29

29

கடற்புலிகளை முற்றாக இல்லாதொழித்த இலங்கை கடற்படை உலகில் சக்திவாய்ந்தது – கோத்தாபய

29-sayura00.jpgதாய் நாட்டை பயங்கரவாதத்திலிருந்து வெற்றி கொண்டதைப் போன்று இலங்கையின் கடற்பரப்பை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு கடற்படைக்குரியது என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கடற்புலிகளை முற்றாக இல்லாதொழித்த இலங்கை கடற்படையினர் உலகில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவர்களாக திகழ்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடல்வழியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முயற்சிகளை செயலிழக்கச் செய்து கடல் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொருட்டு முகாம்கள் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். படை நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் இலங்கை கடற்படையின் சகல செயற்பாடுகளுக்கும் விசேட பங்களிப்புக்களை வழங்கிய ஜி623 என்ற தாக்குதல் கப்பல் ‘சயுரல’ என்ற பெயரில் இலங்கை கடற்படையின் சேவையில் நேற்று உத்தியோகபூர்வமாக இணைத்துக்கொள்ளப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க தலைமையில் நேற்றுக் காலை திருகோணமலை கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூன்றில் இரண்டு கடற்பரப்பை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த கடற்புலிகளையும் அதன் தலைவர்களையும் கடற் படையினர் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை பயன்படுத்தி தாக்கியழித்த பெருமை கடற்படையைச் சாரும்.

பலமான வளங்களையும் நவீன வசதிகளையும் கொண்ட நாடுகள் இலங்கை கடற் படையின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வருமாறு அழைப்பு விடுத்திருப்பது இலங்கை கடற்படையின் பலம் மேலும் உறுதியாக காணப்படுகின்றது என்றும் தெரிவித்தார். இந்தியாவினால் வழங்கப்பட்ட 74.1 மீற்றர் நீளமும், 11.4 மீற்றர் அகலமும் கொண்ட ஜி623 கப்பல் வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் ஆழ் கடல் ரோந்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்தக் கப்பலை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சயுரல என்ற பெயரில் இலங்கை கடற்படையின் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான பிரகடனத்தை வழங்கியுள்ளார். கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் சுமித் ஆனந்த வீரசிங்கவிடம் பாதுகாப்புச் செயலாளரினால் பிரகடனம் வழங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சமய வழிபாடுகள் இடம்பெற்றன.கப்பலைச் சென்று பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான உயர் அதிகாரிகள் அங்கு வழங்கப்பட்ட மரி யாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டனர்.படை நடவடிக்கையின் போது ஈடுபடுத் தப்பட்ட சகல தாக்குதல் படகுகளும் கப்பல்களும் அணிவகுத்து சென்றன. அதனைத் தொடர்ந்து சயுரல கப்பல் வெள்ளோட்டத்திற்கு விடப்பட்டது.

வெற்றியை நோக்கி இலங்கை அணி

srilanka0000.jpgகொழும் பில் நடைபெறும் இலங்கை – நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4ஆம் நாளான இன்று இலங்கை அணி தன் 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இன்று 157/2 என்று துவங்கிய இலங்கை அணியில் சங்கக்காராவும்,  ஜெயவர்தனேயும் மேலும் 105 ஓட்டங்களைச் சேர்த்தனர். ஓட்ட எண்ணிக்கை 262ஆக உயர்ந்தபோது இலங்கை கேப்டன் சங்கக்காரா 109 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக முதல் இன்னிங்ஸில் சதம் எடுத்த சமரவீரா 25 ஓட்டங்கள் எடுத்து வெட்டோரி பந்தில் ஆட்டமிழந்தார். 96 ஓட்டங்கள் எடுத்திருந்த ஜெயவர்தனே,  ஓ’பிரையன் பந்தில் ஆட்டமிழந்தபோது சங்கக்காரா இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். நியூஸீலாந்து அணியில் வெட்டோரி, படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

இன்றைய தினம் நியூஸீலாந்து அணி தனது இரண்டாவது இனிங்சில் 6.
விக்கட் இழப்புக்கு 182 ஓட்டங்கள் எடுத்திருந்தது.  நாளை ஆட்டத்தின் 5-வது நாள்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார். – சிவாஜிலிங்கம்

29-sivajilingam.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். இதுபற்றிய நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன, என்ற இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.  3 மாதங்களுக்கு முன், புலிகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்ட தகவல் வெளியானபோது, ‘இன்னும் சில நாட்களில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று புலிகளே அறிவிப்பார்கள்… சூழ்நிலை கருதி அப்படியொரு அறிக்கை வெளியாகும்!” என்று மதுரையில் இவர்தான் பேட்டி கொடுத்தார். அடுத்த சில தினங்களிலேயே அப்படியொரு அறிக்கையை செல்வராசா பத்மநாதன் வெளியிட்டார்.

இந் நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம், எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். அவர் இறந்துவிட்டதாக செல்வராஜா பத்மநாதன் கூறியிருப்பதில் ஏதேனும் அரசியல் சூசகம் அடங்கியிருக்கலாம்.

பத்மநாபன் கைது முதற்கொண்டு பல விஷயங்களை நாங்கள் அப்படித்தான் கருதுகிறோம். தேசிய தலைவர் இறந்துவிட்டதாக எந்த தகவலும் எங்களுக்கு உறுதியாக, ஆதாரங்களுடன் கிடைக்கவில்லை. இலங்கை  அரசு அதற்கான ஆதாரங்கள் எதையும் தரவுமில்லை.

நான் தமிழ்மக்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான். தேசிய தலைவர் உயிருடன் உள்ளாரா என்பதற்கு காலம் பதில் சொல்லும். தற்போதைய உடனடி தேவை அகதிகளாக உள்ள 3 லட்சம் மக்களை அங்கிருந்து காப்பாற்றி, அவர்களின் இடங்களில் குடியமர்த்துவதுதான்.

மற்றபடி தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு என்பது சுய அரசியல்  நிர்ணய சபையுடன் கூடிய தமிழீழமே. ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதா இல்லையா என்பது விடுதலைப் புலிகளின் கையில்தான் உள்ளது என்றார்.

நடிகர் விஜய் காங்கிரசில் இணையக் கூடாது : கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் அறிக்கை

rahul_vijay.jpgநடிகர் விஜய் காங்கிரசில் இணையக்கூடாது. அவ்வாறு அவர் காங்கிரசில் சேர முன்வந்தால் அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழுமூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம்.” இவ்வாறு கனடா, டொரன்ரோவிலுள்ள தமிழ் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் விடுத்துள்ள அறிக்கையில்,

“தமிழ் நாட்டின் முன்னனி நடிகர் விஜய், விஜய்காந்த், சரத்குமார், கார்த்திக் பாணியில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக முன்னர் செய்திகள் வந்தன.  இப்போது அவர் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் சேரும் பட்சத்தில் அவருக்கு மேலவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

அரசியலில் யாரும் பங்கு கொள்ளலாம். நடிகர்களும் குடிமக்கள் என்பதால் அவர்களுக்கும் அரசியலில் பங்கு கொள்ள முழு உரிமை உண்டு. அது மக்களாட்சி முறைமைக்கு மிகவும் நல்லது. ஆனால் நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன்வந்தால் – அப்படியொரு முடிவு எடுத்தால் – அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர் தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழு மூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம்.

மத்தியில் பதவியில் இருக்கும் இந்திய காங்கிரஸ் – திமுக கட்சிகளது ஆட்சியின் போதுதான் இலங்கையில் வரலாறு காண முடியாத போர் அரங்கேறியது. இந்தியாதான் போர் ஆயுதங்கள், ராடர்கள், புலனாய்வு, உளவு, நிதி, பயிற்சி என்று எல்லாவற்றையும் இலங்கை அரசுக்கு கொடுத்து உதவியது.

இம்மாதம் 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வான்படைத் தள ஓடுபாதையை விரிவாக்குவதற்கு இந்தியா மேலும் ஒரு கோடி 17 லட்சம் ரூபாவுக்கான காசோலையை இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் வழங்கியிருக்கிறார்.

