ஜபிசி வானொலி ஆரம்பித்த காலங்களில் இது ஒரு தமிழர் வானொலியாக வளரும் என்ற நம்பிக்கை துளிர்த்தது. இது ஆரம்பித்த சில காலங்களுக்குள்ளேயே புலிகளின் வக்காளத்து வானொலியாக மாறத் தொடங்கியது. இப்படி புலிகளுக்கு வக்காளத்து வேலை ஒன்றினாலேயே தமது பிழைப்பை நடத்தலாம் என்பதை பல ஊடகங்கள் அறிந்திருந்த போதும் அன்றைய ஜபிசியும் ரிரிஎன்னும் தாமே தலைவரின் புலிகளின் ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்றும் அதைவிட தமது சண்டித்தனங்களுக்கும் வசைபாடல்களுக்கும் குறைவில்லாமல் தாமே புலிகளாயினர். (வன்னி அவலமும் ஜிரிவி, தீபம், ஐபிசி, ஒரு பேப்பர் புலிகளுடன் செய்த கூட்டுக் கலவியும்.)
புலிகள் இயக்கம் எப்படி கொலைகள் மூலம் மற்றைய அமைப்புக்களையும், ஜனநாயக நடைமுறைகளையும் மறுத்து தாமே தம்மை தமிழர்களின் பிரதிநிதியாக்கி கொலைப் பயமுறுத்தல்கள் மூலம் முழு தமிழர்களையும் தமது கட்டுப்பாட்டில் இருத்தி தமது பயங்கரவாதங்களை செய்தனரோ அதே போல, ஜபிசியும் தமிழரின் சுதந்திர ஊடக செயற்பாட்டை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதற்காக புலிகளின் பயங்கரவாத்தை லண்டன் உட்பட வெளிநாடுகளிலும் பயன்படுத்தினர். எப்படி புலிகள் நாட்டில் மாற்று இயக்கத்தவரை தமக்கு பிடிக்காதவர்களை துரோகிப்பட்டம் சூட்டினரோ அதேபோல, இங்கு ஜபிசி தமது வியாபார விரோதிகளையும் தமது புலி எஜமானர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை எடுத்துக்காட்ட தாமும் தாளம் போட்டனர். இவர்களின் துரோகிப்பட்டத்தில் சங்கரி, டக்ளஸ், கருணா, பிள்ளையான், புளொட் ,ரெலோ, ஈபிஆர்எல்எப் மிகமுக்கியமானவர்கள். இவர்கள் பற்றிய செய்திகள் துரும்புகள் கிடைத்தபோதேல்லாம் இவர்களை துரோகிகளாக்கி தமது தொலைபேசியில் வரும் வாடிக்கையாளர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். தமது செய்திகளிலும் செய்தித் தயாரிப்புக்களிலும் திட்டமிட்டு புலிகளுடன் கருத்து முரண்பட்டவர்களை துரோகிகளாக்கி தமிழினத்தை இரண்டாக ,மூன்றாக உடைத்த வரலாறு இந்த ஜபிசியையும் சாரும். ஜபிசி யில் இந்த துரோகிப்பட்டம் வழங்கலை மிக உன்னதமாக நின்று செய்தவர்களினது வாயில் வெளிவந்த பேச்சுக்கள் இன்றும் பல தமிழர்கள் கைகளில் பதிவு செய்யப்பட்டு இருப்பது முக்கியமானது. இப்படியான பதிவு செய்யப்பட்ட பல பதிவுகள் இவர்களிடம் நியாயம் கேட்கும்காலம் வரையில் பொறுத்திருக்கும்.
இதைவிட தொலைபேசியில் வரும் போராட்டம் பற்றிய அறிவே இல்லாத இளைஞர் கூட்டத்தை பயன்படுத்தி தமது பிரச்சாரத்தையும் புலிகளுக்கு சளைத்தவர்கள் தாம் இல்லை என்று ‘board’ போட்டு துரோகிப்பட்டம் வழங்கியவர்களாகும்.
