21

21

கே.பியின் உதவியாளர் கைது? : சிங்கள ஊடகம் தகவல்

pathmanathan.jpgபுலிகளின் முக்கியஸ்தரான கே.பியின் உதவியாளரான ஆனந்தன் என்பவர் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பாதுகாப்புக் காரணங்களை முன் னிட்டு ஆனந்தன் கைது செய்யப்பட்ட நாட்டின் பெயரை வெளியிட முடியாதென அதிகாரிகள் தெரிவித்தனர்.

கே.பியிடமும் ஆனந்தனிடமும் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை பற்றியும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தபோது புலிகளுக்கு முகவர்களாகச் செயற்பட்ட சார்ள்ஸ் ஞானக்கோன், ஜயந்த ஞானக்கோன் ஆகிய இரு சகோதரர்கள் பற்றியும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. தற்சமயம் சார்ள்ஸ் ஞானக்கோன் ஆஸ்திரேலியாவிலும், ஜயந்த ஞானக்கோன் கலிபோர்னியாவிலும் இருக்கின்றனர் என்று தெரிகிறது. இப்படி அந்த சிங்கள நாளிதழ் தனது செய்தியில் மேலும் தெரிவித்திருந்தது

தென் மாகாண சபை தேர்தல் – வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் 28 வரை

election000.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் 28 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்றுகொள்ளப்பட உள்ளன. தென் மாகாண சபைத் தேர்தலில் 53 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். காலி மாவட்டத்தில் இருந்து 23 பேரும் மாத்தறை மாவட்டத்தில் இருந்து 18 பேரும் அம்பாந்தோட்டையில் இருந்து 12 பேருமாகத் தெரிவு செய்யப்பட  உள்ளனர்.

2008ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரமே இம்முறை தென் மாகாண சபைத் தேர்தல நடத்தப்பட உள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் கூறியது.

சட்டசபை இடைத் தேர்தல் : தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி

karunanidhi-333.jpgசட்டசபை இடைத் தேர்தலில் ஐந்து தொகுதிகளிலும் அமோகமாக வென்றுள்ளதன் மூலம் திமுக கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் பலம் 136 ஆக அதிகரித்துள்ளது. திமுகவின் பலம் 99 ஆக உயர்ந்துள்ளது.

இடைத்தேர்தலுக்கு முன் சட்டசபையில் திமுகவுக்கு 96 உறுப்பினர்கள் இருந்தனர். கம்பம், பர்கூர், இளையான்குடி தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் திமுகவின் பலம் 99 ஆக உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூரில் வென்றதன் மூலம் காங்கிரஸ் பலம் 36 ஆக அதிகரித்துள்ளது.

61 எம்எல்ஏக்களைக் கொண்டிருந்த அதிமுகவின் பலம் 58 ஆகக் குறைந்துள்ளது. மதிமுகவின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இரண்டு குறைந்து 3 ஆகிவிட்டது.

திமுக கூட்டணியின் பலம் 131 என்பதிலிருந்து 136 ஆக உயர்ந்துள்ளது.

புலிகள் பணம்?-கருத்து தெரிவிக்க ரஜினி மறுப்பு

rajanikanth.jpgசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்களுக்கு விடுதலைப் புலிகள் பணம் கொடுத்ததாக இலங்கை அமைச்சர் கூறுவது சுத்த அபத்தமானது. அப்படிப்பட்ட நிலையில் ரஜினிகாந்த்தும் இல்லை, தமிழ் சினிமாவும் இல்லை என்று தமிழ்த் திரையுலக முக்கியஸ்தர்கள் ஒரே குரலில் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அமைச்சர் அப்துல் ரிஷாத் பதியுதீன் அளித்த ஒரு பேட்டியில், ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு லண்டனைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் மூலம் புலிகள் நிதியுதவி செய்தனர். அந்த லண்டன் தமிழர் தமிழ் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவர் புலிகள் கொடுக்கும் பணத்தை வைத்துத்தான் படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார் என்று கூறியிருந்தார்.

ஆனால் இதை திரையுலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பதியுதீனின் பேச்சை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரஜினி படத்தை தயாரிக்க விடுதலைப் புலிகள்  பணத்தைப் பெற வேண்டிய அவசியம் இங்கு யாருக்கும் இல்லை. இப்படிப்பட்ட வழியில் படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டிய நிலையில் ரஜினியும் இல்லை.

அவரை வைத்துப் படம் எடுக்க எத்தனையோ தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ரஜினி விடுதலைப் புலிகளின் பணத்தைப் பெற்றார் என்று கூறுவது அபத்தமானது, மலிவான விளம்பரமே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றார்.

