ஐ.நா. தலைமைத்துவத்திற்கு பொருத்தமற்றவர் பான் கீ மூன் – இலங்கை விவகாரத்தையும் சுட்டிக்காட்டும் நோர்வே இராஜதந்திரி

இலங்கை உட்பட சர்வதேச விவகாரங்களை வழிநடத்திச் செல்வதற்குரிய தலைமைத்துவத்தை ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளிப்படுத்தியிருக்கவில்லை என்றும் உறுதியான தீர்மானத்தை எடுக்க முடியாதவரென்றும் அதிகாரம் இல்லாதவராகவும் முற்கோபக்காரராகவும் இருப்பதாகவும் ஐ.நா.வுக்கான நோர்வேத் தூதுவர் மோனா ஜூல் கடுமையாக விமர்சித்திருக்கிறார். நோர்வேயின் வெளிவிவகார அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே மோனா ஜூல் இதனை தெரிவித்துள்ளதாக அந்நாட்டுப் பத்திரிகையான “அவ்ரென்பொஸ்ரன்’ நேற்று புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

பான் கீ மூன் எப்போதும் சடுதியாக ஆத்திரப்படுபவர் என்றும் அவரிடம் பணியாற்றுவது கடினம் என்றும் தலைமைத்துவத்தைப் வெளிப்படுத்த போராடுவதாகவும் பற்றுதிப்பாடு குறைவாக அவரிடம் இருப்பதாகவும் மோனா ஜுல் இரகசியமான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக “அவ்ரென் பொஸ்ரன்’ பத்திரிகை கூறியுள்ளது. “முன்னொருபோதுமில்லாத வகையில் உலக நெருக்கடிக்கு ஐ.நா.வானது பலதரப்பட்ட தீர்வுகளைக் காணவேண்டிய தருணத்தில் பான் கீ மூனும் ஐ.நா.வும் கவனிக்கத்தக்க முறையில் பிரசன்னமாகியிருப்பதில்லை என்று ஜூல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்னும் இரு வாரங்களில் ஒஸ்லோவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

மியன்மார் மற்றும் இலங்கைக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் அண்மையில் மேற்கொண்ட விஜயங்களின் போது அவரின் பங்களிப்புத் தொடர்பாக நோர்வை இராஜதந்திரி ஜூல் விமர்சித்திருக்கிறார். ஐ.நா.தலைவரென்ற தமது தகைமையிலிருந்து அவர் தோல்வி கண்டுள்ளதாக ஜூல் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜூலின் விமர்சனம் குறித்தோ அல்லது பான் கீ மூனின் செயற்பாடு தொடர்பாகவோ தான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்று நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் கார்ஸ்ரோர் அவ்ரென் பொஸ்ரன் பத்திரிகைக்குக் கூறியுள்ளார். அதேசமயம், இராஜதந்திரி ஒருவரின் பங்களிப்பானது மனநிலை தொடர்பான அறிக்கையிடுவது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

“சகல விடயங்களுமே செயலாளர் நாயகத்தைச் சார்ந்ததல்ல. ஐ.நா.வின் உறுப்பினர்களாக நாடுகள் பல உள்ளன. அவையாவற்றினதும் கருத்தொருமித்த அபிப்பிராயத்திற்கு இணங்கவே ஐ.நா.நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பது எனது கருத்து, என்று நோர்வே வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *