2010

2010

போராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வளிக்க வேண்டும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன்

sitharthan.jpg”போராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்” என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் புனர்வாழ்வு மற்றும் சிறைத்துறை அமைச்சர் டியூ குணசேகரவுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் புளொட் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கருத்து வெளியிடுகையில், ”போராட்டத்தில் பங்குபற்றிய அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த போராளிகளும் முற்றுமுழுதாக ஆயுதங்களைக் கைவிட்ட நிலையில் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகின்றபோது அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான முயற்சிகளை எவருமே மேற்கொள்ளவில்லை. அனைவருமே புலிகள் இயக்கப் போராளிகள் பற்றியும் அல்லது புலிகள் அமைப்பில் இருக்கக்கூடிய விதவைகள் பற்றியுமே பேசுகிறார்களே தவிர மாற்று இயக்கங்களில் இருந்து விடுபட்ட கடந்தகால போராளிகள் அல்லது அந்த இயக்கங்களில் இருந்து பிரிந்த தோழர்கள் கொல்லப்பட்டபோது உருவாக்கப்பட்ட விதவைகள் சம்பந்தமாக எவருமே கதைக்கவில்லை.

இது தொடர்பாக நான் அண்மையில் அமைச்சர் டியூ குணசேகர அவர்களுடன் கதைத்திருக்கின்றேன். வேறு பலருடனும் கதைத்து அவர்களுடைய புனர்வாழ்வையும் முன்னெடுக்க வேண்டுமென்று கேட்டிருக்கின்றேன். அல்லது இதுபெரிய சமூகப் பிரச்சினையாக உருவாகும் என்பதை அவர்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்தியிருக்கிறேன். அவர்கள் இதற்கான முயற்சிகளை எடுப்பதாக திரு டியூ குணசேகர அவர்கள் எனக்கு உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சட்டத்தரணியின் வாதத்திறமையாலேயே தர்சிகா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். – தவிசகூ குற்றச்சாட்டு

வேலணை வைத்தியசாலை மருத்துவமாது மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியருக்கு தமிழ் சட்டத்தரணி ஒருவரே அதி தீவிரமாக வாதாடி பிணையில் செல்ல வழிசமைத்துள்ளமை வேதனைக்குரியது என தமிழர்விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பொன்றை தமிழர்விடுதலைக் கூட்டணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் இரா. சங்கையா வெளியிட்டுள்ளார்.

மருத்துவமாது ச.தர்சிகாவின் மரணத்தின் சோகமும். அது குறித்த செய்திகளின் சூடும் தணியுமுன் குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியருக்கு பிணை வழங்க வேண்டுமென யாழ்.மேல் நீதிமன்றத்தில் அதி தீவிரமாக வாதாடியுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியாகாத நிலையில் தமிழ் சட்டத்தரணியான இவர் கொலை சந்தேக நபரான வைத்தியருக்காக வாதாடி பிணை பெற்றுக் கொடுத்துள்ளார் என்றால் அவரின் சட்டவாதத்திறமையை எண்ணி பெருமைப்படுவதா வேதனைப்படுவதா அல்லது வெற்கித் தலை குனிவதா என்று தெரியவில்லை. எத்தனையோ அப்பாவித் தமிழர்கள் விசாரணைகள் எதுமின்றி சிறைகளில் வருடக்கணக்கில் வாடும்போது அவர்களுக்காக இந்த சட்டத்தரணி ஏன் தனது வாதத்திறமையை பயன்படுத்தக் கூடாது?

தர்சிகாவின் மரணம் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என தொலைபேசி மூலமும், நேரடியாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக  தர்சிகாவின் தாயார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே சம்பந்தப்பட்ட வைத்தியர் தமிழ் சட்டத்தரணியின் வாதத்திறமையால் பிணையில் சென்றுள்ளார்.

இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லை நீதிமன்றம் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது

முல்லைத்தீவு நீதிமன்றம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. 23 வருடங்களின் பின்னர் முலலைத்தீவு நீதிமன்றம் இயங்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முல்லை அரச செயலக கட்டடத்தொகுதியில் தற்காலிகமாக நீதிமன்றம் இயங்கத் தொடங்கியுள்ளது.  வாரந்தொறும் புதன் கிழமைகளில் இந்நீதிமன்றம் முல்லைத்திவில் நடைபெறும் எனவும், ஏனைய தினங்களில் வவனியாவில் செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் இந்நீதிமன்றம் மழுமையாக முல்லைத்தீவிலெயே செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

கிளிநொச்சி நகருக்கே இன்னமும் முழுமையாக மின்சாரம் வழங்கப்படவில்லை!

ceb.jpgமுதற் கட்டமாக கிளிநொச்சி நகரத்திற்கும் நகரத்தை அண்டியுள்ள சில கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதும், இன்னமும் குறிப்பிட்டவாறு மின்சாரம் வழங்கப்படவில்லை என்பதை கிளிநொச்சிப் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்த்த போது புரிந்து கொள்ளக்கூடிதாகவுள்ளது. கிளிநொச்சி நகரில் ஏ-9 பாதைக்கு அண்மையாகவுள்ள வணிக நிறுவனங்கள் சிலவற்றிக்கே தற்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளுக்குள் மின்சார இணைப்புகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றதே தவிர இன்னமும் மின்சாரம் வழங்கப்படவில்லை.  ஒரு பிரதேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான தேவை மின்சாரம் என்பது தெரிந்த விடயமே. ஆனால், அதற்கான  நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வது மிக முக்கியமானது என்பதும்   பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை; சவால்களை எதிர்கொள்வோம்

Keheliya_Rambukwellaஐ.நா. செயலாளர் நியமித்துள்ள குழு தொடர்பில் எமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது. உரிய வகையில் எமது எதிர்ப்பை நாம் தெரி வித்துள்ளோம். எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை முகம்கொடுக்க தயாராக இருப்பதாக அமை ச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக் வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆலோசனைக் குழுவுக்கு உதவியாக 8 பேர் கொண்ட மற்றொரு குழுவை ஐ.நா. செயலாளர் நியமித்திருப்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது; ஐ.நா. செயலாளரின் குழு தொடர்பில் எமது நிலைப்பாட்டை தெளிவாக வெளியிட்டுள்ளோம். இந்தக் குழு சட்டபூர்வமற்றது என ஐ.நா. வில் உள்ள பல நாடுகள் தெரிவித்துள்ளன. பாதுகாப்பு சபையினதோ மனித உரிமை ஆணையத்தினதோ அனுமதி இன்றி இத்தகைய குழுவொன்றை அமைக்க அவருக்கு உரிமை கிடையாது என அந்த நாடுகள் அறிவித்துள்ளன.

கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. வில் பிரேரணை முன்வைக்கப்பட்டபோது ஏனைய நாடுகளின் உதவியுடன் அதனைத் தோற்கடித்தோம். மீண்டும் அத்தகைய நிலை ஏற்பட்டால் அந்த சவாலுக்கும் முகம்கொடுப்போம். எல்லை தாண்டாது எமது எதிர்ப்பை காட்டியுள்ளோம். இதே போன்று வேறு நாடுகளுக்கு எதிராகவும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அடுத்து என்ன நடக்கிறது என நாம் காத்திருக்கிறோம் என்றார். ஐ.நா. செயலாளர் நியமித்துள்ள குழு தொடர்பாக ஏனைய நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். ஐ.நா. செயலாளர் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுத்தால் நாமும் அதற்கேற்ப செயற்படுவோம்.

ஜூலை 26வரை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் காலக்கெடு

பஸ் கட்டணங்களை தனியார் பஸ் போக்குவரத்து உரிமையாளர்கள் அதிகரிக்காத அதேவேளை, மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை போக்குவரத்துச் சேவைக்கான அனுமதிக் கட்டணங்கள் உட்பட ஏனைய கட்டணங்களை அதிகரித்துள்ளதால் நாங்கள் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக கவலைதெரிவிக்கப்படுகிறது.

அனுமதிக்கட்டண அதிகரிப்பை நீக்குவதாக எதிர்வரும் 26 ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் எமக்கு மேல் மாகாண சபை அறிவிக்காதவிடத்து எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் சேவை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாரஹென்பிட்டியிலுள்ள அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் சங்கத் தலைவர் கெமுனு விஜயரட்ண பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“17 வது திருத்தச் சட்டம் உள்நாட்டு விவகாரம்” ரொபேட் ஓ பிளக்கிற்கு கெஹலிய பதில்

min-meedia.jpg17 ஆவது திருத்தச் சட்டம் உள்நாட்டு விவகாரமாகும். அது குறித்து ரொபேட் ஓ பிளக் பேசத் தேவையில்லை. 17 வது திருத்தம் பற்றி எமது பாராளுமன்றம் கவனிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.  இலங்கைக்கு விஜயம் செய்த பிளக் ஜனநாயகம் குறித்தும் 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்தும் கருத்து வெளியிட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  இதற்குப் பதலளித்த அவர், இலங்கையில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது.

ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 17 ஆவது திருத்தத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றைத் தீர்க்க வேண்டுமென்றார்.

17 ஆவது திருத்த விவகாரம்; ஐ.தே.க. தூதுக்குழு பீரிஸுடன் சந்திப்பு

அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தை அமுலாக்குவது தொடர்பான விடயங்கள் குறித்து ஐ.தே.க. தூதுக்குழு நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. 17 ஆவது திருத்தம் தொடர்பாக ஐ.தே.க. முன்வைத்த யோசனைகள் குறித்து கலந்தாராய வருகை தருமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பிற்கிணங்க நேற்று சந்திப்பு இடம்பெற்றதாக ஐ.தே.க. எம்.பி.ஜோசப்மைக்கேல் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க. சமர்ப்பித்த யோசனைகள் தொடர்பாக அரசாங்கம் சில தயக்கங்களைக் கொண்டிருந்ததாகவும் அந்தக்கவலைகள் தொடர்பாக ஆராய்வதற்காக சந்திப்பை நாடியிருந்ததாகவும் ஜோசப் மைக்கேல் பெரேரா கூறியுள்ளார்.

அமைச்சர் டியூ குணசேகர தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவானது 17 ஆவது திருத்தத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பான யோசனைகளை பரிசீலனை செய்து வருகிறது. நாடு எதிர்நோக்கும் சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதே தவிர்க்கமுடியாத தீர்வாக அமையும் என்று ஐ.தே.க. அண்மையில் தெரிவித்திருந்தது.

நீல் பூனே மீண்டும் திரும்பிச் சென்றார்

neel.jpgஐ.நா. செயலாளர் நாயகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கைக்குத் திரும்பி வந்திருந்த நீல் பூனே மீண்டும் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சொந்த விடுமுறையில் நீல் பூனே சென்றிருப்பதாகவும் அவர் கொழும்புக்குத் திரும்பி வருவார் என்றும் ஐ.நா. வாட்டாரமொன்று தெரிவித்தது. கொழும்பிலுள்ள ஐ.நா.அலுவலகத்துக்கு வெளியே அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து கலந்தாலோசனை நடத்துவதற்காக நியூயோர்க்கிற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தால் நீல் பூனேஅழைக்கப்பட்டிருந்தார்.

கொழும்பில் பதியும் நடைமுறை தமிழர்களுக்கு மட்டுமானதல்ல. சகலரதும் பாதுகாப்புக்கும் முக்கியம் – பொலிஸ் மா அதிபர்

கொழும்பில் தங்கியிருப்பவர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்து கொள்வது அவர்களது சொந்தப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே, இவ்விடயம் தொடர்பாக சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

கொழும்பில் குடியிருப்பாளர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை தமிழ் மக்களுக்கு மட்டுமேயான பாரபட்ச செயற்பாடு என காட்டுவதற்கு சில சுயநல அக்கறை கொண்ட தரப்பினர் முயற்சித்து வருவது தெரிய வந்துள்ளது.

இது உண்மைக்கு மாறுபட்ட எந்த அடிப்படையும் அற்ற கூற்றாகும். அத்துடன் பாதுகாப்பு படையினர் இன விரோத நோக்குடன் அநீதியாகவும், கொழும்பில் வாழும் தமிழ் சமூகத்துக்கு பாரபட்சமாகவும் நடந்து கொள்வதாக உலகத்துக்கு காட்ட முயற்சிக்கும் வகையிலானதாகும்.

இதற்கு மாறுபட்ட வகையில் பொலிஸ் கட்டளைக்கோவையின் கீழ் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் அவ்வாறான ஆட் பதிவினை அதிக பட்ச சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், பொறுப்புடைமை மற்றும் அனைத்து மக்களினதும் இன பாகுபாடு பாராமலும் இவ்வாறான பதிவு நடவடிக்கையை மேற்கொள்ளுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக குறிப்பிடப்படும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் மட்டுமன்றி அப்பிரதேசத்தில் உள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.

எனவே தமது சொந்த பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் பெறும் இந்த பதிவு நடைமுறையை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு பொது மக்கள் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு தமது ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸார் அறிவுறுத்துகின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.