September

September

வாஸின் மனைவி, மகனுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் – நால்வர் நேற்று விடுதலை

தகவல் தொழில்நுட்ப கல்லூரி மாணவனின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த வாஸ் குணவர்தனவின் மனைவி, மகன் ஆகியோருடன் மேலும் எட்டுப் பேரையும் எதிர்வரும் 29ம் திகதிவரை மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மேலும் நால்வர் நேற்று சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். கடுவலை நீதிமன்றத்தினால் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே மேற்படி தீர்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் மெத்திவக்க தெரிவித்தார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தனவின் மகன், தகவல் தொழில்நுட்ப கல்லூரியில் தன்னுடன் கல்வி கற்கும் சக மாணவனை தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வாஸ் குணவர்தனவின் மகன் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் நால்வரே நேற்று சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்றைய வழக்கின்போது, ஒரு சமயம் காணாமற் போனதாக கூறப்படும் தகவல் தொழில்நுட்ப கல்லூரி மாணவன் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தனவின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

180 தினார்களைத் திருடிய இலங்கையருக்கு 3 ஆண்டு சிறை

_jail_.jpgபஹ்ரெ யினில் 180 தினார்களைத் திருடி இலங்கையில் உள்ள தனது குடும்பத்தினருக்கு அனுப்பியதாகக் கூறப்பட்ட ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறைவாசம் விதித்ததுடன் அவரை நாடு கடத்தவும் பஹ்ரெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தம்முடன் அறையைப் பகிந்து கொண்டவரின் ஏ. டீ. எம். அட்டை மூலம் இவர் இந்த பணத்தொகையைத் திருடியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இவர் மீதான வழக்கு நேற்று முன்தினம் பஹ்ரெயினின் முஹாராக் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவருக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவரை 3 ஆண்டுகள் சிறைவாசம் விதித்ததுடன், அதன் பின்னர் இலங்கைக்கு நாடுகடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

முஸ்லிம் அரச ஊழியர்க்கு 17 இல் சம்பளம்

புனித நோன்புப் பெரு நாளை முன்னிட்டு முஸ்லிம் அரச சேவையாளர்களுக்கு இம்மாதச் சம்பளத்தை 17 ஆம் திகதி வழங்குமாறு திறைசேரியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாயகம் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாண சபைகளின் பிரதம செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.

தகவல் ஊடகத் துறை அமைச்சின் புதிய செயலாளர்

1509ganegalass.jpgதகவல் ஊடகத் துறை அமைச்சின் புதிய செயலாளராக டப்ளியு.பீ.கனேகல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கபட்டுள்ளார்.

இந்த அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிய ஏ.திஸாநாயக்க கலாசார அலுவல்கள் மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனேகல ஏற்கனவே தகவல் ஊடகத் துறை அமைச்சின் செயலாராக கடமையாற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன்னர் பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றினார்

19 அதிபர்கள் இ. அ. சேவை தரம்-1க்கு நியமனம்

கல்முனைக்குடி, சாய்ந்த மருது, மாளிகைக்காடு, மருதமுனை, நற்பிட்டி முனை ஆகிய பாடசாலை களில் அதிபர்களாக கடமை யாற்றிக் கொண்டிருப்பவர் களில் 19 பேர் இ. அ. சேவை தரம் 1 க்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சு இவர்களுக்கான நியமனக் கடிதங்களை சமீபத்தில் வழங்கியது. ஏ.ஏ. றஸ¤ல், எம்.ஐ.ஏ. கரீம்,  ஏ.கே.எம். நியாஸ்,  எச்.ஏ. லத்தீப், எம்.வை. உதுமான் அலி,  என்.எம். சலீம்,  எம்.எப். இஸ்மாயில்,  எஸ்.ஏ. லியாக்கத் அலி, ஆர்.எம். ஹுசைன், எம்.எச்.எம். நவாஸ், எம்.ஏ. அkஸ், ஏ. குமையின், ஏ.ஆர்.எம். தெளபீக், ஏ.ஆர்.ஏ. றாkக், ஏ.எம். பாறுக், ரி.எல். அமீனுல்டீன், ஏ. கலீல்டீன், ஏ.ஆர்.ஏ. றஸ¤ல் எஸ்.எம்.ஏ. ஜஃபர் ஆகியோரே நியமனம் செய்யப்பட்டவர்களாவர்.

