நாட்டின் கல்வித்துறைக்குப் பொறுப்பாக 12 அமைச்சர்கள் இருந்தும் இலவசக்கல்வி முறைமைக்குப் பேராபத்து தோன்றியிருப்பதாக எச்சரித்துள்ள ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பரீட்சைக் கட்டணம் அறவிடுவது அரசியலமைப்பு விதியில் இல்லாததொன்றும் ஆதலால் அறவிட்ட கட்டணத்தை மாணவர்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பரீட்சை வினாத்தாள் தொடக்கம் கல்வித் துறையின் சகல மட்டங்களிலும் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், மாணவர் பிரச்சினையானது எதிர்கால சந்ததியைப் பாதிக்கும் பாரதூரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளதால் தேசிய ஊழியர் சங்கம் ஏனைய தொழிற்சங்கங்களையும் இணைத்துக் கொண்டு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கேம்பிரிஜ் டெரஸில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது;
இன்று பரீட்சையின் தரம் கீழ் மட்டத்துக்குச் செல்லும் அதேநேரம், இலவசக் கல்வியும் இல்லாமல் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் ஜனாதிபதியும் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளனர். கல்வி தொடர்பில் 12 அமைச்சர்கள் உள்ள நிலையில் இலவசக்கல்வி இல்லாமல் செய்யப்பட்டு வருகின்றது.
அதேநேரம், பரீட்சை வினாத்தாளில் பிழைகள் உள்ளன. ஒரு பரீட்சைக்கான தினத்தில் வேறு ஒரு பரீட்சை இடம்பெறுகிறது. ஒன்றுக்கு இரண்டு தடவை பரீட்சை நடத்துவோம். இது தவிர வினாத்தாளின் திருத்தத்தில் பிரச்சினை, வெட்டுப்புள்ளி ஒன்று இரண்டு தடவை அனுப்பப்படுகின்றது. மீள் மதிப்பீடுகளுக்கும் மதிப்பீட்டுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சினையால் மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.
பரீட்சையை உரிய முறையில் நடத்த முடியாதிருப்பதற்குக் காரணம் தகுதியான அதிகாரிகள் இல்லையெனத் தெரிவிக்கின்றது அரசு. எனவே, திறமையானவர்களை நியமிக்காமையினால் ஏற்பட்ட பிரச்சினைக்கு அரசாங்கமே பதில் அளிக்கக் கடமைப்பட்டுள்ளது.
பாடசாலைப் பரீட்சையின் போதே பாடசாலை ஆசிரியர்கள் எவ்வாறு திறமையாகச் செயற்படுகின்றார்களோ அதிலிருந்து மாணவர்களின் நிலை தெரியவரும். இந்நிலையில் பிழையிலிருந்து தப்புவதற்கு தர்க்கத்தில் அரசு ஈடுபடுகின்றது. தேசிய மட்டத்தில் க.பொ.த. சாதாரணதரம் மற்றும் உயர்தரப்பரீட்சை நடைபெறுகின்றது.
பாடசாலை மட்டப் பரீட்சைகளை பிரதேச சபையோ அல்லது வலயப் பிரிவோ நடத்துகின்றது. எந்த மட்டத்திலான பரீட்சையாயினும் கல்வியமைச்சரே பிழைகளுக்குப் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் இதிலிருந்து தப்புவதற்கு மாகாண சபையால் பரீட்சை நடத்தப்பட்டதாக கூறுகின்றார்.
அரசியலமைப்பின்படி பிரதேச சபைகள் பரீட்சை நடத்துவதற்கு பரீட்சை ஆணையாளரிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். அந்த அனுமதி பெறப்பட்டுள்ளதாவெனக் கேட்டால் பதில் இல்லை. அரசியலமைப்பு பிரகாரம் பரீட்சைக்கு மாணவர்களிடம் கட்டணம் அறவிட முடியாது. எனவே, மாணவர்களிடமிருந்து பெற்ற பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும்.
பரீட்சைக் கட்டணமாக மாணவர்களிடம் சுமார் 9 கோடி ரூபா அறவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் எந்தக் கணக்கும் இல்லை. இது குறித்துப் பாராளுமன்றத்திற்கு அமைச்சர்கள் எதுவும் தெரிவிப்பதில்லை. வினாத்தாளில் பிழைகள் தொடர்பில் எந்த விசாரணையும் இல்லாதுள்ளது. இது குறித்து பாராளுமன்றத்திற்குத் தெரியப்படுத்தவுமில்லை.
சுயாதீன ஆணைக்குழு இதற்குத் தேவை. அவ்வாணைக் குழுவிருந்தால் உரியமுறையில் விசாரணை இடம்பெறும். ஆனால், அது உருவாக்கப்படாதுள்ளது. இதற்கு அமைச்சரும் ஜனாதிபதியும் பதில் கூற வேண்டும். இது தேசிய பிரச்சினையாகும். இதனால் நாட்டின் எதிர்காலமும் எதிர்கால சந்ததியினரும் பாதிக்கப்படுவர். இப்பிரச்சினைக்கு உரிய தீர்வினைப் பெறுவதற்கு தேசிய ஊழியர் சங்கம் அதன் கீழ் உள்ள கல்விசார் தொழிற்சங்கத்துடன் இணைந்து ஏனைய ஆசிரியர் சங்கங்களையும் இணைத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கவுள்ளது. ஆசிரியர் தவிர்ந்த ஏனைய தொழிற்சங்கங்கள் உள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் உள்ளதால் அத் தொழிற்சங்கங்களையும் இதில் இணைக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உரையாற்றுகையில்;
மாணவர்களிடமிருந்து அறவிட்ட பரீட்சைக் கட்டணம் சுமார் 9 கோடி ஆகும். இதனை மாணவர்களிடம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் தேசிய ஊழியர் சங்கம் நீதிமன்றம் செல்லும். இலவசக்கல்வியை இல்லாமல் செய்வதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை என்றார்.