வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் இலட்சக்கணக்கான மக்களை மிக விரைவில் மீளக் குடியமர்த்துவதுடன் அவர்களை நாட்டின் அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்கம் அம்மக்களுக்கான உணவு, மருந்து உட்பட சகல தேவைகளையும் அன்றாடம் நிறைவேற்றி வருகிறது எனத் தெரிவித்த ஜனாதிபதி அம்மக்களை மீளக் குடியமர்த்தி அப்பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு பெரும் நிதிச்செலவு ஏற்படும் எனினும் இது நாம் செய்ய வேண்டிய செலவுகளே. இத்தகைய செலவுகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டிய தேவை எமக்குண்டு.
எவரிடமும் கடன்படாமல் எமது வருமானத்தைக் கொண்டே இத்தகைய தேவைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமும் எமக்குண்டு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். சுங்கத் திணைக்களத்தின் 200வது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :-
அரசாங்கத்தின் நிதிக்கொள்கையை பரிசீலித்து ஏற்றுக்கொண்டே சர்வதேச நாணய நிதியம் எமக்குக் கடன் வழங்கியது. இதற்கு முன் இந்நாட்டை ஆட்சி செய்தவர்களைப் போன்று நிபந்தனைகளுக்கு அடிபணிந்து நாம் கடன் பெறவில்லை. எம்மிடம் ஒரு காத்திரமான நிதிக்கொள்கை உண்டு. அதேவேளை, உலகிலேயே பாரிய நிவாரணங்களை வழங்குவது இலங்கை மட்டுமே. விவசாயிகளுக்கு மிகக் குறைந்த விலையில் உரம் வழங்கியது எமது அரசாங்கமே.
உலகின் பாராட்டைப் பெற்ற இலவச மருத்துவம், இலவசக் கல்வி ஆகியவற்றைத் தொடர்ந்தும் தடையின்றி வழங்குவதுடன் நாட்டில் 16 பேருக்கு ஒருவர் அரச ஊழியர் என்ற பெருமையைக் கொண்டவர்களும் நாமே.
இவையனைத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கு நிதி அவசியம். முன்னர் தேசிய வளங்களை விற்றல், மது, புகையிலை வர்த்தகம் என்பன மூலம் வரு மானங்களைப் பெற்ற காலம் இருந்துள்ளது. நாட்டிற்கு எத்தகைய பாதிப்பு ஏற்படினும் அரசுக்கு இது போன்ற வருமானங்கள் ஈட்டப்பட்டன.
அத்துடன் நாட்டிற்குப் பொருத்தமற்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டே சர்வதேச கடன்கள் பெறப்பட்டன. எனினும் நாம் அபிவிருத்தியை மட்டுமன்றி தேசிய வளர்ச்சியையும் முன்னிலைப்படுத்தியே செயற்படுகின்றோம். நாம் நாட்டைப் பாதுகாப்பது மட்டுமன்றி நாட்டைப் புதிய பாதையில் இட்டுச் செல்கிறோம்.
நாட்டின் வருமானத்தில் 50 வீதம் சுங்கத் துறையிலிருந்தே கிடைக்கின்றன. அது மட்டுமன்றி நாட்டைப் பயங்கரவாதத்திடமிருந்து பாதுகாப்பதிலும் மேலும் பல்வேறு துறை அபிவிருத்திகளிலும் சுங்கத்துறையின் பங்களிப்பு குறிப்பிடக்கூடியது.
கடந்த நான்கு வருடகாலத்தில் அரச வருமானம் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் நாட்டின் அபிவிருத்தியோடு நாம் கொண்டுள்ள நிதிக்கொள்கையும் தான். வரி மூலமான வருமானம் முக்கியமானது. அதுவே நாட்டின் பொருளாதாரத்திற்கான பலமாகும். இந்த வகையில் சுங்கத் துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்புடனான செயற்பாடு மிக முக்கியமாகும்.
சுங்கத் துறையினருக்கு வேறு எந்தத் துறையிலுமில்லாத வருமானம் கிடைக்கிறது. மோசடி ஒன்றைக் கண்டுபிடித்தால் அதன் 50 வீதம் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. வீடு, வாகனம் என சிறந்த நிலைமையில் அவர்கள் வாழ்கின்றனர். எனினும் எத்தகைய சொத்துக்கள் இருந்தாலும் நமக்கான நாடு ஒன்று முக்கியம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
இந்நாட்டின் பொது வளர்ச்சியே தனிப்பட்டவர்களின் வளர்ச்சியாகிறது என்பதை சகலரும் உணர்ந்து செயற்படவேண்டும். சுங்கத் துறையில் சிலர் செயற்படும் விதமே முழு துறையையும் அபகீர்த்திக்குள்ளாக்கு கிறது. பொலிஸ் துறைக்கும் இது பொருந் தும். இத்துறைகளின் மீது மக்கள் கொண் டுள்ள அபிமானத்திற்கு இத்தகையோரின் செயற்பாடுகள் குந்தகத்தையே ஏற்படுத்தும்.
நாட்டில் அபிவிருத்திக்கு சுங்கத் துறையின் பங்களிப்பு மிக அவசியமானது. சுங்க அதிகாரிகளுக்கு இதற்கான பொறுப்புமுள்ளது.
வன்னிப் பிரதேசத்தில் மனிதாபிமான நடவடிக்கையின் போது பல கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டன. இவை பொருட்களுடன் அங்கு கொண்டு செல்லப்பட்டனவா என்பது எமக்குத் தெரியாது. இவை தரைமார்க்கமாக கொண்டு செல்லப்பட்டதா அல்லது ஆகாய மார்க்கமாகக் கொண்டு செல்லப்பட்டனவா என்பதல்ல பிரச்சினை. அதற்குரிய ஆவணங்களையும் தேடிப் பிடிக்க முடியாது.
எனினும் நாம் கூறுவதெல்லாம் சுங்க அதிகாரிகள் தமக்குரிய சமூகப் பொறுப்பை சரிவர நிறைவேற்றினார்களா என்பதே. இது அவர்களை அவர்களே கேட்க வேண்டிய கேள்வி. நாம் எந்த யுகத்தில் உள்ளோம் என்பதைச் சிந்தித்து ஏனைய துறையினரை விட மேலான சேவையை வழங்குபவராக சுங்க அதிகாரிகள் செயற்பட வேண்டும்.
சுங்கம் இல்லாதொழிக்கப்பட கங்கணம் கட்டிய காலம் ஒன்றிருந்தது. அதற்காக சிலர் செயற்பட்டனர். நாட்டை நேசிக்கும் சிலராலேயே இது தடுக்கப்பட்டது. அதனால் தான் இன்று நாம் சுங்கத் துறையின் 200 ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.
தேசிய வருமானத்தைக் கருத்திற்கொண்டு நேர்மையுடனும் அர்ப் பணிப்புடனும் உழைக்க வேண்டியது சுங்கத் துறையினரின் பொறுப்பாகுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.