பெரும் தோட்டக் கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை

150909dimujayarathna2.jpgதேங்காய் உரி மட்டைகள் மற்றும் சிரட்டைகளை நாடளாவிய ரீதியில் கொள்வனவு செய்யும் திட்டம் ஒன்றை பெரும் தோட்டக் கைத்தொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது.
 
இந்தப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நாடளாவிய ரீதியில் 1500 பிரதிநிதிகளை  நியமிக்க அமைச்சசு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் முதற்கட்டமாக 800 பிரதிநிதிகளை நியமித்துள்ளது.

தெங்கு சார்ந்த இடைப்பட்ட உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யம் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்தத் திட்டம் தெங்கு அபிவிரத்தி அதிகார சபை மூலம் முன் எடுக்கப்படுவதுடன் இதற்கான ஆலோசனைகளை வழங்குவதடன் போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும். 

குச்சவெளியில் 25 வருடங்களின்; பின்னா; ஏர்பூட்டு விழா!

திருகோணமலை மாவட்ட குச்சவெளிப் பிரதேசத்தில் திரியாய் நீலப்பணிக்கன் குளம் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 25 வருடங்களின் பின்னர் வேளாண்மைச் செய்கையை ஆரம்பிக்கும் வகையில் நேற்று ஏர்பூட்டு விழா நடைபெற்றது.

எதிர்வரும் பெரும்போகச் செய்கையை ஆரம்பிக்கும் வகையில் மாகாண விவசாய அமைச்சர் ஏற்பாடு செய்த இந்த ஏர்பூட்டு விழாவில் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மாகாண அமைச்சர்களான துரையப்பா நவரட்ணராஜா, எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் மத்திய தேச நிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே உட்பட மாகாண விவசாய திணைக்கள அதிகாரிகளும் விவசாயிகளும்  கலந்து கொண்டனர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் முயற்சி காரணமாக இப்பிரதேசத்தில்  பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கு பாதுகாப்பு தரப்பினரின் அனுமதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீலப்பணிக்கன் குளமும் புனரமைப்பு செய்யப்பட்டு நீர்ப்பாசன வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.

பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் உரமும் விதை நெல்லும் வழங்கப்பட்டன.

மட்டு. மாவட்டத்தில் மெய்வல்லுநர் போட்டிகள்

மட்டக்களப்பு மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் இம்மாவட்டத்தின் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட மட்டத்தில் மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சியொன்றினை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் அனுசரணையுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் விளையாட்டு வீரர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று சங்கத்தின் செயலாளர் த. சோமஸ் காந்தன் அறிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்காகவும், திறந்த போட்டியாகவும் இரண்டு பிரிவுகளாக மெய்வல்லுநர் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

போட்டியில் பங்கு கொள்வதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 22 ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்பி வைக்குமாறும் சங்கத்தின் செயலாளர் கேட்டுள்ளார். குறுந்தூர ஓட்டப் போட்டி கள், மரதன் ஓட்டம் மற்றும் அஞ்சலோட்டம் உட்பட 16 வகை யான போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

மாற்றம் கோரி பிரித்தானிய தமிழ் பேரவை கூட்டத்தில் வாக்குவாதம் : தேசம்நெற் வாசகர்

BTF Banner._._._._._.
இவ்வாக்கத்தை இங்கு பதிவு செய்துள்ளவர் தேசம்நெற் கருத்துக்களம் பகுதியில் கருத்துக்களைப் பதிவு செய்து வருபவர். தேசம்நெற் க்கு தன்னை அடையாளப்படுத்தியும் உள்ளார். இவர் அண்மைக் காலங்களில் பிரித்தானியாவில் நடாத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மட்டுமல்ல போராட்டங்களை முன்னெடுத்தவரும் கூட.
._._._._._.

