06

06

இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மீண்டும் தமிழகத்தின் நிவாரணப் பொருட்கள்

srilanka-refugees.jpgஇலங் கையில் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கென தமிழக அரசு திரட்டியுள்ள நிவாரணப்பொருட்கள் நான்காவது தவணையாக இலங்கைக்கு அனுப்பப்படவிருக்கிறது. சுமார் 15 கோடி மதிப்புள்ள அப்பொருட்கள் ஏற்றப்பட்ட எம்.சி.பி.ஆம்ஸ்டர்டாம் என்ற கப்பல் வியாழக்கிழமை சென்னைத்துறைமுகத்திலிருந்து புறப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் வீர ஷண்முகமணி  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இப்பொருட்களை கொழும்பில் இறக்குவதற்குத் தேவையான அனுமதி இலங்கை அரசிடமிருந்து வராத சூழலில் நிவாரணப் பொருட்கள் அடங்கிய 100 சரக்குப் பெட்டகங்கள் சென்னை துறைமுகத்தில் கடந்த சில நாட்களாக சென்னைத் துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக சில பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.

நிவாரணப்பொருட்களை விநியோகிப்பது யார் என்ற சிக்கலின் காரணமாகவே தாமதமேற்பட்டதாகவும், இப்பொறுப்பு இப்போது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமிருந்து ஐக்கிய நாடுகள் அவையின் மேற்பார்வைக்கு மாற்றப்பட்டுவிட்டதால் அச்சிக்கலும் தீர்க்கப்பட்டுவிட்டது. எனவே கப்பலில் சரக்குக்கள் ஏற்றப்பட்டு கொழும்பிற்கு அனுப்பப்படும் என்று தமிழக அரசு அதிகாரிகள் கூறினர்.

இலங்கையில் போர் உக்கிரமடைந்த நேரத்தில் இடம் பெயர்ந்தோருக்காக நிவாரணப்பொருட்கள் திரட்டப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் 13 தொடங்கி இதுவரை மூன்று தவணைகளாக 23.52 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன்.

இப்போது அனுப்பிவைக்கப்படும் பொருட்கள் ஆகஸ்ட் 8 ஆம் நாள் கொழும்பு சென்றடையும் என்றும், பிறகு அவற்றை அங்குள்ள இந்தியத் தூதரகம் பெற்றுக்கொண்டு ஐக்கிய நாடுகள் நிறுவனம் மூலம் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்க்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பும் கூறுகிறது.

68 கிராமங்கில் மீள்குடியேற்றம். எந்தத் தடைவரினும் துரிதமாக முன்னெடுக்கப்படும் – பசில்

basil.jpgவட பகுதி மக்கள் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் மீளப்பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அர்ப்பணிப்புடன் செயற்படுகிறாரென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வட மாகாண ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. கூறினார்.

180 நாள் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் வெகுவிரைவில் 68 கிராமங்களில் மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வவுனியாவில் 35 கிராமங்களிலும் கிளிநொச்சியில் 9 கிராமங்களிலும் யாழ்ப்பாணத்தில் 24 கிராமங்களிலும் மக்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தையும் யாழ்ப்பாணத்தையும் சேர்ந்த 1094 பேரை மீளக்குடியேற்றும் நிகழ்வு நேற்று வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கிய பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எந்தத் தடைவந்தாலும் கூடிய விரைவில் மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மீளமைப்பதற்கான சகல வசதிகளையும் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளாரென்றும் பசில் ராஜபக்ஷ கூறினார்.இடம்பெயர்ந்த மக்கள் மனங்களில் மீண்டும் விஷம் விதைத்து பயங்கர வாதத்தைத் தோற்றுவிக்க வேண்டாமென தமிழ்த் தலைவர்களைக் கேட்டுக் கொள்வதாகக் கூறிய அவர், வட பகுதி மக்களிடம் மீண்டும் விளையாட வேண்டாமென எதிர்க் கட்சித் தலைவரை கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

‘உலகில் எங்கு பார்த்தாலும் மீள்குடியேற்றம் நீண்ட நாட்கள் எடுக்கின்றன. பலஸ்தீனத்தில் இடம்பெயர்ந்தோர் 70 வருடங்களாக முகாம்களில் உள்ளனர். சிலர் முகாம்களில் பிறந்து அங்கேயே இறந்தும் போயுள்ளனர்.

