01

01

அடுத்தாண்டில் சிங்கள மாணவர்களுக்குக் கிழக்குப் பல்கலைக்கழக அனுமதி

eastern-university.jpgகிழக்குப் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் கல்வி ஆண்டில் வைத்தியம் மற்றும் வர்த்தக பீடங்களில் சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றார்கள். பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் கல்வி ஆண்டில் அனுமதி பெறவிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள்(கலைப் பீடம் தவிர்ந்த) பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டு தெரிவான மாணவர்கள் பதிவு தற்போது நடைபெற்று வருகின்றது.

சௌக்கிய பராமரிப்பு – 51, விவசாயம் – 53, விஞ்ஞானம் (உயிரியல்) – 26, விஞ்ஞானம் (பௌதீகம்) – 52, வர்த்தகம் – 101. முகாமைத்துவம் – 82, தாதியியல் – 08 என்ற எண்ணிக்கையில் 372 மாணவர்கள் குறிப்பிட்ட பாட நெறிகளில் அனுமதி பெறவிருக்கின்றார்கள்.

சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு தெரிவான 51 பேரில் முஸ்லிம் – 30, சிங்களம் – 06, தமிழ் -15 என மாணவர்கள் அடங்குகின்றனர்.

முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவான 101 மாணவர்களில் 64 பேர் சிங்கள மாணவர்கள் என பல்கலைக்கழக தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. 

இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி

pakisthan-cri.jpgபாகிஸ் தானுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி  6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
வெற்றியீட்டியது.

தம்புள்ளையில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பாகிஸ்தான்  அணி 47 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 168 ஓட்டங்களை பெற்றது. கடைசி வரிசையில் முதம்மத் 24 ஓட்டங்களையும், அஜ்மல் 16 ஓட்டங்களையும், பெற்றதன் மூலம் பாகிஸ்தான்  அணி சற்றுக் கூடிய ஓட்டங்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் பதிலெடுத்தாடிய இலங்கை அணி 43.4 ஓவர்களில் 169 ஓட்டங்களைப் பெற்று  6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  வெற்றியீட்டியது. அதிகபட்சமாக கபுகெதர  ஆட்டம் இழக்காமல் 67 ஓட்டங்களையும்  சமரவீர  ஆட்டம் இழக்காமல் 38 ஓட்டங்களையும்  பெற்றனர். கபுகெதரக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

வவுனியாவுக்கான ரயில் சேவைகள் இன்று முதல் வழமைபோல நடைபெறும்

train0000.jpgவவுனியா கொழும்பு ரயில் சேவைகள் நீண்ட காலத்தின் பின் இன்று சனிக்கிழமை முதல் வழமைபோல் நடைபெறும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. வவுனியா, கொழும்பு இரவு தபால் ரயில் சேவை வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு இந்த ரயில் வவுனியா ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் தாண்டிக்குளம் வரையும் சென்றது.

வடக்கில் தற்போது அமைதியான சூழல் காணப்படுவதால் இந்த ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும வவுனியாவில் வியாழக்கிழமை கூறினார்.

பாதுகாப்புக் காரணங்களால் வவுனியா வரையுமான ரயில் சேவைகள் மதவாச்சி வரையும் மட்டுப்படுத்தப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்களாக நடைபெற்று வந்தன.  இன்று சனிக்கிழமை முதல் வவுனியாவில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் கொழும்பு கோட்டையில் இருந்து வவுனியாவுக்கும் வழமையான நேரப்படி ரயில் சேவைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையடுத்து வவுனியா, மன்னார் பிரதேசங்களின் தபால் சேவைகளும் தாமதமின்றி நடைபெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார செயலாளராக நிருபமாராவ் இன்று பதவியேற்பு

01-nirupama.jpgஇந்தி யாவின் புதிய வெளிவிவகார செயலாளராக நிருபமாராவ் இன்று சனிக்கிழமை பதவியேற்கிறார். சிவ்சங்கர் மேனனிடமிருந்து இன்று காலை 7 மணிக்கு பதவியை பொறுப்பேற்கும் நிருபமாராவ் கோகிலா ஐயருக்குப் பின்னர் இந்தியாவின் வெளியுறவு செயலாளராகும் இரண்டாவது பெண்ணாவார்.

58 வயதுடைய நிருபமா வெளிவிவகார சேவையில் பல முக்கியமான பதவிகளில் இருந்துள்ளார். இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியிருந்த நிருபமா சீனத் தூதுவராகப் பணியாற்றி வந்தார்.

அதிகளவு நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் புதிய பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதாகவும் எதிர்நோக்க வேண்டியுள்ள சவால்கள் குறித்து பூரணமாக அறிந்திருப்பதாகவும் முன்னோக்கிச் செல்வதே தனது எதிர்பார்ப்பெனவும் ஏ.என்.ஐ.செய்திச் சேவைக்கு நிருபமா கூறியுள்ளார்.

இலங்கை சமாதான செயலகப் பணிகள் நேற்றுடன் நிறைவு

profrajiwawijesinha.jpgஇலங்கை சமாதான செயலகத்தின் பணிகள் நேற்று 31 ஆந் திகதியுடன் நிறைவு பெற்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரையின் பேரில் சமாதான செயலகம் தனது பணிகளை நிறைவு செய்து கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பெற்றுக் கொள்ளப்பட்ட இராணுவ வெற்றியைத் தொடர்ந்து சமாதான செயலகத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக செயலகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நீண்ட ஆலோசனைகளின் பின்னர் சமாதான செயலகத்தை மூடும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது கடந்த 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி சமாதான செயலகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

பேர்னாட் குணதிலக்க, ஜயந்த தனபால, பாலித கொஹணே உள்ளிட்டோர் சமாதான செயலகத்தின் பணிப்பாளர்களாகக் கடந்த காலங்களில் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமாதான செயலகப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனைய நபர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பானது நிலைமைகளுக்கு இசைவாக தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு அமைப்பு. ‘த வீக்’ வார இதழுக்கு பத்மநாதன் பேட்டி

kp.jpg“எமது மக்களின் சுதந்திரப் போராட்டம் மாற்றமடையவில்லை. ‘நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றிக்கொண்டாலும் எமது போராட்ட இலட்சியம் மாறாது’ என எமது தலைவர் எப்போதும் சொல்லிவந்துள்ளார். அதன்படி எமது போராட்டம் முடிவுக்கு வரவில்லை. எமது இலக்கை அடைவதற்கான போராட்ட வடிவத்தையே நாம் மாற்றிக்கொண்டுள்ளோம்” என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.
இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘த வீக்’ பிரபல ஆங்கில வார ஏட்டுக்கு வழங்கியிருக்கும் பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்திருக்கும் பத்மநாதன், தமிழ் மக்களின் சுயாட்சிக்காக 1976 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட உரிமைக் கோரிக்கை மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டது. தமிழ் மக்களின் உரிமைகள் பெற்றுக்கொள்ளப்படும் வரையில் அதனை நோக்கிய போராட்டத்தில் மாற்றம் ஏற்படப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

