2022

2022

நியூயோர்க்கில் தொடர் மாடிக் குடியிருப்பில் தீப்பரவல் 9 சிறுவர்கள் உள்ளிட்ட 19 பேர் பலி !

நியூயோர்க்கில் உள்ள தொடர் மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 9 சிறுவர்கள் உள்ளிட்ட 19 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் இந்த தீப்பரவலில் காயமடைந்த மேலும் 32 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க் நகர முதல்வர் எரிக் அடம்ஸ் (Eric Adams) தெரிவித்துள்ளார்.

அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

19 தளங்களை கொண்ட குறித்த தொடர் மாடிக் குடியிருப்பின் ஒவ்வொரு தளத்திலும் பலர் தீப்பரவலில் சிக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை மீட்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்களும், பாதுகாப்பு தரப்பினரும் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குற்றங்கள் நிரூபணம் – ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை !

மியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதால், இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் மோசடிகள் அதிகரிக்கின்றது! தமிழர்கள் தமிழர்களையே மோசடி செய்கின்றனர்!!!

இங்கிலாந்தில் பல்வேறு விதமான மோசடிகள் தொடர்ந்து வருவதும் இந்த மோசடிகளினால் அப்பாவிகள் பலர் பாரிய இழப்புகளுக்கும் உள்ளாகி வருவதும் தொடர்கதையாகி வருகின்றது. வியாபாரம், இலாப மீட்டுவது என்ற பெயரில் ஊரையடித்து உலையில் போடும் வேலைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். லண்டன் தமிழர்கள் சிலரும் தங்களை சமூகத் தலைவர்களாகக் காட்டிக்கொள்பவர்களும் கூட இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பணத்தை எப்படியாவது ஈட்டலாம் அதுவே தங்களது திறமை எனக்கருதும் இந்த உதவாக்கரைகள் தனிப்பட்ட பலரின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கு துணை போகின்றனர்.

இந்த மோசடிகளில் பெரும் இழப்பை ஏற்படுத்துவது வீட்டை வைத்து மேலதிக கடன்பெற்று முதலீடு செய்வது தொடர்பான மோசடிகள். ஹரோவில் இளம் தம்பதியினர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட சிலர் ஆதாரங்களை வழங்கி உள்ளனர். அவர்களுக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கைகளும் தயாராகி வருகின்றது. ஒரு வயதான தம்பதிகள் இவ்வாறான ஒரு முதலீட்டு திட்டத்தில் 200,000 பவுண்களை வழங்கி கடந்த சில மாதங்களாக எவ்வித வருமானத்தையும் பெறாமல் அவர்கள் இருக்கின்ற வீடே தற்போது வங்கியினால் விற்கப்படும் அபாய நிலைக்கு வந்துள்ளது. இவ்வாறு பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் வீடுகளை வாங்குவதற்கு சட்டத்தரணிகளுக்கு செலுத்தப்படுகின்ற பணத்தை ஒரு சில சட்டத்தரணிகள் கையாடல் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளனர். இவ்வாறு வீட்டை வாங்கவதற்கு வாங்குபவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 100,000 பவுண் வரை செலுத்திய தம்பதியினர் வீடும் வாங்காமல் அவ்வளவு பணத்தையும் இழந்து தொடர்ந்தும் வாடகை வீட்டில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

பப் அல்லது பார் – தவறணை நடத்துகிறோம் என்ற பெயரில் அரை நிர்வாண நடனங்களை ஏற்பாடு செய்து அவ்வாறான இடங்களில் போதைப்பொருட்களையும் கண்டும் காணாமல் அனுமதித்து இளம் சமூதாயத்தை அழிக்கும் தொழிலிலும் ஒரு சில தமிழ் தவறணை உரிமையாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அதீதமாக ஆசைப்பட்டு இல்லாதவர்களை ஆவணங்களில் உருவாக்கி தனிப்பட்ட மோசடிகளில் ஈடுபட்டு இருந்ததையும் இழந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் வீட்டையும் வைத்துக் கொண்டு அரச உதவிகளையும் எடுக்கும் பேராசையில் வீட்டை அவணங்களில் ஒருவரை உருவாக்குவது அல்லது இன்னொருவரின் பெயரில் வீட்டை மாற்றுவது போன்ற மோசடிகளும் தொடர்ந்து இடம்பெறுகின்றது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவபவர்கள் இங்குள்ளவர்களின் பெயர்களில் வீட்டை வாங்கி அந்த வீட்டில் இருந்துகொண்டே அரச உதவியை எடுப்பது போன்ற பல்வேறு மொள்ளமாரித்தனங்களிலும் ஈடுபடுகின்றனர்.