இயக்குநர் அமீர் கூறுகையில், விடுதலைப் புலிகளின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தி்ல இவ்வாறு பேசியுள்ளார் இலங்கை அமைச்சர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேசியுள்ளார். விடுதலைப் புலிகளை மோசமான முறையில் சித்தரிக்கும் செயல் இது.

முன்பு பங்குச் சந்தை மோசடிப் பேர்வழியான ஹர்ஷத் மேத்தா, முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு லஞ்சம் கொடுத்தேன என்று கூறியதைப் போல உள்ளது இலங்கை அமைச்சரின் பேச்சு. இப்படிக் கூறுவதன் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்றார்.

கருத்து தெரிவிக்க ரஜினி மறுப்பு…

இதற்கிடையே, இலங்கை  அமைச்சரின் பேச்சுக்கு பதிலோ, விளக்கமோ அளிப்பதில்லை என்று ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ளார். இதை அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் பிரகடனம் – ஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப் படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் முழுமையாக உதவுவோம்

tamil-nadu.jpgஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப் படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வு உருவாவதற்கு முழுமையாக உதவுவோம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் கூறுகிறது.
 
சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி நிழற்சாலையில், நடந்த மாநாட்டில், உலகத் தமிழர் பிரகடனத்தை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ படித்து வெளியிட்டார்.

உலகத் தமிழர் பிரகடனம் வருமாறு

1.  ஈழத் தமிழ் மக்களின் மரபு வழி தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும், அதற்கேற்ற அரசியல் அமைப்பிற்கு உத்தரவாதம் தரக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவைத் திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றை அவர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

2.  தங்கள் தாயகத்திலும், உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்களின் ஊர்களிலும், வீடுகளிலும் மீண்டும் குடியேறவும், அமைதியான, இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணு‌கிறோ‌ம்.

3.  தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும், சிங்கள இராணுவ முகாம்களையும் மற்றும் இராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற வேண்டும் என ஐ.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம்.

4.  இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும், கொலைகளையும் செய்த சிங்கள இராணுவ அதிகாரிகளும், அவர்களை ஏவிவிட்ட சிங்கள அரசியல் வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூணுகிறோம்.

5.  உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான, இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையில் தங்களின் எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்துகொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும் அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலைநிறுத்திக்கொள்ள அவர்களுக்கு தோள் கொடுத்து துணை நிற்க உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

6.  அளப்ப‌ரிய தியாங்களைச் செய்த ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதிவரை போராடிய போராளிகளும், வீறுகொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாக பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அந்த மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு உருவாவதற்கும் நாங்கள் முழுமையாக உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக்கொண்டு எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகளாவிய தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

பிரகடனம் படித்து முடிக்கப்பட்ட பிறகு ஈழத் தமிழர்களுக்கு உதவ சர்வபறி தியாகத்திற்கும் தயார் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ஏராளமான கருஞ்சட்டை தரித்த இளைஞர்கள் தீப்பந்தம் ஏந்தி அந்த உறுதிமொழியை ஏற்றனர். அவர்கள் அனைவருடைய சட்டையிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்டிருந்தது. பின்புறத்தில் தமிழீழத்தின் வரைபடம் அச்சிடப்பட்டிருந்தது.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க, புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழீழம் மலரச் செய்வார்கள்: வைகோ

முன்பு யூதர்கள் கொல்லப்பட்டபோது உலகெங்கும் உள்ள யூதர்கள் ஒன்று திரண்டு போராடி வென்றனர். அதைப்போலவே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழ் ஈழத்தை மலரச் செய்வார்கள்.இவ்வாறு நேற்று சென்னையில் நடைபெற்ற ஈழத் தமிழர் பிரகடனம் வெளியிடும் பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான பிரகடனம் வெளியிடும் பொதுக்கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அக்கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: 

விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம் என இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் அதன் பிறகும் 3 லட்சம் தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்து வதைப்பது ஏன்?  முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுகிறார்கள். 15 வயதைக் கடந்த தமிழ் ஆண்கள் உயிரோடு இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பெண்களின் கற்பு சூறையாடப்படுகிறது.

இந்த அவலங்களை காண மனித உரிமை ஆர்வலர்களால் அங்கு செல்ல முடியவில்லை.  ஆனால் முதல்வர் கருணாநிதி இலங்கையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டுவிட்டதாக கூறுகிறார். இப்போது அங்கு சுமுக நிலை நிலவுகிறதா என்பதை அவர் தனது மனசாட்சிப்படி கூறட்டும். 