இந்தப் பின்னணியில் நடிகர் விஜய் சோனியா காந்தியோடும் ஈழத் தமிழர்களைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் ராகுல் காந்தியோடும் கைகோர்க்க எத்தனிப்பது அவர்இலங்கைத் தமிழர்களுக்குச் செய்யக் கூடிய அதிக பட்ச துரோகம் என்றே நாம் கருதுகிறோம். எனவே நடிகர் விஜய் நடித்த அல்லது நடித்து வெளிவர இருக்கும் படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகளாவிய அளவில் நாம் இறங்குவோம் என்பதை முன் கூட்டியே அவருக்கும் சம்பந்தப்பட்டத் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி வைக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிரி. செனல் – 4 வீடியோ காட்சி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் : ஐ.நா.பிரதிநிதி

ExtraJudicialKillingsபிரித்தா னியாவின் செனல்-4 தொலைக்காட்சி சேவை அண்மையில் வெளியிட்ட வீடியோ காட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டவிரோத கைதுகள் மற்றும் படுகொலைகளுக்கான பிரதிநிதி பிலிப் ஆல்ஸ்டன் தெரிவித்துள்ளதாக ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், குறித்த வீடியோ காட்சிகளின் நம்பகத்தன்மை தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள போதிலும், விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் தெரிவித்துள்ளார் எனவும்-

விசாரணைகளின் மூலம் உண்மைத் தகவல்கள் வெளியிடப்பட்டால் இலங்கை அரசாங்கம் மீதான சர்வதேச சமூகத்தின் நம்பிக்கை வலுப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

குறித்த வீடியோ காட்சிகள் பாரிய மனித உரிமை மீறல்களை விதந்துரைப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைத் தமிழர்களது எதிர்காலம்: ரவி சுந்தரலிங்கம்

பாகம் 4
எங்கிருந்து, யாரைப்பற்றி, எக்காலத்தில்.

முன்குறிப்பு: இக் கட்டுரையின் பிரதான நோக்கம், புத்தி ஜீவிகள் பற்றி எமது சமுதயங்கள் கொண்டுள்ள நிலைப்பாடுகள் பற்றிய எடை போடலாகும். இதனை, (1) புத்தி ஜீவிகள், ஜீவனில்லா புத்திமதிகள் (2) கல்விப் பண்டம் (3) சமூகவியல், விஞ்ஞானவியற்துவ மாதிகள் (4) நியூற்றனின் பௌதீகமாதிரி (5) அவற்றிடையேயான ஒப்பீடு, எனும் உப-தலைப்புகளுடன் தர விளைகிறோம்.

புத்தி ஜீவிகள், ஜீவனில்லா புத்திமதிகள்
எமது சமுதாயங்களில் இடையிடையே புத்திஜீவிகளுக்கு எதிரான செயற்கையான போக்கு ஒன்றினை அவதானிக்கலாம். இது மக்களிடையே உள்ள உண்மையான வெளிப்பாடா? அல்லது அரசியற்-சந்தர்ப்பவாதிகளது கூச்சலா, வன்முறை நோன்பாளர்களது முரட்டுவாதமா? அல்லது எமது சமுதாயங்களிடையே உள்ள ஏற்றத்-தாழ்வுகளை தவறாகப் புரிந்து கொண்டமையின் விளைவா? அல்லது தனிப்பட்ட மனோவியல் தாழ்வு உணர்வுகளால் பட்டப் படிப்பு பெற்றவர்முன் குனிந்து பக்குவமாக நிற்க வேண்டும் என ஒடுக்கு முறையாகிவிட்ட நிலைமையின் மனச்சுமையினால் அடிமனதில் திரண்டு எழும் வெறுப்பா?

ஏனெனில், கல்விப் பட்டம் பெற்றவர்கள், பாடசாலைப் படிப்பே இல்லாதவர்கள், வாழ்க்கையினூடாக போராட்டத்தினூடாக அனுபவம் பெற்றவர்கள், இன்று யாராவது கலாச்சார அரசியல் சமூக துறைகளில் கருத்துச் சொல்பவர்கள் யாவரும், தாம் கொண்ட அறிவையும் (knowledge) புத்தியையும் (intelligence) பாவனம் செய்யாது எப்படி இக்காரியங்களில் ஈடுபட முடியும்?

அல்லது, “ஐயோ புத்திஜீவிகளே வேண்டாம் ஐயா” என, தம்மை ஏதோ தங்கவேலு என்ற கற்பனையில், சாமத்தில் ‘இனிமையான வேலையற்று’ குந்தி இருந்து கணணித் – தளங்களுக்கு தமது ‘opinion’ சொல்லுவது ‘புத்தி-ஜீவித’ நடத்தையின்றி வேறென்ன?

புத்தி-அறிவு என்ற இணைப்பின் பிரகாரம் இயங்காவிடில் நாம் வெறும் இயல்புகளில் இயங்கும் மிருகங்களா? அல்லது யாராவது programm பண்ணிவிட்ட இயந்திரங்களா என்ன? புத்தி-ஜிவிகள் எனும்போது என்ன விளக்கங்களை இவர்கள் கொண்டுள்ளார்கள்?

இவர்கள், கருத்தை விளங்கிக் கொள்ளவோ நிராகரிப்பதற்கு வக்கோ அற்றவர்கள் ஆயின், பொது-முத்திரை குத்துவதுவதும், வெற்று விமர்சனங்கள் செய்வதும், மிஞ்சினால் வன்முறையால் முகம்கொடுக்க முனைவதையும் நாம் அன்றாடம் காண்கிறோம். ஆனால், இவர்கள் பொதுவாக குழு மனோநிலை கொண்டவர்களாக, விசுவாசம் என்ற கண்மூடித் தனமான வாதங்களுள் தாண்டு கிடப்பவர்களாக இருப்பின், இவர்களது போக்கு வகைப்படுத்தக் கூடியவை, எனவே விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆனால், பொதுப்-புத்தி சொல்லும் மனிதர்கள், எதிலும் இல்லாதவர்கள் எங்கும் இருப்பவர்கள். இவர்கள் தாம் புத்திஜீவிகளுக்கு எதிரானவர்கள் எனக்கூறி தம்மை அம்பலப்படுத்துவது ஏன்?

“எனக்கு இவருடைய கருத்துப் பிடிக்காது அவருடையது நல்லாகப் பிடிக்கும்”, அல்லது “எனக்கு உந்த மனிசனைப் பிடிக்காது, ஆகையால் அவர் சொல்வது பிடிக்காது” என்று கூறுவதைக் கூட ஏதோ நியாயமாக ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால், “உவை ஒருத்தரையுமே எமக்குப் பிடிக்காது” என்றவாறு பொதுப்-புத்தியை சொல்லும்போது இவர்கள் ஏன் இப்படி ஆனார்கள் என்ற கேள்வியிலும், எங்கிருந்து பேசுகிறார்கள் என்ற கேள்வி மேலோங்குவது தவறா?

எமது சமுதாயங்களிடையே உள்ள நிலமை என்ன:
1. ஆங்கிலேயர் ஆட்சி இலங்கை வந்ததில் இருந்து ஏட்டுப் படிப்பை தமது முதல் -அபிலாசையாக வளர்த்துக் கொண்டுள்ளவர்கள் தமிழர்கள்.

2. யாழ் குடாநாட்டில் தொடங்கிய இச் சமுதாய-ஓட்டத்திற்கு சமுதாய, நிலச் -சுவாத்திய உந்தல்களாலான பொருளாதார நியதிகள் பல காரணிகளாக அமைய, கிறிஸ்தவ மத நிறுவனங்கள் (missionaries) கட்டிய பாடசாலைகளும் ஊக்கு சக்தியாக இருந்தன.

3. இன்று வடகிழக்கில் பாடசாலைக் கல்வி என்பது கைக்கு எட்டாதவர்கள்கூட கல்வியால் தமது நிலையை உயர்த்திடலாம் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

4. தற்போது இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் தமது பிள்ளைகள் க.பொ.த பரீட்சைகளை எடுப்பதற்கான வசதிகளைச் செய்து தரவேண்டும் என்ற கோருவதையும் நாம் அறிவோம்.

5. புலம் பெயர்ந்தவர்கள் கல்வியே எல்லாம் என தமது வாழ்கையையே அதற்கான வகையில் மாற்றிக் கொள்வதையும் தமது பிள்ளைகளை கல்வித் துறையில் நெருக்குவதையும் நாம் நன்றாக அறிவோம்.

எனவே, கல்வி என்பது தமது சமூக – பொருளாதார முன்னேற்றத்திக்கான அடிப்படையான வழி என்பதை நிராகரிக்கும் தமிழ் பேசும் சமுதாயங்கள் எதுவுமில்லை. இந்நியதிக்கு புத்தி ஜீவிகளுக்கு எதிராகக் கூக்குரல் போடுபவர்களும் விதிவிலக்கல்ல என்பதும் திண்ணம்.

கல்விப் பண்டம்:
கல்வி எமது சமுதாயங்களது அபிலாசைகளுள் பிரதானமாக இருக்கும்போது, புத்திஜீவிகளுக்கு எதிரான கீச்சுக் குரல்கள் ஏன் பிறக்கின்றன?

இலங்கைத் தமிழர்களிடையே கல்வி என்பது எங்ஙனம் அமைகிறது? பொதுவாக அது தனிமனிதனது, அதனால் அவனது உற்றாரது, பொருளாதார முன்னேற்றத்தையும், அவை பேரில் அவரது சமுதாய – முன்நகர்வையுமே குறித்து நிற்கிறது.
அதாவது, வேலை வாய்ப்பாக, பணக் குகை – வாயிலாக, சமுதாயத் தட்டுகள் இடையேயான ஏணியாகவுமே கல்வி கருதப்படுகிறது.

