உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் சோனியா காந்திக்கு 13வது இடமும், ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயலதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சாருக்கு 20வது இடமும் கிடைத்துள்ளது. ஜெர்னி சான்சலர் ஏஞ்செலா மெர்க்கல் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான பெப்சிகோ நிறுவன தலைமை செயலதிகாரி இந்திரா நூயி 3வது இடத்தைப் பெற்றுள்ளார். பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஷீலா பெர் 2வது இடத்தில் இருக்கிறார்.
யாஹு நிறுவனத்தின் கரோல் பார்ட்ஸ் 12வது இடத்திலும் உள்ளார். 100 பேர் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். சோனியா, சந்தாவைத் தவிர மற்றொருவர் பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜூம்தார் ஷா. இவருக்கு கிடைத்துள்ள இடம் 91.
சோனியா காந்தி கடந்த முறை 21வது இடத்தில் இருந்தார். இந்த முறை கிடுகிடுவென உயர்ந்து 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல கிரண் மஜூம்தார் 99வது இடத்திலிருந்து 91வது இடத்திற்கு வந்துள்ளார்.கடந்த முறை 59வது இடத்தைப் பிடித்து அனைவரையும் வியக்க வைத்த உ.பி. முதல்வர் மாயாவதிக்கு இந்த முறை இடம் கிடைக்கவில்லை.
இப்பட்டியலில் ஹி்லாரி கிளிண்டனுக்கு 36வது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்க செனட் சபையின் தலைவரான நான்சி பெலோசிக்கு 35வது இடம். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமாவுக்கு கிடைத்துள்ள இடம் 40. ராணி எலிசபெத் 42வது இடத்தில் உள்ளார்.
இவர்கள் தவிர பில் கேட்ஸ் மனைவி மெலின்டா (34), ஓப்ரா வின்பிரே (41), வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா (78) ஆகியோரும் இப்பட்டியலில் இருக்கிறார்கள்.