March

March

கிருஷ்ணபுரம் கிராம அலுவலரை தாக்கிய பெண்கள் கைது !

கிருஷ்ணபுரம் கிராம அலுவலரை தாக்கிய பெண்கள் கைது !

 

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் கிராமசேவை உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் 8 இல் சர்வதேச மகளிர் தினத்தன்று இத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. விநாயக புரத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் என கூறப்படும் பெண்ணின் மகள் கிராம சேவகரிடம் நற்சான்றிதழ் பெற சென்றிருந்தார். அப்போது கிராம சேவகர் தாயின் தொழில் தொடர்பில் மகளிடம் சில கேள்விகள் கேட்டு நற்சான்றிதழ் வழங்குவதை இழுத்தடித்தால் ஏற்பட்ட முறுகல் நிலையே கிராம சேவகர் மீதான வன்முறை தாக்குதலாக முடிந்தது.

கைதான இரு பெண்களும் 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அறுபது நாட்களில் சிறுவர்களுக்கு எதிராக 1400 குற்றச்செயல்கள் !

அறுபது நாட்களில் சிறுவர்களுக்கு எதிராக 1400 குற்றச்செயல்கள் !

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 1,401 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் அதிகளவிலான முறைப்பாடுகள் சிறுவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பானவை என குறிப்பிட்டுள்ளது.

மேலும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைச் செயல்கள் தொடர்பில் 332 முறைப்பாடுகளும், சிறுவர்களின் கல்வி உரிமை மீறப்படுவது தொடர்பில் 279 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

இந்திய அரசு தெரிந்து கொண்டே அனுமதிக்கிறது குற்றம் சாட்டுகிறார் அமைச்சர் சந்திரசேகர் !

இந்திய அரசு தெரிந்து கொண்டே அனுமதிக்கிறது குற்றம் சாட்டுகிறார் அமைச்சர் சந்திரசேகர் !

 

கேரள, கர்நாடக கடற்பரப்புக்குள் நுழையாத தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே நமது எல்லைக்குள் நுழைந்து வாழ்வாதாரத்தை அழிக்கிறார்கள் என்கிறார் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.

இந்தியாவுக்கு இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிக்கின்றார்கள் என்பது நன்றாகத் தெரியும். ஆனாலும் கூட இந்த சட்ட விரோத மீன்பிடி தொடர்கிறது நம் கடல் வளம் அழிக்கப்படுகிறது என பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்கள் ட்ரோலிங் இழுவை படகுகளின் மூலமாக மீன் பிடிப்பதால் இலங்கையின் கடல் வளங்கள் நாசமாக்குகின்றது. இந்த விடயம் இந்திய அரசின் மறைமுக சம்மதத்துடன் நடப்பதாகவே கருத முடியும் என்கிறார் அமைச்சர் சந்திரசேகர். இவ் விவகாரம் சம்பந்தமாக ஜனாதிபதி அநுர குமாரவோடு இன்னும் ஆழமான உரையாடல்கள் இடம்பெறவில்லை.

தமிழக மீனவர்கள் அருகிலுள்ள கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளின் கடற்பரப்புக்குள் சென்று மீன்பிடிப்பதில்லை. திட்டமிட்ட வகையில் நமது நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்து நமது வளத்தை அழிக்கிறார்கள். அத்துடன் நம்மை தொப்புள் கொடி உறவுகள் என்று வேறு சொல்கிறார்கள் என ஆதங்கப்பட்டார்.

எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் மிகத் தெளிவாக அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றோம். அத்துமீறினால் நமது சட்ட நடவடிக்கைகள் தொடரும். அதனால், தயவு செய்து தமிழ்நாட்டு மீனவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். எங்களுடைய கடல் எல்லையை மீற வேண்டாம். நீங்கள் வருவீர்களாக இருந்தால், கைது செய்யப்படுவீர்கள். கைது செய்யப்படுவது மாத்திரமல்ல. உங்களின் உடைமைகளும் இல்லாதுபோகும் நிலைமை ஏற்படும் என அமைச்சர் தமிழக மீனவர்களுக்கு வேண்டுகோளாக எச்சரித்தார்.

 

பாராளுமன்ற உறுப்பினர்கள் அர்ச்சுனா, ஹிஸ்புல்லா போன்ற குறைவிருத்தி அரசியல் வாதிகள் தமிழ் – முஸ்லீம் உறவை சிதைக்கின்றனர் !

பாராளுமன்ற உறுப்பினர்கள் அர்ச்சுனா, ஹிஸ்புல்லா போன்ற குறைவிருத்தி அரசியல் வாதிகள் தமிழ் – முஸ்லீம் உறவை சிதைக்கின்றனர் !

