21 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டம் சுவட்டு மைதான நிகழ்ச்சியில் இரண்டு தங்கப்பதக்கமும் ஒரு வெள்ளிப்பதக்கமும் இரண்டு வெண்கலப்பதக்கங்களையும் பெற்றுக் கொண்டதுடன், குழுப் போட்டியில் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளது. இளைஞர் விவகார அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் 21 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நேற்று நிறைவு பெற்றது.
கடந்த 31 ஆம் திகதி முதல் நேற்றுவரை பதுளை வின்சன் டைஸ் விளையாட்டு மைதானத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் பாஸ்வர சேனரங்க குணரத்ன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பில் இருந்து கலந்துகொண்ட போட்டியாளர்களில் 21 கிலோமீற்றர் மற்றும் 20 வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் போன்றவற்றில் வவுணதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த அ.யசோதா முதலிடம் பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டார்.
20 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்த ச.ஜனகீரன் இரண்டாம் இடம்பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் 20 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண்களுக்கான பரிதி வீசுதல் போட்டியில் கலந்துகொண்ட களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஆ.கோகுலதாஸ் மூன்றாம் இடத்தினைப் பெற்று ஒரு வெண்கலப்பதக்கத்தினையும் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் ஏறாவூர் பிரதேசத்திலிருந்து கலந்துகொண்ட ஆர்.எஸ்.எம்.கிர்ஷான் மூன்றாம் இடம்பெற்று ஒரு வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டார்.
அத்துடன், ஆண்களுக்கான கபடி போட்டியில் மண்முனை வடக்கு பிரதேசத்தில் இருந்து கலந்துகொண்ட அணியினர் இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தினையும் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் ஏறாவூர் பற்று பிரதேசத்திலிருந்து கலந்துகொண்ட அணியினர் மூன்றாம் இடத்தினையும் பெற்று வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.