இவற்றிக்கு அப்பால் கல்வி என்பதை அறிவை-வளர்க்கும் துறையாக, ஆய்வுகளை அடிகோலும் வகையாக, ஆய்வு-தேடல் என்ற ரீதியில் அமையும் புத்திஜீவிதத் தளமோ கலாச்சாரமோ (intellectual base / tradition) என்றும் இருக்கவில்லை, அவ் வளர்ச்சிக்கான அறிகுறிகள் இன்றும் இல்லை. புலிப்-போர்காலத்தின் முன்னர், கல்விமான்கள் நிறைந்த இடம் யாழ்ப்பாணம் என்ற சுயவிளம்பரப் பிம்ப-நிலை (self-image) படர்ந்திருந்த போதிலும், சர்வதேசிய எதிர்பாரப்புகளுக்கு இணைவான தரத்தில் ஆய்வுகள் கண்டுபிடிப்புகள் எம்மிடம் இருக்கவில்லை.

மேலும், யாராவது உருவாக்கி உற்பத்தி செய்யும் பொருள் பண்டத்தை வாங்கி மற்றவரிடம் விற்பனை செய்து தமது உழைப்பில்லா-முயற்சியில் இலாபப்-பணம் சேகரிக்கும் வெற்றுத் தரகு-வியாபாரிகளது வர்த்தகத் துறை போலவே, கல்வியும் எமது சமுதாயத்தில் ஒரு பண்டமாகத் திகழ்கிறது. மேலும், மக்களது பொது அறிவை, சொத்தை, வளர்க்க மாட்டாத ஜீவனில்லாப்- புத்தியாக, அன்றாடம் விற்றுக் காசாக்கும் விபச்சாரமுமாகவே உள்ளது என்று கூறுவது ஒரு விமர்சனமல்ல, அது சமுதாயத்தின் நிழல்-படமாகும்.

எனவே, புத்திஜீவிகள் என்ற பதம் பற்றிய விளக்கமும், அறிவும் பெறுமதியும், கணிப்பும், இக் குதர்க்கங்களின் வழி அமைந்ததாகவே உள்ளமை வியப்பதற்கில்லை. மற்ற இனத்தின் புத்திஜீவிகளது கல்விகளை படித்து ஒப்பிப்பதால், அவர்களது புத்திஜீவிதப் படைப்புகளை பண்டமாற்றம்-செய்து பிழைப்பதால், தமது உருவாக்கங்கள் படைப்புகளை ஒட்டிய முதலீடு செய்யும் அநுபவம் (enterpraising) இல்லாதமையால், எம்மிடையே புத்திஜீவிகள் என்றதும் உடற்-சொறி உருவாகுவது எதிர்பார்க்கக் கூடியதே.

கல்வி என்றால் பொறியியல், மருத்துவம், சட்டத்தரணி, கணக்காளன் என்ற நான்கு துறைகளுக்கான ஏட்டுப்படிப்பு என்ற குறுகிய நோக்கில் இயங்கும் எமது சமுதாயத்தில், அறிவு என்பதற்கும் புத்தி-ஜீவிதம் என்பதற்கும் உள்ள தொடர்பை யார்தான் உயர்த்திட முடியும்? “தம்பி பௌதீகம் படிச்சிட்டு என்ன வாத்தியாராயே வேலை செய்யப் போறாய், எஞ்சினியறிங் படியடா!” என்ற பொதுப்-புத்திமதி சொல்லும் கல்விமான்களைக் கொண்டது எமது சமுதாயம். பௌதீகமே பொறியியற் துறையின் என்லைகளைக் கட்டுவதும் விஸ்தரிப்பதும் என்பது பின்தங்கிய நாடுகளில் பேரறிவென விளங்க, வளர்ந்த நாடுகளில் அது பொது-அறிவாக இருப்பது புதுமையா என்ன?

அப்படியாகின், ஏதாவது கருத்தை தர்க்க ரீதியில் காரணங்கள் ஆதாரங்களுடன் நிராகரிக்க முடியாது, தனிமனிதனாயின் ஏதாவது பட்டப் பெயர் சூடி அல்லது புத்தி-ஜீவிகள் என ஒட்டுமொத்தாக எடுத்தெறியும் போக்கை எவ்வாறு சீர்செய்திட முடியும்?

புத்திஜீவிகளுக்கு எதிரான பிரச்சாரம் நயவஞ்சகத் தன்மையானது என்பது துலக்கமான விடயம். ஆனால், இப்பிரச்சாரங்களை தன் இயல்பிலேயே செய்பவர்கள் மற்ற இனத்தவரது புத்தி-ஜீவிகளது படைப்புகளில் வாழுகிறார்கள், அவர்களது சிந்தனைகளை மேற்கோள் காட்டியே தமது சமுதாயத்தையும் வழி நடத்த எத்தனிக்கிறார்கள், என்ற காரணங்கள் ஒரு புறமாயினும், இவர்களது சாடல்கள் உண்மைகளுக்கு பிறம்பானவை என்பதே முக்கியமானது.

புத்தி ஜீவிகளுக்கு எதிராக ஒரு போரையே புலிகள் நடத்தினார்கள், கொலைகளாலும் தாம் உருவாக்கிய பீதியினாலும் கல்வி பெற்றவர்களை உலகின் நான்கு கோடிகளுக்கும் ஓட்டினார்கள்? “எமக்கு யாரும் ஒன்றும் சொல்ல வேண்டாம், தலைவருக்கு எல்லாம் தெரியும்” என்பதன் அடிப்படையில்தானே தமிழர் சமுதாயங்கள் எல்லாம் தமது பங்களிப்புகளைச் செய்யுமாறு நிரப்பந்திக்கப்பட்டன? இன்று எமது மக்களது அவல நிலைக்கு புலிகளா அல்லது அவர்களது வாக்காலத்து-வாங்கிகளா காரணம்? எதிலும் இடம்பெறாத புத்தி-ஜீவிகள் இங்கு இந்நிலைக்கு எப்படித்தான் காரணமாகினர்?

“தளத்தில்தான் எல்லாம் வெளியில் இருந்து ஒன்றும் செய்ய முடியாது, வெறும் கதைகளால் பிரயோசனம் இல்லை” என்றெல்லாம் மாற்றுக் கருத்துக் கொண்டவரை வாய் மூடச் செய்தனரே? அவர்கள் புத்தி ஜீவிகளா செய்கை வீரர்களா?
இறுதியில், போராட்டத்தைக் காப்பாற்ற புகலிகள் சமுதாயங்களாலேயே முடியும் என்று அறை கூவியதும் ஜீவனற்ற-புத்திமதி சொன்னவர்களா அல்லது புத்தி-ஜீவிகளா?

தமது விருப்பு-வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, புலிகளது போரின் முடிவில் வெற்றி சாத்தியமா என்ற தமது முன்னைய கணிப்புகளையும் தவிர்த்து, சமகால சச்சரவுகள் நிலைப்பாடுகளில் இருந்து விலகி நின்று பார்ப்பவர்கள், இலட்சியச்-சரித்திரம் சொல்லும் தகமை பெற்றவர்கள். இவர்கள் சரித்திரத்தில், 20 – 21 நூற்றாண்டுகளின் தமிழ் போரின் சிறந்த தளபதியாக என்றென்றும் குறிப்பிடப்போவது பிரபாகரனை அன்றி வேறு யாரையுமல்ல. அந்த இறப்பின் காரணிகளில் ஒன்றாக, புத்தி ஜீவிகளையா அல்லது ஜீவனற்ற-புத்தி சொல்லும் நச்சுப்-பூசாரிகளையா அவர்கள் அடையாளம் சொல்வர்?

இன்றும் யாராவது “புத்தி ஜீவிகள் வேண்டாம் நாயைப் பிடி?” என்று கூறும்போது, அவர்கள் இனிமேல், “எந்தப் புலிப் போக்கைச் சார்ந்தவர்கள்” என்ற கேள்வி மட்டுமே மக்களிடம் எஞ்சுவது நியாயமானதா? புலிப் போக்கை புலிகளது அமைப்பைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி அதற்கு எதிரானவர்களும் தான் கொண்டவர்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

மக்களை, மற்றவனை தன்நிலையின் கீழ் என்றென்றுமே வைத்திட முனைபவர்களது சூழ்ச்சியே புத்தி ஜீவிகளுக்கு எதிரான போக்கும் அதனைத் தூண்டும் பிரச்சாரமும் என்று கூறுவது தவறா?

