._._._._._.
”சங்கரி ஐயாவுக்கு எனது பகிரங்க 75வது பிறந்தநாள் வாழ்த்து மடல்” என்ற தலைப்பில் யூன் 15 2008ல் எழுதப்பட்ட கட்டுரை. கட்டுரையின் சாரம்சத்தின் அடிப்படையில் அதன் தலைப்பு மாற்றப்பட்டு இங்கு மீள் பதிவு செய்யப்படுகிறது.
._._._._._.
சங்கரி ஐயா வணக்கம்.
இன்று யூன் 15 (2008), உங்கள் 75வது பிறந்த தினத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இங்கு என் குடும்பத்தில் எல்லோரும் நலம். உங்களுக்கும் அவ்வாறே என்று நம்புகிறேன். ஐயா நீங்கள் கடிதம் எழுதுவதில் படுபிசியாக இருப்பது மட்டுமில்லாமல் என்னைப் போன்ற வாசகர்களையும் படுபிசியாக வைத்திருக்கிறீர்கள். நிற்க.
ஐயா 14 மே 1976 அன்று நீங்களெல்லாம் வட்டுக்கோட்டையில் கூடி ஒரு தீர்மானம் போட்டியல், அது உங்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும். இதுவொரு பகிரங்கக் கடிதம் என்ற படியால மற்றவைக்கும் விளங்குவதற்காக ”….. வரலாற்று உண்மைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு ….. தமிழ் நாட்டினம் அடிமை இனமாகத் தாழ்த்தப்பட்ட படியாலும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் எல்லாம் சிங்கள மக்களின் தீவிர இனவாதத்தை தூண்டி வளர்த்து தமது அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்களுக்குப் பாதகமாக பயன்படுத்திய படியால் இலங்கைவால் தமிழ் மக்கள் சிங்களவரில் இருந்து வேறுபட்ட ஒரு தனிநாட்டினம் என்று இத்தால் பிரகடனப்படுத்துகிறது. ….. இத்தீவில் உள்ள தமிழீழ நாட்டினத்தின் நிலையான வாழ்வை பாதுகாப்பதற்கு, ஒவ்வொரு நாட்டினத்திற்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு சுதந்திர இறைமையுள்ள மதச் சார்பற்ற சோசலிச தமிழீழ அரசை மீள்வித்து புனரமைப்புச் செய்வது தவிர்க்க முடியாததாகி விட்டது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.”’ இது தான் ஐயா நீங்களும் உங்கள் கட்சியும் எடுத்த தீர்மானம்.
ஐயா நீங்கள் ”இது ஒரு ரக்ரிகல் மூவ் (tactical move)” என்றும் ”இது ஒரு நியாயமான தீர்வாக உங்களுக்கு படவில்லை” என்றும் தேசம் சஞ்சிகைக்கு 2006 நவம்பரில் அளித்த பேட்டியில் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் உங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட தம்பிக்கு இன்னும் இந்த விசயம் புரியவில்லை. அல்லது புரிந்துகொண்டாலும், இந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் கட்சித் தலைவர்கள் உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரம் உயிர்கள் இழக்கப்பட்டுவிட்டது, இவ்வளவிற்கும் பிறகு எப்படி மக்கள் முன் வந்து அதை ஒத்துக்கொள்வது.
1980க்களின் நடுப்பகுதியில் பிரபாகரனிடம் இந்திய உளவுப்பிரிவு அதிகாரியாக இருந்த சந்திரன், ‘தமிழீழத்தை கைவிடலாமே’ என்று கேட்டுள்ளார். அதற்கு பிரபாகரன் ‘என்னை நம்பி 120 பெடியள் உயிரை விட்டுள்ளார்கள்’ என்று பதில் சொல்லியதாக, அண்மையில் லண்டன் வந்திருந்த சந்திரன் தெரிவித்திருந்தார். இன்று தமிழீழ விடுதலைப் புலிகளில் மட்டும் 20,000க்கும் அதிகமான போராளிகள் உயிரிழந்து உள்ளனர். இன்னும் பல மடங்கு மக்கள் உயிரிழந்து உள்ளனர். உள்நாட்டு யுத்தம் தொடர்கிறது.