கிறடிட்காட் மோசடி மிகச் சாதாரணமான மோசடியாக இன்னமும் காணப்படுகின்றது. அண்மையில் கிங்ஸ்ரன் மருத்துவமனையில் மரணமானவரின் கிறடிட் காட்களை காணவில்லை என அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் கிறடிட் காட் தொலைத்துவிட்டதாக தாங்களே முறைப்பாடு செய்துவிட்டு அதனை பயன்படுத்திய சம்பவங்களும் சாதாரணமாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறானவர்கள் சிலர் மாட்டுப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

பிரித்தானிய பிரதமரே தன்னுடை இல்லத்தைத் திருத்துவதற்கான செலவை மூடி மறைத்த மோசடி தேசிய ஊடகங்களில் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இந்த நேர்மையின்மை சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் வெளிப்பட்டு வருகின்றது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம் 13 தடவைகள் பாங்கிரப்சி செய்து ஜனாதிபதியானார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மதப் படுகொலைகளுடன் சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டு இன்னமும் பலமாக உள்ளது. மோசடிகளைச் சகித்துக்கொள்கின்ற சமூகம் ஒன்று உருவாகிக்கொண்டு இருக்கின்றது.

சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பத்துடன் செயற்கை சூரியனை உருவாக்கி சீனா சாதனை !

சீனா உருவாக்கி உள்ள செயற்கை சூரியன் ஏழு கோடி டிகிரி செல்சியசில் தொடர்ந்து 17 நிமிடங்கள் ஒளி வீசி சாதனை படைத்துள்ளது. இது சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும். உலக நாடுகளில் அரசியல், எல்லை பிரச்சினை, கடல் பகுதி ஆக்கிரமிப்பு, ஏவுகணை தயாரிப்பு மற்றும் சோதனை, விளையாட்டு, அறிவியல், ஆராய்ச்சிகள், ஆய்வுகள் என அனைத்து துறைகளிலும் தனக்கென்று ஒரு தனி முத்திரையை சீனா தொடர்ந்து பதித்து வருகிறது. இந்த சாதனைக்கு அணி சேர்க்கும் விதமாக சீனாவின் செயற்கை சூரியன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தியானது அணுக்கரு இணைவு மூலம் உருவாகிறது.

சூரியனின் மையப் பகுதி ஹைட்ரஜன் கருக்களை ஹீலியமாக இணைப்பதன் மூலம் 1.5 கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இது, பல வகைகளில் மனித இனத்துக்கு பலனை அளித்து வருகிறது. சீனா கடந்த 1999ம் ஆண்டிலிருந்தே ‘ஈஸ்ட்’ என்ற பெயரில் செயற்கை சூரியனை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, ரூ.70 லட்சம் கோடி வரை செலவிட்டுள்ளது. ஆரம்பத்தில், மிக குறைந்த நேரம் மட்டுமே குறைந்த அளவிலான வெப்பத்தை மட்டுமே இந்த செயற்கை சூரியன் உற்பத்தி செய்தது. இதை படிப்படியாக மேம்படுத்திய சீன விஞ்ஞானிகள், சில தினங்களுக்கு முன் 7 கோடி டிகிரி செல்சியசிஸ் வெப்பத்தை உருவாக்கினர்.

இது சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும். 17 நிமிடங்கள் இந்த வெப்பநிலை நீடித்தது. மாசு ஏற்படாத வகையில் சுத்தமான எரிசக்தியை தயாரிப்பதற்கான சீனாவின் செயற்கை சூரியன் திட்டத்துக்கு உலகளவில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம், சீனா இந்த திட்டத்தை தீய நோக்கங்களுக்கு பயன்படுத்தவும் வாய்ப்புகள் இருப்பதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் செயற்கை சூரியனை உருவாக்கிய அதே விஞ்ஞானிகள் பிரான்ஸ் நாட்டிலும் இதே போன்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதற்கு, ‘இட்டர்’ என பிரான்ஸ் பெயரிட்டுள்ளது.

