அகதி முகாம்களை பார்வையிடுவதற்கு எதிர்க் கட்சியினருக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தருமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிஉறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
எதிரணி எம்.பி.க்களான டாக்டர் ஜயலத் ஜயவர்தன,மனோ கணேசன்,லக்ஷ்மன் செனிவிரட்ண,மங்கள சமரவீர ஆகியோர் தாக்கல் செய்த மேற்படி மனுவை நேற்று திங்கட்கிழமை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கெடுப்பதென தீர்மானித்துள்ளதுடன் மனுமீதான விசாரணையை செப்டெம்பர் 29 ஆம் திகதிக்கு எடுப்பதற்கும் தீர்மானித்துள்ளது.
இத்தீர்மானத்தை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்ததை தொடர்ந்து ஊடகவியலாளர்களிற்கு மனுதாரர்கள் சார்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கருத்துதெரிவிக்கையில்; இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள மக்களின் தேவையையறிந்து உதவுவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை அங்கு செல்வதற்கு இடமளிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.அம்மக்களின் பிரச்சினை அரசின் தனிப்பட்ட பிரச்சினையல்ல.மாறாக இது தேசியப்பிரச்சினையாகும்.
நாம் அரசின் பங்காளிகள் அல்லவெனினும் நாட்டின் பங்காளிகள் என்ற வித்தியாசத்தை புரிந்துகொள்ளவேண்டும்.எங்களது மக்கள் சகோதர சகோதரிகளை பார்ப்பதற்கும் மழையினால் அவர்கள் பட்ட துன்பங்களை மற்றும் கண்ணீர் கதைகளை வெளிக்கொண்டுவர உதவுவதற்கே நாம் அங்கு செல்லகோருகின்றோமே தவிர அரசியலுக்காக அல்ல.இந்நிலையில் அரசாங்கம் சட்டமா அதிபர் ஊடாக நடவடிக்கை எதுவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டாமெனக் கோருகின்றேன் என்றார்.
ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன மற்றும் லக்ஷ்மன் செனிவிரட்ண, மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி ஆகியோரும் உடன் சமுகமளித்திருந்தனர்.