பங்களாதேஷ், பாகிஸ்தான், காஷ்மீர் ஆகிய பகுதிகளில் 10 வருடங்களுக்கு மேலாக மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இலங்கையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம்கள் 19 வருடங்களாக இடம்பெயர்ந்துள்ளனர். மலையகத்திலிருந்து முல்லைத்தீவு சென்று வவுனியாவுக்கு வந்திருந்தோர் 22 வருடங்களாக உள்ளனர். 180 நாட்கள் வேலைத்திட்டத்தில் இதுவரை 35 நாட்களே பூர்த்தியடைந்துள்ளன.

கெப்பித்திகொல்லாவ, சேருநுவர, உள்ளிட்ட இடங்களில் சிங்களமக்கள் முதன் முதலாக இடம்பெயர்ந்தனர். மூதூரில் 40,000 முஸ்லிம்கள் இடம் பெயர்ந்தனர். உலக வரலாற்றில் இலங்கையில் மட்டுமே 44 நாட்களில் 40,000 மக்களை ஜனாதிபதி மீளக்குடியமர்த் தினாரென்பதை நாம் பயமின்றிக் கூற முடியும்.

வாகரை மக்கள் மூன்று மாதங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டனர். அங்கிருந்திராத பாதை மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினோம். கிழக்கில் இடம்பெயர்ந்தோரில் 98 வீதமானோரை 9 மாதங்களில் மீள்குடியேற்றினோம். அடுத்த கட்டமாக வட பகுதி மக்களை மீளக்குடியமர்த்துவோம். ஜனாதிபதி மீது நம்பிக்கை வையுங்கள்’ என்றார் பசில் ராஜபக்ஷ.

குளவி கொட்டி சிறுமி மரணம்

000images.jpgவயலில் வல்லாரை பிடுங்கிக் கொண்டிருந்த மூன்று சிறுமிகள் மீது திடீரென வந்த குளவிகள் கொட்டிய சம்பவம் செவ்வாய்க்கிழமை காலி போதள பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ஒரு சிறுமி மரணமானார். இரு சிறுமிகள் படுகாயமடைந்து காலி கராப்பிட்டிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அருகில் உள்ள மரத்தில் குளவிக்கூடு ஒன்று இருப்பதாகவும் அந்தக் குளவிகளே சிறுமிகளைக் கொட்டியதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

4 ஆயிரம் பேர் 64 பஸ்களில் நேற்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு – பசில் எம்.பி. தலைமையில் வவுனியாவில் நிகழ்வு

basil.jpgஇடம் பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் நேற்று 5 ஆம் திகதி சுமார் 4 ஆயிரம் பேர் தமது சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வவுனியா நிவாரண இடைநிலைக் கிராமங்களிலும் வேறு நலன்புரி நிலையங்களிலும் தங்கி இருந்தவர்கள் வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்டு 64 பஸ் வண்டிகளில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தொடர்பான நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்றுக் காலை 10.00 மணிக்கு வட மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் நடைபெற்றது.

இதில் கந்தளாயைச் சேர்ந்த 189 குடும்பங்களின் 464 உறுப்பினர்களும், திருகோணமலையைச் சேர்ந்த 33 குடும்பங்களின் 93 உறுப்பினர்களும், அம்பாறையைச் சேர்ந்த 56 குடும்பங்களின் 142 உறுப்பினர்களும், மட்டக்களப்பின் 109 குடும்பங்களைச் சேர்ந்த 265 உறுப்பினர்களுமாக மொத்தம் 387 குடும்பங்களைச் சேர்ந்த 964 பேர் கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதேநேரம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 52 குடும்பங்களின் 130 பேர் அவர்களது சொந்த இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் பல்வேறு காரணங்களுக்காக வன்னிக்குச் சென்று சிக்குப்பட்டவர்களும், கிழக்கிலிருந்து சென்று வன்னியில் வாழ்ந்து இடம்பெயர்ந்தவர்களும் அடங்குவர். தவிரவும் நிவாரணக் கிராமங்களுக்கு வெளியில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் பேரும் நேற்று பிற்பகல் மீள்குடியேற்றப்பட்டனர்.

15 கிராம சேவை பிரிவுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மீளக்குடியமர்த்தப்பட்டனர். சொந்த இடங்களுக்கு திரும்பியவர்களுக்கு உலர் உணவு பொதியும் வழங்கப்பட்டது. இதனை கொண்டு செல்வதற்கு லொறி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்றைய நிகழ்வில் அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), திஸ்ஸ கரலியத்த, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க, வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி. எம். எஸ். சார்ள்ஸ், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இன்று பகுதி சந்திர கிரகணம்

05-lunar.jpgஇந்த ஆண்டின் மூன்றாவது கிரகணமாக இன்று பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை இரண்டு கிரகணங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதையடுத்து சமீபத்தில் முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று பகுதி சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இருப்பினும் இன்றைய சந்திர கிரகணத்தில் பெரிய அளவில் விசேஷம் எதுவும் இருக்காது என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய கிரகணத்தின்போது,  பூமியின் நிழலின் ஒரு பாதி, நிலவின் மீது விழும். கடந்த ஜூலை 7ம் தேதி நடந்த கிரகணத்தைப் போன்றதுதான் இது. இந்த கிரகணத்தின்போது நிலவின் தோற்றத்தி்ல் எந்த மாற்றமும் இருக்காது.

சென்னையில் இன்றைய சந்திர கிரகணம் அதிகாலையில் ஏற்படும். இது வெறும் கண்களுக்குத் தெரியாது. இன்று அதிகாலை 4.34 மணிக்குத் தொடங்கி 7.44 மணிக்கு இந்த சந்திர கிரகணம் முடிவடையும். அடுத்த சந்திர கிரகணம் டிசம்பர் 31ம் தேதி நடைபெறும். அதுவும் பாதி சந்திர கிரகணமாகவே இருக்கும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மடுவுக்கு விசேட பஸ் சேவை

bussss.jpgமடுமாதா ஆலய திருவிழாவில் யாழ். மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் சென்றுவருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யாழ்.மறை மாவட்ட ஆயர் அதி.வண, தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது தொடர்பாக கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, குடாநாட்டில் இருந்து எதிர்வரும் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் விசேட பஸ்சேவை நடைபெறவுள்ளன.

இவர்கள் மடுத்திருவிழா முடிவுற்றதும் அதே பஸ்களில் யாழ்ப்பாணத்துக்கு திரும்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

இறக்குமதி செய்யப்பட்ட அதிக போஷாக்குடைய உணவுப் பொருட்களை மீளப் பெற யுனிசெஃப் முடிவு

அனுமதியின்றி அதிக போஷாக்குடைய உணவு வகைகளை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்ததாக இந்திய அரசு ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து, ஐ. நா. மன்றத்தின் குழந்தைகள் மேம்பாட்டு நிதியமான யுனிசெஃப் அமைப்பு, அந்தப் பொருட்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.

அதிகபோஷாக்குடைய சத்துணவுப் பொருட்கள், உலகம் முழுவதும் உள்ள சத்துக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு யுனிசெஃப் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்ட அந்தப் பொருட்கள், அப்படிப்பட்ட பலவீனமான குழந்தைகளின் சிகிச்சைக்கு மிகவும் அவசியம்.

போஷாக்கு குறைவாக உள்ள பலவீனமான குழந்தைகள், உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். அவர்களில் 50 சதத்துக்கும் மேற்பட்டோர், பிகார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் உள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட போஷாக்குடைய குறிப்பிட்ட சத்துணவுப் பொருள் மிகவும் அதிக விலை உடையது என்று கூறும் இந்திய அதிகாரிகள், அதன் வீரியத்தன்மை குறித்தும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மாறாக, உள்ளூரிலேயே கிடைக்கும் போஷாக்குடைய சத்துமிக்க பால் வகைகளைப் பயன்படுத்துமாறு யுனிசெஃப் நிறுவனத்துக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.

ஆனால், அந்த இரு பொருட்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருப்பதாக யுனிசெஃப் கூறுகிறது.

த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணத்தை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி

kanagaratnam.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு யுத்த காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய குற்றத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கொழும்பு பிரதான நீதவான் நிஷாந்த ஹப்புவாராச்சியிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து தடுப்புக் காவல் நீடிப்பு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் முடிவடைந்த பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர், விடுதலைப்புலிகளுக்கு உதவி மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் சந்தேக நபரை நீதவான் முன்னிலையில் மீண்டும் ஆஜர்ப்படுத்துவதற்கான திகதியை வழங்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மோசடி இடம்பெறும் வாக்குச் சாவடிகளின் வாக்குகள் கணக்கெடுப்பிலிருந்து நீக்கப்படும் – மீள்தேர்தலின் பின்பே இறுதி முடிவு அறிவிக்கப்படும்

election000.jpgஏதாவ தொரு வாக்குச் சாவடியில் மோசடிகள், குளறுபடிகள் இடம்பெற்றது நிரூபிக்கப்படுமாயின் அவ்வாக்குச் சாவடி வாக்குகள் கணக்கெடுக்கப்படுவதிலிருந்து நீக்கப்படுவதுடன் தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப்படுவதும் நிறுத்தப்படும் என்று தேர்தல் செயலகம் நேற்றுத் தெரிவித்தது.இவ்வாறு இரத்து செய்யப்படும் வாக்குச் சாவடிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு அதன் பின்னரே இறுதி முடிவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் தேர்தல் செயலகம் குறிப்பிட்டிருக்கிறது.