செம்பரம்பர் 6 லண்டன் ரெயினஸ் லேன் பகுதியில் பிரித்தானிய தமிழர் பேரவை தனது அமைப்பின் செயற்பாடுகள் பற்றிய ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. இந்த கூட்டத்திற்கு பிரித்தானிய தமிழ் பேரவையின் ரெயினஸ் லேன் பகுதி உறுப்பினர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த கூட்டத்திற்கு இந்தியாவில் இருந்து சைக்கிளில் உலகம் சுற்றிய ஒரு சிறப்பு பிரதிநிதி ஒருவரும் அழைக்கப்பட்டிருந்தார். கூட்டத்தில் கடந்தகால, எதிர்கால திட்டம் பற்றியும், தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பான தமது நடவடிக்கைகள் பற்றிய விளக்கமும் கொடுக்கப்பட்டது.

அங்கு பிரிஎப் தலைவர்கள் கொடுத்த அரசியல் விளக்கம் அவர்களின் அரசியல் தேர்ச்சியை வெளிப்படுத்தியது. லப்ரொப்பைக் கொண்டு வந்து பவர்பொயின்றில் படம் காட்டியவர்களின் பிறைனில் பிளெக்ஹோல் தான் தெரிந்தது. நகைச்சுவையாகவும் இருந்தது. ‘லண்டனில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் உடனடியாக கொன்ஸவேற்றிவ் கட்சியில் உறுப்பினராக வேண்டும்’ என்று ஒருவர் கருத்து வெளியிட்டார். காரணம் ‘கொன்சவேட்டிவ் தான் இனி ஆட்சியமைக்கும்’ என்றார். அவர் நிறுத்தவில்லை தொடர்ந்தார். திறப்பு போராட்டம் பற்றி குறிப்பிட்டார். ‘ஒரு திறப்பை அவர்கள் அச்சிட்டிருக்கினம். இதை நாம் அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.’ என்றவர் ‘இதுதான் வன்னி தடுப்பு முகாமின் திறப்பு’ என்றார். ‘அட பாவிகாள இந்த திறப்பு அடிச்ச காசை அங்கை அனுப்பியிருந்தால் ஒரு நேர சாப்பாடாவது அந்த சனம் சாப்பிட்டிருக்கும்’ என ஆதங்கத்தில் பேச முனைந்த போது தடுத்து விட்டனர். பின்னர் எமக்கு பேச சந்தர்ப்பம் தருவதாக கூறினார்கள்.

வரிசைப்படி பேச சந்தர்ப்பம் கொடுத்த போதும் வரிசையின் இறுதியில் இருந்த பிரிஎப் சாதாரண உறுப்பினர்கள் இருவர் தம் கருத்தை கூற முன் வந்தனர். அவர்களின் அவசரத்திற்கான காரணம் இனியும் மற்றவர்கள் சொல்லும் கருத்தை கேட்டால் தலை வெடிக்குமளவிற்கு அங்கிருந்தவர்கள் பேசியதே.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் நலன் பற்றியோ அல்லது நடந்து முடிந்த யுத்த அவலம் பற்றிய ஒரு சுயவிமர்சனத்தை வைக்காது திரும்பவும் எவ்வாறு லண்டன் வாழ் மக்களிடம் காசு புடுங்கலாம் என்ற திட்டங்களே அங்கு பேசப்பட்டது. லண்டன் ரைம்ஸ் பத்திரிகையில் விளம்பரம் போட வேண்டும் என்று அதற்கு காசு சேர்க்கவும் முனைந்தனர். அந்த இரு உறுப்பினரும் ‘இனியும் சனத்தை பேக்காட்டிறதை விட்டு விட்டு உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்’ என்று கோரினார்கள்.

‘நாங்கள் அண்மையில் கூட்டிய ஊர்வலத்திற்கு சனம் வராததற்கு காரணம் ஊரில் ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை’ என்று பிரிஎப் பேச்சாளர் அளித்த காரணத்திற்குப் பதில் அழித்த ஒருவர், ‘மக்களை காசு போடும் வங்கிகளாக பார்த்த நீங்கள் அவர்களை அரசியல் மயப்படுத்தி நீங்கள் ஒழுங்கான அரசியல் செய்திருந்தால் மக்கள் தாமாகவே வந்திருப்பார்கள்’ என்று சாடினார். ‘இன்றைய மக்களின் தேவை அவர்களின் மறுவாழ்வே ஒழிய மீண்டும் உங்களுடைய சுத்துமாத்து அரசியல் அல்ல’ என்று அவர் தொடர்ந்தும் கூற அங்கிருந்த ஒருவர் ‘சிங்களவனோடு போய் வேலை செய்வதே’ என்று கூக்குரல் இட்டார்.

