ஆஸ்தி ரேலியா நாட்டில் கடந்த 1980-ம் ஆண்டு ஒரு ஆடு ரூ. 1 கோடியே 17 லட்சத்துக்கு விற்கப்பட்டது. கடந்த 24 ஆண்டுக்கும் மேலாக அது உடைக்க முடியாத உலக சாதனையாக இருந்தது. கடந்த வியாழக்கிழமை ஸ்காட்டிஸ் நேஷனல் டெக்சல் சந்தையில் ஒரு ஆடு பரபரப்பாக ஏலம் விடப்பட்டது. டெவரன்வாலே என்றழைக்கப்பட்ட அந்த ஆட்டை வாங்க கடும் போட்டி நிலவியது.
இறுதியில் கெயர்னஸ் பகுதியை சேர்ந்த ஒருவர் 1 கோடியே 83 லட்சம் ரூபாய் கொடுத்து அந்த ஆட்டை வாங்கினார். உலக சந்தையில் ஒரு ஆடு இவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும். இந்த ஆடு விற்பனை மூலம் அதன் உரிமையாளருக்கு ரூ. 1 கோடியே 80 லட்சம் லாபம் கிடைத்துள்ளது. ஒரு ஆடு இந்த அளவுக்கு விலை போனது டெக்சல் பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
31
31
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று லிபியா பயணமானார்.
லிபிய புரட்சியின் 40 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பங்குபற்றவுள்ள ஜனாதிபதி லிபியாவின் அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி இவ்விஜயத்தின்போது இவ்விழாவில் கலந்து கொள்ளும் பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்கள் சிலர் மறுபக்கத்தில் உள்ள முகாம் மக்களுடன் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் நின்று கதைத்துக் கொண்டிருந்தபோது, அவர்கள்மீது ஞாயிறன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“வவுனியா இடைத்தங்கல் முகாமில் உள்ள மக்கள் வெளியிடங்களுக்குச் சென்று தமது உற்றார் உறவினர்களைச் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. இத்தருணத்தில், தமது இன்ப துன்பங்களைப் பக்கத்தில் உள்ள முகாம் மக்களுடன் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் நின்று கதைத்துக் கொண்டிருந்ததைக் கவனித்த இராணுவத்தினர் அம்மக்கள் மீது மூர்க்கத்தனமான தடியடித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அத்துடன் அங்கிருந்த மக்களை முழந்தாளிட வைத்தும், மண்மூடைகள், முட்கம்பிச் சுருள்கள், கம்பிக்கட்டைகள் ஆகியவற்றைத் தலையில் சுமக்க வைத்தும் தண்டித்துள்ளனர்.முகாமிலுள்ள மக்களை உள்ளக இடம்பெயர்ந்தோராக வெளியுலகுக்குக் காண்பிக்கும் இலங்கை அரசாங்கம், எமது மக்களைக் கைதிகளைப் போன்று நடத்துவதைக் கைவிடவேண்டும்.
மேலும், தாங்கள் விரும்பிய பொழுதெல்லாம் குளித்துத் துணி துவைத்த இம்மக்கள் இன்று இருபது லிட்டர் தண்ணீருக்காக பத்து பதினொரு மணித்தியாலங்கள் வரை வரிசையில் நிற்கவேண்டியுள்ளது. இதனால், பெரும்பாலான மக்களின் இரவுகள் முகாம்களிலுள்ள கூடாரங்களுக்கு வெளியே குழாய்க் கிணற்றுக்கருகில்தான் கழிகின்றது. இதற்குத் தக்க மாற்று ஏற்பாட்டினை அரசாங்கம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சுமார் மூன்று பில்லியன் பணம் சுவிட்சர்லாந்து வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ், சுவீடன், பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் திரட்டப்பட்ட பணமே இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளது என கே.பி. கூறியுள்ளதாகவும், சுவிஸ்சர்லாந்திலிருந்தே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதிகளவு நிதி உதவி கிடைக்கப் பெற்றதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாகவும் அப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இலங் கையில் தமிழ் ஈழம் மலரப் போவது நிச்சயம். அதைத் தடுக்க யாராலும் முடியாது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் மாமன்னன் பூலித்தேவனின் 294-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னையில் நடந்தது.
டாக்டர் சேதுராமன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் வைகோ பேசுகையில்,
இந்தியாவில் முதல் சுதந்திர போர் 1857-ம் ஆண்டு நடைபெற்றதாக நம் வரலாறு கூறுகிறது. ஆனால் அதற்கும் 100 ஆண்டுகளுக்கு முன்பே 1750களில் தென் தமிழகத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து பல வீரம் மிகுந்த போராட்டங்களை நடத்தியவர் பூலித்தேவன். ஆங்கிலேயருக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்ந்தவர் பூலித்தேவன். பூலித்தேவன் வரலாறு புத்தகத்தில் இல்லை. இந்த இருட்டடிப்பை ஜெயலலிதா தலைமையில் நாங்கள் முறியடிப்போம்.
இலங்கையில் தமிழர்கள் படும் துயரங்கள் இன்னும் தொடருகிறது. மத்திய- மாநில அரசுகள் அங்கு நடப்பதை வேடிக்கைதான் பார்க்கிறார்கள். இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
தனியார் பஸ் கட்டணங்களை 7 வீதத்தினால் அதிகரிக்க வேண்டும். 5.3 வீத அதிகரிப்பானது போதுமானதல்ல என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்தார்.
