20

20

பிறக்கின்ற குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயரிடுங்கள் : -வைகோ

vaiko-pira.jpgதேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டடிருந்த பெரியார் திராவிடர் கழக உறுப்பினர்களை கௌரவிக்கும் பொருட்டு புரசைவாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்வொன்றில் பேசிய மக்கள் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வை.கோபாலசாமி தமிழ் நாட்டில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு பிரபாகரன் என பெயரிடுங்கள் என வேண்டியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் என்றால், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கும் அனைவரையும் கைது செய்ய முடியுமா என கேள்வி எழுப்பியதுடன் தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றை ஆதரித்து பேசுவது குற்றம் என்பது ஒருவரது கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

திருமலையிலும் கிளிநொச்சியிலும் இரு முதலீட்டு வலயங்கள் – அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா அறிவிப்பு

anurapriyadarsanayapa.jpgதிருகோண மலையிலும் கிளிநொச்சியிலும் இரு முதலீட்டு வலயங்கள் உருவாக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுரபிரியதர்சன யாப்பா தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றக் குழு அறையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

கிளிநொச்சியில் நிலக்கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப்படாடத காரணத்தினால் அங்கு முதலீட்டு வலயம் அமைப்பதில் சிறிது காலத் தாமதம் ஏற்படலாம்;. நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவது இலேசான காரியமல்ல. இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மோப்ப நாய்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே பணியாற்றுகின்றன. கடும் உஷ்ணம் காரணமாக மூன்று மோப்ப நாய்கள் சுகவீனமடைந்துள்ளன. இப்பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு அது ஐ.நா.வால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இங்கு மீள் குடியேற்றம் இடம்பெறும். அதன் பின்னரே முதலீட்டு வலயம் அமைக்கப்படும்.

இடம்பெயாந்த மக்களுக்கு அரசாங்கம் சகல வசதிகளையும் வழங்கியுள்ளபோதிலும் எதிக்கட்சிகள் அவற்றில் குறைகண்டு அரசியல் இலாபம் தேடுகின்றன. இதே மக்கள் புலிகளின் பிடியில் உணவின்றித் தவித்தபோது இந்த எதிக்கட்சி உறுப்பினர்கள் ஏன் வாய் திறக்கவில்லை என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

மட்டு வைத்தியசாலைக்கு புற்றுநோய்ப் பிரிவு!

ep-map.jpgமட்டக் களப்பு போதனா வைத்திய சாலையில் புற்று நோய்க்கு சிகிச்சையளிக்கும் தனியான பிரிவொன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரணையை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்திருந்தார்.

மூன்று தினங்களில் இலங்கையில் 900 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடு – அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தகவல்

gl_p_s.jpgகடந்த மூன்று தினங்களில் திறைசேரி உண்டியல் விற்பனை மூலம் இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றக் குழு அறையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

இலங்கையின் பொருளாதரக் கட்டமைப்பின்மீது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாரிய நம்பிக்கை வைத்துள்ளனர். பொருளாதாரம் சிறந்த முறையில் இருப்பதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் பயமின்றி முதலீடு செய்யும் நிலை உருவாகியுள்ளது. அதனால்தான் பெரும் எண்ணிக்கையிலான  முதலீட்டாளர்கள்  இலங்கை மீது தமது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

இலங்கைக்கு பெருந்தொகையான வெளிநாட்டுப் பணம் கிடைத்துள்ளதனால் தனியார் வங்கிகளிடம் கடன் பெறவேண்டிய தேவை ஏற்படாது. தனியார் வங்கிகளும் தங்களது வியாபார நடவடிக்கைகளை சிறப்பான முறையில் முன்னெடுக்கலாம்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி மூலம் இவ்வருட இறுதியில் வட்டிவீதம் மேலும் குறைவடையும். சுமார் 9 வீதம் வரைக் குறையுமென எதிர்பாக்கமுடியும். இதனால்  தொழில் வாய்ப்புக்கள் மென்மேலும் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார். 