புளொட் தள மாநாடும் ஜென்னியின் வெளியேற்றமும்! – பாகம் 23

புளொட் தள மாநாடும் ஜென்னியின் வெளியேற்றமும்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 23 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 11.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 23

தேசம்: இப்ப நீங்கள் முழு வீச்சாக இந்த பின்தள மாநாட்டை நடத்துவதற்கான சகல முயற்சிகளையும் எடுத்து இருக்கிறீர்கள். பின்தள மாநாட்டில்…

அசோக்: பின் தள மாநாடு அல்ல தள மாநாடு…

தேசம்: மன்னிக்க வேணும். தள மாநாட்டில் எல்லாரும் கலந்து கொண்டார்களா? எப்படி என்ன மாதிரி?

அசோக்: நாங்கள் வட கிழக்கு மாவட்டங்கள் அனைத்திலும் புளொட் தோழர்களை சந்தித்து உட்கட்சிப் போராட்டம், மாநாடு, அதன் அவசியம் பற்றி உரையாடுகிறோம். ஒவ்வொரு மாவட்டங்களிலும் போய் மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள் என எல்லா அணிகளோடும் நாங்கள் கதைக்கிறம். அங்க இருந்து தெரிவு செய்யப்பட்ட முன்னணி தோழர்களை யாழ்ப்பாணம் வரவழைத்து அவர்களை கொண்டு மாநாட்டை நடத்துவதற்கு நாங்கள் உத்தேசிக்கிறோம்.

தேசம்: தனிய மாவட்ட அமைப்பாளர்கள் என்று இல்லாமல் முன்னணி தோழர்களை, விரும்பின ஆட்களும்…

அசோக்: ஓம். அந்தந்த மாவட்டம் தெரிவு செய்து அனுப்பும். நாங்கள் தெரிவு செய்வதில்லை. அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த தோழர்களே மாநாட்டில் தங்களின் பிரதிநிதிகளாக கலந்து கொள்ளும் தோழர்களை தெரிவு செய்து அனுப்புவார்கள். நான் நினைக்கிறேன் எண்பத்தி ஆறாம் ஆண்டு பெப்ரவரி கந்தரோடை கிராமத்தில் ஒரு பாடசாலையில் ரகசியமாக 6 நாட்கள் அந்த தள மாநாடு நடந்தது.

தேசம்: எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்…

அசோக்: எல்லா மாவட்டங்களிலிருந்து சுமார் 200 தோழர்கள் வந்திருப்பார்கள். அதற்கு பூரணமான ராணுவ பாதுகாப்பு சின்ன மென்டிஸ் தான் கொடுத்தது. மெண்டிஸ் தான் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் ஆனா மாநாடு நடப்பதற்கான பாதுகாப்பு எல்லாத்தையும் தான் செய்வதாக சொல்லிவிட்டார். அது எங்களுக்கு உதவியாக இருந்தது.

தேசம்: அதுவே ஒரு பெரிய விஷயம்…

அசோக்: ஆறு நாட்களும் பாதுகாப்பு தந்தார்.

தேசம்: நீங்கள் இந்த மாநாடு நடத்துகிறீர்கள் என்று சொல்லி பின் தளத்துக்கும் தெரியும் உமா மஹேஸ்வரனுக்கும் தெரியும்.

அசோக்: எல்லாருக்கும் தெரியும். மாநாடு நடக்கும் போது படைத்துறைச் செயலர் கண்ணன் தளத்தில்தான் நின்றவர். நாங்கள் மாநாடு நடாத்துவது பற்றி பின் தளத்தில் முகுந்தன் ஆட்களுக்கு தெரியும். தள மத்திய குழு உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் இந்த மாநாடு பற்றி பின் தள மத்திய குழுவுக்கும், முகுந்தனுக்கும் நாம் அறிவித்திருந்தோம்.

தேசம்: அவர்கள் அச்சுறுத்தல் விடுக்கலயா?

அசோக்: ஒன்றும் நடக்கவில்லை. எந்த பதிலும் கிடைக்கவில்லை.

