திரு கோணமலை மாவட்டத்தின் சம்பூர் கிழக்கு பிரதேசம் தவிர்ந்த ஏனைய இடங்களில் விவசாயிகள் பயிர்ச் செய்கையில் ஈடுபட பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளதாக கிழக்குமாகாண முதலமைச்சரின் செயலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமையில் திருமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற உயர்மட்டக்கலந்துரையாடலில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திரியாய் பகுதியிலுள்ள நீலப்பனிக்கன் குளத்தை புனரமைப்பு செய்து அப்பிரதேச மக்களை விவசாயச் செய்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் திரியாய் பகுதியில் கிழக்கு மாகாண அமைச்சர்கள் மத்தியில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு தரப்பினரது ஒத்துழைப்பு மிகவும் தேவையாக உள்ளதாக அப்பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் நேற்று கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளது.