August

August

வணங்கா மண் நிவாரணப் பொருட்களை இவ்வாரத்திற்குள் இறக்க ஏற்பாடு – இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிப்பு

ship121212.jpgயுத்தத் தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களால் வணங்கா மண் கப்பலின் ஊடாக அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்களை, இவ்வாரத்திற்குள் இறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

பொருட்களை இறக்கி, அதனை விநியோகிப்பதற்கு கொழும்புத் துறைமுகம் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும், இவ்வாரத்திற்குள் பொருட்களை இறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கைக்கு பாரியளவில் நிதி உதவி தேவைப்படுகிறது – கோத்தபாய

gothabaya.jpgயுத்தத் தினால் இடம்பெயர்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவ இலங்கைக்கு பாரிய அளவில் சர்வதேச நிதியுதவி தேவைப்படுகிறது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பி.பி.சி.க்கு அளித்த பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் அமெரிக்கா, ஜப்பான் போன்றவை உட்பட நன்கொடை நாடுகளினால் உறுதியளிக்கப்பட்ட தொகையிலும் பார்க்க மிக அதிக தொகையை நாம் எதிர்பார்க்கிறோம். வடபகுதியில் அரசாங்கத்தினால் நடத்தப்பட்டு வரும் முகாம்களில் சுமார் மூன்று இலட்சம் மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக இந்த உதவி தேவைப்படுகிறது. 

கதிர்காம தீமிதிப்பில் 100 பேர் படுகாயம்

katharakama.jpgகதிர்காமம் முருகன் கோவிலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தீ மிதிப்பில் 100 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இதில் 50 பேர் மோசமான எரி காயங்களுடன் கதிர்காமம் மற்றும் அம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கதிர்காம முருகன் ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற இத் தீ மிதிப்பு நிகழ்வில் 417 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 100 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதியளவு அனுபவமற்றவரும் ஆசாரங்களைக் கடைப்பிடிக்காதவருமான ஒருவரின் வழிகாட்டலில் தீ மிதிப்பு இடம்பெற்றமையே இவ்வசம்பாவிதம் நிகழ காரணமென கோவில் நிர்வாகமும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

நொச்சிமோட்டைப் பிரதேசத்தில் நாளை மீள்குடியேற்றம் ஆரம்பம்

sri-lankan-housing.jpgவவுனியா மெனிக்பார்மில் தங்கியுள்ள இடம்பெயர்ந்தவர்களில் 1500 பேரை ஒமந்தை நொச்சிமோட்டைப் பிரதேசத்தில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இப்பிரதேசங்களில் புலிகளால் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதோடு பொது மக்கள்  பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வீதிகள் புனரமைக்கப்பட்டு நீர் மற்றும் மின்சார வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய வகையில் ஒமந்தைச் சோதனைச் சாவடியை அங்கிருந்து பின்வாங்கப்பட்டு வேறு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்-கொழும்பு ஒருங்கிணைக்கப்பட்ட ரயில் பஸ் சேவை

bussss.jpgயாழ்ப் பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் ஒருங்கிணைக்கப்பட்ட ரயில் பஸ் சேவை ஒன்றை நடத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.  இத்திட்டத்தின் ஓர் அங்கமாக கொழும்பு கோட்டையில் இருந்து வவுனியா வரை ரயில்சேவை இடம்பெறுகிறது. இந்த ரயில் மூலம் யாழ்ப்பாணத்துக்கு பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் வவுனியாவிலிருந்து பஸ் மூலம் எஞ்சிய தூரத்தை பயணிக்க இரண்டாம் கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் செல்கின்றவர்களும் முதலில் பஸ் மூலம் யாழ்ப்பாணத்திலுருந்து வவுனியாவுக்குச் சென்று அங்கிருந்து ரயில் மூலம் கொழும்பு நோக்கி புறப்படவேண்டும்.

யாழ் கொழும்பு பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் வசதி கருதி போக்குவரத்து அமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. வெகு விரைவில் இத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.

தென் மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளது

election000.jpgதென் மாகாண சபை நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அரச அச்சகக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மாகாண சபையின் பதவிக் காலம், எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவடைய இருக்கின்ற நிலையிலேயே நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. கலைக்கப்பட்ட தென் மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வது மற்றும் தேர்தல் நடத்துவதற்கான திகதி குறித்து இன்னும் சில தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலைத் தவிர,  ஏனைய 7 மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னரே அந்த மாகாண சபைகள் கலைக்கப்பட்டு,  அவற்றிற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டதுடன்,  அதில் 6 மாகாண சபைகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம்

rajanikanth.jpgரஜினி காந்த் அரசியலுக்கு வருவது குறித்து எந்திரன் படத்துக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் அன்ன தானம் வழங்க வந்த அவர் பேட்டி அளிக்கையில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கேயோ பிறந்து,  தமிழகம் வந்து அனைவரின் மனதிலும் ரஜினி நீங்காத இடம் பிடித்துவிட்டார். மக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவார்.  இது குறித்து எந்திரன் படம் வெளிவந்த பிறகு விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். தற்போது கிருஷ்ணகிரி அருகே நாச்சியார்குப்பத்தில் எங்கள் தாய்,  தந்தை நினைவாக திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. எந்திரன் படம் வெளிவந்த பிறகு மணி மண்டபம் கட்ட இருக்கிறோம் என்றார் அவர்.

ஆசனம் ஒன்றையேனும் பெறாத கட்சிகளின் விருப்புவாக்குகள் எண்ணப்பட மாட்டாது – தேர்தல்கள் திணைக்களம் தீர்மானம்

election000.jpgதேர்தல் வாக்களிப்பின் போது,  ஓர் ஆசனத்தையேனும் பெற்றுக்கொள்ளாத கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் விருப்பு வாக்குகளை எதிர்காலத்தில் எண்ணாமல் விடுவதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை ஊவா மாகாண சபை, யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை ஆகிய தேர்தல்களிலிருந்து அமுல்படுத்தப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேர்தல்களில்,  கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகளை எண்ணியதன் பின்னர் அவற்றுக்குக் கிடைத்துள்ள ஆசனங்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும். அதற்கு பின்னரே சகல கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் உறுப்பினர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் எண்ணப்படும்.

எனினும் எதிர்வரும் 8 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்று தேர்தல்களின் போது ஒரு ஆசனத்தையேனும் பெற்றுக்கொள்ளாத கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களின் விருப்பு வாக்குகள் எண்ணப்படமாட்டாது.

மொத்த வாக்குகள் எண்ணப்பட்டதன் பின்னர் ஒரு ஆசனத்தையேனும் பெற்றுக்கொள்ளாத கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் பிரதிநிதிகள் வாக்கு எண்ணும் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்திய மருத்துவ சேவை நீடிப்பு – இந்திய அரசாங்கம் தெரிவிப்பு

sri-lankan-doctors.jpgஇடம் பெயர்ந்த மக்கள் நலனுக்காக் வவுனியா முகாம்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய வைத்திய உதவிச் சேவை மேலும்; இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே மருத்துவமனையின் சேவைகள் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் இந்திய ஆயுத படையினர் தங்களது சேவைகளை செய்து வருகின்றனர். இந்த வெளிக்கள மருத்துவ மனையில் அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள்,  குழந்தைகளுக்கான மருத்துவ நிபுணர்கள், பெண் மருத்துவ அதிகாரிகள் ஆகியோர் உட்பட 60 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்

கடந்த மார்ச் மாதத்திலிருந்து பணியாற்றி வந்த முதலாவது மருத்துவர் குழுவை மாற்றிய இந்திய அரசாங்கம் ஜூலை மாதம் மற்றுமொரு குழுவை அனுப்பி இருந்தது. இதுவரை இக்குழுவினர் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளது.

ஐ.நா சமூக, பொருளாதார ஆணைக்குழு தலைவராக லலித் வீரதுங்க நியமனம்

lalith.jpgதாய் லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கான தலைமைப் பொறுப்பு மீண்டும் இலங்கைக்குக் கிடைத்திருக்கின்றது.

அதற்கேற்ப ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உலக பொருளாதார மற்றும் சமூக சங்கத்தின் தகவல் தொழில் நுட்ப குழுவுக்கான தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். ஏனைய நாடுகளின் ஏகோபித்த அபிப்பிராயத்தின் பிரகாரம் லலித் வீரத்துங்க இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அங்கத்துவ நாடுகளின் அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் தொடர்பான கொள்கையாக்கங்களில் தகவல் தொடர்பாடல் உத்தி முறைகளை உள்வாங்கிக் கொள்தல், பிராந்திய அடிப்படையில் கணினி விண்ணப்பங்களைப் பயன்படுத்தல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மனிதவளத்தைக் கட்டியெழுப்புதல், அனர்த்த முகாமைத்துவம் போன்றவற்றில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அதிகபட்சம் பயன்படுத்தல் என்பனவற்றில் கூட்டாகச் செயற்படுதல் என்பன இக்குழுவின் நோக்கமாகும்.

கடந்த ஆண்டும் அங்கத்துவ நாடுகளின் ஏகோபித்த அபிப்பிராயத்தின்படி இக்குழுவுக்கான தலைமைத்துவப் பொறுப்பு இலங்கைக்குக் கிடைத்தது. இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறைக்குக் கிடைத்த கெளரவமாக இது அமைகின்றது.

இலங்கை கடந்த காலங்களில் காட்டிய அடைவுகள் இப்பதவி இலங்கைக்குக் கிடைத்தமைக்கான காரணமாகும் என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். இதன் உறுப்புரிமை நாடு என்றவகையில், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் இலங்கை முக்கியமான கட்டங்களைத் தாண்ட வேண்டியிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். சில ஆண்டுகளாக மஹிந்த சிந்தனை திட்டத்தில் உள்ள தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மிகவும் அக்கறையாக அவதானித்து வருகின்றன.

கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்பும் வகையில் இலங்கையில் பல தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுக்கான ஒரு சர்வதேச அங்கீகாரமாக லலித் வீரதுங்கவின் நியமனம் கருதப்படுகின்றது.