ஆப்கன் தேர்தலில் வன்முறை – 4 இடங்களில் குண்டுத்தாக்குதல்

ஆப்கா னிஸ்தானின் தலை நகர் காபூல் உட்பட 4 இடங்களில் இன்று தலிபான் தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி இன்னமும் தகவல் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான் தீவிரவாதிகள் விரட்டப்பட்ட பிறகு 2ஆவது முறையாக இன்று அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது.

தற்போதைய ஜனாதிபதி ஹமீது ஹர்சாய் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவு மந்திரி அப்துல்லா அப்துல்லா உட்பட 41 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கையில் கடந்த 2 நாட்களாக தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் காபூல் நகருக்குள் புகுந்து ஜனாதிபதி மாளிகை மீது ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்கினார்கள். நேற்றும் 3 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இன்று வாக்குப்பதிவு தொடங்கியதும் மீண்டும் வன்முறையில் இறங்கினார்கள். தலைநகரம் காபூல் உட்பட 4 இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர் இதில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி இன்னமும் தகவல் வெளியாகவில்லை.

தேர்தல் பாதுகாப்பு பணியில் அமெரிக்கக் கூட்டு படைகள் உட்பட 3 லட்சம் இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள 8 மாவட்டங்களில்  இன்று வாக்குப்பதிவு நடக்கவில்லை 

வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கான தொலைத் தொடர்பு பரிவர்த்தனை நிலையம்!

anurapriyadarsanayapa.jpgகொக்கா வில் ஒலி, ஒளிபரப்பு பரிவர்த்தனை மத்திய நிலையத்துக்கான அடிக்கல்லை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.யும் ஊடகத்துறையமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் நாட்டினர். நேற்று நண்பகல் 12.45 அளவில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் 180 நாள் திட்டத் தின்கீழ் வட மாகாண ஒலி, ஒளிபரப்பு தொலைத் தொடர்பு தேவைகளை; பூர்த்தி செய்யும் வகையில் 400 மில்லியன் ரூபா செலவில் உருவாகவுள்ள 172 மீற்றர் உயரம் கொண்ட தொலைத் தொடர்பு கோபுரத்துடனான பரிமாற்று நிலையம் டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி,  முல்லைத்தீவு,, யாழ்ப்பாணம் ஆகிய  மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக இத்தொலைத் தொடர்பு பரிவர்த்தனை நிலையம் செயற்படவுள்ளது. அரச தொலைக்காட்சி அலைவரிசைகள் உட்பட அனைத்து தனியார் தொலைக் காட்சி அலைவரிசைகள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளும் இதனூடாக வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில்,  அமைச்சர்கள் ரோஹித்த அபேகுணவர்தன,  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,  இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், ஐ.ரீ.என். ஆகியவற்றின் தலைவர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

புலிகள் மீதான தடை இந்தியா நீக்காது

pathmanathan.jpgஇலங் கையில் கைது செய்யப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் குமரன் பத்மநாதன் அல்லது கே.பி.யை நாடு கடத்துமாறு இந்திய விசாரணை முகவரமைப்புகள் கோரிக்கை விடுக்கும் சாத்தியம் உள்ளது.  இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையின் பின்னணியில் உள்ள “உண்மைக் கதை’யைக் கண்டுபிடிக்க இந்த வலியுறுத்தலை இந்திய விசாரணை முகவரமைப்புகள் விடுக்கும் சாத்தியம் இருப்பதாக “டெக்கான் றெரால்ட’ பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிருடன் இருக்கும் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர் பத்மநாதனாகும். 1991 இல் தமிழ் நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட போது அதில் சம்பந்தப்பட்ட சதியாளர்களுக்கு இடவசதி வழங்கியதில் பத்மநாதன் முக்கியமான பங்களிப்பை வழங்கியதாக அறியவருவதாகவும் தமிழ் நாட்டிற்குப் பல தடவைகள் அவர் வருகை தந்ததாகவும் புலி உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்ததாகவும் வட்டாரங்கள் கூறியுள்ளன. பத்மநாதனுக்கு பிடியாணை பிறப்பித்த பின்னர் பத்மநாதனைத் தேடப்படும் குற்றவாளியென்று இன்ரர்போல் அறிவித்திருந்தது.