புத்தி ஜீவிகள் இல்லாத சமுதாயங்கள், இலங்கைத் தமிழர்களது போல தேக்கமானதாக, முன்னேற்றகரமே இல்லாதபடி அமைந்துவிடும் என்பது இவர்களுக்குத் தெரியாததா என்ன? “எப்படியான புத்தி ஜீவிகள் சமுதாயங்களது முன்னேற்றத்தை குறித்து நிற்கிறார்கள்?” என்பது சரியான கேள்வியே. ஆனால், புத்தி ஜீவகளே வேண்டாம் என்பது குறைந்தபட்சம் மகா மூடத்தனம், அல்லது உழைத்து வாழும் மக்களுக்கு எதிரான சூழ்சியின் அங்கமாகவே இருக்க முடியும்.

“விடயங்கள் யாவும் கெட்டியான அசைக்க முடியாத பொருள் என்ற கருத்துக் கொண்ட யாவும் (absolutes) ஒரு-சார்புநிலைச் சிந்தனையாகும். இது மனிதனுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் பேசும் அஃ-பௌதீக (metaphysical) அணுகுமுறையாகும். எதனையும் சரி-பிழை கறுப்பு-வெள்ளை என இருவகைப் படுத்துவதும், எமது கருத்துக்களை, செயல்களை, அவற்றின் நல்லவற்றையே அவதானித்து புகழ்வதும், விமர்சனங்கள் இல்லாது அவற்றை முற்றாக ஏற்றுக் கொள்வதும், இந்நிலைக்கு ஒப்பானதாகும். எமது காரியங்களை எல்லா வகைகளிலும் நல்லவை அல்லது சரியானவை எனக் கூறுவது உண்மைகளுக்குப் பிறம்பானவை….” (மாவோ, சீனப் பொதுவுடமைக் கட்சியின் தேசிய மாநாடு, 12 பங்குனி 57)2

நாம் எந்த இஸ்ட்டுகளாகவும் இல்லாது போகினும், மாவோவை அகிலம் கண்ட சிந்தனைவாதி அல்லது சீன-மாமனிதன் என்ற கணிப்பை பூரணமாக ஏற்றுக் கொள்பவர்கள். அதற்கான முக்கியமானதொரு காரணம், தானும் மானிட விஞ்ஞான மாதிரிகளுக்கு (model) உட்பட்டவனே என்ற அவரது கடைப்பிடிப்பாகும். மேற்படி கூற்று தன்னையும் கட்சியையும் குறித்தானது என்பதிலும் பார்க்க, புரட்சிகர மனிதன் எவ்வாறு தனது அறிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மாவோவின் மேற்படி உரை பெற்ற பத்து வருட காலத்தின் பின்னர், ஹவானாவில் உரையாற்றிய காஷ்ரோவோ இன்னும் ஒருபடி ஏறி, புரட்சி வேண்டின் புதிய சிந்தனைவாதிகள் வேண்டும் என்று அறை கூவுகின்றார். காலம், மக்கள், தொழில்-நுட்பம், உலக-ஒழுங்கு, சந்தைகள் என பல மாற்றங்களை அவதானித்து, உண்மையான சமுதாய மாற்றங்களை வேண்டி நிற்பவர்கள், இவரது கூற்றிக்கான அவசியங்களை தாமாகவே ஊகித்துக் கொள்வர்.

“…. பிழையாகப் புரிந்து கொள்ளாதீர்கள், என்னதான் தவறான நடைமுறையில் சென்றிருந்தாலும், சமுதாய மாற்றத்தினை உண்மையாக வேண்டி நிற்பவனுடன் எமக்கு அடிப்படை முரண்பாடுகள் இல்லை. ஆனால், புரட்சிவாதச் சிந்தனைக்கு, பழையதிலேயே ஈடுபட்டும், பிரிவினை வாதங்களுடன், புரட்சிகரச் சிந்தனைக்கும் செயற் திட்டங்களுக்கும் தாமே பொக்கிஸம் அல்லது அதிபதி என்றும், இருக்கும் இன்றைய நிலைகள் தாண்டி புதியதொரு மார்க்கம் வேண்டும் என்கிறோம். … ஆழ்ந்த சிந்தனைகளிலும் திறனான ஆய்வுகளிலும் எம்மை ஈடுபடுத்த வேண்டும் என்று கடந்த காலங்கள் கற்பித்துள்ளன. நாம் இனிமேலும் ‘தாமாகவே உணர்த்தும் உண்மைகளை’ ஏற்கத் தயாராக இல்லை. அவை முதலாளித்துவ சிந்தனை வாதங்களுக்கு சொந்தமானவை. ….. மாக்சிஸ, புரட்சிவாத அரசியல் இலக்கியங்கள் கூட புதுமைப்படுத்த வேண்டி உள்ளன. ஏனெனில், மாக்சிஸ வசனங்களை, கச்சிதமான கூற்றுகளை, இலக்கணப் பதங்களை மீண்டும் மீண்டும் கூறுவதால் நாம் யாரையும் வென்றெடுக்கப் போவதில்லை, யாரையும் தோற்கடிக்கப்போவதில்லை.” (பிடல் காஷ்ரோ, லத்தின் அமரிக்க சோஸலிச அமைப்பின் முதலாவது மாநாடு, 10 ஆவணி, 67; மாவீர வியற்னாமின் வருடம்)3

ஆகவே, உண்மையான புரட்சிகரச் சிந்தனைவாதிகளது சர்ச்சைகள், எல்லாப் புத்தி ஜீவிகளுடனும் அல்ல. புரட்சிகளுக்கு எதிரானவர்களுக்கும், புரட்சி பேசியே அதற்குத் தடையாக இருப்பவர்களுடனும்தான் அவர்களது வேட்கை என்பது புரிகிறது.

ஆகவேதான், “தமது பிள்ளைகளுக்கு படிப்பும் அதற்கான சகல சந்தர்ப்பங்களும் வேண்டும். ஆனால், வறுமையுள் ஆழ்ந்தவர்கள் வெறும் போராளிகளை பெற்றுத் தரும் மந்தைகள்” என்ற தமது உள்-உள்ளத்தை அறியாது அல்லது மறைத்திட மாற்றாகத் தரும் பிரச்சாரமே பொதுப்-புத்தி சொல்லும் அல்லது பொதுப்-புத்தியால் மூழ்கடிக்கப் பட்டவர்கள் என்பது புரியும். இதனை சமூகத்தின் கீழ் தளங்களில் இருந்து முன்வர முற்படுபவர்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல், அவர்கள் இதுவரை காலத்திலும் இடம்பெற்ற சூழ்சியின் தொடரிலேயே அகப்பட்டுப் போகும் பேதைகளாகிடுவர்.

எம்மைப் பொறுத்தவரை,

1.நாம் யாவரும்தான், எவரையும் நம்பவோ அல்லது வெறும் விருப்பு-வெறுப்புகள் கொண்டு நிராகரிக்கவோ வேண்டியதில்லை என்ற அறிவை உணர்ந்து, நிமிர்ந்து நிற்கும் தன்நம்பிகையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறோம்.2. லெனின், மாவோ, ஏன் மாக்ஸ் என யாரயாரோ தந்த சிந்தனைகளை, வெறும் ஏட்டுச் சுரைக்காய் மசியலாக, அரை-குறையான தமிழாக்கத்தை வாசித்தபின் விடும் ஏப்பமாக, மதம் கொண்ட வேத வாக்குகளாக, ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்களில் இருந்து எம்மை முதலில் விடுதலை செய்து கொள்ள வேண்டும் என்கிறோம்.

3. இன்றைய விஞ்ஞான உலகத்தில் மனிதக்-கடவுள்களுக்கு (demigods) இடம் இல்லை என்பதை அவதானிக்கிறோம். மனிதனது ஒவ்வொரு சமுதாயத்திலும் ஏற்படும் பாரிய மாற்றங்களுக்கு அடித்தளமாக, இலட்சியச்-சரித்திரத்தின் சூழல்மட்டுமின்றி, அதனை பூரணமாக அறிந்து புரிந்து கொண்ட புத்தி ஜீவிகளும், அவர்கள் கடைந்தெடுத்த சிந்தனைகளும் அவசியம் என்கிறோம்.

இந் நிலைக்கு தன் அறிவின் சமத்துவத்தை, மனோவியல் மனப்பாங்கை உயர்த்திக் கொள்ள முயல்பவனுக்கு ஏது தடங்கல்?

போயும் போயும் இந்தக் கட்டுரையாளன் ஏது நிகர்?
அவன்போலன்றி வேறு யார்தான் நிஜமான புத்தி-ஜீவி?

“புத்திஜீவி என்பவன் ஒரு முன்னோடி, தான் சார்ந்த சமூகங்களின் நாடி, தன் சமுதாயத்தின் விழிப்பாட்டி, கல்வி-அறிவு-அநுபவம் என்பவற்றினை தனதிலும் தான் சார்ந்த சமூகளிலும் இருந்து நிரப்பிட வேண்டும் என்ற புத்தியைக் கொண்ட ஜீவன்களின் துதிபாடி, தன் மாணவன் தன்னிலும் வளர்ந்தவன் என்ற அநுபவத்தின் நுகர்வைநாடும் மனுத்தேடி.”

