18

18

இலங்கைத் தமிழர்களது எதிர்காலம்: ரவி சுந்தரலிங்கம்

Ravi Sundaralingamபாகம் 3
பழசுகள் புதியவை தாரா

முன்குறிப்பு: மேற்படி தலைப்புடன் இங்கு தரப்பட்டுள்ள கட்டுரை புலிகள் எனும்போது எவற்றைக் குறிக்கிறோம் என்ற கேள்விகளுக்கு, இயக்க-சாயல்கள் அற்ற கருத்துகள் சிலவற்றை முன்வைக்கின்றன. இவற்றை, (1) பழைய புதுசுகள், (2) புலிகள் என்றால் யார், என்ன? (3) தமிழீழச் சாதிகள், (4) புலிகளானவர் எம்மவரே என்ற உப-தலையங்கங்களுடன் தந்துள்ளோம். இறுதியில், கட்டுரை தமிழீக் கோரிக்கைகான வாதங்கள் தொடர முடியாதவை என்ற முடிவுக்கு எம்மை இட்டுச் சென்றுள்ளமை தர்க்க ரீதியில் தவிர்க்க முடியாதது.

பூரண பொறுப்புணர்வுடன் சமூக, சமுதாய சிந்தை கொண்டு, மக்களது சகல சமுதாயத் தட்டுகளது எதிர்பார்ப்புகள்-அபிலாசைகள் என்பவற்றை தம்முள்ளேயும், மக்கள் மத்தியிலும் ஒழுங்குபடுத்திக் கொள்பவர்கள் முன்னோடிகள். “நாமே எல்லாம்”; என்ற தன்னுணர்வில் ஒரு சமூகத்தட்டின் சமூகப் பார்வையுடன், ‘சமூக-சேவை’ செய்ய முற்படுபவர்கள் முன்னுக்கு-ஓடுபவர்கள். என இவை கடந்தபாகத்தில் முன்வைத்த வரைவுகளும் ஒப்பீடுகளும். இவர்களைவிட ”எம்மைப் பார்..” என எல்லாத் திக்குகளிலும் முன்னுக்கு- ஓடுபவர்களின் பின்னால் பறந்து திரியும் கிலுகிலுப்பைக்காரரும் பலர் உள்ளனர்.

பொறுப்பான வாசகர்கள் இவற்றையும் கிரகித்து, வரிகளிடையே இருக்கக்கூடிய விளக்கங்களை தாமே தமக்குத் தந்து, அல்லது அனாவசியமானவை என விலக்கி, தமது கருமம் பற்றி வினவ முன்னரே, கிலுகிலுப்பைக்கார்கள் + முன்னுக்கு ஓடுபவர்கள் தமது கூட்டு முயற்சியால், எம்மால் என்றுமே தீர்க்க-முடியாத இன்னுமொரு மர்மத்தை எம்முன் வைத்துள்ளனர்.

“எமது மண்ணை மீட்டெடுப்பதற்கான போராட்டம்” என தொடுக்கப்பட்டது புலிகளது போர். பல மாவீரர் தினங்களையும், தலைவரது வருடாந்தப் பொழிப்புரையையும் கடந்து சென்ற போர், ஈழப்போர்கள் 1 முதல் 4 வரை எட்டியது அந்தப் போர். இன்றோ அது, மூன்று வேளைச் சாப்பாட்டுடன் ஏதாவது எழுத வேண்டும் என வெளி நாடுகளில் தவித்துக் கொண்டிருக்கும் ஜீவனில்லாப்- புத்திமதிப் பண்டிதர்களுக்ககுக் கூட “போர்” அடிக்கும் துப்பறியும்- நாவலாக மாறிக் கொண்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழ்ந்த போதும் எமது மக்களது அன்றாட- வாழ்வின் விடிவுக்காக, தமது பிரத்தியேக வாழ்க்கையின் அபிலாசைகளில் பாரிய தடங்கல்களையும் பலத்த பொருளாதார பின்னடைவையும் சந்தித்த போதும், இன்றும் தமது குறிக்கோள் பற்றிய சிந்தனையுடன் உள்ளவர்கள் பலர். இவர்கள் எல்லோரும் முன்அடி எடுத்து தமது கருத்துக்களை “இந்தா பிடி” என முன்வைப்பதோ, தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதோ, பதவிகள் ஸ்தானங்கள் தேடிக் கொள்வதோ கிடையாது. இவர்கள் தமது மன வருத்தங்களை, மக்கள் பற்றிய ஏக்கங்களை வெளிக்காட்ட எம்மைப்போல சந்தர்ப்பங்கள் இல்லாதவர்கள், அவற்றைத் தேடாதவர்கள்.

தவறான வழிகளில் போயிருந்தாலும், எமது மக்களுக்காக தமது வாழ்க்கைகளை அர்ப்பணித்தவர்கள், இன்று சூழ்ச்சிகள் சுத்துமாத்துகள் மர்ம-ஜாலைகளில் ஈடுபடுவதை, அல்லது ஈடுபடுத்தப்படுவதைக் கண்டு படும் வருத்தம், போராட்டமும் மக்களும் உள்ள நிலை கண்டு படும் கவலைகளிலும் பாரக்க பல மடங்கானது.

பழைய புதுசுகள்
இத் தொடரில் இடம் பெறுவதுதான், K.P என அழைக்கப்படும் விடுதலைப் புலிகளது புதிய தலைவர் பத்மநாதனது கைதும், அதனைத் தொடர்ந்த எவ்வளவோ கதைகளும், கட்டுரைகளும். இவைபற்றி என்னதான் எம்மால் சொல்ல முடியும்? அவற்றிகான தகவல்கள் எவ்விடமிருந்து வெளிவருகின்றன? இவ்றை அங்கும் இங்கும் இரகசியமாக வெளிவிடுபவர்களது நோக்கங்கள் என்ன? இவற்றிக்கெல்லாம் பதில் சொல்ல முடியாத நிலையில், விசனம் கொண்ட விலகலே பொறுப்பான பதில் அதற்கு.

பிரபாகரன் இறந்துவிட்டாரா? கொல்லப்பட்டாரா? சரண் அடைந்தாரா? பொட்டு அம்மான் இன்னும் உயிருடன் உள்ளாரா, அரசின் கைகளில் உள்ளாரா? என்ற மர்மங்கள் சூழ்ச்சிகள் போர்த்த துப்பறியும் கைங்காரியங்கள் முற்றுப்பெறும் முன்னரே மேலும் இந்தப் புதிய பரபரப்புகள்.

K.P எவ்வாறு யாருடைய துரோகத்தால் கைது செய்யப்பட்டார்? எந்தக் கிலுகிலுப்பைக்காரர்கள் அவரை அங்கும் இங்கும் இரகசியமாகச் சந்திக்கச் சென்றார்கள்? புலிகளுக்கு ஆதரவாளர்கள் என்று வெளிக்காட்டியபடி அவர்களுக்கு எதிராக கருமம் செய்பவர் யார்? புலிகளுக்கு எதிரானவர்கள் என்று கூறி அவர்களுக்காக அலுவல் செய்பவர்கள் யார்? புலிகள் என்றால் யார், K.P எனபவர் தலைமையிலான Transnational Government in Exile என்பதா அல்லது மாற்றாரது Global Tamil Forum என்பதா? என்றெல்லாம் எமது அறிவை பெருப்பிக்கும் பல தகவல்கள் இருப்பதாக பலர் சொல்லி நாமும்தான் கேள்விப்படுகிறோம்.

