1. புலிகளின் பலவீனம், அவர்கள் தங்கள் தலைமையைத் தக்க வைப்பதற்கான பேரம் பேசலில் மக்களைப் பணயம் வைக்கப் போகின்றார்கள் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்படப் போகின்றார்கள் என்பவை எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தாலும் ஒரே நாளில் யுத்தம் முடிவுக்கு வந்தவிதம் எதிர்பாராததாகவே அமைந்தது.
2. சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல புரட்சிகர அல்லது முற்போக்கு முன்னோடிகள் என்று சொல்லப்படுபவர்கள் மத்தியிலும் புலிகள் பற்றிய பிம்பங்கள் காணப்பட்டதை மறுக்க முடியாது. அதனாலேயே பிரபாவின் உடலை சர்வதேச ஊடகங்களே காட்சிப்படுத்திக் கொண்டிருந்த போதும் தமிழ் சமூகத்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அங்கு கோவணத்துடன் நின்றது பிரபா மட்டுமல்ல மொத்த தமிழ் தேசமும் தான். இந்நிலையை ஏற்படுத்திய பெருமை பிரபாவையும் அவர் தலைமை வகித்த இயக்கத்தையுமே சேரும்.
3. மிகப்பெரும் மனித அவலம் ஒன்று ஏற்பட இருந்ததை உணர்வதற்கு ரொக்கற் விஞ்ஞான அறிவு எதுவும் யாருக்கும் தேவைப்பட்டிருக்கவில்லை. அதனாலேயே நாம் தேசம்நெற்ம் ரவி சுந்தரலிங்கமும் புலிகள் ஆயுதங்களை சர்வதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம்.
4. ஆனால் இறப்புகளின் எண்ணிக்கை ஒரு சிலவாக இருந்து நூறாகி ஆயிரமாகிய போது நாங்கள் தமிழீழத்தை நெருங்கிவிட்டோம் என்று மேற்கு நாடுகளின் வீதிகளில் விர முழங்கங்கள் தள யதார்த்தத்திற்கு முற்றிலும் மாறானதாக இருந்தது.’ மோட்டுச் சிங்களவன்’ என்று தங்கள் அறிவை தாங்களே மெச்சிக்கொண்டு ‘பனை மரத்தில் வெளவாளா தலைவருக்கே சவாலா’ என்ற கூக்குரல்கள் மட்டும் ஓங்கி ஒலித்தது.
5. 2009 ஏப்ரல் 30ல் புலிகளை முடிவுக்கு கொண்டு வருகின்றோம் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட புரொஜக்ற் பீக்கன் திட்டப்படி கால அட்டவணை போட்டு அதற்கமைவாக 18 நாட்கள் தாமதத்தில் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டது.
6. இன்று கொல்லப்பட்ட வீரமரணமடைந்த தளபதிகளுக்கும் தலைவருக்கும் அஞ்சலி கூட நடத்த முடியாத பலவீனமான உள்நெருக்கடிக்குள் புலிகள் தள்ளப்பட்டு உள்ளனர். பிரபா கொல்லப்பட்டதை அறிவிக்கும் பட்சத்தில் புலிகள் அமைப்பும் அதனுடன் சேர்ந்து மங்கி மறைந்துவிடும் என்ற அச்சம் புலம்பெயர்ந்த புலிகளிடம் காணப்படுகின்றது. மேலும் தனிநபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 300 மில்லியன் டொலர் ஆண்டு வருமானத்தைக் கொண்ட ஒரு பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்களுக்கான முரண்பாடுகளும் எழாமல் இல்லை.
7. புலிகள் அமைப்பின் அதிகாரத்திற்கும் அதன் சொத்துக்களுக்குமான போட்டியில் அவர்களிடையே எழுந்துள்ள முரண்பாடு தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் போட்டியிலும் தங்களை இணைத்துள்ளனர். அதுவே கே பி யின் நாடு கடந்த தமிழீழ அரசு. அதற்கு மாற்றாக அவரை நிராகரிக்கும் புலிகள் வேறு வழிகளை நோக்குகிறார்கள். அவர்களின் பின்னணியில் பிரித்தானிய தமிழர் பேரவையும் ஒரு கட்டமைப்பை உருவாக்க முயல்கிறது.
8. புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் புலிகள் அல்லாத பிரிவினரும் ஈடுபட்ட உள்ளனர். இவர்களை பெரும்பாலும் இரு வகைக்குள் கொண்டுவரமுடியும்.
அ) அரச ஆதரவு சக்திகள் – இலங்கை அரசுடன் அனுசரித்து நடந்தே தீர்வை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றனர்.
ஆ) அரசுடனும் புலிகளுடனும் தங்களை அடையாளப்படுத்தாத அணி சேரா அணி.
9. பல்வேறு முரண்பட்ட பிரிவினரும் வெவ்வேறு வகையான தீர்வுகளை நோக்கி செயற்படுகின்றனர்.
அ) தமிழீழ – புலிகள் தங்களுக்குள் முரண்பட்டாலும் கொள்கையளவில் தமிழீழத்தைக் கைவிடவில்லை. அவ்வாறு கைவிடும் பட்சத்தில் அவர்கள் புலிகள் என்ற அடையாளத்தைக் கொண்டிருக்க முடியாது. அதே சமயம் புலிகளுடனும் அரசுடனும் அணி சேரா அணியில் உள்ள சிறு பிரிவினரும் கொள்கையளவில் தமிழிழத்தை தொடர்ந்தும் வைத்துள்ளனர்.
ஆ) ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தீர்வு – புலிகளுடனும் அரசுடனும் அணி சேரா அணியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இம்முடிவிலேயே ஏற்கனவே இருந்தனர். இன்று இவர்கள் தீவிரமாக இதனை வலியுறுத்துகின்றனர். புலிகளின் தோல்வியால் ஏற்பட்ட விரக்தி தமிழீழம் சாத்தியப்படாது என்ற முடிவுக்கு அவர்களை நிர்ப்பந்தித்து உள்ளது.
