2010
2010
கொழும்பு கால்வாய் மார்க்கங்கள் ஊடாகப் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு திறந்த பல்கலைக் கழகத் திலிருந்து வெள்ளவத்தை வரை பல்கலைக் கழக மாணவர்களுக்கும் அதன் ஊழியர்களுக்குமாக கடற்படையினரால் நடத்தப்பட்டு வந்த படகுச் சேவை இப்போது பொதுமக்களுக்காகவும் நடத்தப்படுகின்றது.
கடந்த முதலாந் திகதியிலிருந்து இந்தப் படகுச் சேவையைப் பொதுமக்களும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனரென கடற்படையின் பேச்சாளர் கப்டன்அதுல செனரத் தெரிவித்தார். வெள்ளவத்தையில் காலை 7.30 முதல் 9.30 வரை படகுச் சேவை ஆரம்பிப்பதுடன் மாலை 4.30 முதல் 6.30 வரை நாவலையிலிருந்து சேவை ஆரம்பிக்கும் எனக் கடற்படையின் பேச்சாளர் தெரிவித்தார்.
பங்களா தேஷ் தலைநகர் டாக்காவில் தொடர் மாடி குடியிருப்புத் தொகுதியொன் றில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களது சடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றன. 50 க்கும் மேற்பட் டவர்கள் எரிகாயங்களுடன் காப்பாற்றப்பட்டுள் ளனரென பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து, பங்களாதேஷில் மூன்று நாள் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஆறு மாடிகளைக் கொண்ட இந்த தொடர்மாடி குடியிருப்புகளுக்கு அருகில் இருந்த மின் மாற்றியொன்று வெடித்துச் சிதறியதிலேயே தீ பற்றிக் கொண்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், தீ 300 அடி உயரத்துக்கும் மேல் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்ததாகக் கூறினர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் கட்டடத்துக்குள் சிக்கியவர்களை மீட்பதற்காக அங்குமிங்கும் ஓடினர். காயம் அடை ந்தவர்கள், தாகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேரின் நிலைமை கவ லைக்கிடமாகவுள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்புகள் பகுதியின் அருகில் உள்ள கயேட்டுவலி என்ற இடத்தில், வீடுகளில் இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தி இயங்கும் சிறு சிறு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து சட்ட விரோதமாக இரசாயனங்கள் இங்கே வைக்கப்பட்டிருந்தது தான் தீ மள மளவென்று பரவியதற்குக் காரணம் என்று தகவல்கள் கூறுகின்றன.
இட நெருக்கடியால் தீயணைப்பு வீரர்களால் முழுவதும் மீட்புப் பணியில் ஈடுபட முடியவில்லை. தீயை அணைப்பதில் காலையில் இருந்து தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் இன்னும் பலர் அக்கட்டடத்துக்குள் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை, பிரதமர் ஷேக் ஹசீனா நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசு ஏற்கும் என்று அறிவித்தார். தீயில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் தரப்படும் என்றும் தெரிவித்தார். சம்பவம் குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மூன்று நிபுணர்கள் குழு இதை விசாரிக்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்குத் தலா 14 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இலங்கையர்களுக்கான விஸா கட்டுப்பாடுகளை இந்தோனேஷிய அரசாங்கம் தளர்த்த வேண்டும் என இந்தோனேஷியாவுக்கான இலங்கைத்தூதுவர் மேஜர் ஜெனரல் நந்தா மல்லவாரச்சி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தோனேஷிய உல்லாசப்பயணத்துறை அமைச்சர் ஜெரோ வாசிக்குடனான சந்திப்பின் போதே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஜகர்த்தாவிலுள்ள உல்லாசப்பயணத்துறை அமைச்சு அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இலங்கைக்கான இந்தோனேஷியத்தூதுவர் ஜஃபர் ஹுஸைன்,உல்லாசப்பயணத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இந்தோனேஷியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகால ராஜதந்திர தொடர்புகள் காணப்படுகின்றன. இருநாடுகளுக்கு இடையில் பல்தரப்பு வர்த்தகத்தை ஊக்குவிக்க வேண்டுமானால் விஸா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவேண்டும் என்றும் மேஜர் ஜெனரல் நந்தா மல்லவாரச்சி வலியுறுத்தினார்.
முல்லைத் தீவு மாவட்ட அரசாங்க அதிபராக முன்னாள் இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சி.ஆர்.டி.சில்வா நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது. முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக தற்போது கடமை புரியும் இமெல்டா சுகுமாரை அப்பதவியிலிருந்து விடுவித்து, வடமாகாணசபையில் அவருக்கு பிரதம செயலர் பதவி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர்களாக முன்னாள் இராணுவ அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அரசஅதிபராக ஒரு முன்னாள் இராணுவத் தளபதி நியமிக்கப்படவிருப்பதான செய்தி தமிழ் மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. வெலிஓயா, பதவியா, மகாவலி எச் வலயம் என்பனவற்றை உள்ளடக்கியதாக வன்னியில் அனைத்துப் பகுதிகளையும் சிங்கள மயமாக்கும் நோக்கத்துடன் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என தமிழ்மக்கள் பலருக்கு சந்தேகம் தோன்றியுள்ளது.
கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளுக்கு விரைவில் முழுமையான மின்சாரம் வழங்கப்படும் என வடமாகாண மின் அத்தியட்சகர் குகராஜ் தெரிவித்துள்ளார். வடக்கின் வசந்தம் திட்டத்தின் நிதியுதவியின் மூலம் மின்சாரம் விநியோகிக்கும் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி. உருத்திரபுரம் கிழக்கு, பரந்தன், உதயநகர் மேற்கு, உதயநகர் கிழக்கு, கனகபுரம், கணேசபரம், திருநகர் வடக்கு, தொண்டமான் நகர். பாரதிபரம், ஆகிய கிராமங்களுக்கு இன்னும் இரண்டு மாதங்களில் மின்சாரம் வழங்கப்பட்டு விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே வேளையில், மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட இப்பகுதிகளில் போர் நடவடிக்கைகளால் அழிவடைந்த, சேதமுற்ற வீடுகள் இன்னமும் மீளமைக்கப்படாமல் மக்கள் இன்னமும் சிறு கொட்டில்களில் வாழ்ந்து வருகின்றமையும் இங்கு குறிப்படத்தக்கதாகும்.
வன்னியில் மீள் குடியேற்றப்பட்டுள்ள பகுதிகளின் போக்குவரத்து ஒழுங்குகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் இவ்வாரத்திலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். வன்னியில் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும், சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் வாகனங்களின் ஆவணங்கள் யாவற்றையும் வைத்திருக்க வேண்டும் என்று வீதிகளில் காவல் கடமைகளில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினர். வாகனப் பயன்பாட்டாளர்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.
மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ள பகுதிகளில் சிவில் நிர்வாக நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் ஒரு கட்டமாக வாகனப் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகள் பேணப்படவுள்ளதாகவம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது, பொது மக்கள் பலர் தங்கள் வாகன அனுமதிப்பத்திரங்கள் ஆவணங்கள் போன்றவற்றை இழந்துள்ளனர். தற்போது மீட்கப்பட்ட வாகனங்கள் சில உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் அதன் ஆவணங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பிரித்தானிய அரசின் பாதுகாப்பு செயலாளர் டாக்டர் லியம் பெக்ஸிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பு சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ளது. இதன் போது இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
இந்த உயர் மட்ட சந்திப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசிற்கும் பிரித்தானியாவின் புதிய அரசாங்கத்திற்கும் இடையிலான முதற் சந்திப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைப்பற்றப் பட்ட பிரதேசங்களிலுள்ள பலஸ்தீன மக்களினதும், ஏனைய அரேபியர்களினதும் மனித உரிமைகளை பாதிக்கும் இஸ்ரேலிய நடைமுறை குறித்து விசாரிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபைத் தூதுக் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹன தலைமை தாங்கவுள்ளார்.
இந்த விசேட விசாரணை தூதுக் குழு ஜூன் மாதம் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை எகிப்துக்கும், 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை ஜோர்டானுக்கும், 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை சிரியாவுக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா விலிருந்து 500 பஸ்களை இ.போ.ச.வுக்குக் கொள்வனவு செய்யவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் எம்.டி. பந்துசேன கூறினார். அடுத்த வருடம் மேலும் 1000 பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்களுக்கு சிறந்த சேவை வழங்கும் நோக்குடனும் தனியார் துறைக்குப் போட்டியாக இ.போ.சபையை பலப்படுத்துவதற்காகவும் கூடுதலான பஸ்களைத் தருவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் தருவிக்கப்படவுள்ள பெரிய ரக ‘அசோக் லேலண்ட்’ பஸ்கள் பிரதான வீதிகளிலும், கிராமப்புற வீதிகளிலும் ஈடு படுத்தப்பட உள்ளதோடு, மீள் குடியேற்றம் நடத்தப்பட்ட பகு திகளிலும் ஈடுபடுத்தப்படும் எனவும் இ.போ.ச. தலைவர் கூறினார். இதுதவிர யாழ்ப்பாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக சொகுசு பஸ்களை தருவிக்கவும் இ.போ.ச. திட்டமிட்டுள்ளது. வடக்கில் மீள்குடி யேற்றப்பட்ட பகுதிகளில் 300க்கும் அதிகமான பஸ்கள் ஏற்கெனவே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.