நடிகர் விஜய் காங்கிரசில் இணையக்கூடாது. அவ்வாறு அவர் காங்கிரசில் சேர முன்வந்தால் அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழுமூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம்.” இவ்வாறு கனடா, டொரன்ரோவிலுள்ள தமிழ் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் விடுத்துள்ள அறிக்கையில்,
“தமிழ் நாட்டின் முன்னனி நடிகர் விஜய், விஜய்காந்த், சரத்குமார், கார்த்திக் பாணியில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக முன்னர் செய்திகள் வந்தன. இப்போது அவர் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் சேரும் பட்சத்தில் அவருக்கு மேலவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
அரசியலில் யாரும் பங்கு கொள்ளலாம். நடிகர்களும் குடிமக்கள் என்பதால் அவர்களுக்கும் அரசியலில் பங்கு கொள்ள முழு உரிமை உண்டு. அது மக்களாட்சி முறைமைக்கு மிகவும் நல்லது. ஆனால் நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன்வந்தால் – அப்படியொரு முடிவு எடுத்தால் – அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர் தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழு மூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம்.
மத்தியில் பதவியில் இருக்கும் இந்திய காங்கிரஸ் – திமுக கட்சிகளது ஆட்சியின் போதுதான் இலங்கையில் வரலாறு காண முடியாத போர் அரங்கேறியது. இந்தியாதான் போர் ஆயுதங்கள், ராடர்கள், புலனாய்வு, உளவு, நிதி, பயிற்சி என்று எல்லாவற்றையும் இலங்கை அரசுக்கு கொடுத்து உதவியது.
இம்மாதம் 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வான்படைத் தள ஓடுபாதையை விரிவாக்குவதற்கு இந்தியா மேலும் ஒரு கோடி 17 லட்சம் ரூபாவுக்கான காசோலையை இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் வழங்கியிருக்கிறார்.
இந்தப் பின்னணியில் நடிகர் விஜய் சோனியா காந்தியோடும் ஈழத் தமிழர்களைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் ராகுல் காந்தியோடும் கைகோர்க்க எத்தனிப்பது அவர்இலங்கைத் தமிழர்களுக்குச் செய்யக் கூடிய அதிக பட்ச துரோகம் என்றே நாம் கருதுகிறோம். எனவே நடிகர் விஜய் நடித்த அல்லது நடித்து வெளிவர இருக்கும் படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகளாவிய அளவில் நாம் இறங்குவோம் என்பதை முன் கூட்டியே அவருக்கும் சம்பந்தப்பட்டத் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி வைக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டம் பிள்ளை
ஆக….இந்தியப் பிரசைகளினதும் அரசியல் உரிமையைப் பரிக்கும் புலம்பெயர் தமிழர்கள்….
சாந்தன்
இந்த விளையாட்டுகளை விட்டு உண்மையாகவே இந்திய போலிச் சினிமாக்காரர்களை , அவர்கள் எக்கட்சியை சார்ந்தவர்களாக இருப்பினும் புறக்கணியுங்கள். அத்துடன் கருணாநிதியின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் தயாரிக்கும் சினிமாக்களையும் அவர்களின் அரசியல் இருப்புக்கு ஆதரவாக இருக்கும் வியாபாரங்களையும் பகிஸ்கரியுங்கள். அவர்களின் தொலைக்காட்சிகளோ , சினிமாக்களோ உலகின் தலை சிறந்தனவல்ல. மாறாக மக்களை முட்டாள்களாக்கும் சினிமா அறிவை மழுங்கடிக்கும் மனிதாபிமானமற்ர சமூகபிரக்ஞை அற்ற குப்பைகளே.
மேலே சட்டம் பிள்ளை சொல்வதும் தவறானது. புலம் பெயர் தமிழர் குப்பை சினிமாவை புறக்கணிப்பது எவ்வாறு இந்தியர்களின் அரசியல் உரிமையை பறிப்பதாகும்? ஒருவேளை சினிமா வெற்றி இந்தியாவில் அரசியல் உரிமையோ? ஒருவேலை இருக்கலாம்.
