27

27

2வது டெஸ்ட்: இலங்கை 416 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது -நியூஸீலாந்து 159/5

2nd-test.jpgநியூஸீ லாந்து அணிக்கு எதிராக கொழும்பில் நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்களுக்கு  ஆட்டமிழந்தது.

நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில் பூவா-தலையா வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. முதல்நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 262 ஓட்டங்கள் எடுத்த இலங்கை அணி, இன்று முதல் இன்னிங்சை தொடர்ந்தது.

ஜெயவர்த்தனே 92 ஓட்டங்கள்  கபுகேதரா 35 ஓட்டங்கள்  பிரசன்ன ஜெயவர்த்தனே 17 ஓட்டங்கள்  தம்மிகா பிரசாத் 6 ஓட்டங்கள்  முரளிதரன் ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்கள் எடுத்தனர். சமரவீரா அதிகபட்சமாக 143 ஓட்டங்கள் குவித்தார்.

நியூஸீலாந்து தரப்பில் ஜீத்தன் படேல் 4 விக்கெட்டுகளும், டேனியல் வெட்டோரி 3 விக்கெட்டுகளும், ஓபிரையன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Sri Lanka 1st Innings 416 / 10 in 130.3 Overs

New Zealand 1 st Innings 159 / 5 in 47 Overs

New Zealand trail by 257 runs with 5 wickets remaining

Fall of Wickets 1-14 (TG McIntosh, 2.1 ov), 2-49 (DR Flynn, 9.2 ov), 3-63 (MJ Guptill, 15.4 ov), 4-148 (JD Ryder, 40.4 ov), 5-149 (JS Patel, 41.4 ov) 
 
Still To Come JDP Oram, DL Vettori, IE O’Brien, CS Martin 

இந்தியாவின் பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 83

10092009.jpgஇந்தியா வின் பன்றிக் காய்ச்சல் எண்ணிகை 83 ஆக உயர்ந்துள்ளது.  மகாராஷ்டிராவில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தில் மட்டும் இதுவரை 19 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.

இதுவரை இந்தியாவில் 17,777 பேரின் மாதிரிகள் பன்றிக் காய்ச்சல் சந்தேகம் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. அதில் 3273 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம்

கிழக்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 5.7 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை சுமார் 4.57 மணிக்கு கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள கொரன்டாலோ மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம்  ஏற்பட்டது. இதன் மையம் அந்த மாகாணத்தில் இருந்து 87 கிமீ தென்கிழக்கே சுமார் 95 கிமீ ஆழத்தில் இருந்தது.

சேதங்கள் குறித்தும் எந்த தகவலும் உடனடியாக கிடைக்கவில்லை என அந்நாட்டின் பூகோள ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மீள் பிரேத பரிசோதனையில் மஸ்கெலிய சிறுமிகளின் சடலங்கள்

maskeliya.jpgகொழும்பு பௌத்தலோக்க மாவத்தையிலுள்ள சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டுப் பின்னர் மஸ்கெலியா முள்ளுகாமம் தோட்டத்தில் புதைக்கப்பட்ட இரண்டு மலையக சிறுமிகளான சுமதி ,ஜீவராணி ஆகியோரின் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. மீள் பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் இன்று 27 ஆம் திகதி கண்டி பொலிஸ் சவச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த இந்தச்சிறுமிகள் இருவரும் பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள சாக்கடையில் கடந்த 15 ஆம் திகதி சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்தச் சடலங்களின் பிரதேச பரிசோதனைக்குப்பின் கடந்த 18 ஆம் திகதி முள்ளுகாமம் தோட்ட மயானத்தில் இந்தச் சிறுமிகளின் சடலங்கள் புதைக்கப்பட்டன.

இந்நிலையில் இவர்களின் மரணம் தொடர்பில் சிறுமிகளின் பெற்றோர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் மனுவொன்றினை சமர்ப்பித்திருந்தனர். இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிரதம நீதவான் சிறுமிகளின் சடலங்களை ஹட்டன் நீதிமன்றத்தின் ஊடாக தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதற்கேற்ப இன்ற 27 ஆம் திகதி நண்பகல் வேளையில் சிறுமிகளின் சடலங்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டன. தோண்டி எடுக்கப்பட்ட சடலங்கள் சிறுமிகளின் பெற்றோர்களாலும் கொழும்பு மலர்ச்சாலை ஒன்றின் ஊழியர்களாலும் அடையாளங் காணப்பட்டு உறுதி செய்யப்பட்டன.

இதன் பின்பு முள்ளுகாமத் தோட்ட லொறியில் ஏற்றப்பட்ட சடலங்கள் கண்டி பொலிஸ் பிரேதசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. சிறுமிகளின் பெற்றோரும் சடலங்களுடன் கண்டிக்குச் சென்றுள்ளனர். சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்ட வேளையில் கடும் மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது. மழையையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளான தோட்ட மக்கள் அங்கு திரண்டிருந்தனர்.

அத்துடன் கண்டி சட்ட வைத்திய அதிகாரி, ஹட்டன் பொலிஸ் பிரிவு அதிகாரிகள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்படப் பலர் வந்திருந்தனர்.  கண்டிக்குக் கொண்டு செல்லப்பட்ட சடலங்கள் சட்டவைத்திய அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான பிரேத பரிசோதனை நாளை 28 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளது

விடுவிக்கப்பட்ட இந்து குருமார் இன்று யாழ் பயணம்

hindu_priest111.jpgவவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 58 இந்து குருமார் குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் இராணுவத்தின் வழித்துணையுடன் இன்று யாழ்ப்பாணம் பயணமாகியுள்ளனர்.

அதேவேளை,  திருகோணமலை,  மட்டக்களப்பு,  அம்பாறை ஆகிய கிழக்கு மாகாண மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேருக்கான பிரயாண ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்துள்ளனர்.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள இந்துமத குருக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டவர்கள், முகாம்களில் இருந்து வவுனியா சைவப்பிரகாச மகளிர் மகாவித்தியாலயத்திற்கு அழைத்து வரப்பட்டு,  நேற்றைய தினம்,  அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் திரட்டிய புள்ளிவிபரத் தகவல்களின்படி 177 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களைச் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

107 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இந்து மத குருமார்கள் நேற்று இடைத்தங்கல் முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் வவுனியா,  மன்னார்,  யாழ்ப்பாணம், திருகோணமலை,  மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்குச் செல்வதற்கான பிரயாண ஒழுங்குகளை வவுனியா செயலக அதிகாரிகள் செய்துள்ளனர்.

இதேவேளை,  உறவினர்களோ அல்லது செல்வதற்கு சொந்த இடங்களோ இல்லாத முல்லைத்தீவு,  கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரை அகில இந்து மாமன்றம் பொறுப்பேற்று திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

செனல்-4 வீடியோ காட்சி குறித்து வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கும்

anurapriyadarsanayapa.jpgஇலங் கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செனல்- 4 ஒளிபரப்பிய வீடியோ காடசி குறித்து இலங்கை  வெளிவிவகார அமைச்சு முழுமையான நடவடிக்கை எடுக்கும் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது செனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட செய்தி ஒன்றைக் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை இராணுவ வீரர்கள் நல்லொழுக்கத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்குகின்றவர்கள். பாரிய அர்ப்பணிப்புக்கும் தியாகத்துக்கும் மத்தியில் நாட்டுக்கு அவர்கள் பெற்றுத்தந்த வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கும் நாட்டுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் அந்த வீடியோ காட்சி போலியாகத் தயாரித்துக் காட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு காண்பிக்கப்பட்ட காட்சியை அரசாங்கம் முற்றாக மறுப்பதுடன் வன்மையாகக் கண்டிக்கிறது. எவ்வாறு முறையாக நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி எமது இராணுவ வீரர்கள் நன்கு அறிவார்கள். அவர்களின் சீரான நடத்தையையும் திறமையையும் கண்கூடாகக்கண்ட பல நாடுகள் அவர்கள் மூலம் தமது வீரர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகின்றன என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து : தொழிற்சங்கங்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்

ecblogo.jpgஇலங்கை மின்சார சபை தனது ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தையும் ரத்து செய்திருப்பதாக இன்று அறிவித்துள்ளது.

அதேவேளை, இலங்கை மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவிருப்பதாகத் தெரிவித்துள்ளன.

ஊழியர்கள் சம்பள உயர்வு கோரியும் மேலும் சில கோரிக்கைகளை முன் வைத்தும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறவிருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஆர்ப்பாட்டங்கள் ஏதுமற்ற வேலை நிறுத்தமாக இது அமையுமென தொழிற்சங்க வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

வடமாகாண சபை தலைமையகம் மாங்குளத்தில்

janakabandarathennakoon.jpgவட மாகாண சபைக்கான தலைமையகக் கட்டடம் ஒன்றை மாங்குளத்தில் அமைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அத்துடன் யுத்தத்தால் அழிவுற்ற மற்றும் சேதமடைந்த உள்ளுராட்சி மன்றக் கட்டடங்களை புதிதாக நிர்மாணிக்க அல்லது புனரமைக்கவும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்கோன் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

மாகாண சபையின் தலைமையகக் கட்டட நிர்மாணத்துக்கு 2010 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 900 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது. ஏனைய கட்டட நிர்மாணம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு 625 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

‘அரசாங்கமே கூடுதல் பங்களிப்பு’

lakshman_yapa_abeywardena.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கமே கூடுதல் பங்களிப்பு செய்து வருகிறது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கம் முன்னெடுக்கும் பணிகளுக்கு உதவி வருகின்றனவே தவிர முழுப் பொறுப்பையும் அவை மேற்கொள்வது கிடையாது என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (26) நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை அரச சார்பற்ற நிறுவனங்களே கூடுதலாக நிறைவேற்றுவதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச் சாட்டில் எதுவித உண்மையும் கிடையாது.

இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்ற திறைசேரியினூடாக பெருமளவு நிதி ஒதுக்கப்படுகிறது. மருத்துவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு தேவையான மருந்துகளும் அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டு வருகிறது.

முகாமில் உள்ள ஒருவருக்காக தினமும் தண்ணீர் வழங்குவதற்காக மாத்திரம் 150 ரூபா செலவிடப்படுகிறது என்றார்.

ஆப்கானிஸ்தானில் கார் குண்டுத் தாக்குதல்; 36 பேர் பலி: 60 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் தென் மாகாணத்தின் தலைநகர் கந்தஹாரில் கடந்த செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற மிக மோசமான குண்டு வெடிப்பில் முப்பது பேர் பலியானதுடன் அறுபது பேர் வரை காயமடைந்தனர். பலியான அனைவரும் பொது மக்கள் என கந்தஹார் பொலிஸ் தலைமையதிகாரி கூறினார்.

புலனாய்வுத் தலைமையகம், ஜனாதிபதி ஹமீத் அல் கார்ஸாயியின் சகோதரர் அஹமட் வலி கார்ஸாயியின் வீடு என்பன குண்டு வெடித்த இடத்துக்கருகாமையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. கந்தஹாரின் பிரமாண்டமான கட்டடக் கம்பனியும் அரசாங்கத்தின் முக்கிய அலுவலகமும் இதனால் சேதமடைந்தன. அருகில் இருந்த கட்டடங்கள், வீடுகளும் இக்குண்டு வெடிப்பில் சேதமடைந்ததாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இடிபாடுகளுக்குள் சடலங்கள் புதைந்துள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் பலியானோரின் உடல்கள் உருக்குலைந்து சிதைந்துள்ளமை பிரேதங்களை அடையாளங் காண்பதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக் கப்படுகின்றனர்.

வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமான கந்தஹார் தலிபான்களின் செல்வாக்குள்ள பிரதேசம். நேட்டோப் படைகள் இங்கே கடும் சவால்களை எதிர்கொள்கின்றன. செவ்வாய்க்கிழமை நடந்த குண்டுத் தாக்குதல் 2008 ஜுலை 07ல் காபூல் நகரில் இந்தியத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் விட பயங்கரமானதெனக் கருதப்படுகின்றது.

குண்டு வெடித்தபோது பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக உணர்ந்தேன். பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டு கேட்ட போது, குண்டு வெடித்ததாகக் கூறினர் என்று பிரதேச வாசியொருவர் சொன்னார்.  ஐந்து கார்களில் குண்டு பொருத்தப்பட்டு அனைத்தும் ஒரே நேரத்தில் வெடிக்க வைக்கப்பட்டது. எதை இலக்காக வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதென்பதை உறுதியாகக் கூறமுடியாதெனக் கூறும் பொலிஸார் இது கார் குண்டுத் தாக்குதல் எனக் குறிப்பிட்டனர்.

ஆப்கானிஸ்தானில் வீதியோரக் குண்டு வெடிப்புகள், தற்கொலைத் தாக்குதல்கள் சர்வசாதாரணமாகி விட்டன. இங்கு பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் வன்முறைகள் இடம் பெறுகின்றமை பாதுகாப்புக் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.