இவர்களால் வழங்கப்பட்ட இந்த துரோகப் பட்டமும் இவர்களால் செய்யப்பட்ட காட்டிக் கொடுப்பும் இந்த ஜபிசி ரேடியோ பெயர் இருக்கும் வரை இவர்களிடம் நியாயம் கேட்டபடியேதான் இருக்கும். அதிலும் இந்த தயாரிப்பாளர்கள் அறிவிப்பாளர்களை விமர்சிப்பதிலும் பின்னின்றுவிடாது.
கடந்த காலங்களில் பாராளுமன்ற முன்றலில் நடந்த போராட்டங்களின் போது செய்த உசுப்பேத்தும் நடவடிக்கைகளின் போது ‘இந்த பாராளுமன்ற சதுக்கத்திற்கு வந்து போராட்டத்தில் பங்காற்றினால் துரோகிகள் மன்னிக்கப்படுவர்’ என்ற ஜெகனின் ‘புரட்சிகர அழைப்பு’ இன்றும் எமது காதுகளில் ஒலிக்கிறது. இந்த அழைப்பு ‘இந்திய உளவாளிகளே, துரோகிகளே சரணடையுங்கள் அல்லது நீங்கள் சுட்டுக்கொல்லப்படுவர்’ என்ற புலிகளின் கூக்குரலுக்கு ஒப்பானவையாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. பாராளுமன்றப் போராட்டத்திற்கு ஏமாற்றி அழைக்கப்பட்ட மக்கள்தொகை எத்தனை ஆயிரம். இவர்களுக்கு சொல்லப்பட்ட பொய்கள் எத்தனை. பேய்க்காட்டல்கள் எத்தனை. இவையாவும் புலிகள் முள்ளிவாய்க்காலில் தாம் இறக்க முன்பு தமிழர்களுக்கு செய்த துரோகங்களுக்கு ஒப்பானவைகளே. இந்த துரோகங்களுக்கு எப்படி புலிகளும் புலிகள் இயக்கமும் புலிக்கொடியும் தப்பி விடமுடியாதோ அதேபோல இந்த ஜபிசியும் தனது பங்குக்கு செய்த துரோகங்களிலிருந்து தப்பிவிடமுடியாது. தலைவர்கள் அமிர்தலிங்கம், பத்மநாபா, சிறீசபாரத்தினம், நீலன் திருச்செல்வம் போன்றோரது கொலைகளுக்கு இறுதிவரை நியாயம் கற்பித்தது இந்த ஜபிசி நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டாளர்களாக புலிகளின் வன்னிப்பிரதிநிதி அமர்த்தப்பட்டபின்பு இந்த ஜபிசி நிறுவனத்தின் செயற்பாடுகள் மேலும் பல மடங்கு மாற்று இயக்கத்தவர்கள் மீது பழிபோடுதல், குற்றம் சுமத்துதல், போராட்டத்திற்கு வராதவர்களை வசைபாடுதல் போன்ற ஊடக தர்மத்திற்கு முரணான செயல்களில் இயங்கி வந்தமை பல தடவைகள் பலரால் வானொலி கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டும் பதிவுகள் கையளிக்கப்பட்டும் இருந்ததே.
எப்படி புலிகளும் புலிகளின் கையாட்களும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு மொத்தப்பணத்தை தமது பணமாக கையாடினரோ அதே போல இந்த ஜபிசி நிறுவனமும் தமிழ் தேசிய வானொலி என்ற பெயரில் வர்த்தக நிறுவனங்களிடம் நிதி வசூலித்தது. இந்த நிறுவனமும் புலிகள் நிறுவனம்போன்றே இன்றுவரை தமிழீழ மக்கள் போராட்டம் என்ற சொல்லின் உதவியுடன் புலம்பெயர் மக்களிடம் பல மில்லியன் தொகைகளை கையாடிவிட்டு இன்று வரை இதற்கும் தாம் எந்த பொறுப்பும் அற்றவர்கள் போலவே நடக்கின்றனர்.
இவர்கள் போரட்டம் என்பது என்ன? இது எப்படியான சர்வதேச நடத்தைகளுடன் ஈடுபடுகின்றது? இந்தியாவின் செயற்ப்பாடுகள் என்ன? என்பதை என்றுமே அறியாமல் இருந்துள்ளனர். இதன் காரணமாக பலராலும் எதிர்வு கூறப்பட்டது போல் புலிகள் இயக்கம் தனது அழிவின்போது மிகச் சில காலங்களில் அழிந்து போகும் தன்மை கொண்டது என்பதையும் அறிந்திலர்.
