பொப் இசை மேதை மைக்கல் ஜாக்ஸன் மறைவுக்கு, அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால், மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் என்று லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜாக்ஸன் மரணம் ஒரு கொலை வழக்காக லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் மாற்றவுள்ளனர்.
ஜாக்ஸன் உடலில் நடத்தப்பட்ட மருத்துவ தடயவியல் சோதனை முடிவுகள் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் ஜாக்ஸன் மரணத்திற்கு என்ன காரணம் என்றும் தெரியாமல் இருந்தது. ஆனால் ஜாக்ஸனின் டாக்டர் கான்ராட் முர்ரே கடைசியாகக் கொடுத்த அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால்தான் அவரது உயிரைக் குடித்ததாகச் சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து முர்ரே வீடு, அலுவலகங்களில் சோதனைகள் நடைபெற்றன. தீவிர விசாரணையும் நடந்து வருகிறது. இதில் முர்ரேவுக்கு எதிரான ஆதாரங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து முர்ரே எந்த நேரத்திலும் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுக் கைது செய்யப்படக் கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வெளியிடப்படாமல் இருந்து வந்த மருத்துவ தடயவியல் அறிக்கையை லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்ரவன், ஹூஸ்டன் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.
இதையடுத்து ஜாக்ஸனின் டாக்டர் கான்ராட் முர்ரேவுக்கு எதிராக கலிபோர்னியா நீதிமன்றம் தேடுதல் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணர் டாக்டர் சத்யவாகீஸ்வரன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மைக்கல் ஜாக்ஸனின் மரணத்திற்கு அதிகளவிலான, அபாயகரமான புரோபபால் மருந்து கொடுக்கப்பட்டதே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து ஜாக்ஸனின் மரணம் கொலை எனப் பதிவாகி வழக்குத் தாக்கல் செய்யப்படவிருக்கின்றது.டாக்டர் கான்ராட் முர்ரேயும் கைது செய்யப்படவுள்ளார்.
ஜாக்ஸன் உடலில் மருத்துவ தடயவியல் சோதனைகளைச் செய்த டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் சென்னையைச் சேர்ந்த தமிழராவார். கடந்த 1992ஆம் ஆண்டு அவர் லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்பு துணை மருத்துவ தடயவியல் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
புகழ் பெற்ற ஓ.ஜே. சிம்ப்சன் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு இவர்தான் மருத்துவப் பிரேதப் பரிசோதனை அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 26ஆம் திகதி மைக்கல் ஜாக்ஸன் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தார் டாக்டர் சத்யவாகீஸ்வரன்.