கொழும்பு, பௌத்தாலோக மாவத்தையில் இரு சிறுமிகளின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வயது குறைந்த சிறுவர், சிறுமியர் வேலைக்கு அமர்த்தப்படுவது சட்டவிரோதமான செயல் என்றும் அதனைமீறி இச்சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சிறுமிகளை வேலைக்காக சேர்த்த தரகர் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மலையகத்தைச் சேர்ந்த பல சிறுமிகள் குடும்பக்கஷ்டம் காரணமாக வீட்டு வேலைகளுக்கு தரகர்களால் சேர்த்துக்கொள்ளப்பட்டு வருவது தற்போது தெரியவந்துள்ளதாக அதிகார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இவற்றைத் தடுப்பதற்கு அதிகார சபை உரிய நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். சிறுவர், சிறுமிகள் வேலை செய்வது தொடர்பாக அதிகாரசபைக்கு புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.