 

பாராளுமன்ற உறுப்பினர்கள் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா போன்றவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருந்த போதும் சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொள்கின்றனர் எனக் குற்றம்சாட்டுகின்றார் ஓய்வுபெற்ற சட்டத்தரணியும் அரசியல் செயற்பாட்டாளருமான மொகமட் நிஸ்தார். இவர் தேசம்நெற்க்கு முஸ்லீம் விவாவகம் விவாகரத்து பற்றிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்து இருந்தார். ஹிஸ்புல்லா அர்ச்சுனாவை பைத்தியம் என்றும் அவருக்கு வைத்தியம் செய்யப்பட வேண்டும் என்று சொல்வதும் அர்ச்சுனா ஹிஸ்-ஃபுல் என்றும் முளையில் எதுவுமில்லை என்று சொல்வதும் ஒன்பது வயதுப் பெண் பிள்ளையோடு உடலுறவுக்கு அனுமதிப்பவன் படித்தவனா நான் படித்தவனா என்றெல்லாம் பேசவது நாகரீகமாகத் தெரியவில்லை என்றார் மொகமட் நிஸ்தார்.

இலங்கையில் கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லீம் சட்டம் என மூன்று தனிநபர் சட்டங்கள் உள்ளன எனத் தெரிவிக்கும் மொகமட் நிஸ்தார் விவாவகம் – விவாகரத்து தொடர்பில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த சலீம் மஸ்ரூப் அவர்கள் இந்த முஸ்லீம் சட்டத்தை திருத்துவதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளார் அதே போல் தற்போது ரணிலின் கட்சியில் தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் சென்றுள்ள பைசர் முஸ்தபாவினுடைய தந்தையும் ஒரு பரிந்துரையை வழங்கியிருந்தார். இதில் எந்த பரிந்துரையை தெரிவு செய்வதென்பதில் முஸ்லீம் சமூகம் ஒரு முடிவுக்கு வரமுடியாதுள்ளனர் என்கிறார் மொகமட் நிஸ்தார்.

அன்றைய பாராளுமன்ற விவாதத்தில் அர்ச்சுனா பேசியது தவறல்ல எனத் தெரிவிக்கும் மொகமட் நிஸ்தார் அவர் விடயத்தை புரியாமல் தெரியாமல் பேசியதே தவறு என்றார். மேலும் முஸ்லீம் சமூகம் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கையை இதுவரை நடைமுறைக்கு கொண்டு வராதது தான் இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.

மீனவர்களுக்கான உதவித்திட்டம் தொடர்பாக ஜநா அதிகாரியும் கடற்றொழில் அமைச்சரும் கலந்துரையாடல்! 

மீனவர்களுக்கான உதவித்திட்டம் தொடர்பாக ஐ.நா அதிகாரியும் கடற்றொழில் அமைச்சரும் கலந்துரையாடல்!

ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட சேவைகள் பிரிவின் தெற்காசியாவுக்கான பணிப்பாளர் சார்லஸ் கெலனன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருடன் நேற்றையதினம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

அப்போது இலங்கையில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு பொறிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும் கடற்றொழிலாளர்களுக்குரிய திட்டங்கள் மற்றும் அதற்கான ஐநாவின் பங்களிப்பு உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் இதன்போது ஆராயப்பட்டது

பார்த்துப் பார்த்து செலவு செய்கிறோம் ஜனாதிபதி அநுர உருக்கம் ! 

பார்த்துப் பார்த்து செலவு செய்கிறோம் ஜனாதிபதி அநுர உருக்கம் !

 

இலங்கை தொழில்முனைவோர் உலக சந்தையில் தங்கள் பங்கைக் கைப்பற்றுவதற்குத் தேவையான ஆதரவை அரசாங்கம் வழங்கும். சர்வதேச தூதுவர்களை ஒருங்கிணைக்கும் செயல்முறையின் மூலம் உலக சந்தையில் தொழில் முயற்சியாளர்கள் பிரவேசிப்பதற்கான வலுவான திட்டத்தையும் அரசாங்கம் கொண்டுள்ளது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஷங்கரி-லா ஹோட்டலில் நடைபெற்ற இளம் இலங்கை தொழில்முனைவோர் மன்றத்தின் 26வது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு கணிசமான அளவு பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. முதலீட்டாளர்கள் எந்தவிதமான தரகுப்பணமும் செலுத்தாமல் முதலீடு செய்யக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் மக்களின் ஒவ்வொரு ரூபாயையும் பயன்படுத்தும் போது கடவுளின் பணியாகக் கருதி பயன்படுத்தப்படுவதை தனது அரசாங்கம் உறுதி செய்வதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஊழல் மோசடிக் குடும்பத்திலிருந்து வந்த ஜனாதிபதி : போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்திய முன்னாள் ஜனாதிபதியை கைது செய்கின்றார் !

ஊழல் மோசடிக் குடும்பத்திலிருந்து வந்த ஜனாதிபதி : போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்திய முன்னாள் ஜனாதிபதியை கைது செய்கின்றார் !

 

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டெர்டே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது உத்தரவைத் தொடர்ந்து மணிலா விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஹொங்கொங்கிலிருந்து திரும்பியவுடன் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்தது.

“மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார், 2016-2022 ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய “போதைப்பொருளுக்கு எதிரான போர்” தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார். டுட்டெர்டேவின் இந்த போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தில், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 6,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனால், மனித உரிமை அமைப்புகள் இந்த எண்ணிக்கை 30,000 வரை இருக்கலாம் என கூறுகின்றன, இதில் பலர் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஊழல் மோசடியாளர்களான பேர்டினன்ட் மார்க்கோஸ் – இமெல்டா மார்க்க்கோஸ் தம்பதிகள் 1980க்களில் பிலிப்பைன்ஸ் அரசியலில் இருந்து மக்களால் துரத்தியடிக்கப்பட்டனர். அமெரிக்க மற்றும் மேற்குலக ஆதரவு பெற்ற இத்தம்பதியினரின் புதல்வர் தற்போது புதிய ஜனாதிபதி ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி சேவைச் சந்தை கடைகள் தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் – புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் வெளியாருக்கு அல்ல ! கிளியில் மக்கள் போராட்டம்

கிளிநொச்சி சேவைச் சந்தை கடைகள் தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் – புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் வெளியாருக்கு அல்ல ! கிளியில் மக்கள் போராட்டம்

 

நேற்றைய தினம் கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர்கள் தமது கடைகளை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில் பிரதேச சபையின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக குற்றம் சாட்டியே வர்த்தகர்கள் கொட்டும் மழையிலும் போராடினர்.

போராட்டத்திற்கு தலைமை தாங்கிய வர்த்தகர் பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் அவர் வர்த்தகர்கள் போராடும் இடத்திற்கு வரவில்லை. ஏற்கனவே பிரதேச சபையால் மூன்று கட்டங்கள் கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு கட்டி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது உலக வங்கி அனுசரனையில் நாலாவது கட்டடம் கட்டப்பட்டுள்ளது. எட்டு கடைத்தொகுதிகளை உள்ளடக்கிய நான்காவது கட்டடத்தை கேள்வி கூறல் அதாவது ரென்டர் மூலம் வழங்குவதற்கு பிரதேச சபை பத்திரிகை மூலம் விளம்பரப்படுத்தியுள்ளது. இந்த விடயத்தினால் கொதிப்படைந்த வர்த்தகர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதேமாதிரியானவொரு பிரச்சினையே சாவகச்சேரி சந்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைகளை கேள்வி கோரல் மூலம் சாவகச்சேரி பிரதேச சபை நடவடிக்கைகளை எடுத்த போது எழுந்தது.

சாவகச்சேரி வர்த்தகர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு என்னவென்றால் கடைகளை கேள்விக் கோரலுக்கு விடும் போது வெளிமாவட்ட வர்த்தகர்களும் கடைகளை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. அதைத்தவிர வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழுபவர்கள் தமது உறவினர்கள் பெயரில் பெருந்தொகை பணத்தை கொடுத்து கடைகளை கேள்விக் கோரல் மூலம் எடுப்பதாகவும் கூறப்பட்டது. வெளிநாட்டு பணத்திற்கு ஈடுகொடுத்து உள்ளூர் வர்த்தகர்கள் கடைகளை கேள்விக் கோரல் மூலம் பெற முடியாத நிலை காணப்படுவதாகவும் கூறப்பட்டது.

கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர்களின் போராட்டம் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேற்றைய பாராளுமன்ற அமர்பில் குறிப்பிட்டிருந்தார்.

பட்டலந்த விசாரணை அறிக்கை ஒருவாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் !

பட்டலந்த விசாரணை அறிக்கை ஒருவாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்குபற்றிய அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஔிபரப்பான Head to Head நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துகள் பெரும் சலசலப்பை இலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து 88 தொடக்கம் 90 காலப்பகுதியில் இடம்பெற்ற பட்டலந்த படுகொலைகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய தகவல்கள் மீள சமூக வலைத்தளங்களில் தூசுதட்டப்பட்டு வருகிறது.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பட்டலந்த வதை முகாமுடன் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போன்றோர் மனித உரிமைகளை பாரதூரமான முறையில் மீறியுள்ளதால் அவர்களது பிரஜாவுரிமையை பறிப்பதற்கு தேவையான மேலதிக அதிகாரத்தை உயர் நீதிமன்றத்திற்கு வழங்குமாறு இது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முக்கிய பரிந்துரையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரஜாவுரிமை பறிக்கப்படலாம் என தகவல்கள் பரப்பப்படுகின்றன.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக தமிழர் !

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக தமிழர் !

 

கண்டி மேல் நீதிபதி சுமுது பிரேமச்சந்திரா, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பிரியந்த பேர்னாண்டோ மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகிய மூவரும் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நீதிவான், மாவட்ட நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதியாக அன்னலிங்கம் பிரேமசங்கர் சுமார் 28 ஆண்டுகள் நீதிச் சேவையில் கடமையாற்றியுள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.