செப்டெம்பர் மாதம் முதல் தனியார் பஸ் கட்டணங்களை 5.3 வீதத்தினால் அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே பஸ் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் கோரியுள்ளனர்.
நேற்று இரவு பன்றி காய்ச்சலுக்கு புனேவில் இரண்டு பேரும், முசெளரியில் ஒருவரும் பலியானார்கள். இதையடு்த்து இந்தியா முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. பன்றி காய்ச்சல் பாதிப்பு இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் சுமார் 128 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உத்தர பிரதேத்தை சேர்ந்தவர்கள் 27 பேர். டெல்லி 22, தமிழகம் 21, கர்நாடகா 17, மேற்கு வங்கத்தில் 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வவுனியா, மன்னார் மாவட்ட நலன்புரி முகாம்களிலுள்ள யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் பேரை மீள் குடியேற்றுவதற்கான பாதுகாப்பு அனுமதி கிடைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவர்களின் பாதுகாப்பு அனுமதிக்கான விபரங்கள் கிராம அலுவலர்கள் மற்றும் பொலிஸார் மூலம் திரட்டப்பட்டு மீள் குடியேற்ற அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து இவர்களை யாழ். மாவட்டத்தில் மீளக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட செயலகம் மேற்கொண்டு வருவதுடன் பொலிஸாரும் தமது நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
சனல் 4 தொலைக்காட்சி விவகாரத்தையடுத்து போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
“இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தவேண்டும் என்ற நோர்வேயின் கோரிக்கையையும் செனல் 4 விவகாரம் குறித்து இலங்கை சுயாதீன விசாரணை நடத்தவேண்டும் என ஐ.நா.வின் நிபுணர் ஒருவர் வலியுறுத்தியுள்ளதையும் முழுமையாக நிராகரிக்கின்றோம்” என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
“மனித உரிமைகள் அமைச்சர் என்ற வகையில் செனல் 4 விவகாரம் தொடர்பில் இராணுவத் தளபதியிடம் விசாரித்தேன். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் தனிப்பட்ட விசாரணை ஒன்றை நடத்தியதாகவும் அதன்மூலம் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெறவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி எனக்கு அறிவித்துள்ளார்” என்றும் குறிப்பிட்டார்.
“எதிர்வரும் 13 ஆம் திகதி நான் ஜெனீவாவுக்குச் சென்று செனல் 4 விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணையைக் கோரியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் பிலிப்ஸ் அல்ஸ்டனைச் சந்தித்து இலங்கை அரசாங்கத்தின் ஆட்சேபனையை வெளியிடவுள்ளேன்” என்றும் அமைச்சர் சமரசிங்க கூறினார். இலங்கையில் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தவேண்டிய தேவை உள்ளதாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தது. அதேவேளை, செனல் 4 விவகாரம் தொடர்பில் இலங்கை சுயாதீன விசாரணை நடத்தவேண்டும் என்று ஐ.நாவின் நிபுணர் பிலிப் அல்ஸ்டன் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.
ஈராக் அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இன்னும் ஓராண்டுக் காலத்திற்குள் வெளியேற வேண்டிய அமெரிக்கப் படைகள், அதற்கான பணியைத் தாம் ஆரம்பித்திவிட்டதாக அதன் தளபதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக்கில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பேரழிவு ஆயுதங்களை வெளிக்கொணரப் போவதாகக் கூறியே அந்நாட்டின் மீது 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா படையெடுத்தது.
தனது நிலையில் இருந்து மாறிய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ், ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதே தங்கள் நோக்கம் என்று கூறினார். அமெரிக்கப் படைகளிடம் பிடிப்பட்ட அந்நாட்டு அதிபர் சதாம் உசேன் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
ஈராக்கின் எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்றி, அவற்றை நிரந்தரமாக அமெரிக்காவின் பிடியில் கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியை, அதன் துணையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசே முறியடித்துவிட்டது. அதே நேரத்தில் ஈராக்கில் நிலைபெற்ற அமெரிக்க படைகள் மீது அந்நாட்டு தீ்விரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர். ஈராக்கில் தீவிரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி அமெரிக்கா கடந்த ஆறரை ஆண்டுகளாக நடத்திய தாக்குதல்களில் 12 லட்சம் ஈராக்கியர்களே கொல்லப்பட்டனர். அமெரிக்கப் படையினர் 4,000 பேருக்கு மேல் பலியாகினர். இந்த நிலையில் அந்நாட்டில் இருந்து 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதிக்குள் வெளியேறுவது என்று அமெரிக்க அரசு, ஈராக் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
அதன்படி, தனது படையணிகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையைத் தாம் தொடங்கிவிட்டதாக அமெரிக்கப் படைத் தளபதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ராடார்களில் இருந்து கனரக வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் என்று 15 லட்சம் போர்க் கருவிகள் உட்பட ஒரு பெரும் படையை அங்கிருந்து மீண்டும் அமெரிக்கா கொண்டு செல்ல, பல நூற்றுக்கணக்கான கோடி டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.