வட பகுதி மக்கள் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் மீளப்பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அர்ப்பணிப்புடன் செயற்படுகிறாரென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வட மாகாண ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. கூறினார்.
180 நாள் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் வெகுவிரைவில் 68 கிராமங்களில் மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வவுனியாவில் 35 கிராமங்களிலும் கிளிநொச்சியில் 9 கிராமங்களிலும் யாழ்ப்பாணத்தில் 24 கிராமங்களிலும் மக்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தையும் யாழ்ப்பாணத்தையும் சேர்ந்த 1094 பேரை மீளக்குடியேற்றும் நிகழ்வு நேற்று வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கிய பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எந்தத் தடைவந்தாலும் கூடிய விரைவில் மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மீளமைப்பதற்கான சகல வசதிகளையும் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளாரென்றும் பசில் ராஜபக்ஷ கூறினார்.இடம்பெயர்ந்த மக்கள் மனங்களில் மீண்டும் விஷம் விதைத்து பயங்கர வாதத்தைத் தோற்றுவிக்க வேண்டாமென தமிழ்த் தலைவர்களைக் கேட்டுக் கொள்வதாகக் கூறிய அவர், வட பகுதி மக்களிடம் மீண்டும் விளையாட வேண்டாமென எதிர்க் கட்சித் தலைவரை கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
‘உலகில் எங்கு பார்த்தாலும் மீள்குடியேற்றம் நீண்ட நாட்கள் எடுக்கின்றன. பலஸ்தீனத்தில் இடம்பெயர்ந்தோர் 70 வருடங்களாக முகாம்களில் உள்ளனர். சிலர் முகாம்களில் பிறந்து அங்கேயே இறந்தும் போயுள்ளனர்.
பங்களாதேஷ், பாகிஸ்தான், காஷ்மீர் ஆகிய பகுதிகளில் 10 வருடங்களுக்கு மேலாக மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இலங்கையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம்கள் 19 வருடங்களாக இடம்பெயர்ந்துள்ளனர். மலையகத்திலிருந்து முல்லைத்தீவு சென்று வவுனியாவுக்கு வந்திருந்தோர் 22 வருடங்களாக உள்ளனர். 180 நாட்கள் வேலைத்திட்டத்தில் இதுவரை 35 நாட்களே பூர்த்தியடைந்துள்ளன.
கெப்பித்திகொல்லாவ, சேருநுவர, உள்ளிட்ட இடங்களில் சிங்களமக்கள் முதன் முதலாக இடம்பெயர்ந்தனர். மூதூரில் 40,000 முஸ்லிம்கள் இடம் பெயர்ந்தனர். உலக வரலாற்றில் இலங்கையில் மட்டுமே 44 நாட்களில் 40,000 மக்களை ஜனாதிபதி மீளக்குடியமர்த் தினாரென்பதை நாம் பயமின்றிக் கூற முடியும்.
வாகரை மக்கள் மூன்று மாதங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டனர். அங்கிருந்திராத பாதை மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினோம். கிழக்கில் இடம்பெயர்ந்தோரில் 98 வீதமானோரை 9 மாதங்களில் மீள்குடியேற்றினோம். அடுத்த கட்டமாக வட பகுதி மக்களை மீளக்குடியமர்த்துவோம். ஜனாதிபதி மீது நம்பிக்கை வையுங்கள்’ என்றார் பசில் ராஜபக்ஷ.
மாயா
நல்லவை தொடரட்டும்.
பார்த்திபன்
அரசு நல்லதைச் செய்து மக்கள் மனங்களை வென்றால், எவரும் அவர்களின் மனங்களில் விஷங்களையோ, பயங்கரவாதத்தையோ விதைக்க முடியாது. எனவே மக்கள் மனதில் எப்படியான மாற்றங்ககள் வரவேண்டுமென்பதை அரச நடவடிக்கைகள் தான் தீர்மானிக்கும். வன்னியிலுள்ள மக்களை மீள்குடியேற்றம் செய்வது போல், யாழ்ப்பாணத்திலிருந்து 1991இல் புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம் சகோதரர்களையும் நம்பிக்கையூட்டி, மீள்குடியேற்றம் செய்ய இந்த வேளையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.