இலங்கை சமாதான செயலகத்தின் பணிகள் நேற்று 31 ஆந் திகதியுடன் நிறைவு பெற்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரையின் பேரில் சமாதான செயலகம் தனது பணிகளை நிறைவு செய்து கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பெற்றுக் கொள்ளப்பட்ட இராணுவ வெற்றியைத் தொடர்ந்து சமாதான செயலகத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக செயலகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நீண்ட ஆலோசனைகளின் பின்னர் சமாதான செயலகத்தை மூடும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது கடந்த 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி சமாதான செயலகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
பேர்னாட் குணதிலக்க, ஜயந்த தனபால, பாலித கொஹணே உள்ளிட்டோர் சமாதான செயலகத்தின் பணிப்பாளர்களாகக் கடந்த காலங்களில் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமாதான செயலகப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனைய நபர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.