இப்படியான எமது பேரறிவு பற்றி புழுதி சேறு சகதிகளுள் தடுப்புக் காவலிலுள்ள எமது மக்கள் சரி, கைதிகளாகிவிட்ட தமிழ்ப் போராளிகள் சரி, என்னதான் சொல்வார்கள்? அல்லது இவைபற்றி ஏதாவது கரிசனம் அவர்களிடம் இருக்க முடியுமா?

ஒருவேளை, இவை அவசியமற்ற கேள்விகள். ஆனால், இப்பேரறிவு பற்றிய நாட்டமோ இருக்க முடியாது என்பதில் மட்டும் மிகுந்த அக்கறை எமக்கு. ஏன்?. போராட்டம் என்பது மக்களது உடமைகள் அவைபற்றிய உரிமைகள் பற்றிய சர்ச்சையே என்பதே எம்மை உழைக்கும் மக்களது வாழ்வுடன் ஈடுபடுத்தியது.

அதன் பின், இலக்கை விட்டகர்ந்து, கூர்-நோக்கை இழந்து, பாதையிலிருந்து இறங்கி மக்களையும், அவர்களது சர்ச்சைகள் பிரச்சனைகளையும் மறந்துவிட முடியாது. கிசுகிசுக்கள் குழப்பங்களுள் எம்மையும் ஆழ்த்திக் கொள்ளக் கூடாது. நாம், கூர்-நோக்குடன், அதாவது focus ஆக இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தைவிட வேறு முக்கிய சரித்திர அவதானிப்புகளும் இந் நிலைப்பாட்டிற்கு காரணமாகின்றன. அவை புலிகள் தமிழீழம் என்பவை பற்றி நாம் கொண்டுள்ள விளக்கங்களும் முடிவுகளுமாகும்.

சரித்திரம் என்பது வெறும் சம்பவங்களின் கோர்வை அல்ல. சரித்திரம் சொல்பவர்களது அரசியல் பொருளாதார நிலைப்பாடுகள், மனோவியல் பாங்குகள், அக் காலகட்டத்தின் இலட்சிய, யதார்த்த சூழல், என்பவையும் சரித்திரத்தினுள் அடங்கிய சரித்திரமே. ஆகவேதான் சரித்திரத்தை ஆய்வு செய்யும் சரித்திரமும் உண்டு என்பதையும் அதனையே சரித்திரத்துவம் ((historiographyh) எனும் துறை விஞ்ஞானத்தின் உதவியுடன் உருவாகி உள்ளது. அதேவேளை, வர்க்க ரீதியில், சமூக-பொரளாதார அரசியல் நிலைப்பாடுகள் சொல்வதையே நாம் இலட்சியச்-சரித்திரம் (objective history) என்றழைப்பது என்பதையும் கவனிக்க வேண்டும்.

புலிகள் என்றால் யார், என்ன?
புலிகள்பற்றி கருத்துச் சொல்பவர்கள் இன்று பலர். ஒருவர் சொல்வதை மற்றவராக முடிவில் Chinese whisper போல வேறேதோ ஒன்றாக விளைந்து வரும் வடிவங்களையே நாம் காண்கிறோம். புலிவெறுப்பை தளமாகக் கொண்டவர்களில் புலிகளது முடிவுக்கான காரியம் ஆற்றியவர்கள் காலம் கடந்த கதைகளை, புலிகள் செய்தது போலவே, சரித்திரமாக மாற்றிடும் முயற்சியில் உள்ளார்கள். இந்நிலையுள் சரித்திரம் பற்றிய பூரண குறிக்கோளுடன் தேடல்செய்வது இன்றும் வியாக்கியானங்கள் கொண்ட வினையாகவே உள்ளது. இதனால், ஆக்க பூர்வமானவர்கள் பின்தங்கி நிற்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

புலிகள் யார், புலிகள் எனும்போது எவற்றைக் குறித்து நிற்கின்றன? என்பவை சரித்திரம் எழுத முனைவர்கள் ஆய்வு செய்ய வேண்டிய கேள்விகள். புலிகள் எனும்போது ஒரு அரசியல்-இராணுவ அமைப்பை மட்டுமின்றி, தமிழர்களது, தமிழ் பேசும் சமுதாயங்களது நவீன-கால சரித்திரத்தைப் பற்றியும் வினவுகிறோம் என்ற அறிவின் உணர்வும், அதற்கான பொறுப்புணர்வும் அவசியம். ஆகவே, இக் கேள்விகளை அணுக வேண்டிய வழிமுறைகளோ பலவகைகளில் அமைய வேண்டும் என்பதும் அவசியம். எமக்கோ இன்று புலிகளாக தம்மைக் காட்டிக் கொள்பவர்கள் சில ஆலோசனைகளை முன்வைப்பதால் அவை தொடர்பான கேள்விகளுடன் அணுக வேண்டிய அவசியம் உள்ளது.

இவ்வகையில், “புலிகளது இராணுவத்தை தமிழீழக் கோரிக்கை தோற்கடித்ததா? அல்லது தமிழீழக் கோரிக்கைக்கு புலிகளது இராணுவம் காரணி ஆகிற்றா?” என்பது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

இவை இரண்டும் பாம்பின் வாயுள் அகப்பட்ட அதனது வால்போல ஒன்றுபடுத்தப்பட்ட கேள்விகள். ஆனால், விசுவாசங்களைத் தாண்டி தேடல் செய்பவர்களுக்கு அவை வேறுபட்ட விடயங்கள் என்பது புரியும்.

தமிழீழக் கோரிக்கையை புலிகள் கண்டு பிடிக்கவில்லை, மக்களிடம் கொண்டு சென்று வாக்குக் கேட்கவில்லை என்பது சமுதாய அறிவு.

வாசல் படியேறி வியாபாரம் செய்பவன் தோல்விகண்டால் வியாபாரியையா, வியாபாரப் பொருளையா பிழை சொல்வது என்பது அர்த்தமான கேள்வி.

இக் கேள்விகளுக்கு நேர்மையான சரித்திர பூர்வமான பதில் சொல்ல விளைபவர்கள் யாழ்குடாவில் நிலவும் சாதிப் பிரச்சனையை மூடிமறைத்துவிட முடியாது. எனவே, “புலிகள்” என்பதற்கு இவ்விடத்தில் இவ்வழியில் சில கருத்துகளை ஆய்வுகளுக்கு முன்வைக்க வேண்டி உள்ளது. ஆனால், நாம் முன்கூறியபடி ஒரு பாரிய பொருளினை ஒரு கோணப் பிம்பத்தை, சிறு துவாரத்தினூடாகத் தரும் முயற்சியே இது.

தமிழீழச் சாதிகள்
சாதிகள் எவ்வாறு உருவாகின, எவ்வாறு சமுதாயங்களுள் ஒழுங்குபடுத்தப்பட்டன என்பவை மிகவும் சிக்கலான சரித்திரப் பிரச்சனை தருபவை. இவைபற்றிய பதில்களை எம்மால் இங்கு தர முடியாது.

இடதுசாரி நிலைகொண்டு அவதானிப்புகளைச் செய்பவர்கள் சிலர், சாதிகளை வர்க்கங்களுடன் நிகர்படுத்திப் பேசுவதை கண்டுள்ளோம். ஆனால், ஆசிய உற்பத்தி முறைகள் ஐரோப்பிய மாதிரிகளிலிருந்து வேறுபட்டவை என்பதையும், வர்க்கங்கள் என்பதன் வரைவுகள் சாதிகளை இலகுவில் உள்ளடக்க மாட்டா என்பதையும் அறிவோம். மேலும், சாதிகளிடையே இடம்பெறும் சுரண்டல், சாதியினுள்ளே இடம்பெறும் சுரண்டலுடன் தோற்றத்தில் வேறுபட்டதாயினும் நடைமுறையில் ஒன்றுதான் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது, சாதிகளின் அடிப்படையில் வெள்ளாளர் வெள்ளாரையோ, கரையார் கரையாரையோ சுரண்டுவதில் வேறுபாடுகள் இல்லை என்பதே எமது கருத்து.

