March

March

தையிட்டி விகாரை விடயத்தில் என்பிபி நியாயமாக நடக்கும் என வாக்குறுதி !

தையிட்டி விகாரை விடயத்தில் என்பிபி நியாயமாக நடக்கும் என வாக்குறுதி !

 

யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பில் நேரில் சென்று ஆராயவுள்ளதாகவும் இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என தான் நம்புவதாகவும் புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார் .

பத்தாவது பாராளுமன்றத்தின் புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சர் தலைமையில் கூடியது. அப்போது யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பில் குழுவில் வினவப்பட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார் .

இனங்களுக்கிடையில் சுமுகத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொள்ளும் . யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை அமைந்துள்ள இடத்திற்கு விஜயம் செய்து அதனைப் பார்வையிடவுள்ளேன் , இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என நம்புகின்றேன் என்றார்.

பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத இலங்கைக்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவையில்லை !

பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத இலங்கைக்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவையில்லை !
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டின் அடிப்படையில் உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
பொருளாதார விஞ்ஞானம் மற்றும் சமாதானத்திற்கான சர்வதேச நிறுவனத்தால் பயங்கரவாத தாக்கத்தின் அடிப்படையில் நாடுகளின் தரவரிசையின்படி உலகளாவிய பயங்கரவாத குறியீடு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த குறியீட்டில் பரிசீலிக்கப்பட்ட 163 நாடுகளில் இலங்கை 100 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக 12வது வருடாந்த பயங்கரவாத குறியீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி முதல் மூன்று இடங்களில் புர்கினா ஃபாஸோ (Burkina Faso – West African country), பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகள் காணப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டில் இந்தக் குறியீட்டில் 36வது இடத்திலிருந்த இலங்கை இந்த வருடம் 100 இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
64 இடங்கள் பின்தங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவொரு தீவிரவாதச் சம்பவங்களும் பதிவாகாத நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பின்னர் இதுவரை பாரிய பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை. அந்த வகையில் இலங்கை பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் குறைப்பதில் தெற்காசிய வலயத்தில் மிகவும் முன்னேறிய நாடாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் தொடர்ச்சியாக நாட்டிலிருந்து புலம்பெயரும் தமிழர்களின் அகதி விண்ணப்ப கோரிக்கைகளில் இந்த விடயம் கணிசமானளவு தாக்கம் செலுத்தலாம். தமிழர்களைப் பொறுத்தவரை யுத்தத்தின் பின்னர் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளாலேயே அவர்கள் புலம்பெயர்ந்து வருவதாக தமது அகதி விண்ணப்பக் கோரிக்கைகளில் குறிப்பிடுகின்றனர்.
அரச துணை இராணுவப் படைகளின் அட்டகாசங்கள், அரச புலனாய்வுத்துறையினரின் அதாவது பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் கைதுகள், சித்திரவதைகள் மற்றும் விசாரணைகள், தீர்க்கப்படாத காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, விடுவிக்கப்படாத காணிகள், வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் மற்றும் சட்டவிரோத விகாரைகள் போன்ற இன்ன பல காரணங்களே அகதித் தஞ்ச கோரிக்கைகளுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகின்றது. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை மழை பொய்ந்து முடிந்தும் தூறல் விடவில்லை என்ற நிலை தான் உள்ளது.
இதேவேளை உள்நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கூறி தமிழர் பகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கம் குறித்து ஆக்கப்பூர்வமான அறிவிப்புக்களை வெளியிடாத சூழல் நீடிப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்ககோரியும் அத்தியாவசிய பொருட்கள் மீதான வற் வரியை நீக்க கோரியும் யாழில் கையெழுத்து போராட்டம் ஒன்று நேற்றையதினம், மக்கள் பேரவை இயக்கத்தின் எற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது. இந்த கையெழுத்து போராட்டத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
புதிய என்பிபி அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தீர்வை முன்வைக்கும் போது தான் இலங்கையில் நீடித்த சமாதானத்தை காண முடியும்.

பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் ! சஜித் பிரேமதாஸா கண்டனம் – அவரின் யாழ் அமைப்பாளர் பாலியல் சுரண்டல் செய்கின்றார் !

பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் ! சஜித் பிரேமதாஸா கண்டனம் – அவரின் யாழ் அமைப்பாளர் பாலியல் சுரண்டல் செய்கின்றார் !
அநுராதபுரம் வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் மருத்துவர் கடமை முடிந்து மார்ச் 10 ஆம் திகதி மாலை 6:30 மணியளவில் தனது விடுதிக்கு திரும்பியிருந்தார். அப்பொழுது இனந்தெரியாத ஆண் ஒருவர் விடுதிக்குள் நுழைந்துள்ளார். அந்த நபர் மருத்துவரை கத்தியை காட்டி பயமுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட 32 வயதான பெண் மருத்துவர் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும் சந்தேக நபரை உடனடியாக கைது செய்யக் கோரி அநுராதபுர வைத்தியசாலை மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயத்தில் மருத்துவமனை நிர்வாகமும் அசிரந்தையாக இருந்துள்ளது. மருத்துவர்கள் தங்கும் விடுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமை மருத்துவமனை நிர்வாகத்தின் தவறாகும்.
கொல்கத்தாவில் 31 வயதான பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது இந்தியாவையே உலுக்கியுள்ளது.
இந்த பாலியல் வன்கொடுமையை புரிந்த நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடிய சிப்பாய் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதேமாதிரி கடந்த வருடம் இந்தியாவில் கல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் தேவை என நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் வலியுறுத்தப்பட்டிருந்தது. சஜித் பிரேமதாசாவின் யாழ் மாவட்ட பிரதம அமைப்பாளரே ஒரு பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான நபர். பாலியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் வெற்றிவேலு ஜெயேந்திரனுடன் தைப்பொங்கல் விழா கொண்டாடும் சஜித் பிரதேமதாசவின் இரட்டை வேடம் நகைப்பிற்கிடமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரதான சந்தேக நபரான முன்னாள் இராணுவச் சிப்பாயை கைது செய்வதற்காக 5 பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளது என வலயத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹெவா புத்திரன தெரிவித்தார்.
இலங்கையில் அண்மை காலங்களில் அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டுக் கலாச்சாரம் மற்றும் சட்டவிரோத சாராய உற்பத்தி , பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பாதாள உலக குழுக்களின் தாக்குதல்கள் என பல சமூக விரோத செயற்பாடுகளில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய இராணுவ வீரர்கள் தொடர்புபட்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய வீரர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை எழுநூறுக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கது.

ரெலோ முக்கியஸ்தர் விந்தனின் புதிய அரசியல் அவதாரம் !

ரெலோ முக்கியஸ்தர் விந்தனின் புதிய அரசியல் அவதாரம் !

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்னம் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். அவரும் அவரது மகனும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் முன்னிலையில் மார்ச் 10 ஆம் திகதி தமிழரசுக் கட்சியில் இணைந்து உறுப்புரிமைகளையும் பெற்றுக் கெண்டுள்ளனர்.

ரெலோக்குள் நிலவிய உட்பூசல்கள் காரணமாகவே விந்தன் வெளியேறி தமிழரசுக் கட்சிக்குள் சரணடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மார்ச் 23 இல் 2024 இல் வவனியாவில் நடந்த ரொலோவின் பொதுக்குழு கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் அக்கட்சியின் தலைவராகவும் விந்தன் நிர்வாகச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். பின்னர் ஏற்பட்ட உட்கட்சி முறுகல்களை தொடர்ந்து விந்தன் கனகரட்ணம் பாராளுமன்றத் தேர்தலின் போது ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தார். நிதிச் செயலாளர் சுரேன் குருசாமியையும் விமர்சித்து யாழ் ஊடக அமையத்தில் பேட்டியளித்திருந்தார். விந்தன் பாராளுமன்ற தேர்தலில் யாழ்மாவட்டத்தில் போட்டியிட தயாராக இருந்த போதும் அவருடைய பெயர் ரெலோவின் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

அதேநேரம் ரெலோ கட்சி விந்தன் கனகரட்ணம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியில் இருந்து விலக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

யாழ் நூலக எரிப்பு – தமிழக ஹிந்தி மொழித் திணிப்புடன் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் காட்சியாகிறது !

