வடக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது வவுனியா நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள தரம் 05 மாணவர்களின் கல்விநிலையை மேம்படுத்த தேசம்நெற் உம், சிந்தனைவட்டமும் மேற்கொண்டுவந்த முதல்கட்ட கல்வி நிவாரண செயற்றிட்டம் நிறைவுபெற்றுள்ளது.
இந்த கல்வி நிவாரண திட்டத்தின் கீழ் வவுனியா நலன்புரிநிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்கும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு மாணவனுக்கு 30 மாதிரி வினாத்தாள்களும், 04 வழிகாட்டிப் புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மாதிரி வினாத்தாள்களும், 04 வழிகாட்டிப் புத்தகங்களும் நலன்புரி நிலைய பாடசாலைகளின் இணைப்பதிகாரியும், கல்வி அதிகாரியுமான திருவாளர் த. மேகநாதன் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் நலன்புரி நிலையத்திலுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு நலன்புரி நிலைய ஆசியர்களின் ஊடாக மாணவர்கள் வழிகாட்டப்பட்டு வருகின்றனர். தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான அரசாங்கப் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த கல்வி நிவாரண செயற்றிட்டத்துக்கு லண்டனில் தேசம்நெற் இணையத்தளம், அகிலன் பவுண்டேஷன் மற்றும் லிட்டில் எய்ட் போன்ற அமைப்புகளினதும், சில பரோபகாரிகளினதும் உதவி பெறப்பட்டது. இலங்கையில் சிந்தனைவட்டம் இத்திட்டத்தை நேரடிப் பராமரிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தியது. மேலும் மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியமும் இதற்கான நிதியுதவிகளை வழங்கியது. இந்த கல்வி நிவாரண செயற்றிட்டத்தின்போது ஒவ்வொரு மாணவனுக்கும் 570ரூபாய் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களும், 4 வழிகாட்டி புத்தகங்களும் கிடைக்க வழி செய்யப்பட்டன.
இத்திட்டத்தில் மொத்தப் பணப் பெறுமதி 27இலட்சத்து 77ஆயிரத்து 40 ரூபாவாகும். இச்செலவில் மூன்றிலொரு பங்கான 9 இலட்சத்து 25ஆயிரத்து 680 ரூபாவை சிந்தனைவட்டம் பொறுப்பேற்றதுடன், மாதிரி வினாத்தாள்கள் தயாரித்தல், அச்சிடல், பொதியிடல், நலன்புரிநிலையத்தில் ஒப்படைத்தல் போன்ற பணிகளையும் மேற்கொண்டது. இத்திட்டத்திற்கு மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம் 7இலட்சம் ரூபாவை வழங்கியது.
மீதமான 11 இலட்சத்து 51ஆயிரத்து 360 ரூபாவை தேசம்நெற் பொறுப்பேற்றது. இத்தொகையில் இரண்டு இலட்சம் ரூபாவினை நேரடியாக தேசம்நெற் வழங்கியது. மீதமான தொகையில் 3000 பவுண்களை லண்டன் அகிலன் பவுண்டேசன் நிறுவனத்தினரும், 1000 பவுண்களை லிட்டில் எய்ட் நிறுவனத்தினரும் மீதித் தொகையான 1000 பவுண்களை சில பரோபகாரிகளும் ஏற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவருக்குமான விரிவான கணக்கறிக்கைகளும், செயற்பாட்டறிக்கைகளும் நலன்புரிநிலையத்திலிருந்து பெறப்பட்ட உறுதிப்பாட்டுக் கடிதங்களும் தனித்தனியாக விரைவில் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வடபுலத்து மண்ணில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலை மாணவர்களும், அதேபோல முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய், ஒட்டிசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் இடம்பெயர்ந்து நலன்புரிநிலையங்களில் வாழ்ந்து வருகின்றனர். வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் சுமார் 53 பாடசாலைகளில் இம்மாணவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிந்தனைவட்டம் தேசம்நெற் ஆகியவற்றால் வழங்கப்பட்ட மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகங்களும் வலயம் 0, வலயம் 1, வலயம் 2 , வலயம் 3, வலயம் 4, வலயம் 5 நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கும் மேலும் சுமதிபுரம், தரம்புரம், வீரபுரம் நலன்புரி நிலைய மாணவர்களுக்கும் நகர்ப்புறங்களிலுள்ள 07 பாடசாலையில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கும் நேரடியாக விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.