1985-ம் ஆண்டு டெசோ மாநாட்டில் பேசிய கருணாநிதி, தமிழ் ஈழம்தான் இறுதித் தீர்வு; தமிழ் ஈழத்தை ஆதரிப்பதற்காக எந்த அடக்குமுறையை ஏவிவிட்டாலும் தாங்கிக் கொள்ளத் தயார் என்றார். அன்று கருணாநிதி கூறியதைத்தான் இன்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் எங்கள் மீது அவர் அடக்குமுறையை ஏவுகிறார் என்றார் ராமதாஸ்.                                                                                                

கூட்டத்துக்கு தலைமை வகித்த, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் பேசியதாவது: 

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது குற்றமாகாது; அந்த இயக்கத்துக்கு ஆயுத உதவி உள்ளிட்ட உதவிகளை செய்தால் மட்டுமே குற்றம் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பின் படியே, பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம். 

எனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவதில் தவறில்லை. அவ்வாறு பேசக் கூடாது என தமிழக அரசு கூறுவது அடக்குமுறை நடவடிக்கை ஆகும் என்றார். 

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் த. ஸ்டாலின் குணசேகரன், புதிய பார்வை ஆசிரியர் எம். நடராஜன், மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிர்வாகி ஹென்றி திபேன் உள்ளிட்டோர் பேசினர்.  கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, இலங்கைத் தமிழ் எம்.பி. சிவாஜி லிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக பழ.நெடுமாறன் மீது வழக்கு

தமிழக அரசின் உத்தரவுகளை மீறி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தியமைக்காக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் நேற்று 20ஆம் தேதி வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடந்தது. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக பழ.நெடுமாறன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொதுக்கூட்டத்தில் அரசு உத்தரவுகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கத்தலைவர் பிரபாகரன் படம் பொதுக்கூட்டம் மேடையில் வைக்கப்பட்டிருந்தது. இது போன்ற காரணங்களுக்காக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என  கூறப்படுகிறது.

பிரதமரிடம் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்டதால் சபையில் சர்ச்சை – 30 நிமிட நேரம் இருதரப்பும் வாத பிரதி வாதம்

26parliament.jpgபிரதமரால் ஏற்கனவே சபையில் பதில் அளிக்கப்பட்ட விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா நேற்று (20) மீண்டும் கேள்வி எழுப்ப முற்பட்டதால் ஆளுந்தரப்பு எதிர்த் தரப்பு உறுப்பினர்களுக்கிடையில் சுமார் 30 நிமிட நேரம் சர்ச்சை நிலவியது.

எதிர்க் கட்சியின் பிரதம கொறடாவான ஜோசப் மைக்கல் பெரேரா சமர்ப்பித்திருந்த ஒரு கேள்வி ஏற்கனவே பிரதமரால் பதில் அளிக்கப்பட்டது எனவும். அதேநேரம் அந்தக் கேள்வி இரண்டு பக்கங்களுக்கு மேற்பட்டிருந்ததுடன் ஜோசப் மைக்கல் பெரேராவின் கையொப்பத்தைக் கொண்டதாக இருக்கவில்லை என்றும் கூறி அதனை மீண்டும் எழுப்புவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை (18) எழுப்பிய கேள்வியை மீண்டும் கேட்பதற்கு அனுமதிக்க முடியாதென ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் மறுத்துவிட்டார். ஜோசப் மைக்கல் பெரேரா, கட்சித் தலைவரின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாகவும் அமைச்சர் குணவர்த்தன குற்றஞ்சாட்டினார்.

‘கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடிக்கடி சபைக்கு வருகை தராததால் அவர் சார்பில் கேள்வி எழுப்ப உங்களை நியமிப்பதாகக் கூறியதால் நாம் ஏற்றுக்கொண்டோம். ஆனால் நீங்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தினமும் சபையில் கேள்வி கேட்டு நாடகம் ஆடுகிர்கள்.

நாட்டைத் தவறாக வழிநடத்தி குழப்பப் பார்க்கிர்கள். இப்படித் தொடர்ந்தால் கட்சித் தலைவர் மாத்திரம் கேள்வி கேட்கலாம் என்ற விதியை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டிய நிலைக்குத் நாம் தள்ளப்படலாம் என்றார் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன.

எனினும் இதனை மறுத்த ஜோசப் மைக்கல் பெரேரா இல்லை நான் எழுப்பிய கேள்விக்குப் பிரதமர் முழுமையான பதிலை அளிக்கவில்லை என்றார்.

அப்படியாயின் ஏன் நேருக்கு நேர் பிரதமரிடம் மறுத்துக் கேட்கவில்லை? என்று திருப்பிக் கேட்டார் சபாநாயகர்.