ஆயினும், கொத்தடிமைத்தனத்துள் ஒருசில மனிதர்களை, தலைமுறையை மட்டுமின்றி, அவர் பரம்பரைகளையும் நிரந்தரமாக உட்படுத்தி, அவர்களது உழைப்பினை மூலதனமாக்கிடும் சமுதாயக் கட்டமைப்பு இது என்பதில் மட்டும் கவனமிழக்க முடியாது.

சிங்கள அரசிடம் இருந்து விடுதலை பேசும் மனிதர்கள், தம்மிடையே உள்ள சாதியப் பிரச்சனையை நடைமுறையில் சர்வசாதாரணமாக ஏற்றுக் கொள்வதும், அரசியலில் சாதகமாகப் பாவித்துக் கொள்வதும், நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகள். அதனைவிட, ஜனநாயகம் பேசுவோர் தம்மிடையே உள்ள சாதியப்-பழுவைப் போல மனிதாபிமானத்துக்கு குந்தகம் செய்யும் நடத்தைகள் எங்குமே இல்லை என்பதை உணராமல் பேசுவதையும், தாக்காட்டுக் காரணங்கள் சொல்வதையும் காண்கிறோம்.

சாதி பார்த்து குடும்ப உறவுகளை ஏற்படுத்திக் கொள்பவர்கள் சாதியின் பெயர் சொல்லிப் பேச மட்டும் தயங்குகிறார்கள், மறுக்கிறார்கள், சிலர் பிழையெனக் கூடச் சொல்கிறார்கள். இது ஒரு நாகரீகத்தன்மை என்பது சிலர் கொண்ட விளக்கமாக இருக்கலாம்.

ஆனால், உயர்சாதி நாகரீகத் தன்மைகளுக்கு சாதியமும் உயர்-மதித் (superiority complex) தனமுமே அடித்தளம் என்பதை மறந்துவிடலாகாது. உண்மையில் “பேசாதிருந்தால் கீழேயே வைத்துக் கொள்ளலாம்” என்ற தன்-சமுதாய உணர்வின்பால் எழும் விளக்கங்கள் இவை என்பதை மனோவியல் புரிந்தவர்கள் இலகுவாகக் கண்டுகொள்வர்.

இந்தியாவில் உயர்-சாதியினரும் கீழ்-சாதியினரும் தம்மை சாதியினால் அடையாளம் காட்டத் தயங்குவதில்லை எம்மில் பார்க்க சாதியப் பிரச்சனைகள் கொண்ட பிரதேசம் இந்தியா ஆக, அது எப்படி?

முதலாவதாக, இந்தியாவின் அரசியல் சாசனத்தின் 19வது சரத்துக்கள் மக்களது பொருளாதார நிலைப்படி, சாதியங்களது சமூக-பொருளாதார நிலைகளின்படி, தொழில் கல்வி என்ற துறைகளில் ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும் என்று கூறகிறது. இச் சட்டத்திற்கு தனியார் ஸ்தாபனங்களும் விதிவிலக்கல்ல என்பது கவனிக்க வேண்டியது. எனவே, சாதியத்தை முன் இழுப்பது தன் சமுதாயத்திலாவது சமுதாய-நகர்வைத் தரும், தனிமனிதரால் இயலுமாகின், அச் சமுதாயத்தின் முன்னேற்றத்தைக் குறித்து நிற்கும் விடயமாகிறது. ஆகவேதான், உயர்சாதி எனக் கருதப்படும் பிராமணச் சமுதாயம் தம்மை தாழ்த்தப்பட்டவர்களாகக் காட்டிட முற்படும் விசித்திரத்தையும் அங்கு நாம் காண்கிறோம். இரண்டாவதாக, இந்தியா பரப்பளவிலும், பொருளாதார முன்னேற்றத்திலும், நகர்புற வாழ்க்கையிலும் பாரிய அளவினைக் கொண்டமைவதால் சமுதாய-முன்நகரவு (social mobility) என்பது ஓரளவு சாதியங்களைத் தாண்டிப் போகக் கூடிய சாத்தியங்களைக் கொண்டதாக உள்ளது. மூன்றாவதாக, சாதியங்களைத் தளமாக்கி நேரடியான அரசியலில் பங்குபற்றக் கூடியதாக உள்ளமையும், மற்றைய வேளைகளில் தாழ்த்தப்பட்டவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், ஆதிவாசிகள், என்ற கூட்டுப் போராட்டங்கள் சாத்தியம் ஆனவையாகத் தென்படுவதும் காரணமாகிறது. இவற்றில் மேலாக பல காரணிகளும் காரணங்களும் ஆழ்ந்த ஆய்வாளர்களால் கூற முடியும்.

ஆனால் எமக்கு, சாதிகளை இழுத்துப் பேசுவது நாகரீகமல்ல என்ற போலிவாதத்தை நிராகரிப்பதற்கு, இந்தியாவில் சாதியம் சமூக-அரசியலில் எவ்வாறு உள்ளாக்கப்படுகிறது என நாம் காட்டிய சான்றே போதும்.எனவே, பொருளாதார முன்னேற்றங்கள், சமுதாய-முன்நகர்வுகள், சமுதாயமாற்றங்கள் இடம்பெறாத தேக்கமான சமுதாயங்களிலே சாதிஎன்பது தனது பூரண காரியத்தை செய்யக் கூடியதாக உள்ளது. அங்கேதான் அவைபற்றிப் பேசுவது, உயர் சாதிகளைப் பொறுத்தவரை நாகரீகமற்றதாகவும், கீழ்சாதிகளைப் பொறுத்தவரை தமது சமுதாய ஸ்தானங்களை மீண்டும் மீண்டும் ஊர்ஜிதம் செய்வதற்கான சூழ்சியாகவும் காணப்படக் கூடும். எனவே, இவ்வகையான தேங்கிய-சமுதாயங்களிடையே மேற்-சமுதாயங்களது உயர்-மதித் தன்மை தரும் குழப்பங்களுக்குப் பதிலாக கீழ்-சமுதாயங்கள் தம்மகத்தே உருவாக்கிடும் தாழ்வு-மதித் (inferiority complex) தன்மைகளின் விளைவுகள் எவ்வகைப்படும் என்பது சில்லறையான கேள்வியல்ல. மேலும், தமிழ்-சிங்கள வெறுப்பு-வாதங்களையும் குரோத-வெறிகளையும் இவற்றுடன் ஒப்பீடு செய்வதில் தவறுமல்ல.

இன்றுகூட இலண்டனில் புரட்சி பேசும் ‘உயர்-சாதி’ மனிதர்கள், வெள்ளையர் மத்தியிலே பிறந்து வளர்ந்த தமது பிள்ளைகளுக்கு “பேசிக் கல்யாணம்” செய்து வைப்பதையும், அப் பேச்சு வார்த்தைகள் தமது உயர்சாதிக் குடும்பங்களிடையே இடம்பெறும் விடயம் என்பதையும் நாம் அறிவோம். ஆனால், தம் பிள்ளைகள் யாராவது வெள்ளையரைக் கல்யாணம் செய்யும்போது மட்டும் வெள்ளையரது-சாதி வினவுவது கிடையாது.