இ) இலங்கை அரசு தருவதை பெற்றுக் கொண்டு நகர்வது – இயலாமையின் மொத்தத் தீர்வாக இது உள்ளது. பெரும்பாலும் தீவிர புலி எதிர்பாளர்களும் அரச ஆதரவு அணியின் நிலை இதுவாக உள்ளது.
10. தமிழ் அரசியல் சக்திகளிடையே குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான குறைந்தபட்ச வரையறையை நிர்ணயம் செய்வது இன்று காலத்தின் அவசியமாக உள்ளது. இதன் மூலம் பல்வேறு முரண்பட்ட அரசியல் சக்திகள் தற்போதுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முற்பட்டாலும் அவர்கள் குறைந்தபட்ச வரையறைக்குக் கீழ் செல்வதை தமிழ் அரசியல் சமூகம் தடுத்து நிறுத்த முடியும்.
._._._._._.
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் வலிந்து எடுத்து தக்கவைத்துக் கொண்ட தமிழ் மக்களின் அரசியலில் மிகப்பெரும் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கான முயற்சியில் பல்வேறு சக்திகளும் ஈடுபட்டுள்ளன. இவ்வெற்றிடத்தை நிரப்ப முயற்சிப்பவர்கள் தமிழ் அரசியலை மீண்டும் ஒரு நச்சுச் சுழற்சிக்குள் தள்ளி விடுகின்ற அபாயம் உள்ளது. அதனால் இது தொடர்பான புரிந்தணர்வு அரசியல் முரண்பாடுடையவர்களிடம் எட்டப்படுவது அவசியம்.
அந்த வகையில் கடந்த யூன் 21ல் ‘அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல்’ என்ற தலைப்பிலான சந்திப்பு ஒன்றை தேசம்நெற் ஏற்பாடு செய்திருந்தது. இலங்கைத் தமிழ் மக்களின் அரசியலில் ஈடுபாடுடைய ஆர்வமுடைய பல்வேறு அரசியல் பின்னணிகளை உடையவர்களும் இதில் கலந்துகொண்டனர். இச்சந்திப்பில் பல்வேறு அரசியல் முரண்பாடுடையவர்கள் மத்தியிலும் புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கான உரையாடல்கள் அவசியம் என்பதும் வலியுறுத்தப்பட்டது. மேலும் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய உரையாடலில் குறைந்தபட்ச எல்லை வரையறை செய்யப்பட்டு அது புரிந்துணர்வுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ஓகஸ்ட் 2ல் மற்றுமொரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச எல்லை எது என்பது பற்றி விவாதிக்கப்பட உள்ளது.
அண்மையில் தாயகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் ஓர் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழ் அரசியல் சூழலில் ஒரு வெற்றிடத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இவ்வெற்றிடம் மீண்டும் தவறான அரசியல் போக்குகளினால் நிரப்பப்படும் அபாயம் பற்றிய அச்சம் தமிழ் அரசியலாளர்களிடையே ஏற்படுவது தவிர்க்க முடியாதது. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தில் அக்கறையுடைய ஒவ்வொருவரையும் இந்த சடுதியான மாற்றங்கள் மிகவும் பாதித்து உள்ளது. பல்வேறு கசப்புணர்வுகளையும் வலிகளையும் கடந்து அடுத்த கட்டம் நோக்கி நாம் பயணிக்க வேண்டியுள்ளோம். நாம் கடந்து வந்த பாதைகள் மிகக் கரடுமுரடானதாகவும் மிக மோசமானதாகவும் இருந்துள்ளது. அதனால் அனுபவங்களில் இருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு எமது நகர்வுகளை மேற்கொள்வது அவசியமானதும் அவசரமானதுமாகும்.
அந்த வகையில் பன்மைத்துவ அரசியல் பின்னணியுடைய புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தனது அடுத்தகட்ட நகர்வை ஏற்படுத்துவதற்கு முன் தங்களிடையே ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்துவது அவசியமாகும். இக்கலந்துரையாடல்கள் மூலம் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச எல்லை பற்றிய பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு உங்களை அழைக்கின்றோம். இக்கலந்துரையாடலில் பங்கேற்று நிகழ்வை ஆரோக்கியம் உள்ளதாக்குவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
தேசம் சஞ்சிகை ஒரு பொது ஊடகம் என்ற வகையில், இன்றைய காலத்துடன் தொடர்புபட்ட விடயங்களை விவாதிப்பதற்கான ஒரு தளமாக இருக்கின்றது. அந்த வகையில் யூன் 21ல் இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாக இந்த உரையாடலுக்கான தளத்தை ஏற்படுத்தித் தருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.
நீங்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்வதன் மூலம் கலந்துரையாடப்படும் விடயங்களை தவறவிடாது தொடர முடியும். மேலும் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களை மீண்டும் மீண்டும் பேசுவதையும் தவிர்க்க முடியும்.
இக்கலந்துரையாடல் ஆக்கபூர்வமானதாக அமைய உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.
இக்கலந்துரையாடல் ஒரு பொதுக் கூட்டம் அல்ல. அழைக்கப்படுபவர்களுக்கு மட்டுமாக மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் கலந்துகொள்ள விரும்பினால் கீழுள்ள தொடர்பிலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
காலம் : 02 ஓகஸ்ட் 2009 மாலை 14:30
இடம்: Quakers Meeting House, Bush Road, Wanstead, London, E11 3AU.
தொடர்பு : த ஜெயபாலன்: 07800 596 786 ரி சோதிலிங்கம் 07846 322 369