இடம் பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் நேற்று 5 ஆம் திகதி சுமார் 4 ஆயிரம் பேர் தமது சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வவுனியா நிவாரண இடைநிலைக் கிராமங்களிலும் வேறு நலன்புரி நிலையங்களிலும் தங்கி இருந்தவர்கள் வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்டு 64 பஸ் வண்டிகளில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது தொடர்பான நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்றுக் காலை 10.00 மணிக்கு வட மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் நடைபெற்றது.
இதில் கந்தளாயைச் சேர்ந்த 189 குடும்பங்களின் 464 உறுப்பினர்களும், திருகோணமலையைச் சேர்ந்த 33 குடும்பங்களின் 93 உறுப்பினர்களும், அம்பாறையைச் சேர்ந்த 56 குடும்பங்களின் 142 உறுப்பினர்களும், மட்டக்களப்பின் 109 குடும்பங்களைச் சேர்ந்த 265 உறுப்பினர்களுமாக மொத்தம் 387 குடும்பங்களைச் சேர்ந்த 964 பேர் கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதேநேரம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 52 குடும்பங்களின் 130 பேர் அவர்களது சொந்த இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் பல்வேறு காரணங்களுக்காக வன்னிக்குச் சென்று சிக்குப்பட்டவர்களும், கிழக்கிலிருந்து சென்று வன்னியில் வாழ்ந்து இடம்பெயர்ந்தவர்களும் அடங்குவர். தவிரவும் நிவாரணக் கிராமங்களுக்கு வெளியில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் பேரும் நேற்று பிற்பகல் மீள்குடியேற்றப்பட்டனர்.
15 கிராம சேவை பிரிவுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மீளக்குடியமர்த்தப்பட்டனர். சொந்த இடங்களுக்கு திரும்பியவர்களுக்கு உலர் உணவு பொதியும் வழங்கப்பட்டது. இதனை கொண்டு செல்வதற்கு லொறி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்றைய நிகழ்வில் அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), திஸ்ஸ கரலியத்த, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க, வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி. எம். எஸ். சார்ள்ஸ், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.