மாக்ஸ், கடவுள், மவோ என இயலுமானவரை யாரையும் மேற்கோள் காட்டுவதை மிகவும் கரிசனத்துடனே தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எமது முடிவு. “மனிதன் எவனுமே பிழையான முடிவுகளுக்கு வந்திருக்க முடியும்” என்ற எமது விஞ்ஞானத்தின்பால் எழும் நம்பிக்கையிலும் பார்க்க, சமூக-நடத்தைகளின் விதிகளைக் கூறுவது விஞ்ஞான-மாதிரிகளுக்குள் இலகுவில் அடங்காத முயற்சி என்ற அநுபவ தத்துவார்த்த அறிவே அதற்கான முதற் காரணமாகும்.

புத்தி ஜீவித முன்னோடிகளது தத்துவங்களும் சிந்தனைகளும் ‘எங்கிருந்து யாரைப்பற்றி எக்காலத்தில்’ தரப்பட்டவை என்பதை அறிந்து படித்து எடைபோட்டு கிரகித்து தன்னுணர்வாக்கி, தன் மொழியில் மட்டுமின்றி தான் சார்ந்த சமூங்களுக்கு உகந்த அறிவாக மாற்றியபின் தரப்பட வேண்டியவை.

தன்னறிவான பின், தன்சமூகங்கள் கொண்ட கணிப்புகளை தானே செய்யும் இயல்புகள் (skills) கொண்டபின், அறிவாளிகளை மேற்கோள்கள் காட்டுவது “புத்தி-ஜீவித திருட்டுச் செய்திடக் கூடாது” (plagiarism) என்ற காரணத்தின் பிரகராமே என்று உணர்ந்தவர்களாக நாம் யாவரும் இருக்க வேண்டும் என்பது இரண்டாவது காரணம்.

நாமும் ஏதாவது ‘-இஸ்டுகள்’ என்றவாறு எமது மூளையை அடகு வைத்திடக் கூடாது, புத்திதரும் இயல்புகளை இழந்துவிடக் கூடாது, (dogmatic) என்பதுடன், எம்மை மற்றவர்க்கு நிரூபிக்க வேண்டும் என்ற இஸ்டங்களிலிருந்து எப்போதோ விலகிக் கொண்டோம். வார்த்தைகளில் மட்டுமில்லாது எமது சிந்தனைப் போக்குகளுக்கு ஏற்றவாறு வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முடியுமா என்ற நிபந்தனையை எமக்கு நாமே விதிக்க வேண்டும் என்றும் ஏற்றுக் கொண்டோம்.

இருந்தும், ஏதாவது-இஸ்டுகளது எழுத்துப்-பயங்கரவாதம் வற்புறுத்தும்போது, அறிவாளிகளது சரித்திர மனிதர்களது சில துணுக்குகளை முன்வைப்பது, கேடயம் போன்ற தேவை ஆகிவிடுகிறது.

மாக்ஸ் ஒரு மாக்ஸ்;-இஸ்டா?
இதற்கு தனது பதிலை எங்காவது எழுதிவைத்தற்கு அத்தாட்சிகளை நாம் அறிந்ததில்லை, ஆனால் நாம் பெரும் அறிவுக் களஞ்சியமல்ல. ஆனால், கௌத்தமர் கடவுள் இல்லை என்று கூறி இருந்தும், அவரே புத்த-மதத்தின் கடவுளானபின், மாக்ஸ் என்ன கூறி இருந்தும் என்ன பிரயோசனம் என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை.

சுவிஸில் சர்வதேச-சந்தைமயப் படுத்தல் பற்றிய கலந்துரையாடலின் போது எமது மாக்ஸிசவாதி ஒருவர் “மாக்ஸ் அப்படிச் சொல்லி இருக்க மாட்டார்..” என்றாரே பாரக்கலாம். தனது கருத்துகளுக்கு நேர்மாறான கருத்துக்களை மாக்ஸ் கூறியுள்ளார் என்ற விடயம் பற்றிய அறிவோ அதில் நாட்டமோ இல்லாத அவருக்கு தனது கூற்றுப்பற்றிய வருத்தம் ஏதுவுமில்லை என்பது எதிர்பார்க்கக் கூடியதே. மேலும், மாக்ஸ் ஏதோ சிறுவயதிலிருந்தே தன் யாழ்பாணத்து ஊரில் வளர்ந்த நண்பனாக, அவரது சிந்தனைப் போக்கை முற்றாக அறிந்தவர் போன்ற அவர்-நிலை கண்டபின், வேடிக்கையாக இருப்பினும், கண்மூடிகளாகிவிட்ட இத்தொகுதிக்கு உண்மையான கருத்துக்களோ, சுதந்திரமான சிந்தனையோ, முக்கியமானவை இல்லை என்பது தெளிவு. “Cut-and-paste” கலாச்சாரத்தின் மேதைகளுக்கு, ‘தம் பின்னாலே பேதைகள் பல இருக்கும்’ என்ற உத்தரவாதமே பேரறிவாகும்.

ஏங்கல்ஸ், மாக்ஸிசம்-சொல்லும் தனது சமகால ஆய்வாளனை பிறிது படுத்துவதற்காக தனது நண்பனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில்; “எனக்குத் தெரிந்தவரை நான் ஒரு மாக்சிஸ்ட் இல்லை” என்று மாக்ஸ் கூறியாதாக குறிப்பிட்டுகிறார்.1
அதனை, 19ம் நூற்றாண்டின் பிரெஞ்சு-மாக்சிஸ்ட்களை மனதில் கொண்டே மாக்ஸ் கூறினார் என்பதையும் கடிதத்தில் கூறி உள்ளார்.

எமது அறிவுரைகள், சிந்தனைகள், தத்துவங்கள் அவை எவ்வகைப்பட்டவை ஆகினும், அவை சமகாலத்தைச் சேர்ந்தவை என்பது சிற்றிவு கொண்ட எமக்கு தெளிவாக இருக்க வேண்டும். ஞானிகள் என நாமும் சமுதாயங்களும் கணிப்பவர்கள் சமகாலங்களைத் தாண்டும் சிந்தனைகளின் உரிமையாளர்கள் என்பதும் பொது அறிவு.

இவை எவையாகினும், அவை அனைத்தும் அடித்தளமாக ஏதாவது மாதிரிகளை (model) கொண்டவை என்பதை மறந்துவிடலாகாது. மனிதனது நடத்தைகளை மாதிரி வடிவங்களுள் அடக்கிவிடும் போதே நவீனகாலத்தில் விளக்கங்கள் விஞ்ஞான வழியாகக் கருதப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

சமூகவியல்,
விஞ்ஞானவியற்துவங்கள்

எமக்கென்ற அவசியத் தேவைகளுக்கான ஓய்வில்லா முயற்சிக்கும், குடும்ப சமுதாயங்களிடையே உள்ள ஓய்வில்லா போட்டிகளால் உருவாக்கிக் கொள்ளும் தேவைகளுக்கான மாரடிப்புக்கும், உள்ள வேறுபாடுகளை நாம் யாவரும்தான் உணர்ந்து கொள்வோம். கொள்வனவுச்- சமுதயத்தின் (consumer society) மாயைதனை முன்னேற்றம் என்று ஏற்றுக் கொள்வதால் உள்ளாகும் தனிமனிதச் செலவும், மனிதாபத்தின் சிதைவும் கூடவே பூகோளத்தின் அழிவும் எண்கணக்கில் சொல்ல முடியாதவை.

பணவசதி படைத்த எமது உறவினர்களது போல நாமும் இருக்க வேண்டும் என்ற மன உளைவால், எமது பொருளாதார ஆற்றல்களை மிஞ்சிய ஆசைகளுடன், 4-அறை வீடுவாங்கி ஏதாவது ஜேர்மானிய மோட்டார் வண்டியும் கடனில் பெற்று, தாயும் தந்தையும் ஒருவரை-ஒருவர் சந்திக்காமல் அல்லும் பகலும் உழைத்து தம் வாழ்வையே கடனுக்காக (mortgage) பணையம் வைப்பதை நாம் காண்கிறோம். அதனாலாகும் குடும்பச் சீரழிவுகளை, கணவன்-மனைவி பிள்ளைகள்-பெற்றோர் என்ற உறவுகளின் பின்னடைவுகள், குறிப்பாக பிள்ளைகளிடையே உருவாகும் மனோவியற் குழப்பங்கள் என பல அநாவசியமான சர்ச்சைகளை நாம் விலைக்கு வாங்கிக் கொள்கிறோம் என்பதை கவனிக்க முடியாதவர்கள் ஆகிவிடுகிறோம்.

