இலங்கையிலும் பாகிஸ்தானிலும் இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் ஏற்பட்ட பாரிய மாற்றங்கள் ஐ.நா.வின் மனிதாபிமான உதவி வழங்கும் முறைமைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகார, அவசர நிவாரண விவகாரத்திற்குப் பொறுப்பான ஒருங்கிணைப்பாளரும் உதவி செயலாளர் நாயகமுமான ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார். சர்வதேச மனிதாபிமான தினமான நேற்று புதன்கிழமை இந்நிகழ்வை முன்னிட்டு விடுத்த செய்தியிலேயே ஜோன்ஹோம்ஸ் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
“இலங்கையில் இறுதியாகவும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் துப்பாக்கிகள் ஓய்ந்துவிட்டன. சுமார் 3 இலட்சம் மக்கள் இப்போதும் முகாம்களில் உள்ளனர். சிறிய அளவில் அல்லது நடமாடும் சுதந்திரம் இல்லாமல் அவர்கள் உள்ளனர். தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்லும் சாத்தியத்தை ஆவலுடன் எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர்.
உயிர்வாழ்வதற்காக உதவிகளில் அவர்கள் தங்கியிருக்கின்றனர் என்று ஹோம்ஸ் கூறியுள்ளார்.
உலகில் மனித துன்பங்களுக்கான காரணங்கள் பலமடங்காக அதிகரித்திருக்கின்றன. அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை மனிதாபிமானிகள் கண்டறிந்துகொள்வதிலும் பார்க்க வேகமாக இந்தக் காரணங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த 20 வருடங்களாக உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற மோதல்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. ஆனால், மோதல்களால் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடிகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உயர்மட்டத்தில் உள்ளன. உள்நாட்டுப் பூசல்களை இந்நாட்களில் நாம் அடிக்கடி பார்க்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக இவை பொதுமக்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் சிதைத்துள்ளதை காணமுடிகிறது என்றும் ஹோம்ஸ் கூறியுள்ளார்.