1976ல் இந்த தமிழீழப் பிரகடனம் செய்யப்பட்ட மாநாட்டை சுற்றியுள்ள மதில்சுவர்களில் ‘தமிழ் முதலாளி தமிழீழம் கேட்கிறான்’ என்பது போன்ற கூட்டணியின் தமிழீழக் கோசத்திற்கு எதிரான சுவரொட்டிகளை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி ஒட்டியது. தமிழீழம் சாத்தியமா? இல்லையா? என்ற வாதம் யாழ்ப்பாணமெங்கும் நடத்தப்பட்டது. ஆனால் கூட்டணியின் தமிழீழ கோசத்தை எதிர்த்தவர்கள் மிகச் சிறுபான்மையினரான இடதுசாரிகள். அவர்களது அரசியல் எதிர்வு கூறல் இன்று யதார்த்தமாகிவிட்டது.
ஐயா உங்களுடையதும் உங்கள் கட்சியினதும் அரசியல் தவறுகளுக்கு தமிழ் மக்கள் செலுத்துகின்ற விலை மிக மிக அதிகம். ”நாங்களோ போய் அடிபடச் சொன்னாங்கள், டக்ளஸ் தேவானந்தாவைப் போல் எங்கள் கைகளில் இரத்தக்கறை இல்லை” என்று நீங்கள் சொல்லலாம். ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் உங்கள் முகம் முழுக்க இரத்தக்கறை இருப்பதை நீங்கள் காணவில்லை. தமிழீழக் கோசம் போட்டு உங்களால் உசுப்பி விடப்பட்ட ஆயிரம், ஆயிரம் இளைஞர்கள் தங்கள் கையில் உள்ள நாடி, நரம்புகளைக் கீறி இரத்தத் திலகம் இட்டார்களே. அதில் எனது சொந்த சகோதரனும் ஒருவன். 25 வயதிலேயே அவனும் கொல்லப்பட்டு 20 வருடங்கள் கடந்துவிட்டது. அந்த இளைஞர்களின் இரத்தக் கறைகளை நான் உங்கள் முகத்தினில் காண்கிறேன் ஐயா.
ஐயா உங்களுடைய அரசியல் வாழ்க்கை 1950க்களில் இடதுசாரி அரசியலிலேயே ஆரம்பித்தது. 1965ல் தேர்தலில் தோல்வியடையும் வரை நீங்கள் இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிர்கள். பிறகு கொங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 1970ல் பாராளுமன்றம் சென்றீர்கள் பிற்பாடு சமஸ்டிக்கட்சியில் 1972ல் இணைந்து கொண்டிர்கள். அது பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாக தமிழீழம் கேட்டது வரலாறு. இன்று வளர்த்த கிடாய் மார்பினில் பாய்ந்தது போல் உங்களதும் கூட்டணியினதும் நிலை.
சங்கரி ஐயா, அரசியலில் ‘பழம் தின்று கொட்டை போட்ட’ நீஙகள் இன்று செய்கின்ற அரசியல் என்ன? நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளாதது உள்முரண்பாடு. ஒரு விபத்து. சம்பந்தன் ஐயாவின் சதியும். அதற்கு அப்பால் கொள்கை வேறுபாடு எதுவும் இருக்க நியாயம்மில்லை. எழுபதுக்களின் நடுப்பகுதியில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கிய இளைஞர் படையணி அடியாள் குழுக்கள் தான், நீங்கள் இன்று கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் டக்ளஸ், பிரபாகரன் மற்றும் கொல்லப்பட்ட ஏனைய இளைஞர் தலைவர்கள். யாழப்பாண மாநகரசபையை அபிவிருத்தி செய்த அல்பேட் துரையப்பாவை கூட்டணி தனது சொந்த அரசியல் நலனுக்காக மக்களின் பெயரால் பழிவாங்கியது. இது இன்றும் தொடர்கிறது. இன்னும் தொடரும் நிலையே உள்ளது.
ஐயா கூட்டணி துவக்கு தூக்காத புலி. புலி துவக்கு தூக்கிய கூட்டணி என்றதை மறந்திடாதைங்கோ.
‘காங்கரஸ் காரன் சட்டை போடாமல் இருந்தாலும் இருப்பானே தவிர பதவி இல்லாமல் இருக்க மாட்டான்’ என்பது இந்திய அரசியல் வழக்கு. நீங்கள் ஆடும் அரசியல் சதுரங்கத்தை அரசியலில் அரிவரி தெரிந்தவர்களே புரிந்துகொள்வார்கள். தென்னையில ஏறியாச்சு தேங்காயை (சமஸ்டி) பிடுங்கிறதா? இல்லையா? என்று நீங்கள் விட்ட றீல், பிறகு கிழக்கு தேர்தலில் முக்கூட்டணி. ஆளுநர் பதவிக்கு ஆசையில்லை என்று அறிக்கை விடுற மாதிரி விடுறதும், மற்றையவை கேக்கிற மாதிரி கேக்கிறதும், பிறகு எடுக்கிற மாதிரி எடுக்கிறதும் என்னையா விளையாட்டு. இன்றைக்கு என்ன ஆச்சு உங்கள் அரசியல்?
டக்ளஸ்க்கு கடிதம் எழுதி இருக்கிறீங்கள் ஐயா. டக்ளசை அம்பலப்படுத்துவது சரி. அது அதுக்கு என்று ஒரு நேரகாலம் இருக்கு. உங்களுக்கு பதவி வழங்கப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் எழுதிய கடிதம் அதில் இருந்த உண்மைகளையும் வலு இல்லாமல் செய்துவிட்டது. ஐயா சின்ன வயதில பள்ளிக் கூடத்தில் பெடியல் வாங்குக்கு சண்டை பிடித்து ரீச்சரிட்டை கோள்மூட்டுவாங்கள் தெரியுமோ? அதுக்கும் நீங்கள் செய்ததுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
ஐயா தமிழ் சமூகத்தில் தற்கொலை வீதம் ஒப்பீட்டளவில் சராசரியிலும் அதிகம். பரீட்சையில் தோல்வி, காதல் தோல்வி, குடும்பத்தில் தோல்வி என்று பல தோல்விகளுக்காக தமிழர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பெரும்பாலும் சம்பந்தப்பட்டவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் ஒரு கடித்தையும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்வார். நான் அறிந்தவரை யாரும் அரசியல் தோல்விக்காக தற்கொலை செய்ததில்லை. ஆனால் நீங்கள் எழுதிய கடிதங்கள் உங்கள் அரசியல் வாழ்வின் தற்கொலையாகவே இருக்கிறது.
பெரும்பாலும் ஒருவர் தனது வாழ்வின் உச்சநிலையில் இருக்கும் போதே ஒய்வுபெற விரும்புவார். அப்படிச் செய்வதன் மூலம் அவர்களது அந்த வரலாறு அந்த உச்சநிலையை உறுதியாக பதிவு செய்துகொள்ளும். அப்படி ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கும் இரு ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது. யுனஸ்கோ விருது வழங்கப்பட்டதும் அதனைப் பெற்றுக்கொண்டு நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்திருக்க வேண்டும். அரசியல் சாராது சமாதானத்திற்கு மட்டும் குரல் கொடுப்பவராக போராடியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள், பலர் கூறியும் அந்த யோசனையைத் தட்டிக்கழித்துவிட்டிர்கள். இன்று நீங்களே உங்கள் மீது சேற்றை வாரியிறைத்து இருக்கிறீர்கள்.
இறுதியாக ஐயா, தயவு செய்து நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் நல்லது.
ஐயா, மீண்டும் உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
த ஜெயபாலன்
15 யூன் 2008
இக்கட்டுரை தொடர்பான முன்னைய பதிவுகளுக்கு :
சங்கரி ஐயாவுக்கு எனது 75வது ஆண்டு பகிரங்க பிறந்தநாள் வாழ்த்து மடல் : த ஜெயபாலன் : http://thesamnet.co.uk/?p=1431
அண்ணன் ஜெயபாலனிற்கு கூட்டணித் தம்பி எழுதும் பதில் : எஸ் அரவிந்தன் (தவிகூ லண்டன் கிளை) : http://thesamnet.co.uk/?p=1491
ஆனந்தசங்கரி – டக்ளஸ் மோதல் புலிகள் மீண்டும் பலம்பெறுவதற்கே உதவும் : குரு : http://thesamnet.co.uk/?p=1430
”வேற்றுமைக்குள் ஒற்றுமைதான் தேவையானது.” அண்ணன் சங்கரிக்கு தம்பி டக்ளஸின் அன்புக் கடிதம் : http://thesamnet.co.uk/?p=1368
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பற்றி ஆனந்தசங்கரி ஜனாதிபதி மகிந்தவுக்கு எழுதிய கடிதங்கள் : http://thesamnet.co.uk/?p=1272
ஆனந்தசங்கரி ஜயா, ஆளுனர் பதவிக்கு அலைவது மெய்யா? : ஆர் புதியவன் : http://thesamnet.co.uk/?p=578
“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத கூட்டணியினர் வானம் ஏறி வைகுண்டம் போகினமாம்…….” ரி கொன்ஸ்ரன்ரைன் : http://thesamnet.co.uk/?p=176