வெள்ளையர்க்கு எம்மவர் தரும் மரியாதை, கைகுழைந்து வாய் குமைந்து மண்டியிடும் பக்குவம், அவர்களை ஏன் சாதியவாதிகளாக நிலை கொள்ளச் செய்கிறது, தமது மண்ணிற உடன் பிறப்புகளான இந்தியரை சிங்கள இஸ்லாமியரை, ஏன் கிறிஸ்தவரையும் குறைத்து மதிப்பிடவும், அவர்களுக்கு எதிரான மனோபாவத்தையும் தூண்டுகிறது என்பதற்கு ஓரளவு விளக்கங்கள் தரும். இந்நிலமையே இன்றும் உள்ளபோது, எமது போராடத்திற்கு எதிராக வேறெந்த விமர்சனங்களை யார் ஏன் தர வேண்டும்?

வெள்ளையரின் வருகை ஏற்கனவே உருவாகிவந்த வெள்ளாள-கரையார் போட்டிகளுக்கு தூண்டுதலாக அமைந்தது.
பாரம்பரிய வேளான்மையில் ஈடுபட்டிருந்த வெள்ளாளக் குடும்பங்களுள் பலர் கல்வி பெற்றதையும், அதற்காக மதமாற்றம் கூடச் செய்தமையும் நாம் அறிவோம். இவர்கள் பொதுவாக வெள்ளாராக மட்டுமின்றி, ஏற்கனவே இருந்த அதிகாரக்-குடும்பங்களைச் சேர்ந்தவராகையால் வெள்ளையரது அரச நிர்வாகத்தில் இலகுவில் சேர்த்துக் கொள்ள வேண்டியவருமானார்கள். இதனால், வெள்ளாளர் மத்தியில் புதியதொரு சமுதாயத் தட்டு உருவாகி வந்தது. அதே தருணம், வெள்ளையரது அரசாங்கம் கிழக்கு-இந்தியா வர்த்தக ஸ்தாபனத்தை அடிகொண்டு உருவாகியமையால் கரைகடந்த வாணிபம் முன்னரிலும் முன்னேற்றம் காணத் தொடங்கியது. இவ்வகையில் கரையோரச் சமுதாயங்கள், குறிப்பாக வல்வெட்டித்துறை மக்களில் பலர் வர்த்தகர்களாக மாறியதும், அவர்களது அடுத்த தலைமுறைகள் கல்வியில் ஈடுபடத் தொடங்கியமையும் நாம் அறிந்தவை.

இவ்வாறு மேலதிக- மூலதனத்தை (surplus-capital) சேகரிக்கத் தொடங்கிய கரையோரச் சமுதாயங்கள் அவற்றை முதலீடாகப் பாவிக்கும் வசதிகளை பெற்றிருக்கவில்லை. குடியான சமூகங்கள் நிலையான- முதலீடுகளிலேயே (fixed capital) தமது மேலதிக-மூலதனத்தை செய்யக் கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கும். அவ்வகையில், நிலம் என்பதே யாழ்குடாவில் முக்கிய வாய்பாக இருந்தது.

பயிரிடும் குடும்பக்காணிகளாக, வெள்ளாளச் சமுதாயத்தின் வரைவுதரும் பொருளாக இருக்கும் செம்பாட்டு மண்ணை கரையார் சமுதாயத்திற்கு விற்றிட அவர்கள் முன்வருவாரா என்ன? வெள்ளாளச் சமுதாயம் குடும்பம் என்ற கட்டுள் வரைவு செய்யப்பட்டது, ஊர்கள் என்ற சமுதாய ஒழுங்கில் அமைந்து கொண்டது. கரையார் சமுதாயங்களும் இதுபோல அமைந்தாலும், நிலம் என்ற விடயத்தில் பிறிதுபட்டவர்கள். இவற்றினால் உருவான சர்ச்சைகள் பலவாகினும், வெள்ளாளர் வெள்ளையருடன் சேர்ந்து பெற்ற அதிகாரப்பலம் அவர்களது ஸ்தானத்தை தொடரக் கூடியதாக உதவியது. 80 களில் கூட, கரையோரத் தீவுகளில் வாழ்ந்த வெள்ளாளர்கள் குடாநாட்டின் நடுப்பகுதிகளான நல்லூர் திருநெல்வேலி போன்ற ஊர்களுள் குடியேறிய போதும், கரையோரச் சமுதாயங்கள் அவ்வாறு ஊடுருவவில்லை என்பதும் அவதானிக்க வேண்டியவை.

பணமிருந்தும் நிலத்திற்கு வரமுடியாத நிலையைச் சந்தித்த கரையோரச் சமுதாயங்கள் வெள்ளாளரது அரசியல் ஓட்டங்களில் ஐயப் பார்வை கொள்வதும், தருணங்கள் கிட்டும்போது முகங்கொள்ள (challenge) முனைவதும் தவிர்க்க முடியாத சமுதாய நியதிகள். எனவே, தமிழர் கூட்டணியினர் வெற்று வாய்ப் பேச்சாளர்கள் என்று அம்பலமான பிற்பாடு, தரப்படுத்தலின் மத்தியில் வெள்ளாள இளம்சமுதாயம் போராட்டம் பேசிய போதிலும், ‘போராட்த்திற்கு’ தயாராக இருந்தவர்களில் கரையோரச் சமுதாயத்தினர் முன்னணிக்கு வந்தமை வியப்பதற்கில்லை.

எனவேதான், புலிகள் யார் என்ற கேள்விக்கு சாதிகளைச் சுற்றிவளைத்துப் பதில் சொல்ல முடியாது என்கிறோம்.
இவ்வாறு இருசாதிகளிடையேயான உரசல்கள் (antogonism) ஒருபுறமாக, ஏற்கனவே வர்த்தகத் தொடர்பிலிருந்த தமிழ்நாட்டுக் கரையோரங்கள் இயற்கையான பின்புலமாக, போராட்டத்திற்கு தயாராக இருந்த கரையோரச் சமுதாயம், குறிப்பாக வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்கள், தமது கைகளிலே அதிகாரத்தைப் பெற விளைந்ததும், பெற்றுக் கொண்டதும் எதிர்பார்க்க வேண்டியதே.

இனிமேல் நம்பிக்கை, விசுவாசம் என ஊர்தந்த சாதியங்களால் எலும்பூட்டப்பட்ட மனப்பாங்குகளும் இயக்கங்களின் அமைப்பு- வடிவங்களைத் தரவேண்டியதும் கட்டாயமாகி விடுகிறது. இதற்கு புலிகள் சிறந்த வெற்றிகண்ட அமைப்பு என்று கூறுவதில் தவறில்லை. அதேதருணம், அவற்றிக்கு நேர்மாறான சந்தேகம், துரோகம் என்பவையும் கூடவே அமைப்புகளின் மனோவியற் பாங்குகளில் பங்குகளாகும் என்பதும் எதிர்பார்த்திருக்க வேண்டியதே.

எனவே, புலிகள் கரையோரச் சமுதாயத்தினரின் ஆதிக்கத்தில் உருவான அமைப்பு என்பதில் ஒரு ஐயமும் இருக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் மையமாக இருந்த யாழ்ப்பாணத்தில், அவர்களின் அன்றைய பிரதிகளாக இன்றும் இருக்கும் வெளிநாடுகளில், மற்றெல்லா அமைப்புகளையும் அழிக்கும்வரை, புலிகளுக்கு பேராதரவு இருந்தது என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது.