பல்லி
கனடா தமிழன் இலங்கை தமிழனை இந்திய தமிழன் செய்யும் அரசியலை கண்டியுங்கள் என சொல்வது, தனக்கு சமைக்க தெரியாது, ஆனால் பக்கத்து வீட்டு பாட்டிக்கு ரசம் வைக்க ஆலோசனை சொன்னானாம்; பல்லி சொன்னால் பகிடியாய் போகும்; ஆனால் யோசித்து பார்த்தால் நாம் என்ன பரதேசிகளா என எண்ண தோன்றவில்லையா? அது சரி கனடா தமிழர் என்ன படித்து வாங்கிய பட்டமா?
பார்த்திபன்
அடடா சாந்தன் சொன்னதாலே எமது புலனபெயர் மக்களெல்லாம் இந்திய தொலைக்காட்சிகள் மற்றும் சினிமாக்களைப் புறக்கணிக்க, அவர்களெல்லாம் கஞ்சிக்கு வழியில்லாது அலையப் போகின்றார்கள். பின்பு இலங்கைத் தமிழர்களின் சினிமாக்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமத்தைப் பெற்று, கொஞ்சம் கூழாவது குடிக்கும் நிலைக்கு மீளலாமென கனவு காண யாருக்குத் தான் உரிமையில்லை.
முதலில் மக்கள் புறக்கணிப்பது இருக்கட்டும், முடிந்தால் தேசியம் பேசும் வானொலிகளோ தொலைக்காட்சிகளோ இந்திய சினிமாவையோ அல்லது தொலைக்காட்சித் தொடர்களையோ புறந்தள்ளி தமது ஊடகங்களை நடாத்திக் காட்டுவார்களா?? வாய்ச் சவடால்களிலேயே காலந்தள்ளுவது எப்படியென்பதை வேண்டுமானால் இந்த ஊடகங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
சாந்தன்
பல்லி,
இந்தியர்கள் பிரித்தானியாவில் இருக்கும் லங்காஷயர் நூற்பாலைகளில் செய்யப்படும் துணிகளை புறக்கணிக்க வேண்டும் என காந்தி கூறியபோது இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் அதனை வரவேற்றனர். இதில் ரசம் கூட்டு வியாக்கியானம் வேண்டாம். வெளிப்படையாக விவாதியுங்கள். நாம் இந்திய போலி அரசியல் சினிமாக்காரர்களை புறக்கணிக்க வேண்டுமா வேண்டாமா? இதில் உங்கள் கருத்தென்ன என்பதைக் கூறவும். கனடாத்தமிழர் என்பது கனடாவில் வசிக்கும் தமிழைத்தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்பது நீங்கள் அறியாததல்ல.
Devan
சில சிங்கள இனவாதிகள் சொன்ன போல இலங்கை தமிழர்களுடைய நாடு தமிழ் நாடு தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. குறிச்சிச் சண்டை, வேலிச்சண்டை, கிணத்து சண்டைக்கு பழகிப் போன நாம் ஈழப் போராட்டத்தையும் அதே பாணியில் எடுத்து முப்பது வருடமாக தமிழர்கள் வாழ்கையை எல்லா விதத்திலும் பூச்சியம் ஆக்கி விட்டோம்.
இப்ப புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்தியாவை ஆளத் தொடங்கி விட்டார்கள்.
விஜய் அரசியலும் சரி, அஜித் படம் ஓடாமல் செய்வதும் சரி, ஐங்கரன் கடையை உடைப்பதும் சரி, சன் டிவி ஆ? விஜய் டிவி ஆ? மக்களுக்கு நல்லது என்பதை முடிவு செய்வதும் சரி நமது தேசியத் தலைவர் கல்லூரியில் படித்துத் தேறிய புலம் பெயர்ந்த தமிழர்களே முடிவு எடுக்கும் பொழுது, சிங்கள இனவாதிகள் சொன்ன போல நமது நாடு இந்தியாவோ என்று எண்ணத் தோன்றுகிறது.