12

12

இயல்பு நிலை பாதிக்கப்பட்டால் சேவையில் ஈடுபட படையினர் தயார் இராணுவப் பேச்சாளர்

தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமாயின் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் சேவையில் ஈடுபட படைவீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தின் கீழ், நாட்டின் இயல்பு நிலையை சீராக பேணுவதற்கு அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் படை வீரர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்.  அந்த வகையிலேயே முப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் நாணயக்கார கூறினார்.

தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே பிரிகேடியர் மேற் கண்டவாறு கூறினார்.

இலங்கை மின்சார சபையின் இயந்திரங்களை இயக்குதல், பெட்ரோல் பெளசர்களை ஓட்டுதல் போன்ற சேவைகளை படையினர் முன்னெடுப்பர்.  இதற்கு முன்னரும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் படையினர் மேற்படி சேவைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். துறைமுக அதிகார சபை, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் சபை ஆகியவற்றின் தொழிற் சங்கங்கள் சில ஒன்றிணைந்து சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை நேற்று முதல் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவ குழுக்கள் மோதல்; ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் நேற்று மூடப்பட்டது

arest.jpgஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் தீவிரமடைந்ததையடுத்து நேற்று முதல் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

நேற்றுக் காலை இடம்பெற்ற மோதல்களில் ஐவர் காயமுற்றுள்ளதுடன் இவர்களில் மூவர் ஜயவர்தனபுர வைத்தியசாலையிலும் மேலும் இருவர் களுபோவில வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக மாணவர் களுக்கிடையில் இடம்பெற்ற சச்சரவுகள் நேற்றுக் காலை உக்கிரமடைந்ததையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழகத்தை மூடிவிடத் தீர்மானித்துள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

ஆஸி. தென் ஆபிரிக்கா, மலேஷியா நாடுகளின் பிரதிநிதிகள் நிவாரண கிராமங்களுக்கு விஜயம்

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரண கிரா மங்களுக்கு அவுஸ்திரேலியா, தென்னா பிரிக்கா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட குழுவினர் நேற்றுக் காலை தனித்தனியாக விஜயம் செய்தனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்கவைக்கப் பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள், மீள்குடியேற்றம் பற்றி நேரில் அவதானிக்கும் பொருட்டு இவர்களுடைய விஜயம் அமைந்திருந்ததென செட்டிகுளம் பிரதேச செயலக சிரேஷ்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதுகாப்புபடை உயர் அதிகாரிகளும் சிவில் அதிகாரிகளும் நிலைமைகளை விளக்கினார்கள்.

மார்ச் மாதமளவில் மீள்குடியேற்றம் பூர்த்தி; நாணய நிதியம் பாராட்டு

எதிர்வரும் மார்ச் மாதமளவில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

எதிர்பார்த்ததைவிட துரிதமாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன் னெடுக்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளதென ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரி வித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-

ஜனவரி மாதமாகும் போது பெருமளவு மக்கள் மீள்குடியேற்றப்பட்டு விடுவர். மார்ச் மாதமளவில் மீள்குடி யேற்றப் பணிகள் பூர்த்தி செய்யப் படும்.

கிழக்கு மாகாண மக்கள் மீள்குடி யேற்றப்படும் போது வாய்திறக்காத எதிர்க் கட்சிகளும் சர்வதேச அமைப் புகளும் வட மாகாண மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துகின்றன. உலகில் எந்த நாடும் முன்னெடுக்காத அளவு மிக துரிதமாக வடபகுதி மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்தப் பணிகள் குறித்து பல்வேறு நாடுகளும் பாராட்டுத் தெரிவித்துள்ளன.

இலங்கை பொருளாதார முகாமைத்துவத்தை சிறப்பாக மேற்கொள்வதாகவும் துரித பொருளாதார அபிவிருத்தி கண்டு வருவதோடு மக்கள் நலபணிகளை முன்னெடுப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. மீள்குடியேற்ற நடவடிக்கை தொடர்பிலும் அது திருப்தி தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு 2ம் கட்ட கடனுதவி கிடைப்பதை தடுப்பதற்காக ‘ஹியுமன் வோட்ச்’ அமைப்பு சர்வதேச நாணய நிதியத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்தக் கடிதத்திற்கு சர்வதேச நாணய நிதியம் அனுப்பியுள்ள பதிலில் இலங்கை குறித்து திருப்தி அடைவதாக கூறியுள்ளது என்றார்.