இந்தப் பேட்டியில் செல்வராஜா பத்மநாதன் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது:

“பிரபாகரன்தான் எமது தேசியத் தலைவர். தான் நம்பிக்கை வைத்த கொள்கைக்காக தனது வாழ்க்கை முழுவதையுமே வாழ்ந்தவர் அவர். ஒரு ஆயுதப் போராட்டத்தின் மூலமாக தமிழ் மக்களின் நிலத்தை மீட்டு எடுப்பதில் சமரசத்துக்கு இடம் இல்லாத நம்பிக்கை வைத்திருந்தவர் அவர். தனது நோக்கத்தில் இருந்து ஒருபோதுமே அவர் பின்வாங்கியதில்லை. சிறிலங்காப் படை இயந்திரத்தின் அனைத்துச் சவால்களையும் பிரபாகரன் எதிர்நோக்கினார். அனைத்துலகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொண்டமையால்தான் விடுதலைப் புலிகளின் படை பலத்தை சிறிலங்காப் படையால் முறியடிக்க முடிந்தது.

அரச தலைவர்களும், படை ஜெனரல்களும் மாற்றமடைந்தபோது, மிகவும் குழப்பமான நிலைமைகளுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கு அவர் தலைமை தாங்கினார். அவர் தனது தாயகத்தில் இருந்துகொண்டே இந்த போரை நடத்தினார். இது ஒரு தற்காப்பு போராகவே இருந்தது. அவர் தமிழர் தாயகத்துக்கு வெளியே போரை கொண்டுசெல்லவோ அல்லது அப்பாவிப் பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாகச் செய்யவோ இல்லை. கொள்கையுடைய ஒரு மனிதராக அவர் இருந்தார். தனது இறுதி மூச்சுவரையில் தமிழ் மக்களின் நலன்களிலேயே அவர் கவனமாக இருந்தார். போர் அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அனைத்துலக அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் ஒரு செயல்திறன் மிக்க படையையும் நடைமுறை ரீதியான நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றையும், நடைமுறை ரீதியான தமிழீழ அரசு ஒன்றையும் அவர் உருவாக்கியிருந்தார்.

சிறிலங்கா அரசு சொல்வது உண்மை என எடுத்துக்கொண்டால், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தமிழீழப் போராட்டத்துக்கும் என்ன நடைபெற்றிருக்கின்றது என நீங்கள் நினைக்கின்றீர்கள்? பலர் சொல்வதைப் போல ஈழக் கனவு முடிவுக்கு வந்துவிட்டதா?

1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ் மக்களின் சுயாட்சி உரிமை என்ற கருத்துக்கு மக்களின் ஆணை கிடைத்தது. தமிழ் மக்களின் உரிமைகள் பெற்றுக்கொள்ளப்படும் வரையில் தமிழர்களின் போராட்டத்தில் மாற்றம் ஏற்படப்போவதில்லை. விடுதலைப் புலிகள் படை ரீதியான பின்னடைவைச் சந்தித்திருக்கின்றனர் என்பது உண்மைதான். 10 ஆயிரத்துக்கும் அதிகமான எமது போராளிகள் சிறிலங்கா அதிகாரிகளினால் அனைத்துலக விதிமுறைகளுக்கு எதிராகத் தடுத்துவைக்கப்படடுள்ளனர் என்பதும் உண்மைதான். ஆனால் தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

எதிர்காலத்தில் விடுதலைப் புலிகள் எடுக்கப்போகும் நிலைப்பாடு என்ன?

விடுதலைப் புலிகள் அமைப்பானது நிலைமைகளுக்கு இசைவாக தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு அமைப்பு. புதிய உலக ஒழுங்குக்கு அமைவாக நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். அத்துடன், வன்முறையற்ற ஒரு பாதையிலேயே நாம் செல்ல வேண்டும். எதிர்காலத்தில் எமது போராட்டம் அரசியல் வழிகளிலேயே முன்னெடுக்கப்படும். விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு தேசிய அமைப்பாக தொடங்கப்பட்ட போதிலும் இப்போது ஒரு அனைத்துலகப் பிரசன்னத்தை அது கொண்டுள்ளது. இதனை ஒரு அனைத்துலக அமைப்பாக மாற்றியமைத்து அதன் மூலமாக சுயநிர்ணய உரிமைக்கான எமது போராட்டத்தை முன்னெடுப்போம்.

இதனை ஒரு தோல்வி என நீங்கள் கருதுகின்றீர்களா? ஒரு பாரம்பரிய படை என்ற நிலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டீர்களா?

நான் முதலில் குறிப்பிட்டது போல, நிச்சயமாக நாம் படைத்துறை ரீதியாக பின்னடைவு ஒன்றைச் சந்தித்துள்ளோம். நாம் இப்போது அனைத்துத் தமிழர்களும், அனைத்துலக சமூகமும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதமான அரசியல் பாதை ஒன்றையே தெரிவு செய்ய வேண்டியுள்ளது.

இந்த நிலையில் அனைத்துலக சமூகம் செய்ய வேண்டியது என்ன?

30 வருடங்களுக்கு முன்னர் என்ன காரணத்துக்காக நாம் ஆயுதப் போராட்டத்தை தொடங்கினோமோ அது இன்று வரையில் தீர்க்கப்படாமல் இருக்கின்றது என்பதை அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்கள் இன்றும் சமத்துவ உரிமை மறுக்கப்பட்டவர்களாக இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். கடந்த சில மாத காலமாக விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டபோது அனைத்துலக சமூகம் மெளனமாகவே இருந்தது.

ஆனால், தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அது தவறிவிட்டது. 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற அது தவறிவிட்டது. தற்போது சிறிலங்காப் படையினரால் கொடூரமாக படை மயப்படுத்தப்பட்ட முகாம்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மக்களைப் பாதுகாப்பதற்கு சிறிலங்கா அரசின் மீது எந்தவிதமான அழுத்தத்தையும் கொடுக்க முடியாத நிலையில் அனைத்துலக சமூகம் உள்ளது.

இந்த அப்பாவித் தமிழர்கள் மீது தமக்குள்ள அக்கறையை அனைத்துலக சமூகம் இப்போது வெளிப்படுத்துவதுடன், அவர்களைப் பாதுகாப்பதில் தமக்குள்ள அக்கறையையும் வெளிப்படுத்த வேண்டும். இதுதான் இப்போதுள்ள அவசரத் தேவை.

3வது போட்டியிலும் பங்களாதேசம் வெற்றி

shakib-al-hassan.jpgமேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான நேற்று நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியிலும் பங்களாதேசம் வெற்றி பெற்று 3 போட்டிகளையும் வென்று மேற்கு இந்தியத் தீவுகளுக்கு பட்டை நாமம் போட்டுள்ளது.

சகலதுறை ஆட்டக்காரர் முகமதுல்லா 51 ஓட்டங்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்த பங்களாதேச அணி முதலில் 2 டெஸ்ட் போட்டிகளி்ல் ஆடியது. இதில் இரண்டிலும் வென்று தொடரைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.

