருடனிருந்த கட்சித் தலைவர்களும் மற்றும் ஆதரவாளர்களும் குறித்த ஹோட்டலிருந்த இரண்டு மாடிகளிலிருந்த 70 அறைகளை வாடகைக்கு அமர்த்தி தங்கியிருந்துள்ளனர். இவரை அரசாங்கம் அங்கே அழைத்து செல்லவில்லை. தானாக விரும்பியே அவர் அங்கு சென்றுள்ளார்.

குறித்த ஹோட்டல் அமைந்திருக்கும் பகுதி அதியுயர் பாதுகாப்பு வலையம் என்பது சகலரும் அறிந்ததே. ஹோட்டலுக்கு முன்பாகவே விமான படைத் தளம் அமைந்திருப்பதனால் எப்போதுமே அப்பகுதியில் படையினர் குவிக்கப்பட்டிருப்பது வழமை.

ஜனாதிபதித் தேர்தல் 2010- சிறுபான்மை மக்கள் சொந்தத் தலைமைகளை நிராகரித்துள்ளனர்: என்.சரவணன்

mahinda8வது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான 6 வது ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளின்படி மகிந்த ராஜபக்ஷ வென்றுள்ளார். தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வழங்கும் செய்தி என்பதன் சாராம்ச விளக்கமே இது.

யாழ் மாவட்டத்தில் 26.66 சதவீத மக்களே வாக்களித்துள்ளனர். அதிலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 3,65 வீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அளிக்கப்பட்ட வாக்குகளில் 64 சதவீதம் சரத் பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் ஒரு தெரகுதியில் அதாவது ஊர்காவற்துறை தொகுதியில் மாத்திரமே மகிந்த வென்றுள்ளார் அதுவும் 635 வாக்குகள் மட்டுமே மேலதிகமாக பெற்றுள்ளார்.

வன்னி மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் சரத் பொன்சேகா வெற்றி பெற்றுள்ளார். கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் மகிந்த படு தோல்வியடைந்துள்ளார். சரத் பொன்சேகா 69 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். திருகோணமலையில் சேருவில தொகுதியைத் தவிர மூதூர் திருகோணமலை தொகுதிகளில் மகிந்த தோல்வியடைந்துள்ளார். அம்பாறையிலும், அம்பாறை தொகுதியைத் தவிர எனைய 3 தொகுதிகளிலும் மகிந்த தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகா வெற்றி பெற்ற இன்னொரு மாவட்டம் மத்திய மாகாணத்திலுள்ள மலையகத் தமிழர்கள் அதிகமாக வாழும் நுவரெலிய மாவட்டமாகும். அங்கும் சரத் பொன்சேகா வெற்றிபெற்றுள்ளார். கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் தொகுதிகளில் அனைத்திலும் மகிந்த தோல்வியடைந்துள்ளார். 15 தொகுதிகளில் 6 தொகுதிகளில் சரத் பொன்சேகா வென்றுள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கணிப்புகளின்படி தமிழர்களின் வாக்குகள் திசை தெரியாதபடி சிதைந்துள்ளதாக கணிப்புகள் வெளியிடப்பட்ட போதும், இன்றைய தேர்தல் முடிவுகளானது வேறும் பல செய்திகளை வெளிப்படுத்தியிருக்கிறது.

அரசுடன் இணைந்த அனைத்து தமிழ் கட்சிகளும் இத்தேர்தலில் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அரசுடன் உள்ள முக்கிய தமிழ் கட்சிகளான, வடக்கில் ஈ.பி.டி.பி, புளொட், மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் கட்சி, கிழக்கில் டி.எம்.வி.பி என்பன மகிந்தவுக்கு ஆதரவாக எத்தனை பிரச்சாரம் செய்த போதும் அவர்களின் கருத்தை மக்கள் ஏற்காது தமது சொந்த முடிவினையே எடுத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை. தமிழ் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவின் கூட்டில் இருந்தது ஒரு பொருட்டல்ல. அவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதே வெளிப்பாடு ஏற்பட்டிருக்கும் என்று கருதத் தோன்றுகிறது.