புலிகளது தளம் அமைப்பு ரீதியில் சாதியமயமானதாக அமைந்தபோது, அவர்கள் எப்படி மத்தியவர்க்க வெள்ளார்களது தமிழீழத் திட்டத்துடன் தம்மை இணைத்துக் கொள்ள நேரிட்டது? அதிலும், தமிழீழக் கோரிகையை கூட்டணியினரிடமிருந்து கையேற்ற PLOTE மற்றும் EROS, EPRLF போன்ற யாழ்ப்பாணத் தலைமைகள் கொண்ட அமைப்புகள் புரட்சி, சிங்கள உழைக்கும் மக்களுடன் கூட்டு என்று வேறுகதைகள் பேசும் காலத்தில் புலிகளும் இன்னொரு வகையில் வேறொரு குறைந்த-சாதிய மையல்களுடன் TELOவும் தழிழீழக் கோரிக்கையை கட்டிக் கொண்டதேன்? அவற்றிடையே மூரக்கமான போர் எழுந்தமைக்கு, இந்தியாயின் ஊடுருவல் என்ற காரணிகளைவிட சமுதாயக் காரணிகளும் ஊக்கு சக்தியாக அமைந்ததா? இவை எமது வெற்று அவதானிப்புகள்தானா? அல்லது இவற்றின் கீழும் அர்த்தமான காரணிகள் உள்ளனவா?

கரையோரச் சமுதாயங்கள் அரசுகளுடன், அதிகார அமைப்புகளுடன் கடல் சம்பந்தமான சர்ச்சைகளில் உலகில் எங்கும்தான் ஈடுபடுகின்றன. இவ்வகையில் வல்வை மக்களுக்கும் கொழும்பு அரசாங்கக் கெடுபிடியாளர்களுக்கும் இடையே பல பூசல்கள் இருந்தன. ஆனால், வெள்ளாளரது “மண்ணை மீட்கும்;” வாதம் இங்கே எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது?

புலிகளது தலைமையோ இப்படியாக அமைய, தமிழீழக் கோரிக்கையோ வேறுபட்ட நிலையில் இருந்தது. அதற்கு ஆரம்ப, இடை, இறுதிக் காலங்களில் சகலமக்களும் ஆதரவு தந்தார்களா? அல்லது ஆதரவு இருப்பதாக தவறாகக் கணிக்கப்பட்டதா? புலிகள்சரி, யாராயினும் தமிழீழம் பெற்றுத் தந்தால் போதும் என்ற உணர்வில் மக்கள் இருந்தார்களா? அதாவது, வியாபாரி யாரெனப் பார்க்காது பொருளின் பெறுமதியின் உணர்வால் மட்டும் விற்பனை ஆகிற்றா?

தமிழீழக் கோரிக்கைக்கு வடகிழக்கு இளம் சமுதாயத்திடம் ஆதரவு இல்லாவிடில் எந்த அமைப்பும் முன்னணிக்கு வந்திருக்க முடியாது. ஆனால், “பெடியளது போராட்டம்” என்ற பதத்தின் பொழிப்புள் சாதிய வியாக்கியானங்களும் மறைந்து கிடந்தன என்பதை மறுக்க முடியுமா?

வடகிழக்கு-மலையகம் உட்பட்ட சகல தமிழ் பேசும் மக்களது, அரசியல் வரையறுப்பான, பிரிவினை வாதங்களுக்கு அப்பாற்பட்ட, “ஈழவர்-ஈழம்” என்ற ஈரோஸின் கோட்பாடு இம் மூன்று முக்கிய பிரிவினர் மத்தியிலும் பாரிய அரசியற் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது எனக் கூறவும் முடியாதபோது, அதிலிருந்து பிரிந்து உருவான EPRLF, EPDP போன்ற அமைப்புகள் உட்பட சகல அரசியல் அமைப்புகளும் வடகிழக்கு தமிழ்த் தேசியவாத்தை ஏற்றுக் கொண்டபோது, இளைஞர் சமுதாயம் தழிழீழக் கோரிக்கையை ஏதொவகையில் ஏற்றுக் கொண்டன எனபதையும் மறுக்க முடியாது.
ஆனால், அவ்வாறான இராணுவ-அரசியற் நிலைப்பாடு புறச் சூழலின் நிர்ப்பந்தங்களால் உருவாக்கப்பட்டவா? அல்லது மக்களது ஆதரவின் பேரில், அகச்சூழலின் நிரப்பந்தங்களால் ஏற்பட்டவையா?

எம்மைப் பொறுத்தவரை, தமிழீழக் கோரிக்கு இளைஞர்களிடம் இருந்த ஆதரவு மக்களிடம் இருக்கவில்லை, இந்தியாவினது தலையீடு தமிழிழீத்திற்கான ஆதரவை பல தொகுதிகளிலும் ஊக்குவித்தது என்பன எமது அவதானிப்புகள்.

அப்படியாயின், தமிழீழக் கோரிக்கைக்கான ஆதரவு என்றோ அற்றுப்போகத் தொடங்கியதா? எப்போ தொடங்கியது? இவைபற்றிய பதில்கள் மக்களது வாழ்வின் மறுகட்டத்திற்கு அவசியமானவை.

ஆனால் இன்று தமிழீழத்திற்கான ஆதரவின் நிலை என்ன?
எம்மைப் பொறுத்தவரை, தமிழீழத்திற்கான வாதத்தை சித்தாந்த ரீதியில் ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளவர்களே அதனை முன்கொண்டு செல்ல விளைகிறார்கள். இந்நிலையில் இல்லாதவர்கள் யதார்த்தவாதத்தால் அல்லது பின்நோக்கிய ஞானத்தால் எழும் காரணங்களால் நிராகரிக்கிறார்கள். வடகிழக்கில் வாழ்பவர்கள் எந்நிலையில் இருந்தாலும் தமிழீழக் கோரிக்கை தவறுதலானது என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். தமிழீழக் கோரிக்கைக்கு வடகிழக்கிற்கு அப்பால் வாழும் சில புகலிகளிடமே இன்று பூரண ஆதரவு இருக்கிறது என்ற கணிப்புகளையே இன்று கொள்ள வேண்டி உள்ளோம்.

இன்றும் என்றும், புலிகள் மட்டுமே தமிழீழக் கோரிக்கையை வென்று தரக்கூடிய ஒரேஒரு சாதனைக் கருவி எனக் தமிழீழவாதிகள் கருதினால், புலிகளின் தோல்வியுடன் அதுவும் தோல்வி அடைந்துவிட்டது என்ற முடிவுக்கு வருவது நியாயம். இல்லாவிடில் புலிகள் தமது முப்படை கொண்ட “இராணுவப் போரில்தான்” சிறீலங்கா இராணுவத்திடம் தோல்வி கண்டனர் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டும்.

இவ்விடத்தில், உலக அரசுகளின் அனுசரணை, இந்தியா + சீனா இணைந்து தந்த பூரண இராணுவ பொருளாதார ஆதரவுகள் இல்லாது இவ்வெற்றியை சிறீலங்கா அடைந்திருக்க முடியாது என்ற அவதானிப்பும் முக்கியமாகிறது.

எனவே, இன்றைய அகச்-சூழலை, மக்கள்-ஆதரவை, கூடவே புறச்-சூழலையும் சேர்த்தே பார்த்து, தமிழீழத் தேசியவாதம் தோல்வி கண்டுவிட்டது என்ற கணிப்பிற்கு வருவோமாயின், அது புலிகளது இராணுவத் தோல்வியுடன் ஏற்பட்டதல்ல என்கிறோம். அதேசமயம், தமிழீழ தேசியவாதத்தின் தோல்வியை ஊக்குவித்த சக்தி புலிகள் என கூறுவதில் தயக்கம் இருக்க வேண்டியதில்லை என்றும் கூறுகிறோம்.

ஆனால், தமிழீழப் போராட்டம் தோல்வி கண்டமைக்கு அதன் உள்முரண்பாடுகளே பிரதான காரணம் என்பது சரித்திரத்துவம் சொல்லும் முடிவு என்கிறோம்.