பின்னர் ஒரு நாள் போட்டிகள் தொடங்கின. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டிகளிலும் வென்று தொடரைக் கைப்பற்றி மேலும் ஒரு சாதனையைப் படைத்தது. இந்த நிலையில் பாசதீரேவில் நடந்த 3வது போட்டியிலும் வென்று பெரும் சாதனை படைத்து விட்டது. ஒரே நேரத்தில் பங்களாதேச அணி இப்படி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை அமோகமாக கைப்பற்றியிருப்பது இதுவே முதல் முறை என்பதால் அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.

இப்போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேசம்  வெற்றி பெற்று மேற்கு இந்தியத் தீவுகளுக்கு பட்டை நாமம் போட்டு விட்டது. சகலதுறை ஆட்டக்காரர்  முகமதுல்லா ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்கள் எடுத்தும், 2 விக்கெட்களை வீழ்த்தியும் அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார்.

முன்னதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆட்ட நாயகனாக முகமதுல்லாவும், தொடர் நாயகனாக பங்களாதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசனும் தேர்வு செய்யப்பட்டனர்.

தாய்ப் பால் உலகில் விலைமதிப்பற்ற பொக்கிசம் – புன்னியாமீன்

mother-and-child.jpgதாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும்,  மகத்மீகத்தையும் ஒவ்வொரு இளம் தாய்க்கும் உணர்த்தும் வகையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை  உலக தாய்ப்பால் வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

எத்தகைய சிரமங்கள் ஏற்பட்டாலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் “தாய்ப்பால் ஊட்டுவது பேரிடரிலும் இன்றியமையாதது – நீங்கள் தயாரா?” என்பதை இந்த ஆண்டு உலக தாய்ப்பால் வாரத்தின் கோஷமாக உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) வரையறுத்துள்ளது.

பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை உண்ணும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும். ஒரு குழந்தை பிறந்ததும் அக்குழந்தைக்கு தாயின் பாலை ஊட்டுவது இயற்கையானது. குறிப்பிட்ட காலம்வரை குழந்தைக்கு தாய்ப் பாலை ஊட்ட வேண்டிய கடமை தாய்க்குண்டு.

இந்த நவீன இலக்ரோனிக் யுகத்தில் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக பல்வேறுபட்ட சிரம நிலைகள் கூறப்பட்டாலும்கூட,வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சரி,  வளர்முக நாடுகளிலும் சரி தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டின் உறுதித்தன்மையில் மாத்திரம் மாற்றங்களே வரவில்லை.  விஞ்ஞானம் வளர்ச்சிடைய வளர்ச்சியடைய தாய்ப்பாலின் முக்கியத்துவம் விஞ்ஞான ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டே வருகின்றது.

வேலைக்குச் செல்லும் தாயாக இருந்தால் தாய்ப்பாலூட்டுவது இன்று ஒரு பெரும் பிரச்சினையாக மாறி வருகின்றது. இந்நிலையைக் கருத்திற் கொண்டு அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் சரி,  அபிவிருத்தியடைந்துவரும் பெரும்பாலான நாடுகளிலும் சரி ‘சிசு” பராமரிப்பைக் கருத்திற் கொண்டு பிரசவத்தின் பின்பு தாய்க்கு நீண்டகால விடுமுறை வழங்கப்படுகின்றது. அது தவிர,  பாலூட்டும் காலம்வரை சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஆனாலும்,  சில தாய்மார் குறிப்பாக தொழில் செய்யும் தாய்மார் இது விடயத்தில் ஓரளவுக்கு அசட்டைத்தனம் காட்டுவதும் தமது பிரசவ விடுமுறை முடிவதற்கு முன்பு குழந்தைக்கு வேறு ஏதாவது ஒரு பாலைப் பழக்கி விடவேண்டும் என்று ஆர்வம் காட்டுவதையும் காணமுடிகின்றது. எத்தனையோ பெண்கள் குழந்தை இல்லாமையால் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பெறும் வரம் பெற்றவர்கள் அந்த பேற்றின் மகத்துவம் தெரியாமல் அதை அலட்சியப்படுத்துகின்றனர்.  எத்தகைய இடர்பாடுகள் ஏற்பட்டாலும் குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்ட ஒரு தாய் தயாராக இருக்க வேண்டும் என்ற கருத்தினையே இவ்வாண்டுக்கான உலக தாய்ப்பால் வாரத்தின் தொனிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளதன் ஊடாக இத்தகைய தாய்மாரின் மனோநிலைகளும் போக்குகளும் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது.

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களுக்கு கிடைக்கும் மருத்துவ விடுப்பில் முழுமையாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதையே முக்கிய பணியாகக் கருத வேண்டும். குழந்தை அழும்போதெல்லாம் அதற்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அடிக்கடி பாலூட்டும்போது தான் போதுமான அளவு பால் சுரக்க வழி ஏற்படுகிறது. பேறு கால மருத்துவ விடுப்பு முடிந்து,  குழந்தையை வீட்டில் விட்டு விட்டு மீண்டும் வேலைக்குச் செல்லும் நிலையிலும் தாய்ப்பால் கொடுக்க முடியும். காலையில் வேலைக்கு புறப்படும் முன்பு,  எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க முடியுமோ அத்தனை முறை கொடுக்கலாம். வேலைக்குக் கிளம்புவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு, தாய்ப்பாலை ஒரு கிண்ணத்தில் சேகரித்து வைத்து வீட்டில் உள்ளோர் மூலம் பாலாடை மூலம் அதைக் கொடுக்கலாம். அதற்குத்  தாய்ப்பாலை தனியாக சுத்தமான கிண்ணத்தில் எடுத்து வைத்து வீட்டில் உள்ளோரிடம் அதனைக் குழந்தைக்கு முறைப்படி கொடுக்கச் சொல்லி விட்டு பணிக்குச் செல்லவும்.

சாதாரண வெப்பநிலையில் 12 மணி நேரமும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் 24 மணி நேரமும் தாய்ப்பால் கெடாமல் இருக்கும். பணியிலிருந்து வீட்டிற்கு திரும்பியவுடன் மறுபடியும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை இரவு, பகல் பாராமல் தொடர வேண்டும். பால் புளித்திருக்கும் போது  கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் முற்றிலும் தவறானது.

அத்துடன் மார்பகக் காம்பில் விரிசல் ஏற்பட்டு தாய்க்கு வலி ஏற்படின் தாய்ப்பாலை கறந்து கிண்ணத்தில் வைத்து தேக்கரண்டி அல்லது பாலாடை மூலம் குழந்தைக்குப் புகட்ட வேண்டும். மார்பகக் காம்பு அளவுக்கதிகமாக நீண்டு இருந்தாலும் குழந்தையால் பால் குடிக்க முடியாது. குழந்தையின் தொண்டையில் அடைத்துக் கொள்வதால் மூச்சு திணற ஏதுவாகும்.
 