தென்னாசிய மக்களிடையே அதிகளவில் மாரடைப்பைத் தரும் உயிரியல்-மரபு (genes) உள்ளது எனத் தெரிந்தும், அம் வருத்ததின் வதைகளுக்கு உள்ளாகி இருந்தாலும், எமது பிள்ளைகளது உடல்-ஆரோக்கியம் பற்றி கரிசனம் கொள்வதில்லை, அவர்கள் தமது உருவத்தில் பருத்துக் கொண்டு போவதைக்கூட கண்டும் அவதானிப்பதில்லை.

இதனை ஏதாவது ‘வட்டத்துள்’ அல்லது ‘சித்தாந்த மனநிலையுள்’ இருந்து பார்ப்போமாயின் இந்நிலையை இழிவாக்கி இவர்களெல்லாம் பேராசை கொண்ட, மனக் கட்டுப்பாடற்ற மூடர்கள், அதனை உணர்ந்த புத்திசாலிகள் நாம் என, எமது முதுகை நாமே தடவிக் கொள்ளலாம். ஆனால், பிறர் வருத்தத்திலும் துன்பத்திலும் எம்மைக் காண முடியாது, அவற்றில் கூட பகட்டுப் பெருமை காணும் ஜீவனில்லாப்- புத்திமதி நிபுணர்களாக நாமும் ஆகிவிடலாமா?

மனிதம் என்பது ஒன்று, அதன் பார்வையும் ஒன்று, என்றோ ஒருகாலத்தில் அதன் நுகர்ச்சிகளின் தன்மைகளும் ஒன்று, என்ற நம்பிக்கை இருப்பின், மனிதத்தின் அவஸ்த்தை, அதன் தேடல் (அதுதான் human condition), என அதன் அடியொட்டிய பிரச்சனைகளில் ஈடுபட்டு விட்டால், தனிமனிதனின் அவன்-சமுதாயத்தின் அதன்-சமூகத்தின் வருத்தங்கள் (pain) அவற்றிலான ஆதங்கங்கள் யாவும் ஒன்றென உணர்ந்திருப்பான். அது மட்டுமல்ல, அவ் உணர்ச்சிகளிலும் (experience) இணைந்து கொள்வான்.

3ம் உலகநாட்டு அவஸ்த்தைகளை, வசதி படைத்த நாடுகளில் மக்களின் கவனித்தில் கொண்டுவரும் நோக்கில் “வறுமையை ஒழித்திடலாம்” என ஆகாயத்தைத் தொட விளம்பர-மட்டைகளில் (bill-boards) எழுதுகிறார்கள். அவாறான முயற்சிகள் எமது பின்தங்கிய நாடுகளிலும் எம்முள் வசதி கொண்டவரது கரிசனத்தை நோக்கி எப்போ வந்து சேரும்?

அவ்வாறான கால கட்டத்தில், முதலாம் நாடுகளில் “அதி-உடற்பருமையை (obesity) ஒழித்திடலாம்” என்ற கோஸங்கள் அதே மட்டைகளை மாற்று-நிரப்புதல் செய்துவிட்டால் வியப்படைவோமா, என்ன?

மேற்கத்திய சமூகங்களில் உடலில் பருத்தவர்கள் பேராசை கொண்ட வசதி படைத்தவர்களா, அல்லது அதிக அளவில் கீழ்-மட்டத்தவரா? அதிஉடற்பருமை இச் சமூகங்களுள் உள்ள சுரண்டலின் குறிகாட்டியா, அல்லது சமுதாயச் சீரழிவின் குறிகாட்டியா? இல்லை, மேல்நாடுகளில் சமூகங்களின் அடித்தட்டுகள்கூட பாரிய ‘முன்னேற்றம்” கண்டுவிட்டனவா? அப்படியானால் மேல்நாடுகள் உள்ளவர்கள் சகலரும் முதலாளித்துவ நிலைக்கு வந்துவிட்டார்களா? தொழிலாள வர்க்கங்களுக்கு எதிரானவர்களா?

ஓவியங்களிலும் எழுத்துக்களிலும் உடற்பருமையை, முதலாளிகளுக்கும் சுரண்டலுக்கும் உள்ள தொடர்பைச் சித்தரிக்கும் பொருளாகக் கொண்ட எமது மனோவியல் போக்கு இன்றும் சரியானதா?

எப்போதோ, யாரோ, போட்ட வட்டத்துள் நின்று எம்மையும் பாராது, எம்மைச் சுற்றியவரையும் சாராது “நாம் பிடித்த முயலுக்கு மூன்றேதான் கால்கள்” என்று அடம் பிடிப்பதன் பெயர்தான் சித்தாந்தமா?

“எங்கிருந்து யாரைப்பற்றி எக்காலத்தில் சிந்திக்கின்றோம்?” இம்மூன்று விடயங்களின் நிபந்தனைகளுள் அமையும் சிந்தனைகளின் வடிவங்களே, எந்த மக்களதும் நிரந்தரமான வளர்வுக்கான வழிகளை வகுத்துத் தரும்.

நாம் அறியாதே தங்கி உள்ள மாதிரிகள், எம்மை தவறுதலான முடிவுகள் அல்லது கூற்றுகளுக்கு இட்டுச் செல்லக் கூடும் என்பதை உணரலாம். இங்கேதான் விஞ்ஞான-தர்க்கவியல் (scientific-logic) என்பதற்கும் மனிதனது நடத்தைகள் சொல்லும் சமூக-தர்க்கவியல் ஆகிய இரண்டுக்குமான (scoio-logic) ஒப்பீடுகள் எம்முள்ளே செய்ய வேண்டியதன் அவசியமும் புரிகிறது.

விஞ்ஞானவியற்துவம்
விஞ்ஞானத்தின் தேடல் என்பது மாதிரி ஒன்றினை நோக்கிய ஆய்வு என்பது பௌதீகவியல், உயிரியல் (every field of study about all inanimate matter & life sciences) என்ற வேறுபாடுகள் இல்லாது, எந்த விஞ்ஞானச் சமுதாயத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும் வரைவு ஆகும்.

அதன்படி நாம் உருவாக்கும் மாதிரி, அத்துறையில் உள்ள சகல தரவுகளையும் ஏற்று உள்வாங்கி விளக்கம் தரும் என்பதுடன், பரிசோதனைகளுக்கு ஊடாக ஊர்ஜிதம் செய்து கொள்ளக் கூடிய எதிர்காலத் தரவுகளை முன்சொல்லும் வகைகளையும் (predictability) கொண்டிருக்கும்.

நியூற்றனின் பௌதீக மாதிரி:
நியூற்றனின் 2ம் விதி, F = m x a, ஒரு நியூற்றனின் பௌதீக மாதிரியுள் முக்கியமானதாக அமைகிறது. இதன்படி, விசையானது வேக-அதிகரிப்புடன் (acceleration) நேரடி விகதாசார உறவில் உள்ளது. கொடுக்கும் விசை எவ்வளவு வேக-ஏற்றத்தை தரும் அல்லது ஏற்படும் வேக-அதிகரிப்புக்கான விசையின் பெறுமதி என்ன என்பதை வாக்குவாதங்கள் குதர்க்கங்கள் இல்லாது இம்மாதிரி எமக்குச் எண்-கணக்கில் சொல்லும். இதுவே ஒரு விஞ்ஞான மாதிரியின் அடிப்படை அம்சம்.

நியூற்றனின் மாதிரியின்படி பொருளின் திணிவோ (mass) ஒருபோதும் மாற்றம் காண முடியாது. மேலும், இம் மாதிரியுள் ‘நேரம்’ (time) என்ற அம்சம் நேரடியாக உள்ளங்கவில்லை என்பதும், நேரம் அண்டத்தின் பரிணாமத்திற்கு (spacial dimensions) அப்பாற்பட்டது என்ற கோட்பாட்டை நியூற்றனின் பௌதீக- மாதிரி கொண்டுள்ளதும் கவனிக்க வேண்டியது.

ஆனால் சிந்தித்துப் பாருங்கள், விசையை ஏதாவது விதத்தில் எப்போதும் மனிதனால் அதிகரிக்க முடியுமாயின், பொருளோ எல்லையற்ற (infinity) வேகத்தை கொண்டுவிடும். இது இயற்கையில் சாத்தியமான விடயமா? இல்லை.
ஏன்தான், ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நியூற்றனின் மாதிரிக்கும் இயற்கை தரும் சான்றுக்கும் உள்ள முரண்பாடுபற்றிக் கேட்டு யாரும் மாற்று மாதிரியை முன்வைக்கவில்லை? அக்காலத்து விஞ்ஞானிகள் சிந்தனைவாதிகள் யாவருமே முட்டாள்களா?