தமிழீழக் கோரிக்கையில் புலிகள் பூரண நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்பதையும் அதற்காக தம்மையும் தம்மைச் சார்ந்த மக்களையுமே பணயம் வைத்துப் போர் நடத்தினார்கள் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. புலிகளை வெறும் இராணுவ அமைப்பாக மட்டும் கணிப்போமாகின், அதனது தோல்விக்கு, அவர்களது தவறான இராணுவக் கணிப்பீடுகள் எவ்வளவு காரணம் என்பது ஒரு கேள்வி. இதனை இராணுவ நிபுணர்களது கணிப்புகளுக்கு விட்டுவிடுவோம்.

அந்த இராணுவத்தின் சமூக-அரசியற் பிரவேசத்தால் இடம்பெற்ற தவறுகள் இன்னுமொரு கேள்வி. இதுபற்றிய விடயங்கள் பொது அறிவாகி வரும் வேளையிது, எனவே வியாபிப்போ அவசியமற்றது.
ஆனால்,
புலிகளது இராணுவத் தோல்விக்கு தமிழீழக் கோரிக்கையே பிரதான காரணம் என்பது எமதுவாதம்.
புலிகள் இராணுவத்தின் கழுத்தில் தூங்கிய சயனைற்-குப்பிகளிலும் பார்க்க, கூட்டணியினர் போலியாக முன்னெடுத்த தமிழீழக் கோரிக்கையே பாறைக் கல்லானது என்பது எமது கணிப்பு.

தமிழீழக் கோரிக்கை தம்மால் அடைய முடியாத இலட்சியம் என்பதை புரிந்து கொண்டமையாலேயே புலிகள் “நோர்வே” முன்னெடுத்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றி “ஒஸ்லோ” உடன்பாட்டுக்கும் வந்தார்கள். ஆனால், தாம் கொடுத்த வாக்குறுதியிலும் சிக்கிக் கொண்டார்கள்.

புலிகளானவர்கள் எம்மவரே
தமிழீழக் கோரிக்கை போலியானது, வட்டுக்கோட்டைத் தீர்மானம் அதற்கு முதுகெலும்பு கொடுப்பதற்கான போலி-வெற்று அரசியல் நடவடிக்கை. ஏன்?

தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த கூட்டணியினர், பின்புறத்தில் அதனை ஒரு “பேச்சுவார்த்தைக்கான தந்திரோபாயம், பகடைக்காய்” என்று கூறவில்லையா? முன்புறத்தில், தேர்தலுக்குச் சென்றதைவிட வேறெந்த செயற்திட்டத்தை வைத்திருந்தார்கள்? வட்டுக்கோட்டைத் தீர்மானம் தேர்தலை அடைந்த போது, மலையகத்தவரும் இஸ்லாமியரும் விலகிவிட்ட, தொடர்ந்த வேலைத்திட்டங்கள் எதுவுமற்ற நிலையே இருந்தது. இந்நிலையில் அதனை போலி அல்லது வெற்றானது என்பதில் என்ன தவறு?

சரி சமுதாய சிந்தனை இருந்திருப்பின், வழமையான சாத்வீகப் போராட்டத்தையாவது பிரேரித்தார்களா? இல்லை.
தமது மடியிலே வளருபவர்கள், “துரோகிகள்” என்றவாறு தமது சீவனத்திற்காக காவற்படையில் அல்லது அரசாங்கத்தில் தொழில் செய்த சாதாரண மக்களை படுகொலை செய்யத் தொடங்கிய போதாவது, குறைந்தபட்சம், ஏதாவது செயற் திட்டம்பற்றிய ஆலோசனையாவது நடத்தினார்களா? இல்லை.

கூட்டணியினரது போலி நாடகத்தில் அகப்பட்டவர்கள் யார்?
முதற்கட்டத்தில், முன்நின்றவர்கள் தரப்படுத்தலால் பாதிக்கப்பட்ட யாழ் இளைஞர்கள். ஆனால், அச்சந்ததியில் எவ்வளவு விகிதத்தினர் தம்மை போராட்ட அமைப்புகளில் இணைத்துக் கொண்டனர்? தமது வாழ்வை பாழாக்கிக் கொள்ளப் போகிறோம் என்ற விடயம் தெரிந்து வெளியேறிக் கொண்டனர்?

83 கலவரங்களுடன் வடகிழக்குக்குத் திரும்பியவர்களுடன் ஆண்டு 85 ஆகிய போது எவ்வளவில் கொழும்பு திரும்பினர்? இயக்கப் பூசல்களுடன் எவ்வளவில் வெள்ளையர் தேசங்களில் புகலிகளாயினர்? இக்கேள்விகளால் வெளியேறியவர்களையும், அமைப்புகளில் சேராதவர்களையும் எவ்விதத்திலும் குறைகூறும் நோக்கு எமக்கில்லை. ஆனால், போராட்டம் போர் என்பவற்றின் அணிவகுப்புகளில் பலிக்கடாக்களாக தம்மை முன்நிறுத்திக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு உட்படுவோர் யார்? என்பதற்கான பதிலைக் காண்பதே நோக்கம்.

இவை அனைத்தையும் சிந்தையில் கொண்டு நாம் கொள்ளும் முடிவு என்ன?
தமிழீழப் பேராட்டம் என்பது எவ்வளவு தூரம் மத்தியதர வர்க்கத்தினரை உள்வாங்கி உள்ளது, அவற்றுள் மனத்-திடம் கொண்ட எத்தனை மனிதரை முன்னணியில் நிறுத்தியது? என்ற புள்ளிவிபரங்கள் அல்ல. அது இறுதியில், தாம் மத்திய வர்க்கம் என்ற நினைப்பில் இருந்தபோதும் வசதி அற்றவர்களினதும், அவர்களின் கீழ் வாழும் சமுதாயத் தட்டுகளினதும் தலையில் விழும் கட்டாய பொறுப்பாக மாறிவிடும் என்ற உண்மையே, நிலத்தில் உழைப்பதால் உயிர்வாழ்வோர் திரும்பத் திரும்ப கற்கும் படிப்பினையும் அதுவே என்ற முடிவுகள்தான்.

எனவே, மத்திய வர்க்கங்களது வெளியேற்றங்களின் பின்னர், புலிகளது இராணுவத்தில் சேர்ந்தவர் உட்பட, எஞ்சியவர் யாவரும் எமது அரசியற் தொகுதியைச் சார்ந்தவர்கள் எனபதில் எமக்கு அசைவிலா நம்பிக்கை.

அன்று யாரோ வெளியார், ஐரோப்பிய சீன மக்களது விடுதலை அல்லது புரட்சிப் போராட்டங்கள் பற்றி எழுதிய சித்தாந்தங்களை, வாக்குமூலங்களை, உள்வாங்க முன்னரே, மனிதாபிமானம் தந்த உணர்வுகளால், அத்தொகுதியினரையே எமது மக்கள் என்று சித்தம் பூராகமட்டுமின்றி மனத்திலும் ஏற்றுக் கொண்டோம். அவர்கள் புலிகளது போராளிகள், ஆதரவாளர்கள், கருணா பிள்ளையானுடன் போனவர்கள் என்ற வேறுபாடுகளோ வெறுப்புகளோ எம்வசம் இருக்க முடியாது. மற்ற அமைப்புகளில் இருந்து எமக்கு எதிராகவும் இயங்கியவர்கள் என்ற கருத்துள் தாண்டு மாண்டுபோகவும் முடியாது. கூட்டணியின் கையாட்களும் வால்களும் என வர்ணிக்கப்பட்டவர்களே எதிர்காலத்தில் புலிகளதும் மற்ற அமைப்புகளதும் வீரப் போராளிகளைப் பெற்றுத் தந்தார்கள்.