பிறந்த குழந்தைகளுக்குத் திரவ உணவுகளிலேயே தலைசிறந்ததும்,  ஈடு இணையற்றதுமானது தாயின் பாலாகும். இதை பாமரத் தாய்மார்கள முதல், படித்த தாய்மார் வரை நன்கு தெரிந்து வைத்தே உள்ளனர். கர்ப்பத்தில் தாய்க்கும் சேய்க்குமுள்ள தொப்புள்கொடி உறவைத் தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுவதினூடாகவே  தாய்க்கும்,  குழந்தைக்கும் உள்ள உறவு  நெருக்கமாக்கப்படுவதாக பெரியவர்கள் கூறுவார்கள். 

இயற்கையின் படைப்புகளில்,  விந்தைகளில்,  நியதிகளில் தாய்ப்பால் ஊட்டுவதும் ஒன்று. உலகிலுள்ள ஏறத்தாழ 4500 வகையான பாலுட்டும் உயிரினங்களில் ஒன்றாக மனித இனமும் காணப்படுகின்றது. ஆனால், ஆறறிவு படைத்த மனித இனத்தில் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுவதில் பல்வேறு பிரச்சினைகள் உண்டாவது விந்தைக்குரியதே. பொதுவாக அந்தந்த உயிரினங்களுக்கு அதனதன் பாலே உணவாகிறது. ஐயறிவு படைத்த ஜீவராசிகள் கூட தமது குட்டிகளுக்கு தமது பாலையே ஊட்டும். இது  தவிர,  பிற மிருகங்களின் பாலை ஊட்ட எத்தனிக்காது. இது இயற்கை. இந்த எல்லா உயிரினங்களிலும் நாம் மட்டுமே மற்ற விலங்குகளின் பாலை விலை கொடுத்து வாங்கிக் குடிக்கின்றோம். குறிப்பாக அந்தந்த இனத்தின் தேவைக்கேற்ப அந்தந்தப்பால் அமைந்துள்ளது என இயற்கை விதியினை மறந்து புறக்கணிக்கின்றோம்.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டிற்கே பொருளாதாரப் பொக்கிஷம். குழந்தைகளை நோய்களிலிருந்து தாய்ப்பால் காப்பதுடன் குடும்பச் செலவுகளையும் குறைக்கின்றது. தாய்ப்பால் எளிதில்,  வெதுவெதுப்பான சூட்டில் தேவைப்படும் போதெல்லாம் குழந்தைக்குக் கிடைக்கக் கூடியது. கலப்படம் செய்ய முடியாதது. உயர்தரப் புரதம்,  கொழுப்பு, அமினோஅமிலங்கள், தாது உப்புக்கள் மற்றும் லேக்டோ பேசிலஸ் பைபிடஸ்பேக்டர் போன்ற தடுப்புப் பொருட்கள் இவை அனைத்தையும் கொண்ட குழந்தையின் முதல் மூன்று மாதங்களுக்கான ஒரு முழுமையான உணவு.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும்,  சேய்க்கும் எண்ணற்ற பயன்கள் உள்ளன. தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது. தாய்க்கு மகிழ்ச்சியையும்,  ஆத்ம திருப்தியையும் தருகிறது. குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை,  தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது. கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை,  தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.
குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது. பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் சமிபாடடையும். தாய்ப்பாலில் உள்ள “நோய் எதிர்க்கும் சக்தியை உடைய புரதப் பொருள்’ (Immuno Globulin) குழந்தையை கொடிய நோய்கள்,  மார்புச் சளி (நிமோனியா),  தோலில் ஏற்படும் ஒவ்வாமை (அலர்ஜிக்) போன்ற பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. மருந்துகளே கிடைக்க வழியில்லாத குக்கிராமங்களில்கூட கிருமிகளினால் ஏற்படும் வாந்தி,  பேதியை தாய்ப்பால் மட்டும் கொடுத்து குணப்படுத்தலாம். தாய்ப்பாலில் புரதம்,  கொழுப்புச் சத்து மற்றும் மூளை வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமில, கொழுப்பு அமிலங்கள் ஆகியவை இருப்பதால் குழந்தை சீராக உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சி பெற்று வளரும்.

தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது. தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் சில நோய்களுக்கும் மருந்தெனவும் சித்த வைத்தியம் குறிப்பிடுகின்றது. அதாவது எல்லாவிதமான தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்து, ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட இடத்தில் சிறிதளவு தாய்ப்பாலை தடவி வந்தால் விரைவில் குணமாகி விடும், கண்களில் ஏற்படும் எல்லாவித எரிச்சல்,  உறுத்தல், கண் வலி நோய் போன்றவற்றிற்கு கண்களில் தாய்ப்பாலை ஒரு சொட்டு விட்டு உடனடி நிவாரணம் பெறலாம், இரத்த சோகை: இந்த நோயினால் மிகவும் உடல் வலுவின்றிக் காணப்படுவோர் நாள்தோறும் ஒரு சிறிய தேனீர் குவளை அளவு தாய்ப்பாலினைப் பருகி வர நல்ல பலன் தெரியும், கொசுக்கடி,  எறும்பு மற்றும் பூச்சிக்கடியினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட இடத்தில்  தாய்ப்பாலைத் தடவலாம்,  குழந்தைகளின் உடல் சூடு மற்றும்  வயிற்று வலிகளுக்கு தாய்ப்பாலினை குழந்தைகளின் வயிறு,  உச்சித் தலை மற்றும் உள்ளங்கால் பகுதிகளில் தடவி வரலாம், சளி,  இருமலுக்கும் சிறந்த மருந்து,  தொண்டை கரகரப்பு, மூக்கடைப்புக்கும் ஏற்றது,  காது வலிக்கு காதில் ஒரு சொட்டு விட்டால் போதும்….

புட்டிப்பால் தருவதினால் குழந்தைக்கு அடிக்கடி நோய் வருவதுடன் பணமும் வீணாகச் செலவிடப்படுகிறது. புட்டிப் பாலினால் ஏற்படும் வாந்தி ,  பேதி மற்றும் காதில் சீழ் வடிவது போன்ற முக்கிய நோய்கள் புட்டிப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

தாய்ப்பால் ஊட்டுவதினூடாக தனது அழகு சீர்குலைந்துவிடுமென சில தாய்மார் கருதுகின்றனர். ஆனால்,  விஞ்ஞான ரீதியான விளக்கப்படி தாய்ப்பால் ஊட்டுவதினுடாக தாயின் மனநலம் பாதுக்கப்படுகின்றது. இங்கு தாயின் அழகு கூடுமே தவிர குறையாது;. கருப்பைப் புற்றுநோய்,  மார்பகப் புற்றுநோய் தாய்க்கு வருவது தடுக்கப்படுகிறது.தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலையில்,  98 சதவீத அளவுக்கு கர்ப்பம் ஆவது தடுக்கப்படுகிறது. மேலும் தாயின் கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலைக்குத் திரும்ப தாய்ப்பால் உதவுகிறது. குழந்தை பிறந்த பின் ஏற்படும் அதிக இரத்தப் போக்கும் தடுக்கப்படுகிறது.
 
குழந்தையை அடிக்கடி பாலூட்ட அனுமதிக்காத தாய்மார்களுக்கு மார்பகத்தில் தாய்ப்பால் கட்டி வேதனை எடுக்க ஆரம்பிக்கும். இம்மாதிரி நிலை,  அளவுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரந்திடும் தாய்மார்களுக்கும் ஏற்படுகிறது. இதனால் குளிர் காய்ச்சல் ஏற்பட்டு தாய்மார் அவதிப்படுவது உண்டு. சில நேரங்களில் மார்பகத்தில் கட்டியுள்ள பால் சீழாக மாறும் நிலை ஏற்பட்டு, அதனை அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். தாய் தன் பாலைக் கொடுக்க முடியாத நேரத்தில்,  மற்றொரு தாயின் பாலைக் கொடுப்பதில் தவறில்லை.

ஒரு பெண் தாய்மை அடையும்போது இயற்கையாகவே பெண்களின் உடல் அமைப்பில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன கருவான குழந்தையை தட்ப வெப்ப சூழ் நிலைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக காப்பதற்கு உதவியாக கருவறை என்னும் கருப்பையில் அக் குழந்தைக்கு தேவையான,  காற்று , நீர்,  மற்றும் அதற்கு தேவையான உணவு,  அத்தனையும் தாயின் தொப்புள் கொடி வழியாக செலுத்தப்படும் பிறந்த குழந்தைக்கு இந்த உலகில் வந்தவுடன் உணவுப் பொருளாக தாய்ப்பால் தானாகவே சுரக்க ஆரம்பிக்கிறது

குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்குப் பால் உறிஞ்சும் தன்மை மிக அதிகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் கண்டிப்பாக ஒவ்வொரு தாயும் தாய்ப்பால் கொடுத்திட வேண்டும். சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளிவந்த உடன் பாலூட்டத் தொடங்கிவிடலாம். குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் தொடங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும். அதுவும் குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் மஞ்சள் நிற – நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்த சீம்பாலை கட்டாயம் குழந்தைக்கு தாய் கொடுக்க வேண்டும். பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த ‘கொலஸ்ட்ரம்” என்ற சீம்பால் – வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும். பொதுவாக கிராமப்புறங்களில் அல்லது வயது முதிர்ந்தவர்களிடம் இந்த மஞ்சள் நிற சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது எனவும் அந்தப் பாலை பீய்ச்சி வெளியேற்றிவிட வேண்டும் என்றும் கூறுவர். உண்மையிலேயே இது மிகவும் தவறான கருத்தாகும். விஞ்ஞான விளக்கங்களின்படி இந்த சீம்பாலிலே குழந்தைக்கான நோய் எதிர்ப்பு சக்திகள் கூடவே காணப்படுகின்றது. பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.

சில தாய்மாருக்கு தனது பிள்ளைக்கு தேவையான அளவு பால் சுரப்பதில்லை என்று ஒரு ஆதங்கம் காணப்படுவதுண்டு. சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும். அத்தாய் நல்ல ஆரோக்கியமான உடல் மற்றும் மன நலம் உள்ள நிலையில் காணப்படின் தாய்க்கு தடையின்றி தாய்ப்பால் உறுதியாகச் சுரக்கும். இது இயற்கையானது. அதேநேரம்,  மனோ ரீதியானதும்கூட. எனவே, தனக்குப் போதிய அளவு தாய்ப் பால் இல்லையே என்ற மனநிலையைத் தவிர்த்து தனது குழந்தைக்கு “நிச்சயம் பால் கொடுப்பேன்’ என்ற எண்ணம் மேலோங்கி இருந்தாலே போதும்; அதிகபட்சம் 500 மில்லி லிட்டர் தாய்ப்பால் ஒரு நாளைக்குச் சுரக்கும் என்பதை ஒவ்வொரு தாயும் உணர வேண்டும். சில தாய்மாருக்கு மார்பகங்கள் சிறிதாக இருந்தால் குறைந்த அளவுதான் பால் சுரக்கும் என நினைப்பது முற்றிலும் தவறானது. மார்பகத்தின் அளவிற்கும் பால் சுரக்கும் தன்மைக்கும் தொடர்பே கிடையாது. இதனை ஒவ்வொரு தாயும் புரிந்து கொள்ள வேண்டும்.

சில தாய்மாருக்கு சில பாரதூரமான நோய்கள் காணப்படின் உதாரணமாக,  காச நோய்,  மலேரியா மற்றும் டைபாய்டு காய்ச்சல் போன்ற நோய்கள் இருக்கும்போது குழந்தைக்குத் தாய்ப் பால் ஊட்டலாமா? என்ற ஐயப்பாடும் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் தங்கள் டாக்டருடன் கலந்துரையாடி தாய்ப்பாலைக் கொடுக்கலாம். மேலும்,  குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் சில தாய்மார் பாலூட்டுவதை நிறுத்த எத்தனிப்பர். இது தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் அதிலுள்ள நோய் எதிர்க்கும் சக்தியான “இம்னோ குளோபிலின்’ என்ற புரதச்சத்து நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி வயிற்றுப் போக்கினைக் குணப்படுத்த பெதும் உதவுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். 

குழந்தைக்கு எவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதில் சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. குழந்தை பிறந்தது முதல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் நிலையில்,  தண்ணீர்கூட கொடுக்கத் தேவை இல்லை. தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது என்ற உறுதியான முடிவை ஒவ்வொரு தாயும் எடுக்க வேண்டும். புட்டிப்பாலை இயன்றவரை தவிர்க்க வேண்டும். தாய்ப்பாலுக்குப் பகரமாக வேறெந்த மாற்றுவகைத் தயாரிப்புகளான பால் மாவினை தவிர்க்க வேண்டும். 4 மாதங்கள் முதல் டாக்டர் அல்லது பிரதேச வைத்திய ஆலோசகரின் ஆலோசனைப்படி சில உணவு வகைகளைக் கொடுக்கலாம்.

மூன்றாம் உலக நாடுகளில் தாய்ப்பால் ஊட்டுவது தொடர்பாகவும், தாய் சேய் தொடர்பாகவும் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது இலங்கையில் இத்தகைய செயற்றிட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப் பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது. இலங்கையில் சுமார் 75 சதவீதமான தாய்மார் தமது குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதகாலத்திற்கு தாய்பாலை மட்டுமே உணவாகக் கொடுப்பதாகவும் இது ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அண்மைய ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது.

கடந்த ஏழு வருடங்களில் மாத்திரம் இந்த நிலைமை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாகவும்,  இதற்கு உலக சுகாதார ஸ்தாபனம்,  இலங்கை சுகாதார அமைச்சின் தாய்/சேய் நலன்பிரிவு உள்ளிட்ட பல அமைப்புக்களினதும் கடுமையான பிரச்சாரமே காரணம் என்றும் கருதப்படுகிறது.

