இந்தியா வில் பன்றி காய்ச்சல் நோய்க்கு இன்று பெங்களூர், டெல்லியில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஸ்வைன் ப்ளு எனப்படும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,900யை தாண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 205 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
.உல்லாச பயணம் வேண்டாம்-அரசு அறிவுரை:
இந்த நிலையில், பள்ளிகளில் பன்றி காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் கடும் அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறை மூலம் சுகாதாரத்துறை அனுப்பி உள்ள அந்த சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவுரைகள்:
– எந்த ஒரு மாணவருக்கோ, பணியாளருக்கோ, ஆசிரியருக்கோ பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
– பள்ளியில் பணிபுரிவோர், படிப்பவர் யாராக இருந்தாலும் உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறைகளை பயன்படுத்திய பின்பும், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
– தும்மல், இருமல் இருந்தால் கைக்குட்டை அல்லது சிறிய துண்டு அல்லது டிஸ்யூ பேப்பரை பயன்படுத்த வேண்டும்.
– ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டுவர வேண்டும்.
– பன்றி காய்ச்சல் பாதிப்புள்ள வெளிநாடுகள் மற்றும் ஊர்களுக்கு செல்ல அவசியம் ஏற்பட்டால் ஒழிய மற்றபடி பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கலாம். உல்லாச பயணம், மாநாடுகள் போன்றவற்றை தவிர்க்கலாம்.
– சரியான அறிவியல் பூர்வமான தகவல்களையும், செய்திகளையும் 044-24321569 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். மேலும் சுகாதாரத்துறை இணையதளத்திலும் தகவல் பெறலாம்.
– வீண் வதந்திகளை நம்பி பள்ளிகளில் பீதி ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– பள்ளியில் பணிபுரிவோர் மற்றும் மாணவர்கள் மருத்துவச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
– பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ பரிசோதனைக்குப் பின் போதிய விடுமுறை வழங்கி வீடுகளில் இருக்கும்படி செய்ய வேண்டும். விடுதி மாணவர்களுக்கு நோய் அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனையில் சேர்த்திட வேண்டும்.
– நோய் வராமல் தடுக்க தும்மல் மற்றும் இருமலின்போது கைக்குட்டையால் வாய் மற்றும் மூக்குப்பகுதியை மூடிக்கொள்ள வேண்டும்.
– அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.