சரத்பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்ய அளிக்கப்பட்ட வாக்குகளில்லை. மகிந்தவை தோல்வியடையச் செய்வதற்காக அளிக்கப்பட்ட வாக்குகளே என்று கூறலாம். கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் அளிக்கப்பட்ட வாக்குகள் சரத் பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. கொழும்பில் சரத் பொன்சேகா வென்ற தொகுதிகளில் கிடைத்த வெற்றியில் மனோ கணேசனுக்கு பங்குண்டு என்றும் கூறலாம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 14 வீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. குறைந்தளவு வாக்குகள் பதிவான மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டமே. மக்கள் தேர்தலில் ஆர்வமில்லையென்பதை இவை நிருபித்துள்ளன. வவுனியா மாவட்டத்தில் 43 வீத வாக்குகளும், மன்னாரில் 34 வீத வாக்குளுமே பதிவாகியுள்ளன. ஆக மொத்தத்தலில் வடக்கில் அனைத்து 5 மாவட்டங்களிலும் 50 வீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. இதற்கு மக்களின் இடப்பெயர்வு ஒரு காரணமாக இருந்த போதும், அது முழுமையான காரணமாக இருக்க முடியாது என்று தெரிகிறது. ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்குப் பின் வடக்கில் முழு பிரதேசங்களிலும் தேர்தல் இடம்பெற்றுள்ளன. முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த மக்கள் இறுதி நேரத்தில் அவசர அவசமாக குடியேற்றப்படுவதற்கு தேர்தல் ஒரு முக்கிய காரணமாகவே இருந்தது.

ஆக மொத்தத்தில் இம்முறை தேர்தலானது, இலங்கை தேர்தல் வரலாற்றிலேயே சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களில் பெரும்பாலானோர் தெட்டத்தெளிவாக தென்னிலங்கை “தேசிய” அரசியல் நீரோட்டத்தில் இருந்து பிரிந்து நிற்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

குறிப்பாக தமிழ், மலையக மக்கள் தமது அரசியல் தலைமைகளுக்கு ஆப்பு வைக்கவும் எம்மால் முடியுமென்று நிரூபித்திருக்கிறார்கள். மக்களின் அரசியல் அபிலாசைகளை அத்தலைமைகள் பிரதிபலிக்கவில்லை என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

மகிந்த அரசு வெளிப்படையாகவே ஒட்டுமொத்த அதிகாரத்தையும், அரச வளங்களையும் துஸ்பிரயோகம் செய்து தமது மோசமான அராஜகத்தையும், அட்டுழியங்களையும் செய்தே இந்த வெற்றியை பெற்றனர் என்பது கண்கூடு.

ஊழல், மனித உரிமை உரிமை மீறல், கருத்துச் சுதந்திரப் பறிப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் இடது சாரிப் போராட்டங்களை மோசமாக அரச இயந்திரத்தைக் கொண்டு தொடர்ச்சியாக நசுக்கி வந்தமை என மகிந்த அரசுக்கு எதிரான அலை மிகுந்திருந்தது.

போர் வெற்றி மாத்திரமே தென்னிலங்கையில் மகிந்தவின் ஒரே ஒரு துருப்புச் சீட்டாக இருந்தது. அந்த வெற்றி மயக்கத்திலிருந்து மக்கள் மீள்வதற்குள் அந்த வெற்றியை பயன்படுத்த வேண்டுமென மகிந்த அரசாங்கம் திட்டமிட்டது. அதற்கான தேர்தல் தான் இப்போது நடந்து முடிந்தது. அதே வெற்றியை சம அளவில் பங்கு போடக்கூடியவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை எதிர் கட்சிகள் பொது வேட்பாளராக நிறுத்தியபோதும் இறுதியில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்திருக்கிறதென்றால் அதற்கான முக்கிய காரணங்கள் அரசின் அதிகார துஸ்பிரயோகமும், போர் வெற்றி மயக்கத்திலிருந்து தென்னிலங்கை மக்கள் இன்னமும் மீளவில்லை என்பதுமே.

வெகு விரைவில் நடத்தப்படவிருக்கிற பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒத்திகையாகவும் இந்தத் தேர்தலை அரசாங்கம் கருதியிருந்தது. அப்படி நாடிபிடித்தறிவதற்கு இந்தத் தேர்தல் போதுமானதா என்பது கேள்விக்குறியே. இந்த இடைப்பட்ட காலத்தில் நிகழவிருக்கும் தேர்தல் கூட்டணிகள் மற்றும் மக்கள் மீது ஏற்படுத்தப்படும் நம்பிக்கைகளே அதன் முடிவைத் தீர்மானிக்கும். போர் வெற்றி எவ்வளவு காலம் அரசாங்கத்துக்கு கை கொடுக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

அமைதியான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி: ரணில்

ranil.jpgஅமைதி யான முறையில் தேர்தலை நடாத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல்களை உரிய முறையில் நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள், படையினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஏற்கவில்லை – ஜெனரல் சரத் பொன்சேகா

sa.jpgஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக  அறிவித்துள்ளார். ஆனால் முக்கிய போட்டியாளரான ஜெனரல் சரத் பொன்சேகா,  இந்த முடிவுகளை தான் ஏற்கவில்லை என்றும் அவற்றை தான் எதிர்க்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.