தேசம்: ஏனைய அமைப்புகளாலும்…

அசோக்: அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் இல்லை. அந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.

தேசம்: அந்த விவாதத்தில் எது முக்கியமாக இருந்தது.

அசோக்: பின்தள படுகொலைகள். தலைமையினுடைய எதேச்சதிகார அராஜக போக்குகள் தொடர்பாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. மத்திய குழுவும், தலைமையும் மாற்றப்பட வேண்டும் என்று சொல்லியும் ,அதன் மீதான நம்பிக்கை இல்லை என்று சொல்லியும் புதிதாக நிர்வாகம் வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்தோடு புளொட்டில் நடந்த படுகொலைகள் சித்திரவதைகள் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பாக விசாரணை நடாடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் புளொட்டின் சீர்குழைவுகளுக்கு காரணமான முகுந்தனின் மூல உபாயம் அற்ற அரசியல் இராணுவ போக்குகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சரியான அரசியல் இராணுவ மூல உபாயங்கள் வகுப்பதற்கான அடிப்படைகளை உருவாக்கவேண்டும் என்றும் அத்தோட தீர்மானிக்கபட்டது. உண்மையிலேயே மிக சிறப்பான கோட்பாட்டு அரசியல் சார்ந்த மாநாடு என்றுதான் சொல்ல வேணும்.

தேசம்: தள மாநாட்டுக்கு முதலே செல்வம் அகிலன் கொலை நடந்து விட்டதா?

அசோக்: ஓம். மாநாட்டுக்கு முதலே செல்வம், அகிலன் படுகொலை விட்டது. அந்தக் கொலைகள் தொடர்பாக விசாரணைகள் நடத்த வேண்டும் என்று சொல்லியும் அதில் சிவராம், வெங்கட் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியும் பின் தளத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பாக விசாரணை கமிஷன் போட வேண்டும் என்று சொல்லியும் முடிவுகள் எடுக்கப்படுகின்றது.

தேசம்: என்னென்ன தீர்மானங்கள் நீங்கள் முக்கியமாக எடுத்தீர்கள்?

அசோக்: ஒரு பதினாறு பதினேழு முக்கிய தீர்மானங்கள். தலைமை இழைத்த அரசியல் கோட்பாட்டு மற்றும் நடைமுறைத் தவறுகள். இதுவரை தோழர்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் அதுல சொல்லப்படுது. அதில 17 பேர் கொண்ட அரசியல் வழிகாட்டி குழு ஒன்று தெரிவு செய்யப்படுது. அவர்கள் பின் தளம் போய் இந்த தீர்மானங்களை முன் வைத்து அங்கொரு பின்தள மாநாட்டை பின் தள தோழர்களின் ஒத்துழைப்போடு நடாத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தேசம்: பின் தளத்தில்…

இது தள மாநாடு. ஏனென்றால் நாங்கள் மாத்திரம் தீர்மானிக்க இயலாது தானே. பின் தளத்தில் பயிற்சி முகாங்களில் இருக்கும் தோழர்கள், மற்றய ஏனைய தோழர்களும் இருக்கிறார்கள்தானே. அவர்களை உள்ளடக்கிய பின் தள மாநாடு நடத்தத்தானே வேண்டும். அதுதானே முழுமையான ஜனநாயக பூர்வமான செயற்பாடாக இருக்க முடியும். இதன் மூலமே ஜனநாயக மீட்புக்காக ஒரு புதிய வடிவத்தை உருவாக்க முடியும் என நாங்க நம்புகிறோம்.

தேசம்: தெரிவு செய்பட்ட அந்த முக்கியமான தோழர்கள் ஞாபகம் இருக்கா?

அசோக்: எல்லா வெகுன அமைப்புக்களிருந்தும் ஜன நாயக அடிப்படையில் தேர்தல் மூலம்தான் இந்த தோழர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். பிரசாத்…

தேசம்: பிரசாத் இப்ப எங்க இருக்கிறார்.

அசோக்: பிரசாத் லண்டனில் இருக்கிறார்.

தேசம்: வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரா?

