இந்தியா வுக்கான புதிய இலங்கைத் தூதராக பிரசாத் காரியவாசம் நியமிக்கப்படுகிறார். இவர் இலங்கைக்கான ஐ.நா. நிரந்தரப் பிரதிநிதியாக முன்பு பணியாற்றினார்.
1981ம் ஆண்டு பிரசாத் இலங்கை வெளியுறவுப் பணியில் இணைந்தார். ஜெனீவா, ரியாத், வாஷிங்டன், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தூதரகங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். இந்தியாவில், அம்பாசடர் பதவித் தகுதியிலான துணை ஹை கமிஷனராக பணியாற்றியுள்ளார்.
தற்போது தூதராக உள்ள ரொமேஷ் ஜெயசிங்கேவின் பதவிக்காலம் முடிவடைவதால் அவரது இடத்திற்கு காரியவாசம் வருகிறார். ரொமேஷ் ஜெயசிங்கே, இலங்கையின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராகிறார். தற்போது அப்பொறுப்பில் இருக்கும் பலித கொஹனா, ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர உறுப்பினர் பதவியை ஏற்கிறார்.
ஏற்கனவே சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதர் அம்சா, லண்டனுக்கு மாற்றப்பட்டு விட்டார். அவருக்குப் பதில் கிருஷ்ணமூர்த்தி அப்பொறுப்புக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.