இவர்களும் புலிகளின் ஆதரவாளர்கள் போலவே புலிகளின் இழப்பில் திண்டாடிவிட்டு இன்று ஒன்றும் தெரியாததவர்கள் போல் மீண்டும் புதியவர்கள் போல் எழுந்து நிற்கின்றனர். முள்ளிவாய்க்காலில் எம் தொப்புள்கொடி உறவுகளைப் பணயம் வைத்தது புலிகள் மட்டுமல்ல ஐபிசி, ரிரிஎன், தீபம், ஈழமுரசு, ஒரு பேப்பர் போன்ற ஊடகங்களும்தான். அங்கு மக்கள் ஆயிரம் ஆயிரமாக மரணிக்க தமிழீழத்தை நெருங்கிவிட்டோம் என்று றன்னிங் ஸ்கோர் கொடுத்த இந்த ஊடகங்களின் உப்புச் சப்பற்ற ஈவிரக்கமற்ற இதயமற்றவர்களின் அரசியல் ஆய்வுகளை என்னவென்பது. இவர்கள் தங்கள் பழைய பிளாவில் புதுக் கள்ளு அருந்துவதற்கு தங்களை தயாராக்கிக் கொண்டு இருக்கிறார்கள். (ஐபிசி மற்றும் புலி ஊடக ‘அரசியல் ஆய்வாளர்கள்’ : ஆர் யூட்)
இதன் ஒரு கட்டமே ஜபிசி ரேடியோ திங்கள் 17ம்திகதி முதல் காலையில் 3 மணி நேர ஒலிபரப்பு ஆரம்பமாக உள்ளது என்ற அறிவிப்பாகும். இந்த 3 மணி நேர காலை ஒலிபரப்பு பற்றிய அறிவிப்பை ஜபிசி கடந்த ஒரு வார காலமாக செய்துவருகிறது.
தற்போது இந்த வானொலி அடிக்கடி தாம் ‘போரை வெறுப்பவர்கள் பாடல்களை’ பாடவிட ஆரம்பித்துள்ளனர். அதேவேளை எடுத்தகாரியம் யாவினும் வெற்றி என்ற வாக்கியத்தையும் இடைக்கிடை விடுகின்றனர்.
ஆனால் நேற்று 14ம்திகதி மாலை புலிஆதரவாளர் கோமதி என அழைத்தவர் ‘அண்ணை நீங்கள் இப்ப தலைவர் பாடல்கள் தேசிய எழுச்சிப் பாடல்கள் போடுவதில்லை காயங்களை அவ்வளவு கெதியாக மறந்துவிட்டீர்கள்’ என்ற போது அறிவிப்பாளர் இதுதான் மக்கள் விருப்பம் அந்த மக்களின் விருப்பத்தையே நாம் வழங்க வேண்டியிருக்கின்றது என்றார். இந்த மக்கள் விருப்பம் என்று கூறிய இந்த ஜபிசி அன்று மக்கள் தம்மை வெளியே விட அனுமதிக்கும்படி கேட்டபோது தலைவரை விட்டுவிட்டுவரும் துரோகிகள் என தூற்றிய ஐபிசி வானொலி இன்று மட்டும் என்ன மக்கள் விருப்பம் என்று சொல்லுகிறார்கள்.
இப்போது ஜபிசி தேசிய எழுச்சிப்பாடல்கள் தேசியப்பாடகரின் வரிகள் ஆணிவேர்கள் எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு இந்திய சினிமா குப்பைகளை கிண்ட ஆரம்பித்துவிட்டனர் என்பது வெள்ளிடைமலை.