அசோக்: இல்லை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், கிராமம் மறந்துட்டேன். தீபிநேசன் அமெரிக்காவிலயோ கனடாவிலயோ இருக்கிறார். பெண்கள் அமைப்பில் இருந்து கலா, தொழிற் சங்கத்தில் இருந்து கௌரிகாந்தன், முத்து, ராஜன், ஐ பி மூர்த்தி, சத்தியன் மாணவர் அமைப்பிருந்து தீபநேசன், டேவிட் அர்ச்சுனா ஏனைய அமைப்புக்களிலிருந்து தவநாதன் செல்வம் , துரைசிங்கம் , எல்லாளன், இப்படி 17 தோழர்கள். பெயர்கள் ஞாபகம் இல்லை. மொத்தம் 17 பேர் அதோட நாங்கள் நான்கு பேர் சென்றல் கமிட்டீ.

தேசம்: இங்கேயும் ஒரு பெண் தோழர்தானா…

அசோக்: இல்லை. ஜெயந்தி என்ற தோழரும் இருந்தவங்க என நினைக்கிறேன்.

தேசம்: முத்து என்டுறது?

அசோக்: சிறிதரன். லண்டனில் இருக்கிறார்.

தேசம்: ராஜன்?

அசோக்: ராஜன் கனடாவில் இருக்கிறார்.

தேசம்: ஜென்னியும் வருகின்றாரா?

அசோக்: இல்லை. முன்றாம் நாள் மாநாட்டிலிருந்து வெளியேறி விட்டாங்க என நினைக்கிறேன்.

தேசம்: அவர் ஏன் வெளியேறினவர்…?

அசோக்: குற்றச்சாட்டுகள் அவங்க மீதும் வந்தது. குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட உடன் அவர் வெளியேறிட்டாங்க. முகுந்தனின் விசுவாசி என்றும் தளத்தில் தோழர்களை உளவு பார்த்ததாகவும் அவங்க மீது குற்றச்சாட்டுக்கள் வந்ததென நினைக்கிறேன். பல விடயங்கள் ஞாபகம் இல்லாமல் இருக்கிறது.

தேசம்: தள மாநாடு நடந்து உடனடியாக அங்க போனீர்களா அல்லது?

அசோக்: தள மாநாடு முடிந்தவுடன் எல்ரீரீஈ, ரெலோ பிரச்சனை தொடங்கி விட்டது. அதனால் உடனடியாக பின் தளம் போக முடியவில்லை.

தேசம்: எண்பத்தி ஆறு ஏப்ரலில் ரெலோவுக்கு எதிரான தாக்குதல்கள்…

அசோக்: நாங்கள் பின் தளம் போவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் போது புலிகளின் ரெலோ மீதான தாக்குதல் பயங்கரமாக தொடங்கிவிட்டது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் போகல.

அசோக்: அதுக்குள்ள மாட்டுப்பட்டு விட்டோம் நாங்கள். அது முடிந்ததற்கு பிற்பாடுதான் நாங்கள் பின் தளம் போறம்.

தேசம்: மூன்று நான்கு மாதங்கள் அதற்குள்ளேயே இருந்திருக்கிறீர்கள்.

அசோக்: அதுக்கு பிற்பாடுதான் மன்னாருக்கு எல்லாரும் போறம். அங்கிருந்துதான் பின்தளம் சென்றது.

தேசம்: ஒரேயடியா போகிறீர்கள்…

அசோக்: இதுல ஒன்று சொல்லவேண்டும். அந்த மாநாட்டில் கண்ணனும் கலந்து கொள்கிறார். அவர் பார்வையாளராக கலந்து கொள்கினறார்.

தேசம்: படைத்துறைச் செயலாளர் கண்ணன்…

அசோக்: ஓம்.

தேசம்: அவர் மீதும் குற்றச்சாட்டு வந்திருக்கும் தானே…

அசோக்: அவர் மீது தனிப்பட்ட வகையில் குற்றச்சாட்டு இல்லை.

தேசம்: இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு 4 மாதத்திற்கு பிறகு தான் பின் தளம் போகிறீர்கள்…

அசோக்: சரியாக ஞாபகம் இல்லை. நான்கு மாதங்கள் இல்லை. குறைவு என நினைக்கிறேன்.

தேசம்: அப்போ இந்த குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் உமாமகேஸ்வரன்…

அசோக்: உமாமகேஸ்வரன் அவர் சார்ந்த உளவுத்துறை. முழுக்க முழுக்க தலைமை மீதும், மத்திய குழு மீதும் குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. புளொட்டின் அமைப்பு வடிவம், மேலிருந்து அதிகார உருவாக்கம், சமத்துவம், ஜனநாயகம்,தோழமை அற்ற தன்மை பற்றியெல்லாம் . அரசியல் கோட்பாடு சார்ந்து ஆரோக்கியமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. உண்மையிலேயே இப்ப நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

தேசம்: அப்போ நீங்கள் இவர்கள் செய்த சிபாரிசு அல்லது தீர்மானங்களில் இப்ப இருக்கிற மத்திய குழு உறுப்பினர்கள் திருப்பியும் மத்திய குழுவில் இருப்பதற்கு சம்மதம் வழங்கப்பட்டதா? அல்லது பின் தளத்தில் மத்திய குழுவை முழுமையாக கலைத்துவிட்டு முற்றிலும் புதிய மத்திய குழுவை உருவாக்குவதுதான் நோக்கமா?

அசோக்: மத்திய குழுவை முழுமையாக கலைப்பதுதான் நோக்கம். அதில் நாங்களும் சம்பந்தப்பட்ட ஆட்கள் தானே. நாங்கள் நல்லவர்கள் அவர்கள் பிழையான ஆட்கள் என்று இல்லை. ஒட்டுமொத்தமாக மத்திய குழு அது எங்களையும் சாரும். புளொட்டின் தலைமை செய்த தவறுகள் என்ற அடிப்படையில் நாங்களும் குற்றவாளிகள்தானே. எனவே மத்திய குழு முழுமையாக கலைக்கப்பட்டு பின்தளத்தில் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்பபடும் தோழர்களும், தளத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தோழர்களும் தலைமை அரசியல் வழிகாட்டி குழுவாக செயற்பட்டு புதிய மத்திய குழுவை உருவாக்குவார்கள் என்பதுதான் தீர்மானம்.

20,000 ஆப்கானியர்களை பிரித்தானியாவில் மீள்குடியேற்ற புதிய திட்டம் !

20,000 ஆப்கானியர்களை பிரித்தானியாவில் மீள்குடியேற உதவும் வகையில், புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் வெளியேறிய 5,000க்கும் மேற்பட்டோர் முதல் ஆண்டில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று நீதி அமைச்சர் விக்டோரியா அட்கின்ஸ் கூறினார்.

இருப்பினும், மக்களை அழைத்துச் செல்வதற்கான பிரித்தானியாவின் திறன் வரம்பற்றது என்றும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் கடினமானது என்றும் அவர் எச்சரித்தார்.

திட்டத்தைத் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதம் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தொழிலாளர் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றினர்.

அந்த காலகட்டத்தில் மேற்கத்திய அரசாங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிந்த ஆப்கானிய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலைகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து அமெரிக்கா மற்றும் பிரித்தானியா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.

 

“சுனாமி பேரலையாக கொரோனா மாறும்.” – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை !

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்களான டெல்டாவும், ஒமிக்ரோனும் வேகமாக பரவி வருகின்றன.
அமெரிக்காவில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்திருந்தது நேற்று அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதேபோல், டென்மார்க், போர்த்துக்கல், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.
இந்நிலையில், ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு 71 சதவீதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 27-ம் திகதி முதல் ஜனவரி 2-ம் திகதி வரையிலான ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு 71 சதவீதம் அதிகரித்துள்ளது என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே, ஒமிக்ரோன் வைரசும், டெல்டா வைரசும் சேர்ந்து சுனாமி பேரலையாக கொரோனா மாறும் ஆபத்து உள்ளது என  உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“தடுப்பூசி போடாதவர்களை சிறுநீர் கழிப்பதுபோல் உதாசீனப்படுத்தப் போகிறேன்.” – பிரான்ஸ் அதிபர் சர்ச்சைக்கருத்து !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி செலுத்த சொல்லி ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் மக்களை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தடுப்பூசி செலுத்தாத மக்கள் குறித்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் பேசியதாவது:-
தடுப்பூசி செலுத்தாதவர்களை நான் சிறைக்கு அனுப்பப்போவதில்லை. அவர்களை கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தவைக்கப்போவதில்லை. என்னுடைய திட்டம் எளிமையானது. மக்களை எரிச்சலூட்டபோகிறேன்.
தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் உணவகம் செல்ல முடியாது,.காபி குடிக்க முடியாது. படம் பார்க்க முடியாது. ஒன்றுமே செய்ய முடியாது என மக்களை எரிச்சலூட்டபோகிறேன். தடுப்பூசி போடாதவர்களை சிறுநீர் கழிப்பதுபோல் உதாசீனப்படுத்தப் போகிறேன். அதுதான் இனி அரசின் கொள்கை.
இவ்வாறு இம்மானுவேல் தரக்குறைவாக பேசினார்.
பிரான்சில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இம்மானுவேல் மேக்ரான் பேசிய வார்த்தைகள் அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒமிக்ரோனை விட ஆபத்தான புதிய வகை கொரோனா – அச்சத்தில் பிரான்ஸ் மக்கள் !

