சர்வதேச நாணய நிதியத் திடமிருந்து அரசாங்கம் பெற் றுக் கொண்டுள்ள கடன் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துவரும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அரசாங்கம் எவ்வித நிபந்தனைகளுமற்ற இணக்கப்பாட்டுடனான கடனையே பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் இவ்வவிணக்கப்பாட்டுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே செயற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த கடனைப் பெறும் விடயத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாதகமாகவுள்ள எந்தவொரு நிபந்தனைக்கும் அரசாங்கம் உடன்பாடு தெரிவிக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியத்தில் 1950 ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து மாறிமாறி வந்த அரசாங்கங்கள் அங்கத்துவம் வகித்ததுடன் கடன்களையும் பெற்று வந்துள்ளன. 1976, 1977, 1980, 1982 என தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு வரையில் பல்வேறு விடயங்களுக்காக கடன்களைப் பெற்று வந்துள்ளன.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் போன்று நாம் எந்தவித வாக்குறுதியோ அல்லது நிபந்தனைகளின் பேரிலேயோ இம்முறை கடன் எடுக்கவில்லை. அரச வளங்களைத் தனியாருக்குக் கையளிப்பது, அரச ஊழியர்களின் தொகையைக் கட்டுப்படுத்துவது, சம்பளம், ஓய்வூதியங்களைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் ஐ. தே. க. பல நிபந்தனைகளுக்கு உடன்பட்டே கடனைப் பெற்றது. இத்தகைய கடன்கள் நாட்டின் வர்த்தக நிலுவையை சமன் செய்வதற்கே உபயோகப்படுத்தப்படுவது வழக்கம்.
இலங்கை இம்முறை சர்வதேச நாணய நிதியத்திடம் 2.6 பில்லியன் ரூபாவைக் கடனாகப் பெறுகிறது. மஹிந்த சிந்தனை செயற்றிட்டத்தை முழுமையாகப் செயற்படுத்துவது, வறுமை ஒழிப்பு போன்ற அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்கள் இதன் மூலம் நிறைவேற்றப்படவுள்ளன. அத்துடன் தேச நிர்மாணத்துக்கான வரிகளிலும் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.
அரசாங்கம் காத்திரமானதொரு கொள்கையடிப்படையிலேயே இக்கடனைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி போலன்றி யுத்தத்தின் பின்னரான இலங்கையை அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதற்கே இந்நிதி பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.