இன்று 15ம்திகதி மாலை இன்னுமொரு நேயர் இந்த புதிய ஒலிபரப்பினை வரவேற்று கருத்து சொல்ல ஜபிசியினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று வந்து நீங்கள் இப்போ சினிமாப்பாடல்களை என்று பேசத்தொடங்கியதும் ‘இல்லை நாங்கள் அரசியல் சினிமா போன்ற செய்திகளை மாலை நிகழ்ச்சியில் கொண்டுவருவோம்’ என்று தானே முடித்துவிட்டு தொலைபேசியை வைக்கிறார். இந்த நேயர்கள் எல்லோருமே இந்த ஜபிசி வானொலியின் நிரந்தர நேயர்களும் ஜபிசியின் செய்திகளை நம்பி தமது ஈழ அரசியல் பற்றிய, புலிகள் பற்றிய முடிவுகளை எடுத்திருந்தவர்கள் என்பதும் மிகவும் முக்கியமானது. அதைவிட இந்த ஜபிசி வானொலி புலிகளின் குரலுக்கு அடுத்து இவர்களது நம்பிக்கைக்குரிய வானொலியாகவும் இருந்ததாகும். இன்றும் இந்த வானொலி தமக்கு வன்னி மற்றும் முகாம்களில் உள்ள மக்கள் பற்றிய செய்திகள் தமக்காக அர்ப்பணித்த புலிப் புபோராளிகள் பற்றிய செய்திகள் இல்லாதிரப்பதில் ஏமாற்றம் காணபவர்களாய் இருப்பவர்களாகும்.
கடந்தகாலங்களில் ஜபிசி போன்ற பலர் தாம் கூறிய, பேசிய பேச்சுக்களின் தாக்கத்தை இன்றும் புரியாமலே இருப்பதும் தவறான போராட்டம் பயங்கரவாதத்திற்கு துணை போனதும் தமது சுயலாபத்திற்காக இந்த தமிழர் போரட்டத்தையும் புலிப்போராளிகளின் வீர மரணத்தையும் தமது சுயலாபத்துக்குமாய் பிரயோகித்துவிட்ட இவர்கள் இன்றும் ஜரோப்பிய புலம் பெயர் நாடுகளில் திரிய ஆரம்பித்துவிட்டனர்.
ஜபிசியில் வந்து போர்க்காலங்களில் தமது பெயர்கள் தொலைபேசி இலக்கங்களை கொடுத்து பேசியவர்களின் இலக்கங்கள் இன்று தொடர்பில்லாமல் இருப்பதும் இவர்களால் வழங்கப்பட்ட பல ஈமெயில்கள் செயலற்று இருப்பதும் (பிரிஎப் அங்கத்துவ விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட ஈமெயில்கள் தொலைபேசி இலக்கங்களில் 40 சதவிகிதமானவைகள் உண்மையல்ல என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்)
தலைவன், சூரியத்தேவன், தேசியத்தலைவன் என்றெல்லாம் வர்ணித்தும் ‘தலைவா ஆணையிடு’ ‘இன்றே புலிகள் வென்றுவருவர்’ என்று கர்ச்சித்த ஜபிசி இன்று அந்த தலைவனின் மறைவில் அஞ்சலி செலுத்தினால் விளம்பரதாரர்களின் நிதிவசூல் வீழ்ந்துவிடும் என்பதற்காக மௌனம் காக்கிறது. வன்னியில் தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டால் சர்வதேச நாடுகள் தலையிட்டு தமிழீழம் பெற்றுத்தரும் என்று உலறிய இவர்கள் ‘எடுத்த காரியம் யாவிலும் வெற்றி’ என்ற கோசத்துடன் மீண்டும் தமது சுயலாபமீட்டும் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது. கடந்த காலம் நடந்தது நடந்து போச்சு இனி என்ன என்று விட்டுச் செல்ல இயலாது.
கடந்தகாலங்களில் போராட்டம் என்ற பெயரில் தமிழர்கள் பெயரில் நடாத்தப்பட்ட கொலைகள் மனிதாபிமானமற்ற செயல்களுக்கெல்லாம் விமர்சனங்களும் பதில்களும் இல்லாமல் மீண்டும் தமிழர்க்காக செயற்ப்படுகிறேன் என்பதை அனுமதிக்க முடியாது.
கடந்தகால தவறுகளை அப்படியே புதைத்துவிட்டு அதன் மேல் மீண்டும் ஒரு சமாதிகட்ட அனுமதி கிடைக்கும் என்ற தப்பாக நினைத்துவிடக் கூடாது.