விவாதம் நடத்தக்கூடாது என்று கட்டுப்பாடு உள்ளதே.

சரி மீண்டும் எஎனக்கு எழுத்து மூலம் தாருங்கள். நான் அனுமதி தருகிறேன்.’

என்ற சபாநாயகர் டபிள்யூ ஜே. எம். லொக்குபண்டார, 17வது திருத்தச் சட்டத்தைத் தவிர்த்து வேறு விடயங்கள் குறித்தும் கேள்வி கேளுங்கள். அதற்குப் பிரதமர் அன்றே பதில் அளித்துவிட்டார். அன்று (18) எழுப்பிய கேள்விகளை மீண்டும் கேட்காதீர்கள் என்று அறிவுறுத்தினார். கேள்வி கேட்கப்படாமல் இந்தச் சர்ச்சையே சுமார் 30 நிமிடம் நீடித்தது.

மாலபே மாணவன் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டமை, அங்குலானவில் இரு இளைஞர்கள் கொலையுண்டமை இவற்றுக்கு காரணம் 17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாமை என்ற கருத்துப்பட கடந்த செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விகளையே ஜோசப் மைக்கல் பெரேரா மீண்டும் கேட்கவிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திலுள்ள நாகவிகாரைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

00jaffnabus.gif
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரைக்கு வழிபடுவதற்காகச் சென்ற நூற்றுக்கணக்கான தென்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த யாத்திரிகர்களுக்கு யாழ்ப்பாணம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.  பேருந்துகளில் புறப்பட்டு வந்த இவர்கள், வவுனியாவுக்கு வடக்கே ஏ9 வீதியில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

பயண அனுமதி மறுக்கப்பட்ட தாங்கள் தங்குமிட வசதிகளின்றி சிரமப்பட்டதாக அந்த யாத்திரிகர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வந்திருந்தவர்களில் சுமார் 400 பேர் வரையில் வவுனியா மடுக்கந்தை பெளத்த விகாரையில் நேற்றிரவு தங்கியிருந்தார்கள். ஏ9 வீதி ஊடாக பொதுமக்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்று வரலாம் என ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளையடுத்தே தாங்கள் யாழ்ப்பாணம் செல்வதற்காகப் புறப்பட்டு வந்ததாக அவர்களில் சிலர் பிபிசியிடம் தெரிவித்தார்கள்.

நாட்டின் தென்பகுதியில் இருந்து திருகோணமலைக்குச் சென்று அங்கிருந்து கெப்பிட்டிகொல்லாவ, ஹொரவப்பத்தானை வழியாக வவுனியாவை வந்தடைந்ததாக இந்த யாத்திரிகர்களை ஏற்றிவந்த பேருந்துகளின் சாரதிகளில் ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்குச் செல்ல முடியாது என ஓமந்தையில் வைத்து திருப்பிவிடப்பட்டதை அடுத்து, மடுக்கந்தை விகாரையில் நேற்று முன்தினம் இரவைக் கழித்துவிட்டு, மதவாச்சி ஊடாக அனுராதபுரத்தி்ற்குச் செல்வதற்கு தாங்கள் மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை என்றும் இதனால் வவுனியாவில் இருந்து தாங்கள் மீண்டும் திருகோணமலை வீதிவழியாகவே செல்ல வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.

ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி வழங்கிய குற்றசாட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

rajanikanth.jpgரஜினி காந்தின் திரைப்படங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி வழங்கியதாக இலங்கையின் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சுமத்தியிருந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீன் இணையத்தளம் ஒன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.

இங்கிலாந்தில் உள்ள தமிழர் ஒருவரின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் ரஜினிகாந்தின் படங்களை தயாரிப்பதற்கு நிதி வழங்கியதாக அவர் தெரிவித்திருந்தார். ரஜினிகாந்தின் குசேலன் மற்றும் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்ற எந்திரன் ஆகிய படங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ரிசாட் பதியுதீன் லண்டன் தமிழர் என குறிப்பிட்டிருந்த லண்டன் கருணாஸ் ஐங்கரன் நிறுவனத்தில் இருந்து பல வருடங்களுக்கு முன்னர் வெளியேறிவிட்டதாக டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன் குசேலன் திரைப்படம் கே. பாலசந்தர் அஸ்வின் டட் மற்றும் ஜீ. பீ. விஜயகுமார் ஆகியோரின் கூட்டுத்தயாரிப்பிலேயே உருவாகியிருந்தமையை அது சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை தற்போது தயாரிக்கப்பட்டு வரும் ரோபோ என்று முன்னர் பெயரிட்பட்டு பின்னர் எந்திரன் என பெயர் மாற்றப்பட்ட ரஜினிகாந்தின் அடுத்தப் படமும் சன் டீவியினால் தயாரிக்கப்பட்டுவருகிறது. அது ஐங்கரன் நிறுவனத்தினால் தயாரிக்கப்படவிருந்தாலும் பின்னர் அது கைமாறி தற்போது சன் டீ வி நிறுவனத்தின் கைகளில் தயாரிப்பில் உள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் குற்றச் சாட்டு ஆதரமற்றது என டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