யாழ் நூலக எரிப்பு – தமிழக ஹிந்தி மொழித் திணிப்புடன் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் காட்சியாகிறது !

 

தென்னிந்திய நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி இருவரும் இலங்கையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்கள் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். மும்மொழிக் கொள்கையை மறைமுக இந்தித் திணிப்பாக கருதும் தமிழ்நாட்டு மக்கள் அதனை கடுமையாக எதிர்க்கின்றனர். அந்தவகையில் மொழித் திணிப்பை எதிர்க்கும் கதைக்களத்தைக் கொண்ட பராசக்தி படம் இலங்கையிலும் படமாக்கப்படவுள்ளது.

‘சூரரைப் போற்று’ என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய பெண் இயக்குநர் சுதா கொங்கரா ‘பராசக்தி’ திரைப் படத்தையும் இயக்குகிறார்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் இடம்பெறவுள்ளது. இதில் யாழ் நூலக எரிப்பை மையப்படுத்திய காட்சிகளும் படத்தில் இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் தேசிய சட்டத்தரணிகள்: தமிழ்த்தேசியமா? யுரீயூப்பர் கிருஷ்ணாவின் பணமா !

தமிழ் தேசிய சட்டத்தரணிகள்: தமிழ்த்தேசியமா? யுரீயூப்பர் கிருஷ்ணாவின் பணமா !

 

கள்ள உறுதி எழுதும் 10 யாழ் சட்டத்தரணிகள் விஸ்வலிங்கம் திருக்குமரன் தலைமையில் எஸ். கே. கிருஷ்ணாவை பிணை எடுக்க மல்லாகம் நீதிமன்றில் மல்லுக்கட்டினர். பாலியல் துஷ்பிரயோக குற்றவாளி பிரேமானந்தாவின் சிஷ்யன் சி.வி. விக்னேஷ்வரன் கட்சி, விஸ்வலிங்கம் மணிவண்ணனின் சகோதரனே திருக்குமரன்.

மணிவண்ணன் முன்னாள் யாழ் மேயர். அவருடைய அரசியல் குருவான சி. வி. விக்னேஷ்வரன் பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக பார் லைசன்ஸ் கொடுத்த பெருந்தகை. எனவே மணிவண்ணனின் அண்ணாவிற்கு அபலை மக்களின் வறுமையை மலினமாக படம் பிடித்து வீடியோ போட்டு சம்பாதிக்கும் எஸ். கே. கிருஷ்ணா போன்றவர்கள் கதாநாயகனாக தெரிந்ததில் ஆச்சரியம் இல்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

சமூக அக்கறையுடைய சட்டத்தரணிகள் பணத்திற்காக சமூகச் சீரழிவுகளுக்கு துணை போக மாட்டார்கள். எஸ். கே. கிருஷ்ணா விவகாரத்தில் பல பெண்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது. தனிநபர் அந்தரங்கங்களை பொதுவெளியில் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டி பணம் சம்பாதித்த ஒரு நபரை பணத்திற்காக காப்பற்ற நீதிமன்றம் வந்த சட்டத்தரணிகளை பொதுமக்கள் கண்டிக்கின்றனர்.

எஸ். கே. கிருஷ்ணா போன்றவர்களால் போடப்படும் ஹெல்ப்பிங் வீடியோக்கள் நவீன வகையான சுரண்டல். உதவி கோரும் காணொளிகள் தோன்றும் பெரும்பாலான அப்பாவிகளுக்கு தாங்கள் பயன்படுத்தப்படுகிறோம், சுரண்டப்படுகிறோம் மற்றும் அவமானப்படுத்தப்படுகிறோம் என்பதே தெரிவது இல்லை. எஸ். கே. கிருஷ்ணாவால் பதிவேற்றப்பட்ட அனைத்து காணொளிகளும் யுரீயூப் தளத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். நீதிமன்றம் அதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் இளவாலை பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிகின்றன. சிரேஷ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் தலைமையிலான 10 கள்ள உறுதி எழுதும் சட்டத்தரணிகளுக்கு ஈடுகொடுத்து மல்லாகம் நீதிமன்றில் பொலிஸ் உத்தியோகத்தர் ராகவன் திறமையாக வாதாடியிருந்தார்.

யாழ்ப்பாண சட்டத்தரணிகள் வாள்வெட்டுக்குழு, போதைப் பொருள் மாபியா, மண் மற்றும் மரக் கொள்ளை மாபியா மற்றும் மருத்துவ மாபியா என அனைத்து மாபியாக்களின் பின்னாலும் நிற்கின்றார்கள். இதிலும் தமிழ்த் தேசியம் பேசி அரசியலில் ஈடுபடும் சட்டத்தரணிகள், தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காகவும் பணத்திற்காகவும் குற்றவாளிகளை காப்பாற்றுகின்றனர். சட்டத்தரணி சையிக்கிள் கட்சி சுகாஷ் வட்டுக்கோட்டை குருவி வாள்வெட்டுக்குழுவை காப்பாற்றி வருகிறார். குருவி குழு வெள்ளாள சாதியின் பெயரால் வட்டுக்கோட்டையில் நிகழ்த்தும் வன்முறைகளின் பின்னால் அவர்களுக்கு பாதுகாப்பளிப்பது சுகாஷ் சட்டத்தரணியே என்பது ஊரறிந்த ரகசியம்.

யாழ்ப்பாணத்தில் கிளீன் செய்யப்பட வேண்டிய முக்கிய பிரச்சினை வாள்வெட்டு மற்றும் வன்முறைக் கும்பல்களுக்கு முடிவு கட்டுவது தான். என்பிபி அரசாங்கத்தின் கவனத்திற்கு.

தமிழ் – முஸ்லீம் உறவுக்கு சாவு மணி அடிக்கும் பா உ அர்ச்சுனா !

தமிழ் – முஸ்லீம் உறவுக்கு சாவு மணி அடிக்கும் பா உ அர்ச்சுனா !

உளறுவாயனாகிய பா உ அர்ச்சுனா நுனிப்புல் மேய்ந்த கூகிள் அறிவாளியாக வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் – முஸ்லீம் உறவுநிலையை மிகக் கீழ் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. நேற்று முன் தினம் தன்னுடைய இஸ்லாமோபோபியா கருத்துக்களைத் தெரிவித்து விட்டு இறுதியில் முஸ்லீம்களை எங்களின் இரத்தம் என்று நீலிக் கண்ணீர் வடித்தார்.

நேற்று அதே அர்ச்சுனா முஸ்லீம் மக்களுக்கு எதிராக இனக் குரோதத்தை த் தூண்டும் வகையில் பாராளுமன்றத்தில் கூச்சலிட்டுள்ளார். பா உ அர்ச்சுனாவின் செயற்பாடுகள் சமூகத்தில் உள்ள மலினமான உணர்வுகளைத் தூண்டி மூன்றாம் தர அரசியல் செய்வதாகவே உள்ளது. அதன் உச்சகட்டம் நேற்று பாராளுமன்றத்தில் நடந்தேறியது.

பா உ அர்ச்சுனா ஒடுக்கப்பட்ட மக்களோடு இல்லை. அவர்களுக்கு எதிராகவே செயற்படுகின்றார். தன்னை யாழ் சைவ வேளாள ஆண் ஆதிக்கத்தின் பிரதிநிதியாகவே இன்று வரை வெளிப்படுத்தி வருகின்றார். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிற்கவில்லை, கல்வி ரீதியில் பின் தங்கியவர்களை மதிப்பதில்லை, பிரதேச ரீதியில் யாழ் மீதான அதித மேலாதிக்க கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றார், பெண்களை இரண்டாம் தரப் பிரஜைகளாகவே கருதி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

கிருஷ்ணபுரம் கிராம சேவகரைத் தாக்கிய பாலியல் தொழிலாளி !

கிருஷ்ணபுரம் கிராம சேவகரைத் தாக்கிய பாலியல் தொழிலாளி !

