கொழும்பு பௌத்தாலோக மாவத்தை பிரதேசத்திலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட இரு தமிழ் யுவதிகளின் சடலங்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மஸ்கெலியா லக்ஷபான தோட்டத்தைச் சேர்ந்த யுவதிகளான ஜீவராணி மருதவீரன் (வயது 17), எல்.சுமதி (வயது 16) இருவரும் நேற்று முன்தினம் சனிக்கிழமை பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ரஷ்யா கார் பார்க்கிற்கு பின்புறமாக இருக்கும் கழிவு நீர் கால்வாயில் சடலங்களாகக் கிடந்த நிலையில் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் இருவரும் நீரில் மூழ்கியதனாலேயே உயிரிழந்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பௌத்தாலோக மாவத்தையிலுள்ள இருவீடுகளில் இருவரும் பணிப் பெண்களாக வேலை செய்து வந்துள்ளதுடன், அதில் ஒரு வீட்டார் வெளியிடத்திற்குச் செல்வதற்காக அவர்கள் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தவரை மற்றையவர் பணிப்பெண்ணாக இருந்த வீட்டில் ஒன்றாக விட்டுச் சென்றிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், சம்பவத்திற்கு முன்னராக சுமதி எனும் யுவதியினால் தமிழில் கடிதமொன்று எழுதப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். எனினும், நேற்று தனது மகளின் சடலத்தை பொறுப்பேற்க வந்திருந்த சுமதியின் தந்தையோ அந்தக் கடிதத்தில் இருப்பது தனது மகளின் கையெழுத்து இல்லை என்றும் அக்கடிதத்தை வேறுயாரோ எழுதியிருப்பதைப் போன்று இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அத்துடன், தங்கள் இருவரையும் வந்து அழைத்துச் செல்லுமாறு சுமதி தன்னிடம் தொலைபேசி மூலம் தெரிவித்திருந்ததாகவும் அவரது தந்தை தெரிவித்திருக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.