தமது வாழ்க்கைக்காக போராடும் அந்த மக்கள் தமது கசப்பான அனுபவங்கள் தரும் படிப்பினைகளுடன், அவற்றின் உள்ளேகூட ஆக்கபூர்வமான விடயங்களை அடையாளம் காணும் மனிதர்களை பெற்றுக் கொள்வார்கள் என்பதில் அசைவிலா நம்பிக்கை எமக்கு. அந்த மனிதரே முன்னேற்றத்தைக் குறித்து நிற்கும் சக்தி என்ற நம்பிக்கை இல்லாவிடில், மனித சமுதாயம் தனது சுபீட்சத்திற்கு தடையானவற்றை கையாளும் பாங்கினை வளர்த்துக்கொள்ளும் பிராணி என்ற சரித்திர பூர்வமான அறிவு இல்லாவிடில், எமது வாழ்வுகளின் பலனை சிந்திக்க வேண்டியவராக நாம் ஆகிவிடுவோம். இந்த அறிவுகள் பெறமுதல், எமது தொகுதி என ஏற்றவர்களை என்றும் கைவிட முடியாதென எம்முள்ளே எப்போதோ செய்து கொண்ட வாக்குறுதியே இன்றும் எம்மை வழிநடத்தும் புவி-ஈர்ப்பு போன்ற சக்தியாக இருப்பதானால் புலிகளானவர்கள் எம்மவரே என்கிறோம்.

எம்மவர் எனும்போது நீவிர் யார்? மாற்று அமைப்பா, இன்னுமொரு இயக்கமா? என்ற கேள்விகள் நியாயமானவைதான்.
நாம் எப்போதோ புலிகளால் தடை செய்யப்பட்டபோது அமைப்பு ரீதியான இயக்கம் இழந்த பல்லாயிரக் கணக்கான இளம் சந்ததியினரைச் சேர்ந்தவர்தான். இராணுவத் தோல்வியால் இன்று அமைப்பை இழந்துள்ள வீரம் செழிந்த, நேர்மையை தன்உணர்வில்லாது தன்னையே தரும் வள்ளத்துவம் கொண்ட, தமிழீழ போராட்டத்தில் பலியானவர்களுடன், அரசியற்-பொருளாதாரத் தொகுதியில் ஒருமைப் படுபவர்களும்தான். மேலும் சிறீலங்கா- அரசமைப்பு மாற்றம் காணும்வரை சிறுபான்மை மக்களுக்கோ, இலங்கைவாழ் உழைக்கும் மக்களுக்கோ விடிவு என்பதே கற்பனை வாதம் என்ற விளக்கத்தை இன்றும் கொண்டவர்கள்தான். இவ்வறிவு கொண்ட இப்பெரும் தொகுதிக்கு அமைப்பென ஒன்று இல்லாததால் “நாம் யார்” என்ற தன்ணுணர்வு இருக்க முடியாது என்பது தவறான விளக்கம்.

இவ்வகையில் நாம்யார் என்ற பொது அறிவுடன், பழையதையே புதிதெனக் கற்பிற்பதையும், பழசுகளுள்ளே தோண்டித் தோண்டி பதில்கள் தேடும் வாழ்க்கையில் விரையம் செய்வதையும், கைவிட வேண்டும் என்கிறோம். எனவே, தமிழீழம் என்பது எமது தொகுதிகளின் மக்களுக்கு, அவர்களில் புலிகளானவர்களுக்கு மட்டுமல்ல, தமிழரருக்கும், அதனிலும் முக்கியமாக சகல தமிழ் பேசும் சமுதாயங்களுக்கும் உடன்படாத இலக்கு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதனை நோக்கிய காரியங்களிலும் பார்க்க, தமிழ் பேசும் சமுதாயங்களது கூட்டுறவுபற்றிய முயற்சிகளே அவசியமானவை என்பதையும், அவ்வாறான திட்டங்கள் செயற்பாடுகளையே மக்கள் எதிர்காலத்தில் ஏற்றுக் கொள்வார்கள் என்பதையும் நாம் எற்றுக்கொள்ள வேண்டும்.

நன்றி
ரவி சுந்தரலிங்கம்
Academic Secretary – ASATiC

16 ஆவணி 2009

இக்கட்டுரை தொடர்பான முன்னைய பதிவுகளுக்கு :

பாகம் 1
வன்னியன் பிரபாகரன்– புலிகளின் ஆட்சிக் காலம்

பாகம் 2:
நேற்றைய போராட்டம்– நாளைய போராட்டம்

ஜோர்தானில் இரு இலங்கையர் தீயிட்டு மரணம்

fire222.jpgஇரண்டு இலங்கையர்கள் ஜோர்தானில் உயிரிழந்துள்ளதாக இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைப் பெண் ஒருவரைத் தீயிட்டுக் கொளுத்தித் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளை ஊற்றப்பட்டு மேற்படி பெண் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் பின்னர், அவரை எரித்த இலங்கையரும் தமக்குத் தாமே தீயிட்டுக் கொண்டதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஜோர்தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளதாகவும் அந்த இணையத்தளம் தெரிவிக்கின்றது.

தீவிர தீக்காயங்களினால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுக்க மற்றும் களுத்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை இலங்கைக்குக் கொண்டு வர, தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளத் தெரிகிறது.

ஸ்ரீ ரெலோ இயக்கம் கட்சியின் பெயரை “புதிய தாயகம்” என மாற்றவுள்ளது

puthiya_thaayagam_telo.jpgஸ்ரீ ரெலோ எனப்படும் ஸ்ரீ தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் பெயரை விரைவில் கூடவுள்ள தமது தேசிய மாநாட்டில் “புதிய தாயகம்”  என்று மாற்றவுள்ளதாக கட்சியின் செயலாளர் ப உதயராசா தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் நிலை உட்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னரே இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ள அவர் புதிய தேர்தல் சட்டமூலத்திற்கு ஏற்க தனி இனத்தையோ மதத்தையோ பிரிவினை சொற்களையோ தாங்கிய கட்சிகள் தடை செய்யப்படும் என்ற அரசாங்கத்தின் யோசனையை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என அமெரிக்காவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

boycott000.jpgஇலங் கையுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தி, அமெரிக்காவின் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். விக்டோரியா செக்ரெட் என்ற நிறுவனத்தை மையப்படுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிறுவனம் இலங்கையுடன். கடந்த ஆண்டில் இலங்கையுடன் மேற்கொண்ட வர்த்தகத்தின் ஊடாக 5.6 பில்லியன் டொலர்கள் இலாபம் உழைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதற்கு எதிரான பதாதைகளை சுமந்த படி, ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.தமிழர் இன அழிப்பை மேற்கொண்ட இலங்கையுடன், வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

குளவிகளின் தாக்குதல்களையடுத்து சீகிரியா குன்றுக்குச் செல்ல தற்காலிகத் தடை

000images.jpgமடுத் திருவிழாவிற்குச் சென்று விட்டு தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லும் வழியில் சீகிரியா குன்றில் ஏறுவதற்குச் சென்ற மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சீகிரியாவிற்குச் சென்ற பெருமளவிலான மக்களே இவ்வாறு ஏமாற்றமடைய நேரிட்டது.

சனிக்கிழமை பிற்பகல் நேரத்தில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சீகிரியா குன்றுக்குச் சென்று ஏறிய வேளையில் குளவிகள் கொட்டி 48 பேர் காயமடைந்த நிலையில், சீகிரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் பத்துப்பேர் மேலதிக சிகிச்சைகளின் பொருட்டு தம்புள்ள ஆதார வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டிருந்தனர்.