நாங்கள் வாழும் காலகட்டம் வர்த்தகமயமாக்கப்பட்ட ஒரு காலகட்டமாக காணப்படுகின்றது. எனவே, குழந்தைகள் பால்மா தொடர்பான பல்வேறுபட்ட விளம்பரங்கள் கவர்ச்சிகரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கைப் போன்ற சில நாடுகளில் இத்தகைய விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டுமுள்ளன. விளம்பரங்களால் கவரப்பட்டு தாய்ப்பாலுக்குப் பதிலாக வேறு பால்மா வகைகளை எமது தாய்மார் கொடுக்க விளைவதையும் காணுகின்றோம். உண்மையிலேயே இது பெரும் தவறாகும். இறைவன் எமக்கருளிய வளத்தினை எமது குழந்தைகளுக்கு கொடுத்து குழந்தைகளின் உரிமைகளையும் பேண வேண்டியது தாய்மாரின் கடமையாகும். அதாவது, தாய்ப்பால் ஒரு குழந்தையின் உரிமை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வாறு மறந்து செயற்படுவது இயற்கைக்கும் எமது குழந்தைக்கும் நாம் செய்யும் துரோகமாகும்.

உலக சாரணர் தினம் – புன்னியாமீன்

baden-powell.jpgஉலக சாரணர் தினம் ஆகஸ்ட் 01ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. உலகளாவிய ரீதியிலான சாரணர்களும், சாரணியத்தின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவுகூரும் தினமாக உலக சாரணர் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. பொதுவாக ஆகஸ்ட் முதலாம் திகதி என சில நாடுகளில் இத்தினம் சிறப்புத்தன்மை பெற்றாலும்கூட, ஜுலை மாத இறுதி வாரமும், ஆகஸ்ட் முதலாம் வாரமும் சாரணியத்தைப் பொருத்தவரையில் முக்கியமான நாட்களாகும். 1907ம் ஆண்டு ஜுலை மாதம் 28ஆம் திகதி சாரண இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும், தன்னலமற்ற மனித நேயமிக்க சேவையுணர்வை உலகில் விதைத்திட்ட ‘சேர். றொபர்ட் ஸ்டீவன் ஸ்மித் பேடன் பவல்” என்பவரால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. லண்டன், பிரவுண்ரு தீவில் முதலாவது சாரணிய இயக்க மகாநாடும், சாரணியப் பாசறையும், ஆகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் ஆறாம் திகதி வரை நிகழ்ந்தது. எனவே, முதலாவது சாரணிய இயக்கப் பாசறை நடைபெற்ற தினத்தை அடிப்படையாகக் கொண்டே உலக சாரணியர் தினம் கொண்டாடப்படுகின்றது.

சமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கான பயிற்சிக்களமாகக் கல்விச்சாலைகளில் மாணவ, மாணவியர்களுக்கான சாரணர் இயக்கம் உலகளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சாதி, மத வேற்றுமை கடந்து சகோதர மனப்பான்மையுடன் சமூகத்தை அணுகுவதற்கான நல்ல பண்பாட்டினை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறது. வயது வந்தோர்க்கான கல்வி, சாலை விதிமுறைகளை மேற்கொள்ளுதல், விழா நடைபெறும் காலங்களில் கூட்டத்தினைக் கட்டுப்படுத்துதல், மரங்களை நடுதல் போன்ற பணியினைச் சாரணர் இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.

வாய்மை, நேர்மை, நம்பகத்தன்மை, தேசப்பற்று, நேசம் ஜீவகாருண்யம், மரியாதை, தைரியம் போன்ற இன்னோரன்ன ஆளுமை விருத்தியம்சங்களைக் கொண்டு மனித நேயப்பண்புகளுடன் சேவைகள் மூலம் சமூகத்துடன் ஒன்றிணைந்த அமைப்பாக மிளிரும், ‘எதற்கும் தயாராக இரு! ” எனும் தொனிப் பொருளைக் கொண்ட சாரணிய இயக்கத்தை உருவாக்கிய பிதாவாகக் கருதப்படும் பேடன் பவல், 1857 பெப்ரவரி 22ம் திகதி பிறந்தார். ரெவறண்ட் பேடன் பவல் என்பவரின் மூன்றாவது திருமணத்தில் பிறந்த பத்துக் குழந்தைகளில் எட்டு ஆண்கள். அந்த ஆண்களில் ஏழாவதாகப் பிறந்தவர் பேடன் பவல். இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது இவரது தந்தையார் காலமானார். காலமானவரைக் கௌரவிப்பதற்காகப் பவல் என்றிருந்த குடும்பப் பெயர் பேடன் பவல் ஆக்கப்பட்டது.

புலமைப் பரிசில் பெற்று சார்ட்டார்ஹவுஸ் பாடசாலையில் கல்வி கற்ற பேடன் பவல் 1876இல் பிரித்தானிய இராணுவத்தில் இணைந்தார். இளம் வயதில் இராணுவத்தில் இணைந்து கொண்ட பேடன் பவல் இந்தியா, கனடா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் பணிபுரிந்தார். 1910 இல் ஓய்வு பெற்றார். தென்னாபிரிக்காவில் பணியாற்றிய வேளையில், 1907ம் ஆண்டில் 22 இளைஞர்களுடன் சாரணர் இயக்கத்தை ஆரம்பித்தார். லண்டன், பிரவுண்ரு தீவில் முதலாவது சாரணிய இயக்க மகாநாடும் சாரணியப் பாசறையும், இவரால் நிகழ்த்தப்பட்டது. சிறுவர்களுக்கான சாரணீயம் (Scouting for Boys) என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆபிரிக்காவிற்குத் திரும்பிய பேடல் பவுல் தனது புத்தகமான எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங் (Aids to Scouting) வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும் அவை பல இளைய மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுவதையும் கண்டார்.

1910ல் சாரணியம் உலகெங்கும் பரவத் தொடங்கியது. தற்போது உலகில் சாரணர் சங்கங்கள் 216 நாடுகளில் செயல்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கையிலும் பார்க்கக் கூடுதலான நாடுகளில் செயல்படும் தொண்டு நிறுவனமாக சாரணர் அமைப்பு விளங்குகின்றது. உலகம் முழுவதிலும் 38 மில்லியன் சாரணர்கள் உள்ளனர். ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் 18 மில்லியன் சாரணர்கள் உள்ளனர் எனபுள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன..