இதேநேரம் வாக்குச் சாவடிகளினுள் இருந்தபடி தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடவென பெப்ரல் இய க்கத்திற்கும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் செயலக உயரதிகாரியொருவர் கூறினார்.

அவ்வதிகாரி மேலும் கூறுகையில் ஊவா மாகாண சபைக்கும், யாழ்ப்பாண மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளன. தேர்தல் பிரசார பணிகள் யாவும் நேற்று நள்ளிரவுடன் நிறைவு பெற்றுள்ளன. திட்டமிட்டபடி நாளை மறுதினம் 8 ஆம் திகதி வாக்களிப்பு இடம்பெறும். வன்முறைகளின்றி அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப் படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் சட்ட ஏற்பாடுகளை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் 5 இலட்சத்து 74 ஆயிரத்து 814 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 642 பேரும், யாழ். மாநகரசபைக்கென ஒரு இலட்சத்து 417 பேரும், வவுனியா நகர சபைக்கென 24 ஆயிரத்து 621 பேரும் வாக்களிக்கவுள்ளனர்.

இவர்கள் வாக்களிக்கவென பதுளை மாவட்டத்தில் 507 வாக்கு சாவடிகளும், மொனராகலை மாவட்டத்தில் 307 வாக்குச் சாவடிகளும், யாழ்ப்பாணத்தில் 70 வாக்குச் சாவடிகளும், வவுனியாவில் 18 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட விருக்கின்றன.

இதேவேளை இடம்பெயர்ந்துள்ளவர்கள் வாக்களிக்கவென புத்தளத்தில் 6 வாக்குச் சாவடிளும், அனுராதபுரத்தில் 4 வாக்குச் சாவடிகளும், கொழும்பில் இரு வாக்குச் சாவடிகளும், கம்பஹாவில் இரு வாக்குச் சாவடிகளும் களுத்துறையில் ஒரு வாக்குச்சாவடியும் என்றபடி விசேட வாக்குச் சாவடிகளும் அமைக்கப்படவிருக்கின்றன என்றார்.

2011 இல் நாடளாவிய குடித்தொகை மதிப்பீடு 150 கோடி செலவாகுமென கணிப்பீடு

000sri-lanka.jpg30 ஆண்டுகளின் பின்னர் நாடளாவிய குடித்தொகை மதிப்பீட்டை 25 நிர்வாக மாவட்டங்களிலும் மேற்கொள்ள ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. “அடுத்த குடித்தொகை மதிப்பீடு 2011 இல் இடம்பெறும். அதற்காக இப்போது நாம் ஆயத்தமாகி விடுகிறோம்.இதற்கு எமக்கு நிதி தேவை’ என்று இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுரஞ்ஜன வித்யாரட்ண இணையத்தளமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கடைசியாக 18 மாவட்டங்களில் 2001 இல் சனத்தொகை மதிப்பீட்டை மேற்கொண்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடைசியாக மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீட்டுக்கு 80 கோடி ரூபா செலவானதாகவும் 2011 இல் மேற்கொள்ளப்படவுள்ள சனத்தொகை மதிப்பீட்டுக்கு 150 கோடி ரூபா தேவையென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தொகை மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் கூறுகிறது.

வட,கிழக்கு மாகாணங்களின் பகுதிகள் அச்சமயம் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அதனால்,வட,கிழக்கு மாவட்டங்களில் அச்சமயம் முழுமையான குடிசன மதிப்பீட்டை மேற்கொள்ளவில்லை.இப்போது யுத்தம் முடிவடைந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் முழுநாடும் கொண்டுவரப்பட்ட பின்னர் 2011 இல் குடிசன மதிப்பீட்டுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.2008 இல் இலங்கையின் சனத்தொகை 20.2 மில்லியன் (2 கோடி 20 இலட்சம்) என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.