இங்கு வந்திருந்தவர்கள் அனைவருமே பிரிஎப் இன் போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள். பிரிஎப் யை கேள்விக்கு உட்படுத்திய இரு உறுப்பினர்களும் பிரித்தானியாவில் பிரிஎப் ஆல் நடத்தப்பட்ட கடந்த கால போராட்டங்களில் முன்னின்றவர்கள். இன்று கேள்வி கேட்கும் இவர்களை பிரிஎப் எட்டத்தில் வைத்திருக்கவே முயல்கிறது. ஏனெனில் பிரிஎப் இடம் பதிலில்லை.

விடுதலைப் புலிகளின் இறுதி நேர மனித உரிமை மீறில்கள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்ட போது யாராலும் அங்கு பதில் கூற முடியவில்லை. மாறாக ‘அது அரசின் பொய் பிரச்சாரம்’ என்று பதில் கொடுக்கப்பட்டது. ‘தன் சொந்த குடும்பமே இவ்வாறு பாதிக்கப்பட்டது’ என்று ஒரு உறுப்பினர் கூற அங்கு அதற்கு மறுமொழி கொடுக்க யாரும் இருக்கவில்லை.

‘தமிழ் மக்களின் அவலங்களுக்கு ஆறுதல் தரவோ அல்லது அந்த மக்கள் பற்றிய நலனில் எந்தவித அக்கைறையும் இல்லாத அமைப்பில் இணைந்து வேலை செய்வது மடைத்தனம்’ என்று கூறிய அந்த இரு பிரிஎப் உறுப்பினரும் ‘மக்களை பலகாலம் பேய்க்கட்ட முடியாது’ என்று கூறிவிட்டு வெளியேறினர்.

இவர்கள் இருவரும் வெளியேறியதும் இருவரையும் சிறீலங்கா அரசின் ஏஜன்டுகள் என்று பழி சுமத்தி விட்டு தமது கூட்டத்தை தொடர்ந்தனர். இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பின் விடுதலைப் புலிகளின் தலைவரின் முன்னைநாள் மெய்பாதுகாவலராக இருந்த ஒருவர் இந்த இருவருக்கும் தொலைபேசியில் மிரட்டியிருக்கறார். ‘இயக்கதிற்கு எதிராக வேலை செய்வதை நிறுத்தாவிட்டால் பின் நடப்பவைக்கு தன்னில் பிழை கூற வேண்டாம்’ என்று. அவர்களில் ஒருவர் இது சம்பந்தமாக பொலிசாரிற்கு புகார் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்ட நபர்களின் பெயர் விபரங்களை பொலிசாருக்கு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த தலைமையில் நேற்று அரச இலக்கிய விருது விழா – செங்கை ஆழியானுக்கு உயர் விருது வழங்கி கெளரவம்

mahinda-rajapaksha.jpgஅரச இலக்கிய விருது விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

2009ம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது தமிழில் 15 நூல்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் உயர் இலக்கிய விருதான சாகித்திய ரத்னா விருது “செங்கை ஆழியான்” கலாநிதி க. குணராசாவிற்கு வழங்கப்பட்டு ள்ளது.

நேற்றைய இவ்விழாவில் கலாநிதி க. குணராசாவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாகித்திய ரத்னா விருதினை வழங்கி கெளரவித்தார். அத்துடன் சிங்கள மொழி இலக்கியவாதி பேராசிரியர் திஸ்ஸ காரியவசம், ஆங்கில இலக்கியத்துக்காக பேராசிரியர் ஏஸ்லிஹெல்பேவுக்கும் ஜனாதிபதியினால் சாஹித்திய ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவர்கள் மூவருக்கும் விருதுகளுடன் தலா 75,000ரூபா பணப் பரிசும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.