அனுமதியின்றி அதிக போஷாக்குடைய உணவு வகைகளை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்ததாக இந்திய அரசு ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து, ஐ. நா. மன்றத்தின் குழந்தைகள் மேம்பாட்டு நிதியமான யுனிசெஃப் அமைப்பு, அந்தப் பொருட்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
அதிகபோஷாக்குடைய சத்துணவுப் பொருட்கள், உலகம் முழுவதும் உள்ள சத்துக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு யுனிசெஃப் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்ட அந்தப் பொருட்கள், அப்படிப்பட்ட பலவீனமான குழந்தைகளின் சிகிச்சைக்கு மிகவும் அவசியம்.
போஷாக்கு குறைவாக உள்ள பலவீனமான குழந்தைகள், உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். அவர்களில் 50 சதத்துக்கும் மேற்பட்டோர், பிகார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் உள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட போஷாக்குடைய குறிப்பிட்ட சத்துணவுப் பொருள் மிகவும் அதிக விலை உடையது என்று கூறும் இந்திய அதிகாரிகள், அதன் வீரியத்தன்மை குறித்தும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மாறாக, உள்ளூரிலேயே கிடைக்கும் போஷாக்குடைய சத்துமிக்க பால் வகைகளைப் பயன்படுத்துமாறு யுனிசெஃப் நிறுவனத்துக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.
ஆனால், அந்த இரு பொருட்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருப்பதாக யுனிசெஃப் கூறுகிறது.