ஆஷஸ் தொடரை இழந்ததற்காக கப்டன் பதவியில் இருந்து ரிக்கி பொண்டிங் நீக்கப்படமாட்டார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட்சபை அறிவித்துள்ளது. 132 கால ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் கிரிக்கெட் வரலாற்றில் ரிக்கி பொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 1-2 என்ற கணக்கில் 2வது முறையாக இங்கிலாந்து அணியிடம் தொடரை இழந்துள்ளது. இதற்கு முன்பு பில்லி முர்டோச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 1890ம் ஆண்டுகளில் 2 முறை ஆஷஸ் தொடரை இழந்துள்ளது.
ஆஷஸ் தொடரை இழந்ததன் மூலம் உலக டெஸ்ட் தர வரிசையிலும் அவுஸ்திரேலிய அணி முதல் இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
வோர்ன், மெக்ராத், கில்கிறிஸ்ட் ஆகியோர் ஓய்வுக்கு பின்னர் ஆட்டம் கண்டு வரும் அவுஸ்திரேலிய அணி இந்த ஆஷஸ் தொடரில் கடைசி டெஸ்டில் 197 ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வி கண்டு தொடரை இழந்தது. கடைசி டெஸ்டில் அவுஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் ஹவுரிட்சை களம் இறக்காததும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தோல்வி கண்ட அவுஸ்திரேலிய அணி கப்டன் ரிக்கி பொண்டிங்கிற்கு எதிராக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வெற்றி கண்ட இங்கிலாந்து அணி வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது. தோல்விக்காக கப்டன் பதவியில் இருந்து ரிக்கி பொண்டிங் நீக்கப்படுவார் என்ற சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைத் தலைவர் ஜேம்ஸ் சுதர்லேண்ட் கூறியதாவது, கப்டன் பொறுப்பில் இருந்து ரிக்கி பொண்டிங்கை நீக்க வேண்டும் என்று சொல்வது முற்றிலும் நியாயமற்றது. ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.
அதற்காக சிறப்பாகவும் தயார் ஆனோம். வெல்லாவிட்டாலும் நமது வீரர்களை குறித்து பெருமைப்பட வேண்டும. அணி வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி ஆடினார்கள். தொடரை இழக்கக்கூடிய இக்கட்டான சூழ்நிலையிலும் கப்டன் பொறுப்பில் பொண்டிங் சிறப்பாகவே செயல்பட்டார். எங்கள் அணியை குறித்து நாங்கள் எந்தவித மாய தோற்றத்தையும் சிந்திக்கவில்லை. மிகவும் சிறப்பான வீரர்களை இழந்த பிறகு அவுஸ்திரேலிய அணியை மறு கட்டமைப்பு செய்து வருகிறோம். இளம் மற்றும் அனுபவம் இல்லாத வீரர்கள் அதிகம் பேர் அணியில் இருப்பதால் ஏற்றம் மற்றும் இறக்கங்கனை சந்தித்து வருகிறோம்.
அதில் ஒரு பகுதியை தான் ஆஷஸ் தொடரிலும் சந்தித்தோம். சுமார் 200 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இருக்கிறோம். அப்படி இருக்கையில் அணியில் சுழற்பந்து வீச்சாளரை சேர்த்து இருந்தாலும் பலன் கிடைத்து இருக்காது. தோல்விக்கு தேர்வாளர்கள் எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். களத்தில் ஆடுவது வீரர்கள் தான். எங்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள தான் வேண்டும். அடுத்த போட்டியில் சிறப்பாக ஆடுவோம் என்றார்.
வெற்றி குறித்து இங்கிலாந்து அணி கப்டன் ஸ்டிராஸ் கூறுகையில், ‘இந்த வெற்றி மிகவும் சிறப்பானதாகும். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாள். இந்த போட்டி தொடரில் உணர்ச்சிபூர்வம், நம்பிக்கை ஏமாற்றம் கவலை ஆகியவை நிறைந்து இருந்தது. வெற்றியின் பாதைக்கு வர முடியாத நிலையில் அந்த பாதையை எட்டிப்பிடிப்பது எப்படி என்ற கஷ்டத்தை இதில் உணர்ந்தோம். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் கிடைத்த இந்த வெற்றியின் பெருமை அனைத்து வீரர்களுக்கும் சாரும். இந்த போட்டியில் எங்கள் வீரர்கள் போராட்ட குணத்துடன் செயல்பட்டனர். பொண்டிங்கை, பிளின்டொப் ரன்- அவுட் செய்த விதம் சிறப்பானதாகும் என்றார்.
இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக தோல்வி தழுவியவர் என்ற விதத்தில் ரிக்கி பொண்டிங் தன்னால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார். பில்லி முர்டாக்கின் தலைமையின் கீழ் இங்கிலாந்தில் இரண்டு ஆஷஸ் தொடரை அவுஸ்திரேலியா இழந்த பிறகு தற்போது பொண்டிங் தலைமையில் இரண்டு முறை தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தோல்வி மூலம் நான் என்னை மேலும் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும், சிறந்த தலைவராகவும் வளர்த்துக்கொள்ளும் உறுதி என்னிடம் இப்போது வலுவடைந்துள்ளது. எனக்கு மேலே இருக்கும் அதிகாரிகள் என்ன கேட்பார்கள் என்பது பற்றி கவலையில்லை. தற்போது பத்திரிகையாளர்களை சந்திப்பதுதான் எனக்கு கவலையளிக்கிறது.
கடந்த முறை ஓவலில் அடைந்த தோல்வி, தற்போது அடைந்துள்ள தோல்வி எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. நான் இப்போது ஏமாற்றம் அடைந்திருப்பது போல் யாரும் வேறு எந்த தருணத்திலும் ஏமாற்றம் அடைந்திருக்கமாட்டார்கள். அணியின் தலைவராக துடுப்பாட்ட வீரராக என்னால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள் முடியவில்லை. மற்ற வீரர்களுக்கும் அவ்வாறுதான் இருக்கும்.
இந்த தொடர் முழுவதும் இரண்டு மோசமான இரண்டு மணி நேர ஆட்டம் தொடரை இழக்கச் செய்துள்ளது. நாங்கள் நன்றாக விளையாடும்போது அபாரமாக திகழ்கிறோம். ஆனால் நன்றாக விளையாடியபோதும் மிகவும் மோசமாக இருந்துள்ளோம். நாம் சீராக விளையாட வேண்டும் என்றார். அவுஸ்திரேலியா கடந்த 16 டெஸ்ட்களில் 6 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது.
இதில் இந்தியாவிடமும் தென்னாபிரிக்காவிடமும் இங்கிலாந்திடமும் தொடரை இழந்துள்ளது. இதனால் டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியா முதலிடத்தை இழந்து தென் ஆபிரிக்கா அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது.