மடுத் திருத்தலத்தின் ஆவணி மாதத் திருவிழா நேற்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பூரண பாதுகாப்புடனும் அரச அனுசரணையுடனும் இடம்பெற்ற இத்திருவிழாவில் நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் ஐந்து இலட்சம் மக்கள் கலந்துகொண்டு மடு மாதாவைத் தரிசித்தனர்.
மடுத் திருப்பதிக்குச் செல்லும் பாதைகள் புனரமைக்கப்பட்டு மின்சாரம் உட்பட சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பயமின்றி இந்தத் திருவிழாவில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற வெஸ்பர்ஸ் ஆராதனையும் நேற்று விமரிசையாக நடத்தப்பட்டது.
மடு மாதா திருவிழாவிலும் கொழும்பு மறை மாவட்டப் பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் கலந்து கொண்டு திருப்பலியை நிறைவேற்றினார். அத்துடன் கொழும்பு மறை மாவட்ட முன்னாள் பேராயர் பேரருட் திரு ஒஸ்வோல்ட் கோமிஸ், யாழ். ஆயர் பேரருட்திரு தோமஸ் செளந்தரநாயகம் ஆகியோர் கலந்துகொண்டு ஆராதனைகளை நடத்தினர். கடந்த பல வருடங்களுக்குப்பின் தடையின்றியும் அச்சமின்றியும் மடுத்திருவிழாவைத் தரிசிக்கக் கிடைத்தமைக்காக மக்கள், அரசாங்கத்திற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நன்றி தெரிவித்தனர்.
கடந்த காலங்கள் போலவே மக்கள் மடுத்திருப்பதி வளவில் கூடாரங்களை அமைத்து குடும்பத்துடன் மடுமாதா திருவைக் கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது. வாகனப் போக்குவரத்துக்கள், யாத்திரிகளுக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான கடைகள் உட்பட சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மக்களுக் கான முழுமையான பாதுகாப்பினை பொலிசாரும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்திருவிழாவில் மறையுரையாற்றிய யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம், மடுத்திருப்பதியில் மீண்டும் விமரிசையாக திரு விழாவை நடத்தும் சூழலை ஏற்படுத்தித் தந்த இலங்கை அரசாங்கத்துக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
அவர் தமது மறையுரையில் மேலும் தெரிவித்ததாவது :-மருத மடுத் திருப்பதி பல யுத்தங்களைக் கண்டுள்ளது. அமைதியாக இருந்த பூமி யுத்த பூமியாக மாறியது. எனினும் நீண்டகாலத்திற்குப் பின் வடக்கு கிழக்கு மட்டுமன்றி நாடளாவிய ரீதியிலிருந்து மக்கள் பங்கேற்கும் சிறப்புத் திருவிழா இம்முறை கொண்டாடப்படுகிறது.
ஆலயமே தகர்ந்து விடுமோ என்ற ஒரு அச்சமான சூழ்நிலையிலிருந்து இத்திருப்பதி மீட்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஆலயத்தை மீள புனரமைத்துப் பாதுகாப்பு வழங்கி நாடளாவிய ரீதியிலிருந்து மக்கள் இங்கு வருவதற்கு வழியமைத்த படையினருக்கும் எமது பாராட்டுக்களும் அன்னையின் ஆசீர்வாதமும் உரித்தாகட்டும். இத்திருநாள் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகின்ற திருநாள். கொழும்பு மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரின் தலைமையில் இத்திருவிழா நடக்கிறது.
அதேவேளை நாடளாவிய ரீதியிலிருந்து மீண் டும் அனைத்து மக்களும் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்வாதத்தைப் பெறும் பெருவிழாவாக இது நிகழ்கிறது.
எனினும் எமது மனங்களில் கவலை உள்ளது. இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் இத்திருவிழாவில் பங்கு பற்ற முடியாமல் அவர்கள் அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளமையே அந்த தந்தயே தனக்குக் காரணம். இம்மக்கள் விரைவாக மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். அதற்காக அன்னையின் ஆசீரை வேண்டி நிற்போம் எனவும் யாழ். ஆயர் மேலும் தெரிவித்தார்.