அமெரிக் காவின் நியூயார்க் விமான நிலையத்தில் தன்னிடம் சோதனை நடத்தப்பட்ட விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார் இந்தி திரைப்பட நடிகர் ஷாருக்கான். சிகாகோவில் இந்திய சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றுள்ள ஷாருக்கானிடம், விமான நிலையத்தில் அவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து பிடிஐ செய்தியாளர் கேட்டதற்கு பதிலளிக்கையில் ஷாருக்கான் மேற்கண்டவாறு கூறினார்.
தங்களிடம் நடத்தப்பட்ட சோதனைக்காக விமான நிலைய அதிகாரிகளிடம் மன்னிப்பை எதிர்பார்க்கிறீர்களா என்று கேட்டதற்கு, அதெல்லாம் தேவையில்லை என்றார் அவர். விமான நிலையத்தில் என்னிடம் நடத்தப்பட்ட சோதனை வழக்கமான நடவடிக்கை என்றால் அதில் ஒன்றும் தவறில்லை. அதை பின்பற்றுவது அவசியமான ஒன்று என்றும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஷாருக்கானின் பெயரில் “கான்’ என்பது முஸ்லிம் பெயர் என்பதால் அமெரிக்காவில் அந்த பெயர் பொதுவான சோதனை பட்டியலில் உள்ளது. இதனால்தான் அவரிடம் சோதனை நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இதை தெளிவுபடுத்தும் வகையில் அமெரிக்க தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
விமான பயணிகளுடன் அவர்கள் கொண்டுவரும் பொருள்களையும் சோதனை நடத்துவது வழக்கம். ஷாருக்கான் விமானத்தைவிட்டு இறங்கி சோதனை செய்யும் இடத்திற்கு வந்தார். ஆனால் அவரது உடமைகள் அடங்கிய பை சற்றுத் தாமதமாகக் கொண்டுவரப்பட்டது. இதனால் அவர் காத்திருக்க வைக்கப்பட்டார். மற்றபடி அவரிடம் நீண்டநேரம் சோதனை ஏதும் நடத்தவில்லை என்றும் அமெரிக்க தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் விமான நிலையத்தில் சனிக்கிழமை ஷாருக்கானிடம் சுமார் இரண்டு மணி நேரம் சோதனை நடந்ததாகவும், பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் தலையீட்டின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதை ஷாருக்கானும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஒப்புக்கொண்டார். அந்தப் பேட்டியில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து கோபமாகவும் அவர் பேட்டியளித்திருந்தார்.