சென்னை யிலிருந்து ‘கொலராடோ’ கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் நிவாரணப் பொருட்களை கொழும்புத் துறைமுகத்தில் இருந்து வெளியகற்றுவதில் புதிய சிக்கல் தோன்றியுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்தார். இதன் காரணமாக, புலம்பெயர்ந்த மக்களால் இடம்பெயர்ந்த மக்களுக்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை வவுனியாவுக்கு கொண்டு செல்வதில் மேலும் சில தினங்களுக்கு தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார். இந்நடவடிக்கை தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், புலம்பெயர்ந்த மக்களால் சேகரித்து அனுப்பப்பட்ட 880 மெற்றிக் தொன் நிறையுள்ள நிவாரணப் பொருட்கள் 27 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட நிலையில் கொழும்பு துறைமுகத்தில் பல நாட்களாக தேங்கிக் கிடக்கின்றன. இந்த பொருட்களை வவுனியாவுக்குக் கொண்டு சென்று சேர்ப்பதற்காக மிகவும் பிரயத்தனங்களை எடுத்துள்ளோம்.
துறைமுகத்தில் இருந்து பொருட்களை வெளியகற்றுவதற்கான சகல பணிகளும் முடிவடைந்தவுடன் இவ்வார இறுதிக்குள் அவற்றை வவுனியாவுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தோம். ஆயினும், கொழும்பு துறை முகத்திற்கு வந்துள்ள பொருட்கள் தொடர்பாக இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினால் அனுப்பப்பட்டுள்ள ஆவணங்கள் பூரணத்துவமானவையாக இல்லை என்பதால் புதிய சிக்கல் தோன்றிள்ளது.
அதாவது, இந்தக் கப்பலில் மருந்துப்பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவை ஏற்றப்பட்டுள்ளதாக இந்திய செஞ்சிலுவைச் சங்கம் அனுப்பிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, அதில் என்னென்ன மருந்துகள் எவ்வளவு அளவில் இருக்கின்றன? என்ன உணவுப் பொருட்கள் உள்ளடங்கியுள்ளன? இவை அனைத்தும் பாவனைக்கு உகந்தவையாகவும் தரமானதாகவும் இருக்கின்றனவா? – போன்ற முழுமையான விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் எந்தக் கொள்கலனில் என்ன பொருள் இருக்கின்றது என்ற குறிப்பும் எழுதப்படவில்லை.
எனவே, இப்பொருட்களை வவுனியா மக்களுக்கு விநியோகிப்பதற்கு முன்னர் அவற்றின் தரம் மற்றும் அளவு தொடர்பான தெளிவைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகச் சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் எமக்கு அறிவித்துள்ளார். ஒவ்வொரு கொள்கலனையும் திறந்து பார்த்து மேற்படி விபரங்களை பெறவேண்டியுள்ளதால் கொழும்பு துறைமுகத்தில் இருந்து பொருட்களை வெளியகற்றுவதற்கு இன்னும் சில தினங்கள் செல்லலாம்.
இந்திய செஞ்சிலுவைச் சங்கம் விட்ட இந்த தவறின் விளைவாக இப்படியொரு புதிய பிரச்சினை தலைதூக்கியுள்ளதுடன் அடுத்த வாரம் நடுப்பகுதியிலேயே நிவாரண பொருட்களை வவுனியாவுக்குக் கொண்டு செல்லக் கூடியதாக இருக்கும் என நினைக்கிறோம். எவ்வாறிருந்தபோதிலும் இப்பணிகளை முடிந்தளவு துரிதப்படுத்துவதற்காக, சுகாதார அமைச்சுக்கு சென்று சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் பலரிடம் இது விடயமாகப் பேசியுள்ளேன்” என்றார்.
லண்டனிலிருந்து கப்டன் அலி கப்பல் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட ‘வணங்கா மண்’ என்ற பெயரில் இங்கு வந்த கப்பல் நிவாரணப் பொருட்கள், பின்னர் சென்னை துறைமுகத்தில் இறக்கப்பட்டன. அங்கிருந்து கொலராடோ கப்பல் மூலம் மீண்டும் இந்த நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்திற்கு எடுத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.