தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றி இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் திரைப்படம் இயக்கவுள்ளார். இப்படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. விடுதலைப் புலிகளின் தற்கொடையாளிகளைப் பற்றி ஏற்கனவே இவர் இயக்கிய ‘சயனைட்’ திரைப்படம் விருதுகளையும் பெற்றுள்ளது.
இயக்குநர் ரமேஷ், ‘’பிரபாகரனைப் பற்றிய படத்துக்கான திரைக்கதை தயாராகி விட்டது. ஆனால், பிரபாகரனாக யார் நடிப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படம் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகவுள்ளது.
அந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்கு மிகத் திறமையுள்ள நடிகரை நான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே தமக்கு என ‘இமேஜ்’ ஒன்றைக் கொண்டிருக்கும் நடிகர் எவரும் வேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் “எதிர்வரும் நவம்பர் 27 ஆம் நாளுக்குப் பின்னர் தான் படப்பிடிப்பை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளேன்.
நவம்பர் 27 ஆம் நாளை கடந்த இரு பத்தாண்டு காலமாகப் புலிகளின் தலைவரும் தமிழ் மக்களும் மாவீரர்கள் நாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த நாளில் பிரபாகரன் தனது உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் உரையாற்றுவது வழக்கம்.
எதிர்வரும் நவம்பர் 27 ஆம் நாளில் பிரபாகரன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவில்லை எனில் அது, பிரபாகரனைக் கொன்றுவிட்டதாக சிறிலங்காப் படையினர் கூறுவதை மேலும் உறுதிப்படுத்திவடும் என உலகு எங்கும் உள்ள புலிகள் ஆதரவாளர்கள் கவலைப்படுகிறார்கள். அப்படி அவர் நவம்பர் 27 ஆம் நாள் மக்கள் முன் வரவில்லை என்றால், எனது திரைக்கதையிலும் உச்சக்கட்டக் காட்சியிலும் நான் மாற்றங்களைக் கொண்டுவருவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
அவரேதான் இந்தத் திரைப் படத்தைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார். மலேசியா வாழ் தமிழர்கள் இருவர் படத்துக்கு நிதி வழங்குவார்கள் எனத் தெரிவித்த அவர், நிதி வழங்குனர்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டார்.
பிரபாகரனின் மரணம் பற்றி ஏன் சந்தேகம் என்று ரமேஷிடம் கேட்கப்பட்டதற்கு, பிரபாகரன் தனது கழுத்தில் சயனைட் அணிந்திருக்கவில்லை. அத்துடன், தனது அடையாள அட்டையையும் வைத்திருந்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் உளவியலை அறிந்தவர்கள் இவை குறித்து சந்தேகங்களை எழுப்புகிறார்கள் என்று பதிலளித்தார்.