குற்றச்சதி, ஆயுதக் கடத்தல், இந்திய ஆட்புல எல்லை வெடிபொருட்கள் தொடர்பான சட்டத்தை மீறியமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக புலிகளின் தலைவரை இன்ரர்போல் கைது செய்ய வேண்டுமென இந்தியா விரும்பியது.  பத்மநாதன் தொடர்பாக இந்தியா கொண்டிருக்கும் ஆர்வம் குறித்து கேட்கப்பட்ட போது, புலிகளின் தலைவர் இந்தியாவில் தேடப்பட்டவர் என்று இந்திய மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியுள்ளார்.

பத்மநாதனை தனது பாதுகாப்பில் கைது செய்து வைத்திருக்க இந்தியா முயற்சிக்குமா என்பது பற்றிய கேள்விக்குப் பதிலளித்திருக்கும் பிள்ளை, “உடனடியாக இல்லை. அவர் இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவர் ஓடிவிட மாட்டார்’ என்று பிள்ளை கூறியுள்ளார். உரிய வேளையில் அந்த நடவடிக்கை இடம்பெறும் என்பதை இவர் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.  இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லாவிடினும் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு நிதி, ஆயுதங்கள், வெடிமருந்துகள் தொடர்பில் உபகரணங்களை வழங்கியதில் கே.பி. முக்கிய பங்கு வகித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தற்கொலைக் குண்டுதாரி தனு அணிவதற்கு ஆர்.டி.எக்ஸ். மற்றும் சி4 அங்கியையும் சிவராசனுக்கு ஏ.கே47 மற்றும் செக் 9.மி.மீ. பிஸ்ரல்களையும் கே.பி. வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது

ஐ.நா. தலைமைத்துவத்திற்கு பொருத்தமற்றவர் பான் கீ மூன் – இலங்கை விவகாரத்தையும் சுட்டிக்காட்டும் நோர்வே இராஜதந்திரி

இலங்கை உட்பட சர்வதேச விவகாரங்களை வழிநடத்திச் செல்வதற்குரிய தலைமைத்துவத்தை ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளிப்படுத்தியிருக்கவில்லை என்றும் உறுதியான தீர்மானத்தை எடுக்க முடியாதவரென்றும் அதிகாரம் இல்லாதவராகவும் முற்கோபக்காரராகவும் இருப்பதாகவும் ஐ.நா.வுக்கான நோர்வேத் தூதுவர் மோனா ஜூல் கடுமையாக விமர்சித்திருக்கிறார். நோர்வேயின் வெளிவிவகார அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே மோனா ஜூல் இதனை தெரிவித்துள்ளதாக அந்நாட்டுப் பத்திரிகையான “அவ்ரென்பொஸ்ரன்’ நேற்று புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

பான் கீ மூன் எப்போதும் சடுதியாக ஆத்திரப்படுபவர் என்றும் அவரிடம் பணியாற்றுவது கடினம் என்றும் தலைமைத்துவத்தைப் வெளிப்படுத்த போராடுவதாகவும் பற்றுதிப்பாடு குறைவாக அவரிடம் இருப்பதாகவும் மோனா ஜுல் இரகசியமான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக “அவ்ரென் பொஸ்ரன்’ பத்திரிகை கூறியுள்ளது. “முன்னொருபோதுமில்லாத வகையில் உலக நெருக்கடிக்கு ஐ.நா.வானது பலதரப்பட்ட தீர்வுகளைக் காணவேண்டிய தருணத்தில் பான் கீ மூனும் ஐ.நா.வும் கவனிக்கத்தக்க முறையில் பிரசன்னமாகியிருப்பதில்லை என்று ஜூல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்னும் இரு வாரங்களில் ஒஸ்லோவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

மியன்மார் மற்றும் இலங்கைக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் அண்மையில் மேற்கொண்ட விஜயங்களின் போது அவரின் பங்களிப்புத் தொடர்பாக நோர்வை இராஜதந்திரி ஜூல் விமர்சித்திருக்கிறார். ஐ.நா.தலைவரென்ற தமது தகைமையிலிருந்து அவர் தோல்வி கண்டுள்ளதாக ஜூல் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜூலின் விமர்சனம் குறித்தோ அல்லது பான் கீ மூனின் செயற்பாடு தொடர்பாகவோ தான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்று நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் கார்ஸ்ரோர் அவ்ரென் பொஸ்ரன் பத்திரிகைக்குக் கூறியுள்ளார். அதேசமயம், இராஜதந்திரி ஒருவரின் பங்களிப்பானது மனநிலை தொடர்பான அறிக்கையிடுவது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

“சகல விடயங்களுமே செயலாளர் நாயகத்தைச் சார்ந்ததல்ல. ஐ.நா.வின் உறுப்பினர்களாக நாடுகள் பல உள்ளன. அவையாவற்றினதும் கருத்தொருமித்த அபிப்பிராயத்திற்கு இணங்கவே ஐ.நா.நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பது எனது கருத்து, என்று நோர்வே வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

ஜஸ்வந்த் நீக்கப்பட்ட விதம் தவறு – பரூக் அப்துல்லா

farooq1111.jpgபாஜக விலிருந்து மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்ட விதம் சரியல்ல, முறையல்ல என்று மத்திய அமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இதுகுறித்து ஜெய்ப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்ட விதம் மோசமானது. இதுபோன்ற செயல் யாராக இருந்தாலும் பாதிக்கத்தான் செய்யும்.

ஒரு கட்சிக்காக 30 வருடங்களுக்கும் மேலாக உழைத்த ஒருவரை, மூத்த தலைவரை இப்படி அவமதித்திருக்கக் கூடாது என்றார் அப்துல்லா.

இலங்கை நிலைவரத்தால் ஐ.நா.வுக்கு தாக்கம்

இலங்கையிலும் பாகிஸ்தானிலும் இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் ஏற்பட்ட பாரிய மாற்றங்கள் ஐ.நா.வின் மனிதாபிமான உதவி வழங்கும் முறைமைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகார, அவசர நிவாரண விவகாரத்திற்குப் பொறுப்பான ஒருங்கிணைப்பாளரும் உதவி செயலாளர் நாயகமுமான ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார். சர்வதேச மனிதாபிமான தினமான நேற்று புதன்கிழமை இந்நிகழ்வை முன்னிட்டு விடுத்த செய்தியிலேயே ஜோன்ஹோம்ஸ் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

“இலங்கையில் இறுதியாகவும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் துப்பாக்கிகள் ஓய்ந்துவிட்டன. சுமார் 3 இலட்சம் மக்கள் இப்போதும் முகாம்களில் உள்ளனர். சிறிய அளவில் அல்லது நடமாடும் சுதந்திரம் இல்லாமல் அவர்கள் உள்ளனர். தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்லும் சாத்தியத்தை ஆவலுடன் எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர்.

உயிர்வாழ்வதற்காக உதவிகளில் அவர்கள் தங்கியிருக்கின்றனர் என்று ஹோம்ஸ் கூறியுள்ளார்.

உலகில் மனித துன்பங்களுக்கான காரணங்கள் பலமடங்காக அதிகரித்திருக்கின்றன. அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை மனிதாபிமானிகள் கண்டறிந்துகொள்வதிலும் பார்க்க வேகமாக இந்தக் காரணங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 20 வருடங்களாக உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற மோதல்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. ஆனால், மோதல்களால் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடிகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உயர்மட்டத்தில் உள்ளன. உள்நாட்டுப் பூசல்களை இந்நாட்களில் நாம் அடிக்கடி பார்க்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக இவை பொதுமக்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் சிதைத்துள்ளதை காணமுடிகிறது என்றும் ஹோம்ஸ் கூறியுள்ளார்.