1905 இல் ஐயின்ரையின் (Einstein) தனது அதிவேகப் பொருட்களையும் உள்ளடக்கிய மாதிரியை (special relativity)5 முன் வைக்கும்வரை, இக் கேள்விகளை உந்தும் கருத்துகள் சமுதாயத்தின் கவனத்தில் இருக்கவில்லை என்று கூற முடியாது.
அப்படியாயின், ஏன் அவரது ஆய்வுப் பதிப்பின் பின்னரே பரிசோதனைகள் செய்யப்பட்டன?

இன்று பொருட்கள் ஒளியை மிஞ்சிய வேகத்தில் பயணம் செய்ய முடியாது, விசையை அதிகரிக்கச் செலவாகும் சக்தி (energy) பொருளின் திணிவையே அதிகரிக்கும் என்ற ஐன்ரையினின் கருத்துகள் சமூகப் பொது அறிவாக உள்ளன.
ஆயினும், பிரபஞ்சத்தின் ஆரம்பத்தின் (standard cosmological models) முதல் மூன்று நிமிடங்களைப்பற்றிய ஆய்வு செய்பவர்கள் ஐயின்ரையினின் மாதிரியையும் சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார்கள் என்பது எமக்கு ஆச்சரியமாகுமா? விஞ்ஞான வளர்ச்சி என்பதே அதுதானே?

சமூகவியற்துவம் (social studies)
தனிமனிதனது, மனிதக் கூட்டங்களினது, நடத்தைகளை அவதானித்து கணிப்புகள் செய்து ஒழுங்கு படுத்துவதற்கான கல்வித்துறைகள் அனைத்தையும் சமூகவியல் என்பது பொருத்தமானது. இவற்றுள் பொருளியல், அரசியல் ஆகியவை அதிக கவனம் ஈர்ப்பவை ஆகினும் சரித்திரம், மதம், சமூகவியல், மனோவியல் ஆகியவை அவற்றின் தளம் வழங்குபவை.

மனிதனது நடத்தைகள் யாவற்றையுமே சமூகவியல்-மாதிரிகளுள் அடக்கிட விளக்கிட முடியுமா? மாதிரிகளை உருவாக்கி அவற்றின் முரண்பாடுகள் அல்லது போதாமைகளால் புதிய-மாதிரிகளைப் பெற்று வளர்வது விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்பவை என்றோம். அவற்றின் ஆசான் மனிதனே ஆகினும் அவற்றின் அதிபதியும் அவன்தானா என்ற கேள்வியும்தான் அவனிடம் இன்று மேலோங்கி வருகிறது?

அப் பிரச்சனையிலும் பார்க்க, தன் உருவாக்கங்கள் வெளியாக்கங்களுக்கு ‘மாதிரிகள்’ அவசியம் எனக் கருமமாற்றும் மனிதன், எந்த மாதிரிகளினுள்ளும் அமைந்து கொள்ளாத கடவுள் மதம் என தனக்கு எட்டாதவைக்குள் அடங்கி வாழத் தயாராக உள்ளான். அதே தருணம், தான் எட்டியும் கெட்டிப் பிடிக்க முடியாத காதல் வெறுப்பு தனிதனித-நம்பிக்கை சித்தாந்தம் போன்ற உணர்ச்சிகளிலும் தங்கியவானாக உள்ளான்.

இதனை தன்னறியாத் தன்மை, படிப்பறிவில்லா மனிதனது நடத்தை, தனிமனிதனது உள்-முரண்பாடு, என்ற உயர்-மதி விளக்கங்களும் ஒரு புறத்திலும், உள்-முரண்பாடுகள் கொண்ட பிறவியே மனிதன் என்ற ஆன்மீக வாதமும் அதற்கு முற்றிலும் எதிரான மனித-தர்க்கீக விளக்கங்களும் உண்டு.

இவ்வாறு நடத்தைகளால் பல்முகப்பட்ட அல்லது பல்துறை முரண்கொண்ட மனிதனை ஒழுங்குபடுத்த முயலும் சமூகவியற் துறை திடமான மாதிரிகளைத் தருவது மிகவும் கடினமான காரியமே.

சமூகவியல் விஞ்ஞான மாதிரிகளாகுமா:
இசைநாடாவில் (audio-tape) ஒலிதரும் சோனி-நடமாட்டக்கருவி (Sony-Walkman) வியாபாரத்திற்கு வந்தபோது, அது ஏற்கனவே உள்ள சந்தையில் பங்குப் போட்டியில் ஈடுபடாது தனக்கென ஒரு புதிய சந்தையை உருவாக்கிக் கொண்டது என்பது ஒரு மாதிரி-அமைப்பின் விளக்கம். அதேசமயம், நடமாடுவோர் கொண்டு திரிவதற்காக மிகவும் சிறிய வடிவத்தில் செய்யப்பட்ட அக்கருவி, “இசைக்கருவிகள்” என்ற ஒரு பொதுச் சந்தையுள் அமைகிறது என்பது ஒருபுறமிருக்க, மனிதனது தேவை அல்லது ஆசை என்பவற்றிலும்தான் அவற்றின் பெறுமதியும் வியாபாரக்-காலமும் தங்கியுள்ளன என்பதும் முக்கியமான விடயம்.

விஞ்ஞான மாதிரிகள் மனிதனது விருப்பு-வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவையாக அமைய (objective), சமூகவியல் மாதிரிகள் அவனது விருப்பு-வெறுப்புகளைப் போன்ற மனிதத் தன்மைகள் பற்றிய சராசரிக் கணிப்பீடுகளில் தங்கி (subjective) அமைய வேண்டி உள்ளதையும் நாம் உணரலாம்.

நாம் இங்கு எவற்றைத்தான் வாசகர்கள் கவனத்திற்கு நிறுத்த முனைகிறோம்?

1.விஞ்ஞானம் எனும் பதத்தை ஈடுபடுத்தும் போது அவ்விடயம் ஒரு மாதிரி-அமைப்பினுள் உள்ளது எனவும், அது தனது பூரணமான எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் என்று மாற்றுத்-தரவுகள் கிடைக்கும் வரை எதிர் பார்க்கிறோம்.2.சமூக-மாதிரிகள், விஞ்ஞானம் என்ற பதத்தால் நியாயப்படுத்தப்பட முடியாதவை என்பதை உணர்கிறோம். ஆனைமையால், விஞ்ஞான-முறைப்படி அணுகப்படுவதையே விஞ்ஞானம்-மாதிரி எனும் பதத்தால் சித்தரிக்க முனைகிறோம். மேலும், விஞ்ஞானம் முன்னேற்றத்தைக் குறிப்பதனால் அப்பதத்துடன் தமது சிந்தனைகளை ஈடுபடுத்திக் கொள்ளும் சந்தர்ப்ப வாதத்தையும் காண்கிறோம்.

3.பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வளர்ச்சி காணும் மனித-சமுதாய-அநுபவ உணர்வே விஞ்ஞானம் தரும் அறிவு என்பது எமது வரைவு.

4.மாறாக மனித, சமுதாய உணர்வுகளின் விளக்கங்களைத் தொடுக்கும், அவற்றின் தாக்கங்களின் கணிப்புகளை தரும் செயல்களையே சமூகவியற்துறை தரும் அறிவாகக் கொள்கிறோம்.

5. எதிர்காலத் தரவுகள் (predictions) பிழையானவை என பரிசோதனைகள் நிரூபிக்கும்போது அவை சார்ந்த விஞ்ஞான-மாதிரி நிகாரிக்கப்படுகிறது.

6. ஆனால் சமூக-மாதிரிகளோ சித்தாந்தங்களாகவும், தனிமனித வழிபாடுகளாலாலும் நிலைநிறுத்தப் படுகின்றன.

எனவே, சமூகவியற்துவ மாதிரிகள் தமது விஞ்ஞானத் தன்மைகளை, அணுகு முறைகளுடாகப் பெற்றிருப்பினும் அவை விஞ்ஞான மாதிரிகள் ஆகிவிடா. மனிதனது தனிப்பட்ட அல்லது கூட்டு மனப்பான்மைகளுக்கு, போக்குகள் செயற்பாடுகளுக்கு ஓட்டுமொத்தமான கணிப்பீடுகளுடாக (statistical), மாதிரி வடிவங்களுள் விளக்கம் கண்டிட முடியுமாகினும் அவை நிரந்தரமற்றவை என்பது இம்மாதிரிகளை பலவீனமாக்குபவை. ஆயினும், மாற்றம் காணும் மாதிகளிடையே கூட அவற்றினைத் தொடர்பு படுத்தும் மாதிரிகளும் உள்ளன என்பது எதிர்காலத் தரவுகளைக் கொண்ட மாதிரிகளை தேர்ந்து கொள்ள உதவுகின்றன.