 

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் கிராம சேவகர் மீது பெண்ணொருவர் படுமோசமாக கெட்டவார்த்ததைகளால் பேசித் தாக்கிய சம்பவம் மகளீர் தினமான மார்ச் 8இல் நடைபெற்றுள்ளது. தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட பெண் விநாயகபுரம் பகுதியில் நன்கு அறியப்பட்ட வசந்தா என்றும் இவர் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுபவர் என்றும் தெரியவருகின்றது. அண்மையில் கிளிநொச்சியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 15 வயதுச் சிறுமியையும் இவரே இத்தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கிருஷ்ணபுரம் கிராம சேவகர் அண்மையிலேயே பணிக்கு பொறுப்பேற்று வந்துள்ளார். அன்றைய தினம் வசந்தாவின் மகள் கிராம சேவகரிடம் நற்சான்றிதழ் பத்திரம் பெற வந்துள்ளார். ஆனால் காலை முதல் பலமணி நேரம்வரை கிராம சேவகர் அப்பெண் பற்றிய தகவல்களைக் கேட்டதாகவும் அதனால் ஆத்திரமடைந்த வசந்தா பாலியல் வார்த்தைப் பிரயோகங்களை அள்ளி எறிந்து கிராம சேவகரை தாக்கினார்.

தாயுடைய தொழிலை வைத்து மகளுக்கு நற்சான்றிதழ் கொடுக்க மறுத்ததையடுத்தே இப்பிரச்சினை இந்நிலைக்குச் சென்றது. நற்சான்றிதழ் பெறவந்த பெண் கொழும்பில் ஒரு கூட்டத்திற்குச் செல்வதற்கே மாலை மூன்று மணிக்கு முன் நற்சான்றிதழ் பெற வேண்டி வந்துள்ளார். அதனை வழங்க மறுத்தாலும் பரவாயில்லை ஆனால் தாயின் தொழிலை வைத்து அவருக்கு நற்சான்றிதழ் குறித்த நேரத்தில் வழங்க மறுக்கப்பட்டதே பிரச்சினையானது.

பாலியல் தொழிலில் பயன்பெறும் ஆண்கள் பொதுவாக எவ்வித பிரச்சினைக்கும் உள்ளாவதில்லை. ஆனால் அத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் அனைத்துப் பழியையும் சுமக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட ஆண்களைப் பாதுகாக்கும் சமூகம் பெண்களை போட்டு மிதிக்கின்ற நிலையே தொடர்கின்றது. இந்தப் பெண்கள் இத்தொழிலில் ஈடுபடாவிட்டால் நாட்டில் பாலியல் வன்முறைகள் மிக மோசமாகிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதற்கிடையே பா உ அர்ச்சுனா தன்னுடைய அதிகப் பிரசங்கித் தனத்தால் ரிக்ரொக்கில் பொழுதுபோக்காக இரட்டை அர்த்தத்தில் பதிவுகளையிடும் கிளிநொச்சிப் பெண்ணை பாலியல் தொழிலாளி என்று முத்திரைகுத்தி அவருடைய பெயரையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார். பா உ அர்சுனாவே பாலியல் வக்கிரம் கொண்ட பதிவுகளை வெளியிட்டுள்ளார். தன்னுடைய தங்கை என்று சொல்லும் பெண் தொடர்பிலும் இவர் முறையாகப் பேசவில்லை. அர்ச்சுனாவின் ரிக்ரொக் நண்பர்கள் பலரும் கூட மிக மோசமான பாலியல் வக்கிரம் கொண்ட சொல்லாடல்களை பயன்படுத்துகின்றனர். அது பற்றி எந்தவொரு ஆணும் பாராளுமன்றத்தில் அல்ல வெளியேயும் வாய் திறப்பதில்லை. குரலற்ற பெண்கள் என்றதும் தூக்கித் தூக்கி அடிக்கிறார்கள்.

அமெரிக்காவை தோற்கடிப்போம் – கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி !

அமெரிக்காவை தோற்கடிப்போம் – கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி !

இலங்கைக்கு வெளியே தமிழ் மக்கள் அதிகம் வாழும் கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால் ட்ரம் கனடாவை தங்களுடைய 51வது மாநிலம் என்று குறிப்பிட்டதும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 வீத இறக்குமதி வரியை அறிவித்ததும் தெரிந்ததே. இந்நிலையில் புதிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான வர்த்தக போரில் பெறுவோம் எனச் சூளுரைத்துள்ளார்.

அமெரிக்கர்கள் எங்களை தவறாக எடைபோடக்கூடாது ஹொக்கியை போல வர்த்தகப்போரிலும் அமெரிக்காவை தோற்கடிப்போம் என தெரிவித்துள்ள மார்க் கார்னி, அமெரிக்காவின் வரிகளிற்கு பதில் வரிகளை விதிக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2007 இல் அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட பொருளாதார வீழ்ச்சி அலை உலகைத் தாக்கிய காலகட்டத்தில்இ மார்க் கார்னி கனடாவின் மத்திய வங்கியின் தலைவராக இருந்தவர். அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் மத்திய வங்கியான பாங்க் ஒப் இங்கிலன்டின் தலைவராகவும் இருந்தவர். உலகின் இரு செல்வந்த நாடுகளின் மத்திய வங்கிகளின் தலைவராக இருந்த ஒரேயொருவர் மார்க் கார்னி.

இவருடைய ஆட்சியின் கீழ் கனடா பொருளாதார ரீதியில் மீட்சிபெற நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரமின் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்காவை எல்லை நாடாகக் கொண்ட கனடாவை மிகப் பாரிய அளவில் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது. மார்க் கார்னியின் ஆட்சி எவ்வாறு இதனை எதிர்கொள்ளப் போகின்றது என்பதை ஐரோப்பிய தலைவர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றார்கள்.

மார்க் கார்னி குடிவரவாளர் தொடர்பில் என்ன நடவடிக்கைகளை எடுப்பார் என்பதை இலங்கைத் தமிழர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வன்னிப் பெருநிலப்பரப்பில்: கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் தொகையிலும் பார்க்க அதிகமான தமிழர்கள் ரொறன்ரோ ஸ்காபரோவில் வாழ்கின்றனர். இவர்களுடைய எதிர்காலம் என்னவாகும் என்பதெல்லாம் வரும் நாட்களில் தெரியவரும்.

 

சர்வதேச நாணயநிதியம் தேசிய மக்கள் சக்தி அரசை வரவேற்கின்றது! உதய கம்பன்பில கரித்துக் கொண்டுகிறார் !

சர்வதேச நாணயநிதியம் தேசிய மக்கள் சக்தி அரசை வரவேற்கின்றது! உதய கம்பன்பில கரித்துக் கொண்டுகிறார் !

 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை எதிர்பார்ப்புக்கும் மேலாகக் கட்டியெழுப்புவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு அடுத்த ஆண்டில் 7 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதனால் நாட்டில் ஏற்ப்ட்டு வரும் பொருளாதார மீட்சியை தடுக்கும் வகையிலான வேலைநிறுத்தங்கள் போராட்டங்களை தவிர்க்குமாறும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

ஆனால், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஐந்தரை மாதங்களில் பெற்றுள்ள கடன் தொகை 5,156 பில்லியன் ரூபாய் என்றும், இந்தப் பணத்தில் அது என்ன செய்துள்ளது என்பதை நாட்டிற்கு வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் பிவிதுர ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில கூறுகிறார்.

உதய கம்மன்பில இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த போது, நம் நாடு வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாததால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது அனைவரும் அறிந்த உண்மை. அப்படியானால், இந்த ஆண்டு பட்ஜெட் உரையை முன்வைக்கும்போது, அரசாங்கம் எவ்வளவு கடனைச் சந்தித்துள்ளது என்பதை ஜனாதிபதி நாட்டிற்கு வெளிப்படுத்துவார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பட்ஜெட் உரையில் அப்படி எதுவும் கூறப்படவில்லை. எனவே, எதுவாக இருந்தாலும், மிக உயர்ந்த மட்டத்தில் கடனை எடுத்துள்ளது என்பதை நாட்டிற்கு வெளிப்படுத்துவது நமது கடமையாகும் என தெரிவித்துள்ளார்.