சனிக்கிழமை நான்காவது தடவையாகவும் இவ்வாறு உல்லாசப் பயணிகளைக் குளவிகள் கொட்டி காயப்படுத்தியதைத் தொடர்ந்து சீகிரியா குன்றின் இடை நடுவில் அமைந்துள்ள சங்கபாதம் வரையிலான பிரதேசத்திற்கு மாத்திரமே அனுமதிக்கப்பட்டதுடன், குன்றின் மேற்தளத்திற்கு ஏறுவது சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று முன்தினம் முதல்தடை செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை குளவிகளால் கொட்டப்பட்டு காயத்திற்குள்ளானவர்களில் 9 சிறுவர்களும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அடங்குவதாகவும் இவர்கள் களுத்துறை, கல்முனை, வத்தளை, கிரிபத்கொட மற்றும் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சீகிரியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குளவியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட வேண்டியிருந்த போதிலும் குறித்த உத்தியோகத்தர்கள் சம்பவ தினம் விடுமுறையில் சென்றிருந்ததால் பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்படவில்லை எனவும் கலாசார முக்கோண மத்திய நிலையப்பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை சிகிரியா குன்றின் உச்சியில் குளவிகளின் தாக்குதலுக்கு அஞ்சி அங்குள்ள சேறுநிறைந்த நீர்த்தடாகத்தினுள் 3 மணிநேரம் சுமார் 15 பேர் வரை குந்தியிருக்க நேர்ந்ததாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்ததுடன், சிகிரிய கலாசார முக்கோண நிதிய ஊழியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களால் தமக்கு எவ்வித உதவிகளும் பாதுகாப்பும் இல்லை எனவும் பயணிகள் விசனம் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சீகிரியா குன்றின் சிங்கபாதத்தைத் தாண்டி மேலே செல்வதை தற்காலிகமாக தடை செய்யத் தீர்மானித்ததாக சீகிரியா கலாசார முக்கோண மத்திய நிலைய முகாமையாளர் சுமேத கருணாரத்ன தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் காலங்களில் பாதுகாப்பு அங்கிகளை அணியாது எவரும் சீகிரியா குன்றிலேறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

ஊவா மா.ச. முதலமைச்சர் 20ஆம் திகதி சத்தியப் பிரமாணம்

shasendrakumararajapaksa.jpgஊவா மாகாண சபை முதலமைச்சராக சசேந்திர ராஜபக்ஷ எதிர்வரும் 20ஆம் திகதி சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளதாக ஊவா மாகாண சபை வட்டாரங்கள் இணையத் தளம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளன.

ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்ட கதிர்காம தேவாலயத்தின் தியவதன நிலமே சசேந்திர ராஜபக்ஷ 1 லட்சத்து 36 ஆயிரத்து 697 வாக்குகள் பெற்று முதலமைச்சர் பதவிக்குத் தகுதி பெற்றுள்ளார். இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சகல மாவட்டங்களையும் தனதாக்கி அமோக வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பாலாவியில் 1 கோடியே 38 லட்சம் ரூபா செலவில் புதிய தபாலகம் – அமைச்சர் பீரிஸ் திறந்து வைப்பு

புத்தளம் பாலாவியில் 1 கோடி 38 லட்சம் ஷரூபா செலவில்; நிர்மாணிக்கப்பட்ட புதிய தபாலகத்தை வெளிநாட்டு ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் பதில் தபால், தொலைத் தொடர்புகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று திறந்து வைத்தார்.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தபாலகத்தைத் திறந்து வைத்து உரை நிகழ்த்திய அமைச்சா பீரிஸ் நாட்டில் பயங்கரவாதம் நிலவிய போது,  எவ்வித அபிவிருத்திகளையும் செய்ய முடியாத நிலை காணப்பட்டது. இன்று அவற்றை அழித்து அபிவிருத்திகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார் எனக்கூறினாh.;

புத்தளம் மிகவும் முக்கியமான பிரதேசமாகும். மன்னார், மற்றும் ஏனைய முக்கிய வடமாகாண பகுதிகளுக்குப் பயணம் செய்யக் கூடிய பாதைகள்; இங்கிருந்து செல்கின்றன. புலிகளின் சர்வதேச தலைவர் பத்மநாதனும் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமைத்துவமற்ற அமைப்பாக இன்று புலிகளின் அமைப்பு மாறிவிட்டது. இனி அவர்களுக்கு விமோசனம் இல்லை. புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.மு.தசநாயக்கவை கொன்றதும் புலிகளே. இம்மாவட்ட மக்களுக்குப் பெரும் பணியாற்றிய நல்லதொரு தலைவர் த.மு.தசநாயக்க” என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.

இருபது குடும்பங்களுக்கான காணி உறுதிகளையும் அமைச்சர் இந்நிகழ்வில் வழங்கினார். கால்நடை வளத்துறை பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் அழைப்பின் பேரில் அமைச்சர் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இதில் கடற்தொழில் பிரதி அமைச்சர் நியோமல் பெரேராவும் கலந்து கொண்டார்.

யாழ். குடாவில் நான்கு நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு முற்றாக நீக்கம்

jaffna_8.jpgவரலாற் றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இன்று செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான நான்கு நாட்களுக்கு யாழ் குடாநாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு முற்றாக நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.பி.டி சில்வாவிடம்  சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடாந்த திருவிழாவில் பெருமளவு பக்தர்கள் பங்கேற்கவுள்ளதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இரத்மலானைக்கும் பலாலிக்கும் இடையே நடைபெற்று வரும் உள்ளுர் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையம் என்பன இரதோற்சவத்தையும் தீர்த்தத்திருவிழாவையும் நேரடி ஒலி ஒளிபரப்பு செய்யவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த திலக்கரத்ன டில்ஷான் – 30 பந்துக்களில் 50 ஓட்டங்கள்

thilakarathna-dilshan.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஆரம்பத் துடுப்பாட்ட விரரான திலக்கரத்ன டில்ஷான் காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறும் போட்டியில் இன்று காலை குறைந்த பந்துகளுக்கு அரைச்சதம் அடித்து சாதனை படைத்து கிரிக்கெட் வரலாற்றில் புதிய இடத்தைப் பிடித்துள்ளார். இலங்கைக்கும் நியுஸிலாந்துக்கும் இடையில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே டில்ஷான் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இவர் 30 பந்துகளுக்கு 50 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியின் முன்னால் தலைவர் அர்ஜூன ரனதுங்கவின் சாதனையை முறியடித்துள்ளார்.

அர்ஜூன இந்திய அணியுடனான போட்டி ஒன்றின் போது 31 பந்துகளுக்கு 50 ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்திருந்தார். ஆட்ட முடிவின் போது இலங்கை கிரிக்கெட் அணி 3 விக்கட் இழப்புக்கு 293 ஓட்டங்கள் பெற்றிருந்தது.

தமிழக இடைத் தேர்தலில் 65% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் தொண்டாமுத்தூர், இளையாங்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம், பர்கூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது. சராசரியாக 65 சதவீத வாக்குகளுக்கும் மேலாக பதிவாகியிருக்கலாம் என்று தெரிகிறது. ஐந்து தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. காலை முதலே அனைத்துத் தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.

அதிமுகவின் தேர்தல் புற்ககணிப்புக்கு இடையே வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

விறுவிறுப்பாக நடந்த வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. ஐந்து தொகுதிகளிலும் சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கும் எனத் தெரிகிறது.