இவற்றை மனதில் கொண்டு எம்முன் வைக்கப்படும் சமூக-பொருளாதார மாதிரிகள் பற்றிய எடைபோடல் எமக்கும் அவசியம் என்பது மறுக்கப்பட முடியாத விடயம். அவை தேசிய, புரட்சி, தேசியப்-புரட்சி, பொருளாதாரம், கல்வி என ஒவ்வொரு விடயத்திலும் பல மாதிரிகள் செயற்படுத்தப் படுகின்றன. ஆனால், இவை பற்றிய அறிவோ அவற்றினாலான விளைவுகளை அனுபவிக்கும் மக்களிடையே அரியதாகவே உள்ளது. இந் நிலமை அதிகாரங்களை தம்மகத்தே வைத்திருக்க விரும்பும் ஆழும் வர்க்கங்களுக்கும், அவற்றின் நிர்வாகிகளாகிடும் தனிமனிதர்களுக்கும் சாதகமானவை என்பதும் அவதானிக்கப்பட வேண்டியது.

எனவேதான், அறிவு என்பது கல்விப்பண்டத்திலும் அவசியமானது. அதற்காக கல்வி வேண்டாம் என்ற உயர்-மதிப் புத்தி சொல்லவில்லை. ஆனால், கல்வி என்பதே ஒரு மாதிரியுள் அமைந்தது, அது சந்தைகளை நிர்மாணம் செய்யும் சக்திகளின் விருப்புகளுக்கும் இணைந்து போவது என்பதையும் மறந்துவிடலாகாது.

இவற்றை தரக் கூடியவர்கள் புத்தி ஜீவிகளே அன்றி, பொதுப்-புத்தி சொல்லும் வெற்று மூளைச் சோம்பேறிகளோ, ஜீவனில்லாப் புத்திமதி கூறும் உயர்-வர்க்கப் பிரதிநிதிகளோ அல்ல.

‘தாம் எங்கே போகிறோம்’ என்பதற்கான பதிலை ‘தாம் எங்கிருந்து வந்தோம்’ என்பதைத் தெரியாத சமுதாயங்களால் கூற முடியாது.

இவற்றினை சமூக-சிந்தையும் பொறுப்புணர்வும் கொண்ட புத்திஜீவிகளது ஆக்கபூர்வமான பங்குகள் இன்றி சமுதாயங்கள் பெற்றிட முடியாது.

பின்குறிப்புகள்:

1 Engles to C. Schmidt in Berlin, London August 5, 1890.

“… little Moritz is right when he quotes Barth as stating that the sole example of the dependance philoshophy, etc, on the material conditons of existence which he can find in all Marx’s works is that Descartes declares animals to the machines, then I am sorry for the man who writes such a thing. And if this man has yet not discovered that the material mode of existence is the primary agent/cause this does not preclude the idological spheres from reacting upon it in their turn, though with secondary effect, he cannot possibly have understood the subject he is writing about. However, as I said, all this is secondhand and little Moritz is a dangerous friend. The material concept of has a lot of them nowadays, to whom it serves as an excuse for not studying history. Just as Marx used to say, commenting on the French “Maxists” of the late [18]70s: “All I know is that I am not a Marxist”.

2 தமிழாக்கம்: எமது, மூலம்: ஆங்கிலம், Foreign Language Press, Peking 1976.

3 தமிழாக்கம் எமது, மூலம்: ஆங்கிலம், Fidel Castro Speaks, Edited by Martin Kenner & James Petras.

4 மனிதாபம்: மனிதாபிமானத்தின் மீதான நேயம்.

5 Special Relativity புவியீர்ப்பு என்ற விசையைத் தவிர்த்து மற்றைய விசைகள் பற்றிய கணிப்புகள் கொள்ளும் மாதிரியாகும்.

நன்றி

ரவி சுந்தரலிங்கம்
Academic Secretary- ASATiC

25 ஆவணி 2009

தென் மாகாண சபைக்கு 55 பேரை தெரிவு செய்ய 1091 வேட்பாளர் போட்டி

election000.jpgதென் மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. வேட்பாளர் நியமனப் பத்திரங்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் நேற்று நிறைவடைந்ததன் பின்னர், தேர்தல் நடைபெறும் திகதியை தேர்தல்கள் தலைமையகம் அறிவித்தது.

இந்தத் தேர்தலில் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 1091 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுள் 2 போனஸ் ஆசனம் அடங்கலாக 55 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

காலி மாவட்டத்தில் 15 கட்சிகளிலும் 4 சுயேச்சைக் குழுக்களிலுமாக 494 வேட்பாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 14 கட்சிகளிலும் மூன்று சுயேச்சைக் குழுக்களிலுமாக 357 வேட்பாளர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 10 கட்சிகளிலும் ஆறு சுயேச்சைகளிலுமாக 240 வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். இதில் காலி மாவட்டத்தில் 23 உறுப்பினர்களும், மாத்தறை மாவட்டத்தில் 18 உறுப்பினர்களும், அம்பாந்தோட்டையில் 12 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மூன்று மாவட்டங்களிலும் வேட்பாளர் களை நிறுத்தியுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காலி மாத்தறை மாவட்டங்களில் மாத்திரம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

தென் மாகாண சபைத் தேர்தல்களுக் கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் கடந்த 21 ஆம் திகதியிலிருந்து நேற்று (28) நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. பிற்பகல் ஒரு மணி வரை ஆட்சேபம் தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் எந்தவொரு வேட்புமனுவும் நிராகரிக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு புதிய இலங்கை தூதர் காரியவாசம்

2prsad.jpgஇந்தியா வுக்கான புதிய இலங்கைத் தூதராக பிரசாத் காரியவாசம் நியமிக்கப்படுகிறார். இவர் இலங்கைக்கான ஐ.நா. நிரந்தரப் பிரதிநிதியாக முன்பு பணியாற்றினார்.

1981ம் ஆண்டு பிரசாத் இலங்கை வெளியுறவுப் பணியில் இணைந்தார். ஜெனீவா, ரியாத், வாஷிங்டன், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தூதரகங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். இந்தியாவில், அம்பாசடர் பதவித் தகுதியிலான துணை ஹை கமிஷனராக பணியாற்றியுள்ளார்.

தற்போது தூதராக உள்ள ரொமேஷ் ஜெயசிங்கேவின் பதவிக்காலம் முடிவடைவதால் அவரது இடத்திற்கு காரியவாசம் வருகிறார். ரொமேஷ் ஜெயசிங்கே, இலங்கையின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராகிறார். தற்போது அப்பொறுப்பில் இருக்கும் பலித கொஹனா, ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர உறுப்பினர் பதவியை ஏற்கிறார்.

ஏற்கனவே சென்னையில் உள்ள இலங்கை  துணைத் தூதர் அம்சா, லண்டனுக்கு மாற்றப்பட்டு விட்டார். அவருக்குப் பதில் கிருஷ்ணமூர்த்தி அப்பொறுப்புக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்க்கு விரைவில் ராஜ்யசபா எம்.பி. பதவி – காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்

rahul_vijay.jpgகாங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தி முன்னிலையில் நடிகர் விஜய், விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளாரென்றும் அவருக்கு அகில இந்திய அளவில் கட்சியில் முக்கிய பொறுப்பும்,  ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்கப்படும் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி முனைப்பாக இறங்கி உள்ளார்.

நடிகர் விஜய், கடந்த 24ஆம் திகதி டில்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். தன் ரசிகர்களை காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள இச்சந்திப்பில் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் விஜய் இணைவதன் மூலம், எதிர்வரும் 2011ம் ஆண்டில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும் என காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நம்புகின்றனர். காங்கிரஸ் கட்சியில் விஜய் இணைந்தால் முழு மனதுடன் வரவேற்போம் என,  தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார். திரையுலகில் இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக நடிகர் விஜய் வலம் வருவதால், அவரது வரவு கட்சிக்கு பலத்தைத் தரும் என காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர்.

2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிரசார பீரங்கியாக விஜயை பயன்படுத்திக் கொள்ளவும் காங்கிரஸ் கட்சியினர்  திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னர் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பும்,  ராஜ்யசபா எம்.பி., பதவியும் அவருக்கு வழங்கப்படலாமென அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்” -இலங்கை உயர்நீதிமன்றம் உத்தரவு

00000court.jpgபயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக விரைவாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டிருக்கிறது.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முடிவுக்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு எதிராக சாட்சிகள் இருப்பின், வழக்குத்தொடரவோ அல்லது சாட்சிகள் இல்லாதபட்சத்தில் அவர்களை விடுதலை செய்யவோ ஒரு அவசர வேலைத்திட்டத்தை நீதியமைச்சின் செயலாளருடன் சேர்ந்து தயாரிக்குமாறும் சட்டமா அதிபருக்கான உத்தரவில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளோவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஜே. ஏ. பிரான்ஸிஸ் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு இன்று எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பது நீதியற்ற செயல் என்று பிரதம நீதியரசர் அசோக என். டி . சில்வா தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல்கள் குறித்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பாக அமைகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.