சயீட் அன்வரின் சாதனையை சமன்செய்த கொவென்ட்ரி தரவரிசையில் முன்னேற்றம்

17-charles-coventry222.jpgஒருநாள் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற சயீட் அன்வரின் சாதனையை சமன் செய்த சிம்பாப்வே வீரர் சால்ஸ் கொவென்ட்ரி ஐ.சி.சி. ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

பங்களாதேஷடனான 4 ஆவது ஒருநாள் போட்டியில் 194 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்த 26 வயதான கொவென்ட்ரி ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஐ.சி.சி. இன் புதிய தரவரிசையில் 100 இடங்களுக்குள் முன்னேறினார். இதன்படி 103 ஆவது இடத்தில் இருந்த கொவென்ட்ரி 83 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

இது தவிர, பங்களாதேஷடனான ஒருநாள் தொடரில் சோபித்த சீன் வில்லியம்ஸ், எல்டன் சிகும்புரா ஆகியோரும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதில் சீன் வில்லியம்ஸ் 9 இடங்கள் முன்னேறி 47 ஆவது இடத்தையும் சிகும்புரா 6 இடங்கள் உயர்ந்து 50 ஆவது இடத்தையும் பிடித்தனர்.

இந்த இருவரும் மாத்திரமே ஐ.சி.சி. ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் சிம்பாப்வே வீரர்களாவர்.

அதேபோன்று சிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்ற பங்களாதேஷ் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் இரண்டு இடங்கள் முன்னேறி 36 ஆவது இடத்தை பிடித்தார்.

இதனிடையே ஐ.சி.சி. ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பங்களாதேஷ் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷகீப் அல் ஹஸன் இரண்டாவது இடத்தை இழந்தார். சிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரில் சோபிக்க தவறிய ஷகீப் அல் ஹஸன் இரண்டாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.

இதனால் நியூஸிலாந்து வீரர்களான கைல் மில்ஸ் மற்றும் டானியல் விட்டோரி ஆகியோர் முறையே 2, 3 ஆவது இடங்களுக்கும் முன்னேற்றம் கண்டனர்.

சர்ச்சையில் சிக்கியுள்ள தென் ஆப்பிரிக்க வீராங்கணை ஆணா பெண்ணா?

0000semenyabesar.jpgஜெர்ம னியின் பெர்லின் நகரில் நடைபெற்று வரும் உலக தடகளப் போட்டியில் மகளிர் பிரிவின் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ள தென் ஆப்பிரிக்காவின் காஸ்டர் செமென்யாவிடம் அந்தப் பதக்கம் தங்கியிருக்குமா என்பது குறித்து ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

அவரிடம் நடத்தப்படவுள்ள பாலியல் பரிசோதனையில் அவர் பெண் அல்ல என்று கண்டறியப்படால் அவர் பதக்கம் இழக்க நேரிடும். பெர்லினில் நடைபெற்று வரும் போட்டிகளில் இந்தப் பிரச்சினை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஸ்டன் செமென்யா எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் அற்புதமான அவரது சாதனையும் அவரது உடல் தோற்றமும் பெரிய அளவில் சர்ச்சையை ஈர்த்துள்ளன. போட்டியில் பங்கு பெறும் வீரர்களும், போட்டி அதிகாரிகளும் அவர் ஒரு பெண் தான் என்பதனை நிரூபிக்குமாறு கோரியுள்ளனர். எனவே 18 வயதான இந்த தென் ஆப்பிரிக்கர் சிக்கலான பல பரிசோதனைகளுக்கு உட்பட வேண்டும்.

பொது மருத்துவ வல்லுநர், மகப்பேற்று மருத்துவ வல்லுநர், ஒரு உளவில் நிபுணர் மற்றும் பாலியல் சோதனை வல்லுநர் ஆகியோர் அந்த வீராங்கணையை சோதித்து அறிக்கை வழங்குவார்கள்.  எனினும் இது தொடர்பிலான முடிவு வருவதற்கு பல வாரங்களாகும். மேலும் இந்தப் பிரச்சினையில் தற்போது அரசியல் கலப்பும் ஏற்பட்டுள்ளது.