1912ல் உலக சகோதரத்துவத்தை வளர்க்கும் தூரநோக்கில் உலகப் பயணத்தை பேடன் பவல் மேற்கொண்டார். இதேவேளை அவரது பாரியார் சீமாட்டி ‘ஒபேவா பேடன் பவல்” 1910ல் பெண்கள் சாரணியத்தை ஆரம்பித்து உலகெங்கும் வியாபிக்க வழிகோலினார். 1916ல், குருளைச் சாரணர் இயக்கமும், 1918ல் ரோவர்ஸ் சாரணர் இயக்கமும் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இன்று சாரணியர் இயக்கமும், பெண்கள் சாரணிய இயக்கமும் சமுதாய வளர்ச்சிக்காகப் பாடுபடுகின்றன. இவை எதிர்காலச் சமூகத்திற்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகின்றது. உலக சகோதரத்துவத்தை இலட்சியமாகக் கொண்ட சாரணியத்தின் மூலமாக உலக நாடுகளில் சமாதானத்தையும், ஒற்றுமையையும் கட்டியெழுப்புதல் வேண்டும், என்பதே இன்றைய எதிர்பார்ப்பாகும். பேடன்பவல் தனது இறுதிக்காலத்தில் துணைவியாரோடு ஆபிரிக்காவில் வசித்தார். 1941-01-08ம் நாள் காலமானார்.

1920ல் உலக சாரணர்களை ஒன்றிணைத்து, சாரணர் ஜம்போரி ஒன்றை தனது தலைமையில் இங்கிலாந்தில் கொண்டாடினார். இந்நிகழ்வு 1920-08-06ம் திகதி இடம்பெற்றது. அந்நாளில் பேடன்பவல் உலகின் பிரதம சாரணர் எனப் பிரகடனப்படுத்தப்பட்டார். இவரை இங்கிலாந்தின் 5ம் ஜோர்ஜ் மன்னர், ‘கில்வெல் பிரபு” எனப் பெயர்சூட்டி, பாராட்டிக் கெளரவித்தார். அன்று முதல் நான்காண்டுகளுக்கு ஒருமுறை சாரணர் ஜம்போரி உலக நாடுகளில் நிகழ்கின்றது.

இன்று உலகில் பெருமளவு நாடுகளில் பலகோடி சாரணர் இயக்கங்கள் உருவாகி, பேடன் பவல் பிரபுவின் தூரநோக்கை நிறைவேற்றி வருகின்றமை, நிறைவளிக்கின்றது. சாரணியர் அமைப்பு உலகமயப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். சாரணர் இயக்கத்தில் ஜம்போரிப் பாசறைகள் முக்கியத்துவம் பெற்றவை. சாரணர் உலக ஜம்போரிகளில், உலகளாவிய ரீதியில் சாரணர்கள் ஒன்றிணைக்கப்பட்டு பயிற்சிக்கும், செயற்பாட்டிற்கும், கடமையுணர்வு, நற்புணர்வு ஆகியவற்றிக்கு ஏற்ற வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும். ஆரம்பகாலங்களில் ஜம்போரிகளில் உலகளாவிய சாரணர்கள் ஒன்றிணைக்கப்பட்டனர். தற்போதைய நாடுகளில் அளவிலும் பிரதேச, பிராந்திய ரீதியிலும் தலைமைத்துவம் ஏற்றுள்ள சாரணியத்தில் சாதனை படைத்துள்ள சாரணர்களே ஜம்போரியில் வரையருக்கப்படுகின்றனர்.

முதலாவது சாராணியர் உலக ஜம்போரி (உலக சாரணியர்களை ஒன்றிணைக்கும் பாசறை) 1920ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஒலிம்பியா எனுமிடத்தில் நடைபெற்றது. முதலாவது உலக ஜம்போரியில் 34 நாடுகளைச் சேர்ந்த சுமார் 8, 000 சாரணியர்கள் கலந்து கொண்டனர். இரண்டாவது உலக ஜம்போரி, 1924ஆம் ஆண்டு டென்மார்;கில் நடைபெற்றது. இதில் சுமார் 5, 000 சாரணியர்கள் கலந்து கொண்டனர்.

1929ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்றாவது உலக ஜம்போரில் 69 நாடுகளைச் சேர்ந்த சுமார் 50, 000 சாரணியர்கள் கலந்துகொண்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. தொடர்ந்து நான்காவது உலக ஜம்போரி 1933ஆம் ஆண்டு ஹங்கேரியிலும் (25, 792 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), ஐந்தாவது உலக ஜம்போரி 1939ஆம் ஆண்டில் ஹொலன்டிலும் (28, 750 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), ஆறாவது உலக ஜம்போரி 1947ஆம் ஆண்டு பிரான்சிலும் ( 24, 152 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), ஏழாவது உலக ஜம்போரி 1951ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிலும் ( 12, 884 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), எட்டாவது உலக ஜம்போரி 1955ஆம் ஆண்டு கனடாவிலும் (11, 139 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), 80 நாடுகளிலிருந்து சுமார் 30, 000 பேர் கலந்துகொண்ட ஒன்பதாவது உலக ஜம்போரி 1957ஆம் ஆண்டு இங்கிலாந்திலும் 44 நாடுகளிலிருந்து 12 ,203 பேர் கலந்துகொண்ட பத்தாவது உலக ஜம்போரி 1959ஆம் ஆண்டு பிலிப்பைன்சிலும் 14, 000 சாரணியர்கள் கலந்துகொண்ட, பதினொறாவது உலக ஜம்போரி 1963ஆம் ஆண்டு கிரேக்கத்திலும், பன்னிரெண்டாவது உலக ஜம்போரி 1967ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவிலும் நடைபெற்றன. ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற இந்த ஜம்போரியில் 105 நாடுகளைச் சேர்ந்த 12, 011 சாரணியர்கள் பங்கேற்றுள்ளனர்.

பதின்மூன்றாவது உலக ஜம்போரி 1971ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்றது. இந்த ஜம்போரியில் 87 நாடுகளைச் சேர்ந்த 23, 758 சாரணியர்களும், 1975ஆம் ஆண்டு நோர்வேயில் நடைபெற்ற 14வது உலக ஜம்போரியில் 91 நாடுகளைச் சேர்ந்த 17, 259 சாரணியர்களும், பங்கேற்றுள்ளனர். 15வது உலக ஜம்போரி ஈரானில் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும், ஈரானில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகள் காரணமாக அந்த ஜம்போரி நடைபெறவில்லை. இதனால் 15வது உலக ஜம்போரி 1983ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்றது. இதில் 14, 752 சாரணியர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 1987-1988 இல் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 16வது உலக ஜம்போரியில் 84 நாடுகளைச் சேர்ந்த 14, 434 சாரணியர்களும், 1991 இல் கொரியாவில் நடைபெற்ற 17வது உலக ஜம்போரியில் 135 நாடுகளைச் சேர்ந்த சுமார் 20.000 சராணியர்களும், 1995 இல் நெதர்லாந்தில் நடைபெற்ற 18வது உலக ஜம்போரியில் 166 நாடுகளைச் சேர்ந்த 28, 960 சாரணியர்களும், 1998-1999 20ஆம் நூற்றாண்டில் கடைசியாக சிலி நாட்டில் நடைபெற்ற 19வது உலக ஜம்போரியில் 157 நாடுகளைச் சேர்ந்த சுமார் 31, 000 சராணியர்களும், 21ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற முதலாவது ஜம்போரி 2002-2003 இல் தாய்லாந்தில் நடைபெற்றது. இந்த 20வது உலக ஜம்போரியில் 147 நாடுகளைச் சேர்ந்த சுமார் 24. 000 சாரணியர்கள் கலந்து கொண்டனர். சாரணியம் உருவாக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் நேரத்தில் 21வது உலக சாரணிய ஜம்போரி இங்கிலாந்தில் 2007ஆம் ஆண்டு நடைபெற்றது. மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த ஜம்போரியில் 147 நாடுகளைச் சேர்ந்த சுமார் 24, 000 சாரணியர்கள் பங்கேற்றனர்.

