பிரித்தா னியாவின் செனல்-4 தொலைக்காட்சி சேவை அண்மையில் வெளியிட்ட வீடியோ காட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டவிரோத கைதுகள் மற்றும் படுகொலைகளுக்கான பிரதிநிதி பிலிப் ஆல்ஸ்டன் தெரிவித்துள்ளதாக ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், குறித்த வீடியோ காட்சிகளின் நம்பகத்தன்மை தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள போதிலும், விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் தெரிவித்துள்ளார் எனவும்-
விசாரணைகளின் மூலம் உண்மைத் தகவல்கள் வெளியிடப்பட்டால் இலங்கை அரசாங்கம் மீதான சர்வதேச சமூகத்தின் நம்பிக்கை வலுப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
குறித்த வீடியோ காட்சிகள் பாரிய மனித உரிமை மீறல்களை விதந்துரைப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.