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா இன்னும் உலக நாடுகளை வாட்டிக்கொண்டிருக்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழு வீச்சில் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், உருமாற்றம் அடைந்து வரும் கொரோனாவுடன் மனித இனம் தொடர்டந்து போராடிக்கொண்டிருக்கின்றது.

டெல்டா, ஆல்பா, டெல்டா பிளஸ், ஒமிக்ரோன் ஆகிய திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒமிக்ரோன் பரவல் காரணமாக தற்போது தொற்று பாதிப்பு உலக நாடுகளில் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதனால், மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரான்சில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது 46 உருமாற்றங்களை கொண்டுள்ளதாகவும், 12 பேர் இதுவரை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனில் இருந்து வந்த பயணிக்கு முதன்முறையாக இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 12 பேருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது ஒமிக்ரோனை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. ஐஎச்யு பி.1.640.2 என  புதிய திரிபு கொரோனாவுக்கு பெயரிட்டுள்ளனர். எனினும், இதுவரை  உலக சுகாதார அமைப்பு  இது குறித்து எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

“அணு ஆயுத போர் மற்றும் ஆயுத போட்டியில் ஈடுபட மாட்டோம்.” – முன்னணி வல்லரசு நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை !

அணு ஆயுதங்களை முன்னணி வல்லரசு நாடுகள் தயாரித்து வருகின்றன. இதன் மூலம் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் சூழல் உள்ளது என்ற அச்சம் நிலவி வருகிறது.

போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்ற உலகளாவிய ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் அணு ஆயுதங்களை சண்டையில் பயன்படுத்துவதை தடுப்பதற்கான வழிமுறைகளை வலுவாக்க சர்வதேச சமூகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அணு ஆயுதங்களை தயாரிப்பதில் அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. தற்போதைய சூழலில் அமெரிக்காவுக்கு சீனா மற்றும் ரஷியாவுடன் மோதல் போக்கு இருந்து வருகிறது.

உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து இருப்பதற்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. உக்ரைனை தாக்கினால் ரஷியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் அணு ஆயுத போர் மற்றும் ஆயுத போட்டியில் ஈடுபட மாட்டோம் என்று அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 5 நாடுகள் கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இந்த 5 நாடுகளும் முதல் முறையாக இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், அணு ஆயுத போரை தவிர்ப்பதும், ஆயுத போட்டி அபாயங்களை குறைப்பதும் தங்களின் முதன்மையான பொறுப்புகளாக கருதுகிறோம்.

அணு ஆயுத போரால் வெற்றி பெற முடியாது. அது ஒருபோதும் வெற்றி பெறக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அணுசக்தி பயன்பாடு நீண்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அணு ஆயுதங்கள் தொடர்ந்து இருக்கும் வரை தற்காப்பு நோக்கங்களுக்காக சேவை செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும். போரை தடுக்க வேண்டும். இதுபோன்ற ஆயுதங்கள் மேலும் பரவுவதை தடுக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சீனா துணை வெளியுறவுத்துறை அமைச்சர் மா ஜாக்சூன் கூறும் போது, ‘இந்த கூட்டு அறிக்கை பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும், பெரும் சக்திகளுக்கு இடையேயான போட்டியை ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் மாற்றவும் உதவும்’ என்று தெரிவித்தார்.