22வது உலக ஜம்போரி 2001இல் சுவீடன் நாட்டிலும்ää 23வது உலக ஜம்போரி 2015ஆம் ஆண்டு ஜப்பானிலும், 24வது உலக ஜம்போரி 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்;பட்டுள்ளன.

சாரணிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட பலர, ; இன்று உலகில் பலதுறைகளிலும் பெயர் பதித்திருப்பதைக் காணலாம். உதாரணமாக, முதன்முதலாக சந்திரனில் காலடியெடுத்து வைத்த நீல்ஆம்ஸ்ரோங் ஒர் சாரணியரே இவர் அமெரிக்காவின் Eagle Scout விருது பெற்றவர். நிலவில் இதுவரை காலடி பதித்து நடந்த 12 பேரில் 11 பேர் சாரணர்கள் .(ஆம்ஸ்ட்ராங்குடன் சென்ற ஆல்டிரின் உட்பட). 1959 லிருந்து இதுவரை 214 பேர் விண்வெளி விஞ்ஞானிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களில் 125 பேர் சாரணர்கள். ஜெமினி 7, ஜெமினி 12, அப்பல்லோ 8, அப்பல்லோ 13, ஆகிய விண்கலன்களில் சென்று வந்தவர், NASA வின் தலைவராக இருந்தவர் ஜேம்ஸ் லோவல் ஒரு சாரணர். உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஜனாதிபதி ஜான் F கென்னடி ஒரு Cub Scout ஆக இருந்தவர். அமெரிக்க ஜனாதிபதிகள் வரிசையில் பில் கிலிண்ட்டன், ஜார்ஜ் புஷ் போன்றோர்களும் சாரணர்களே. உலகப் புகழ் பெற்ற Microsoft Computer நிருவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் பில் கேட்ஸ் ஒரு சாரணர். இவ்வாறான பல சாரணியர்கள் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

இலங்கை சாரணர் சங்கம் 2012ம் ஆண்டில் நூற்றாண்டு நிறைவைக் காணவிருக்கின்றது. ஆனால், உலக சாரணர் சங்கத்தில் அங்கத்துவம் பெறுவதற்கு எமது சங்கத்தில் ஒரு இலட்சம் சாரணர்கள் உறுப்புரிமை பெறவேண்டும். இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினரே தற்போது இலங்கை சாரணர் சங்கம் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

2012 ஆம் ஆண்டிற்குள் இலங்கை சாரணர் சங்கத்தின் உறுப்பினர்களை ஒரு இலட்சமாக்குவதற்கான திட்டம் ஒன்று கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 1907 இல் உலகில் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கம் இலங்கையில் ஐந்து ஆண்டுகள் கழித்து 1912 இல் கிறீன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

1912ல் இலங்கையில் சாரணர் இயக்கம் மாத்தளை கிறிஸ்து அரச கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. 1917 மார்ச் 21ல் கண்டி பெண்கள் உயர் பாடசாலையில் பெண்கள் சாரணியம் உருவாக்கப்பட்டது. உலக சாரணியப் பொது அமைப்பின் ஒரு பகுதியாக ஆசிய பசுபிக் பிராந்தியமுள்ளது. உலகில் இது பரந்துபட்ட பிராந்தியமாகும். இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் பெருமளவு சனத்தொகையும் கொண்டுள்ளதுடன் அரசியல் பொருளாதார கல்வி சமூக கலாசாரம் என்பவற்றிலும் முன்னேறி வரும் நாடுகளாகும். இந்நாடுகளிலுள்ள தேசிய சாரணர் இயக்கங்கள் ஒன்றிணைந்து ஆசிய-பசுபிக் பிராந்திய அமைப்பினை உருவாக்கியுள்ளன. இலங்கையும் இவ்வமைப்பில் இணைந்து தனது பங்களிப்பினைப் புரிந்து வருகின்றது. 1921ம் 1934ம் ஆண்டுகளில்,தனது மனைவியோடு பேடன்பவல் இலங்கைக்கு விஜயம் செய்து பல சாரணிய நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான ஐ.தே.க.வின் குற்றச்சாட்டை அரசு நிராகரிப்பு

anura.jpgசர்வதேச நாணய நிதியத் திடமிருந்து அரசாங்கம் பெற் றுக் கொண்டுள்ள கடன் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துவரும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்கம் எவ்வித நிபந்தனைகளுமற்ற இணக்கப்பாட்டுடனான கடனையே பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் இவ்வவிணக்கப்பாட்டுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே செயற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த கடனைப் பெறும் விடயத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாதகமாகவுள்ள எந்தவொரு நிபந்தனைக்கும் அரசாங்கம் உடன்பாடு தெரிவிக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியத்தில் 1950 ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து மாறிமாறி வந்த அரசாங்கங்கள் அங்கத்துவம் வகித்ததுடன் கடன்களையும் பெற்று வந்துள்ளன. 1976, 1977, 1980, 1982 என தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு வரையில் பல்வேறு விடயங்களுக்காக கடன்களைப் பெற்று வந்துள்ளன.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் போன்று நாம் எந்தவித வாக்குறுதியோ அல்லது நிபந்தனைகளின் பேரிலேயோ இம்முறை கடன் எடுக்கவில்லை. அரச வளங்களைத் தனியாருக்குக் கையளிப்பது, அரச ஊழியர்களின் தொகையைக் கட்டுப்படுத்துவது, சம்பளம், ஓய்வூதியங்களைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் ஐ. தே. க. பல நிபந்தனைகளுக்கு உடன்பட்டே கடனைப் பெற்றது. இத்தகைய கடன்கள் நாட்டின் வர்த்தக நிலுவையை சமன் செய்வதற்கே உபயோகப்படுத்தப்படுவது வழக்கம்.

இலங்கை இம்முறை சர்வதேச நாணய நிதியத்திடம் 2.6 பில்லியன் ரூபாவைக் கடனாகப் பெறுகிறது. மஹிந்த சிந்தனை செயற்றிட்டத்தை முழுமையாகப் செயற்படுத்துவது, வறுமை ஒழிப்பு போன்ற அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்கள் இதன் மூலம் நிறைவேற்றப்படவுள்ளன. அத்துடன் தேச நிர்மாணத்துக்கான வரிகளிலும் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.

அரசாங்கம் காத்திரமானதொரு கொள்கையடிப்படையிலேயே இக்கடனைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி போலன்றி யுத்தத்தின் பின்னரான இலங்கையை அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதற்கே இந்நிதி பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.